என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "MLAs"

    பீகார், கேரள மாநில எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் மீதான கிரிமினல் வழக்குகளை விசாரிக்க மாவட்டம்தோறும் சிறப்பு நீதிமன்றங்கள் அமைக்குமாறு சுப்ரீம் கோர்ட் இன்று உத்தரவிட்டுள்ளது. #Criminalcases #casesagainstMPMLAs #specialcourts
    புதுடெல்லி:

    குற்ற வழக்குகளில் தண்டிக்கப்பட்ட  அரசியல்  தலைவர்களுக்கு வாழ்நாள் தடை விதிக்க கோரி, வழக்கறிஞரும் பா.ஜ.க. தலைவருமான அஸ்வினி உபாத்யாய் என்பவர் சுப்ரீம் கோர்ட்டில் பொதுநல வழக்கு தொடர்ந்தார்.

    கிரிமினல் வழக்குகளில் விசாரணை முடிந்து தீர்ப்பு வெளியாகி தண்டனை அளிப்பதில் நீண்டகால இழுத்தடிப்பு நடந்து வருவதால் கிரிமினல்கள் மக்கள் பிரதிநிதிகளாக உலா வருகின்றனர். எனவே, இவர்கள் மீதான வழக்குகளில் விசாரணையை விரைவுப்படுத்தி, தண்டித்து அரசியலில் ஈடுபட தடை விதிக்கப்பட வேண்டும் என்று அவர் குறிப்பிட்டிருந்தார்.

    இந்த வழக்கில் சுப்ரீம் கோர்ட்டுக்கு உதவுவதற்காக வழக்கறிஞர் விஜய் ஹன்சாரியா ‘அமிகஸ் கியூரி’யாக நியமிக்கப்பட்டார்.

    இந்நிலையில், இவ்வழக்கு தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான அமர்வு முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, வழக்கறிஞர் விஜய் ஹன்சாரியா தனது அறிக்கையை தாக்கல் செய்தார். அதில், நாடு முழுவதிலும் பல்வேறு நீதிமன்றங்களில் எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் மற்றும் முன்னாள் எம்.பி., எம்.எல்.ஏ.க்களுக்கு எதிராக 4122 குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளதாக இந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இதில் அதிகபட்சமான வழக்குகள் பீகார் மற்றும் கேரள மாநிலத்தில் உள்ள பல்வேறு நீதிமன்றங்களில் நடந்து வருவதாகவும் தெரியவந்துள்ளது.

    இந்நிலையில், பீகார், கேரள மாநில எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் மீதான கிரிமினல் வழக்குகளை விசாரிக்க மாவட்டம்தோறும் சிறப்பு நீதிமன்றங்கள் அமைக்குமாறு சுப்ரீம் கோர்ட் இன்று உத்தரவிட்டுள்ளது. தேவை ஏற்படும் மாவட்டங்களில் எத்தனை சிறப்பு நீதிமன்றங்களை வேண்டுமானாலும் அமைத்து கொள்ளலாம்.

    தற்போது, மாநில ஐகோர்ட் மற்றும் சில சிறப்பு நீதிமன்றங்களில் நடைபெற்றுவரும் எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் மீதான வழக்குகள் அனைத்தும் புதிதாக அமைக்கப்படும் மாவட்ட சிறப்பு நீதிமன்றங்களுக்கு உடனடியாக மாற்றப்பட வேண்டும். இந்த நீதிமன்றங்களில் ஆயுள் தண்டனைக்கு வாய்ப்புள்ள குற்ற வழக்குகளுக்கு முன்னுரிமை கொடுத்து விசாரிக்கப்பட வேண்டும்.

    இவ்வகையில், பீகார் மற்றும் கேரளாவில் மாவட்டங்கள்தோறும் அமைக்கப்படும் புதிய சிறப்பு நீதிமன்றங்களின் பட்டியலை பாட்னா மற்றும் கேரளா ஐகோர்ட்டுகள் வரும் 14-ம் தேதிக்குள் சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்ய வேண்டும் என்றும் நீதிபதிகள் அறிவுறுத்தியுள்ளனர். #Criminalcases #casesagainstMPMLAs #specialcourts #Biharpecialcourts #Keralapecialcourts
    எம்எபி, எம்எல்ஏக்களுக்கு எதிரான குற்ற வழக்குகளில் தமிழகம் மூன்றாம் இடத்தில் இருப்பதாக உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. #PendingCases #SupremeCourt
    புதுடெல்லி:

    குற்ற வழக்குகளில் தண்டிக்கப்பட்ட  அரசியல்  தலைவர்களுக்கு வாழ்நாள் தடை விதிக்க கோரி, வழக்கறிஞரும் பாஜக தலைவருமான அஸ்வினி உபாத்யாய் உச்ச நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், இந்த விஷயத்தில் நீதிமன்றத்திற்கு உதவுவதற்காக வழக்கறிஞர் விஜய் ஹன்சாரியாவை அமிகஸ் கியூரியாக நியமித்தது.

    அஸ்வினி உபாத்யாய்

    இந்நிலையில், இவ்வழக்கு தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான அமர்வு முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, வழக்கறிஞர் விஜய் ஹன்சாரியா தனது அறிக்கையை தாக்கல் செய்தார். அதில், நாடு முழுவதிலும் பல்வேறு நீதிமன்றங்களில் எம்பி, எம்எல்ஏக்கள் மற்றும் முன்னாள் எம்பி, எம்எல்ஏக்களுக்கு எதிராக நிலுவையில் உள்ள வழக்குகள் குறித்து விரிவான விவரங்கள் இடம்பெற்றுள்ளன.

    நாடு முழுவதிலும் எம்பி, எம்எல்ஏக்கள் மற்றும் முன்னாள் எம்பி,எம்எல்ஏக்களுக்கு எதிராக மொத்தம் 4122 குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளதாக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    நாட்டிலேயே எம்பி, எம்எல்ஏக்களுக்கு எதிரான வழக்குகளில் தமிழகம் மூன்றாம் இடத்தில் உள்ளது. தமிழகத்தில் எம்பி, எம்எல்ஏக்களுக்கு எதிராக 321 வழக்குகள் நிலுவையில் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அவற்றில், 71 வழக்குகள் மட்டுமே கீழமை நீதிமன்றங்களில் உள்ளதாகவும், மற்ற வழக்குகள் தற்போதுவரை விசாரணை நிலைக்கு வரவில்லை என்றும் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

    264 வழக்குகள் மீது உயர்நீதிமன்றங்களால் இடைக்கால தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. 1991ம் ஆண்டில் இருந்து நிலுவையில் உள்ள ஏராளமான வழக்குகளில் இதுவரை குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்படவில்லை என்றும் கூறப்பட்டுள்ளது. இந்த அறிக்கையை ஆய்வு செய்த நீதிபதிகள், விசாரணையை 17-ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.  #PendingCases #SupremeCourt
    தினகரன் அணியில் இருந்து விலகமாட்டோம், நோட்டீசை சட்ட ரீதியாக சந்திப்போம் என்று தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.க்களான பிரபு, கலைச்செல்வன் கூறி உள்ளனர். #TTVDhinakaran #ADMKMLAs
    கள்ளக்குறிச்சி:

    முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியை எதிர்த்து கவர்னரிடம் மனு கொடுத்த 18 அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்களை சபாநாயகர் தனபால் தகுதிநீக்கம் செய்தது சரி தான் என்று சென்னை ஐகோர்ட்டு தீர்ப்பு அளித்துள்ளது.

    இதையடுத்து டி.டி.வி. தினகரனை ஆதரித்த 18 எம்.எல்.ஏ.க்களும் பதவி இழந்துள்ளனர்.

    இந்த நிலையில் டி.டி.வி. தினகரனுக்கு ஆதரவாக அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் கலைச்செல்வன் (விருத்தாசலம்), பிரபு (கள்ளக்குறிச்சி), ரத்தினசபாபதி (அறந்தாங்கி) ஆகியோர் தொடர்ந்து செயல்பட்டு வருகிறார்கள். தினகரன் தொடங்கிய புதிய கட்சியான அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தில் இணைந்து செயல்பட்டு வருகிறார்கள். 3 பேர் மீதும் நடவடிக்கை எடுக்க அ.தி.மு.க. மேலிடம் முடிவெடுத்துள்ளது.

    அவர்களிடம் விளக்கம் கேட்டு நோட்டீசு அனுப்ப சபாநாயகருக்கு கொறடா பரிந்துரை செய்துள்ளார். விரைவில் அவர்களுக்கு நோட்டீசு அனுப்பப்பட உள்ளது.



    இருப்பினும் 3 பேரும் தினகரன் அணியில் இருந்து விலக மாட்டோம் என்று அறிவித்துள்ளனர். சபாநாயகர் நோட்டீஸ் அனுப்பினால் அதனை சட்ட ரீதியாக சந்திப்போம் என்று 3 எம்.எல்.ஏ.க்களும் அறிவித்துள்ளனர். #Dhinakaran

    இது தொடர்பாக பிரபு எம்.எல்.ஏ. கூறியதாவது:-

    அ.தி.மு.க.வில் சாதாரண தொண்டனாக இருந்தேன். எனக்கு அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தில் மாநில தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர் பதவி வழங்கி உள்ளனர்.

    மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதா, பொதுச் செயலாளர் சசிகலா ஆகியோருக்கு உண்மையானவராக துணை பொது செயலாளர் டி.டி.வி. தினகரன் செயல்பட்டு வருகிறார்.

    தொண்டர்களை அவர் அரவணைத்து செல்கிறார். அவரது செயல்பாடு எனக்கு பிடிக்கிறது. எனவே அவரை விட்டு நான் வரமாட்டேன். யார் அழைப்பு விடுத்தாலும் அதை ஏற்றுக்கொள்ள மாட் டேன். தினகரன் வழிகாட்டுதல் படியே நடப்பேன். தினகரனை தொடர்ந்து ஆதரிப்பேன். அதில் எந்த மாற்றமும் இல்லை.

    சபாநாயகரிடம் இருந்து எனக்கு நோட்டீசு வரவில்லை. நோட்டீசு வந்த பிறகு விளக்கமாக பதில் அளிக்கிறேன். என் மீது எந்த நடவடிக்கை மேற்கொண்டாலும் அதை சட்டப்படி எதிர்கொள்ள தயாராக இருக்கிறேன்.

    கள்ளக்குறிச்சி தொகுதிக்கு பல்வேறு திட்டங்களை நிறைவேற்றும்படி முதல்-அமைச்சரிடம் பலமுறை மனு கொடுத்தேன். எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

    கள்ளக்குறிச்சியை தலைமையிடமாக கொண்டு தனி மாவட்டம் உருவாக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தேன். அந்த கோரிக்கையும் நிறைவேற்றப்படவில்லை. மாவட்ட செயலாளர் குமரகுருவிடமும் தொகுதிக்கு திட்டங்களை நிறைவேற்றும்படி கூறினேன். அவரும் கண்டு கொள்ளவில்லை. எனவேதான் நான் தினகரன் அணிக்கு சென்றேன்.

    தமிழகத்தில் அம்மா மக்கள் முன்னேற்ற கழக ஆட்சி வந்தால்தான் நல்லது நடைபெறும். தொகுதிக்கு திட்டங்கள் நிறைவேற்றப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    விருத்தாசலம் தொகுதி எம்.எல்.ஏ. கலைச்செல்வன் கூறியதாவது:-

    சபாநாயகரிடம் இருந்து எனக்கு நோட்டீஸ் வரவில்லை. வந்தபிறகு அதற்கு பதில் அளிக்கிறேன். அதே நேரத்தில் 18 எம்.எல்.ஏ.க்கள் தகுதிநீக்கம் செய்யப்பட்டிருப்பது ஜனநாயக விரோதமாகும். நியாயத்துக்கும், தர்மத்துக்கும், உண்மைக்கும் எதிரானதாகும். அந்த 18 எம்.எல்.ஏ.க்களையும் மக்கள் விரும்புகிறார்கள்.

    11 எம்.எல்.ஏ.க்களை வைத்துக்கொண்டு ஓ.பன்னீர் செல்வம் தர்மயுத்தம் நடத்தினார். அவர்கள் அம்மா அமைத்த ஆட்சியை கவிழ்க்க வாக்களித்தார்கள். ஆனால் 18 எம்.எல்.ஏ.க்கள் அந்த ஆட்சியை காப்பாற்ற நினைத்தார்கள். எனவே 18 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டது ஜனநாயக படுகொலை ஆகும். #TTVDhinakaran #ADMKMLAs

    நாடு முழுவதும் 7 எம்பி-க்கள் 199 எம்எல்ஏ-க்கள் பான் கார்டு விவரங்களை வெளியிடவில்லை என்று ஆய்வறிக்கை மூலம் தெரியவந்துள்ளது.
    புதுடெல்லி

    எம்பி-க்கள் மற்றும் எல்எல்ஏ-க்கள் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் வேட்புமனுவில் பான் கார்டு குறித்த விவரங்களை தெரிவிக்க வேண்டும். 542 எம்பி-க்கள் மற்றும் 4086 எம்எல்ஏ-க்கள் ஆகியோர் தங்களது பான் கார்டு தகவலை தெரிவித்திருக்கிறார்களா? என்று ஜனநாயக சீர்திருத்தங்களுக்கான அமைப்பு மற்றும் தேசிய தேர்தல் கண்காணிப்பகம் அமைப்புகள் ஒரு ஆய்வறிக்கையை தயார் செய்ததது.

    இந்த ஆய்வறிக்கையில் 7 எம்பி-க்கள் 199 எம்எல்ஏ-க்கள் பான் கார்டு தகவலை தெரிவிக்கவில்லை என்பது தெரியவந்துள்ளது. பான் கார்டு விவரங்களை சமர்பிக்காத மக்கள் பிரதிநிதிகளில், அதிகம் பேர் காங்கிரஸ் கட்சியைச் சார்ந்தவர்களே. காங்கிரஸ் கட்சியைச்சேர்ந்த 51 எம்எல்ஏ-க்கள் பான் கார்டு விவரங்களை வெளியிடவில்லை. அதேபோல், பாரதிய ஜனதா கட்சியைச் சேர்ந்த 42 எம்எல்ஏ-க்கள், சிபிஐ(எம்) கட்சியைச் சேர்ந்த 25 எம்எல்ஏ-க்கள் வெளியிடவில்லை.

    மாநில வாரியாக கேரளாவில் 33 எம்எல்ஏ-க்களும், மிசோரத்தில் (28), மத்திய பிரதேசத்தில் (19) எம்எல்ஏ-க்களும் இந்த பட்டியலில் இடம் பிடித்துள்ளனர்.

    ஒடிசாவில் இரண்டு எம்பி-க்களும், தமிழ்நாட்டில் இரண்டு எம்பி-க்களும் அசாம், மிசோரம், லட்சதீவு ஆகியவற்றில் இருந்து தலா ஒரு எம்பி-க்களும் பான்கார்டு விவரங்களை சமர்பிக்கவில்லை. தமிழ்நாட்டில் பான் கார்டு விவரங்களை சமர்பிக்காத இரண்டு எம்பி-க்களுமே அதிமுகவைச் சேர்ந்தவர்கள் ஆவர்.
    திருவாடனை தொகுதி எம்.எல்.ஏ. கருணாஸ் கைது பற்றிய தகவல்களை அனைத்து எம்.எல்.ஏ.க்களுக்கும், சபாநாயகர் ப.தனபால் தபால் மூலம் கடிதம் அனுப்பியுள்ளார் என்று சட்டசபை வட்டாரம் தெரிவித்தது. #SpeakerDhanapal #Karunas
    சென்னை:

    தமிழகத்தில் வன்முறையைத் தூண்டும் விதத்தில் பேசியதாகக் குற்றம்சாட்டி திருவாடனை தொகுதி எம்.எல்.ஏ. கருணாசை, அவரது சாலிகிராமம் வீட்டில் வைத்து 23-ந் தேதியன்று போலீசார் கைது செய்தனர். இந்த வழக்கில் அவர் அடுத்த மாதம் அக்டோபர் 5-ந் தேதிவரை நீதிமன்றக் காவலில் வேலூர் ஜெயிலில் அடைக்கப்பட்டுள்ளார்.

    எம்.எல்.ஏ. கைது செய்யப்பட்டால், சட்டசபை விதிகளின்படி அதுகுறித்து சபாநாயகரிடம் போலீசார் மற்றும் சிறைத்துறையினர் தகவல் தெரிவிக்க வேண்டும். அந்த வகையில், சபாநாயகர் ப.தனபாலுக்கு, கருணாஸ் எம்.எல்.ஏ. கைது குறித்து சென்னை போலீஸ் கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதன் தபால் மூலம் தகவல் தெரிவித்துள்ளார்.

    அதுபோல கருணாஸ் அடைக்கப்பட்டு இருக்கும் சிறையின் விவரங்கள் பற்றி சிறைத்துறை ஐ.ஜி., சபாநாயகர் ப.தனபாலுக்கு கடிதம் எழுதியுள்ளார். சபாநாயகருக்கு தபால் மூலம் வரப்பெற்ற கடிதங்களில், கருணாஸ் கைது செய்யப்பட்டதற்கான காரணம், அவர் மீது தொடரப்பட்டுள்ள வழக்கின் சட்டப்பிரிவுகள், அவர் அடைக்கப்பட்டு இருக்கும் சிறை பற்றிய விவரங்கள் உள்ளன.

    எம்.எல்.ஏ. கைது பற்றிய தகவல்களை அவை விதிகளின்படி, மற்ற அனைத்து எம்.எல்.ஏ.க்களுக்கும், சபாநாயகர் தெரிவிக்க வேண்டும். அந்த வகையில் அனைத்து எம்.எல்.ஏ.க்களுக்கும், சபாநாயகர் ப.தனபால் தபால் மூலம் கடிதம் அனுப்பியுள்ளார் என்று சட்டசபை வட்டாரம் தெரிவித்தது. இதில், இ-மெயில் தகவல்களும் பரிமாறிக்கொள்ளப்பட்டதாக கூறப்படுகிறது.  #SpeakerDhanapal #Karunas

    பா.ஜனதா நடத்திய குதிரை பேர வீடியோ சிக்கி இருப்பதாகவும், அதை வைத்து லஞ்ச ஒழிப்பு பிரிவு போலீசார் மூலம் நடவடிக்கை எடுக்கப் போவதாக குமாரசாமி எச்சரித்ததையடுத்து அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் சமாதானமாகி உள்ளனர். #Kumaraswamy #KarnatakaPolitics
    பெங்களூரு:

    கர்நாடகத்தில் முதல்-மந்திரி குமாரசாமி தலைமையில் ஜே.டி.எஸ். - காங்கிரஸ் கூட்டணி ஆட்சி நடந்து வருகிறது. இந்த கூட்டணியில் அதிருப்தி எம்.எல்.ஏ.க்களை இழுக்க பா.ஜனதா முயற்சி செய்தது.

    இதனால் குமாரசாமி அரசுக்கு நெருக்கடி ஏற்பட்டது. அவர் நேரடியாகவே மாநில பா.ஜனதா தலைவர் எடியூரப்பாவுக்கு எச்சரிக்கை விடுத்தார்.

    இந்த நிலையில் ஆட்சியை கவிழ்க்க சதியில் ஈடுபடும் பா.ஜனதா நிர்வாகிகள் மீது நடவடிக்கை எடுக்குமாறு ஜே.டி.எஸ். கட்சி சார்பில் கர்நாடக சட்டசபை சபாநாயகர் ரமேஷ்குமாரிடம் மனு கொடுக்கப்பட்டு உள்ளது.

    அதில் எங்கள் கட்சியை சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர் சுரேஷ் கவுடாவை பா. ஜனதா கட்சியினர் தொடர்பு கொண்டு ரூ.30 கோடி கொடுப்பதாக பேரம் பேசி உள்ளனர். இதேபோல் எங்கள் கட்சியை சேர்ந்த எம்.எல்.ஏ.க்கள் எச்.கே.குமாரசாமி, சீனிவாசமூர்த்தி, தேவானந்த சவுகான், காங்கிரசை சேர்ந்த எம்.எல்.ஏ.க்கள் பி.சி.பட்டீல், எம்.டி.பி. நாகராஜ், சிவள்ளி, ரமேஷ் ஜார்கிகோளி, ரகீம்கான் உள்ளிட்டோரிடமும் பா.ஜனதா கட்சியினர் பேரம் பேசி இருக்கிறார்கள்.

    எனவே குதிரை பேரத்தில் ஈடுபடுபவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறப்பட்டு உள்ளது.

    பின்னர் முதல்-மந்திரி குமாரசாமி கூட்டணி அரசின் ஒருங்கிணைப்பாளரும், முன்னாள் முதல்-மந்திரியுமான சித்தராமையாவை நேரில் சந்தித்து பேசினார்.

    துணை முதல்-மந்திரி பரமேஸ்வர், மாநில காங்கிரஸ் தலைவர் தினேஷ் குண்டுராவ், செயல் தலைவர் ஈஸ்வர் கன்ட்ரே, மந்திரி டி.கே.சிவக்குமார் ஆகியோரும் உடன் இருந்தனர்.

    இந்த கூட்டத்தில் பா.ஜனதாவின் ஆபரே‌ஷன் தாமரை திட்டத்தை எப்படி முறியடிப்பது, காங்கிரஸ் மற்றும் ஜே.டி.எஸ். எம்.எல்.எ.க்கள் பா.ஜனதாவுக்கு தாவாமல் பாதுகாப்பது குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டது.



    இதில் எம்.எல்.ஏக்களுடன் பா. ஜனதா நடத்திய குதிரை பேரம் தொடர்பான ஆடியோ-வீடியோ சிக்கி இருப்பதாகவும் அதை வைத்து எம்.எல்.ஏ.க்கள் மீது லஞ்ச ஒழிப்பு பிரிவு போலீசாரை கொண்டு நடவடிக்கை எடுக்கலாம் என்றும் குமாரசாமி யோசனை தெரிவித்தார்.

    இதைத்தொடர்ந்து ஆட்சிக்கு எதிராக போர்க்கொடி தூக்கி உள்ள எம்.எல்.ஏ.க்களிடம் குமாரசாமி போனில் பேசினார். குதிரை பேர வீடியோ தன்னிடம் சிக்கி இருப்பதாகவும் இதை வைத்து லஞ்ச ஒழிப்பு பிரிவு போலீசார் மூலம் நடவடிக்கை எடுக்கப் போவதாக எச்சரித்தார்.

    இதைத்தொடர்ந்து அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் சமாதானமாகி பணிந்தனர். இதனால் தற்காலிகமாக குமாரசாமி ஆட்சிக்கு நெருக்கடி நீங்கியது.

    இதேபோல் காங்கிரஸ் தரப்பிலும் தங்கள் கட்சி அதிருப்தி எம்.எல்.ஏக் களுடன் பேச்சு நடத்தி சமாதானம் செய்தனர்.

    இந்த பரபரப்பான சூழ்நிலையில் ஜே.டி.எஸ். எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் ஹாசனில் இன்று (சனிக்கிழமை) மாலை ஒரு தனியார் ஓட்டலில் நடக்கிறது. இதில் முன்னாள் பிரதமர் தேவகவுடா, முதல்-மந்திரி குமாரசாமி உள்ளிட்ட தலைவர்கள் கலந்து கொள்கிறார்கள்.

    இந்த கூட்டத்தை தொடர்ந்து எம்.எல்.ஏ.க்கள் அனைவரும் ஒரே ஓட்டலில் தங்க வைக்கப்படுவார்கள் என்றும், கூட்டணி அரசுக்கு எழுந்து உள்ள சிக்கல் தீரும் வரை எம்.எல்.ஏ.க்களை ஒரே இடத்தில் வைத்துக்கொள்ள குமாரசாமி விரும்புவதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. #Kumaraswamy #KarnatakaPolitics
    எம்.பி. - எம்.எல்.ஏ.க்களை மீதான குற்ற வழக்குகளை விசாரிக்க சென்னை கலெக்டர் அலுவலக கட்டிடத்தில் சிறப்பு கோர்ட் அமைக்கப்பட்டுள்ளது. நீதிபதியாக சாந்தி நியமிக்கப்பட்டுள்ளார். #SpecialCourt
    சென்னை:

    ஊழல் வழக்குகளில் சிக்கி சிறை தண்டனை பெறும் எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் 6 ஆண்டுகள் பொதுத் தேர்தலில் போட்டியிட தடை விதிக்க மக்கள் பிரதிநிதித்துவ சட்டம் வழிவகை செய்கிறது.

    ஆனால், சட்டத்தை உருவாக்கும் எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் ஊழல் வழக்குகளில் சிறை தண்டனை பெற்றால் அவர்கள் ஆயுள் முழுவதும் தேர்தலில் போட்டியிட தடை விதிக்க வேண்டும் என்று டெல்லியை சேர்ந்த பா.ஜ.க. நிர்வாகியும், வக்கீலுமான அஸ்வினி உபாத்யாயா, சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார்.

    வழக்கை விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு நாடு முழுவதும் ஒவ்வொரு மாநிலங்களிலும் எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் மீதான கிரிமினல் வழக்குகளை விசாரிப்பதற்காக சிறப்பு கோர்ட்டுகளை அமைக்க வேண்டும் என்று கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 14-ந் தேதி உத்தரவிட்டது.

    இந்த உத்தரவை அமல்படுத்தி அதுகுறித்து மத்திய அரசு அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்றும் உத்தரவிட்டது.

    அதன்படி ஒவ்வொரு மாநில அரசுக்கும், அந்த மாநில ஐகோர்ட்டுக்கும் சுப்ரீம் கோர்ட்டு கடிதம் அனுப்பியது. முதல் கட்டமாக தமிழ்நாடு, கர்நாடகா, கேரளா உள்ளிட்ட 12 மாநிலங்களில் சிறப்பு கோர்ட்டுகள் அமைக்கப்படும் தகவலை சுப்ரீம் கோர்ட்டில் மத்திய அரசு தெரிவித்தது.

    இதைத் தொடர்ந்து எம்.பி., எம்.எல்.ஏ.க்களுக்கு எதிரான கிரிமினல் வழக்குகளை விசாரிக்க சிறப்பு கோர்ட்டு உருவாக்க தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. இந்த அரசாணையை தமிழக அரசின் உள்துறை செயலாளர் நிரஞ்சன் மார்டி வெளியிட்டார்.

    தமிழ்நாட்டில் சிறப்பு கோர்ட்டு அமைப்பதற்கு மத்திய அரசு ரூ.14.89 லட்சம் ஒதுக்கீடு செய்தது. அதை பயன்படுத்தி சிறப்பு கோர்ட்டை உருவாக்க தமிழக அரசு நடவடிக்கை எடுத்தது.

    அதன்படி, சிறப்பு கோர்ட்டை சென்னை கலெக்டர் அலுவலக கட்டிடத்தில் திறக்க ஐகோர்ட்டு முடிவு செய்தது. இதனைத் தொடர்ந்து சிறப்பு கோர்ட்டு அங்கு உருவாக்கப்பட்டது.

    சிறப்பு கோர்ட்டின் முதல் நீதிபதியாக ஜெ.சாந்தி நியமனம் செய்யப்பட்டுள்ளார். ஐகோர்ட்டு தலைமை பதிவாளர் சி.கண்ணப்பன் இதற்கான உத்தரவை வெளியிட்டுள்ளார். இந்த புதிய கோர்ட்டு திறப்பு விழா இன்று காலை 10 மணிக்கு நடந்தது.


    விழாவுக்கு ஐகோர்ட்டு மூத்த நீதிபதி ஹுலுவாடி ஜி.ரமேஷ் தலைமை தாங்கி புதிய கோர்ட்டை திறந்து வைத்தார். விழாவில், ஐகோர்ட்டு, செசன்சு கோர்ட்டு நீதிபதிகள், வக்கீல்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    இந்த சிறப்பு கோர்ட்டில் தமிழக எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள் மீதான நிலுவையில் உள்ள கிரிமினல் குற்றச்சாட்டு வழக்குகள் விசாரணை நடைபெறும்.

    தமிழகத்தை பொறுத்த வரையில் 178 எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் கிரிமினல் வழக்குகளை எதிர்கொண்டு வருகின்றனர். நாட்டிலேயே உத்தரப்பிரதேச மாநிலத்துக்கு அடுத்தபடியாக தமிழகத்தில் தான் எம்.பி., எம்.எல்.ஏ.க்களுக்கு எதிராக 324 வழக்குகள் நிலுவையில் உள்ளன.

    வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாகவும், சொத்துக்களை அபகரித்ததாகவும் தொடரப்பட்ட வழக்குகளை பல எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் எதிர் கொண்டு வருகின்றனர். இதுதவிர தேர்தல் வழக்குகள் தனியாக உள்ளன என்று தன்னார்வ நிறுவனம் ஆய்வு செய்து அறிக்கை வெளியிட்டுள்ளது.  #MP #MLA #Cases #SpecialCourt
    தி.மு.க. தலைவராக மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்ற பிறகு முதல்முறையாக மாவட்ட செயலாளர்கள் மற்றும் எம்.எல்.ஏ.க்கள் ஆலோசனைக்கூட்டம் இன்று நடைபெற்றது. #DMK #MKStalin
    சென்னை:

    தி.மு.க. மாவட்ட செயலாளர்கள், எம்.பி.க்கள் மற்றும் எம்.எல்.ஏ.க்கள் ஆலோசனை கூட்டம் சென்னை அண்ணா அறிவாலயத்தில் இன்று நடைபெற்றது.

    இந்த கூட்டத்திற்கு தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமை தாங்கினார். பொதுச்செயலாளர் அன்பழகன் முன்னிலை வகித்தார்.

    பொருளாளர் துரைமுருகன், துணை பொதுச் செயலாளர்கள் சுப்புலட்சுமி ஜெகதீசன், வி.பி.துரைசாமி, முன்னாள் மத்திய மந்திரி டி.ஆர்.பாலு, எம்.பி.க்கள் கனிமொழி, திருச்சி சிவா, டி.கே.எஸ்.இளங்கோவன், ஆர்.எஸ்.பாரதி ஆகியோர் கலந்து கொண்டனர்.

    கூட்டத்தில் ஜெ.அன்பழகன், பி.கே.சேகர்பாபு, மா. சுப்பிரமணியம், மாதவரம் சுதர்சனம், ஆவடி நாசர், தா.மோ. அன்பரசன், காஞ்சீபுரம் சுந்தர், பொன்முடி, கே.என்.நேரு, எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் உள்ளிட்ட 63 பேர் மாவட்ட செயலாளர்கள் மற்றும் 88 எம்.எல்.ஏ.க்கள் பங்கேற்றனர்.

    கூட்டத்தில் பாராளுமன்ற தேர்தலில் வெற்றி பெறுவதற்கு ஒவ்வொரு தொகுதியிலும் கடுமையாக உழைக்க வேண்டும், அதற்கான ஆக்கப்பூர்வமான பணிகளில் மாவட்ட செயலாளர்கள் ஈடுபட வேண்டும் என்றும் விவாதிக்கப்பட்டது.

    மேலும் தற்போது குட்கா ஊழல் விஸ்வரூபம் எடுத்துள்ள நிலையில் இந்த ஊழலில் தொடர்புடையவர்கள் பற்றி மக்கள் மத்தியில் கொண்டு செல்ல வேண்டும் எனவும் முடிவு எடுக்கப்பட்டது.

    வாக்காளர் பட்டியலில் தி.மு.க. உறுப்பினர்கள் பெயர்கள் விடுபடாமல் இருப்பதற்கு நாளை நடைபெறும் சிறப்பு முகாமில் ஒவ்வொரு பூத்திலும் தி.மு.க. பிரதிநிதிகள் அமர்ந்து வாக்காளர் பட்டியலை சரி பார்க்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டது.

    இது தவிர அரசியல் நிகழ்வுகள் குறித்து இந்த கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.



    தி.மு.க. தலைவராக மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்ற பிறகு நடக்கும் முதல் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் இது என்பது குறிப்பிடத்தக்கது.

    கூட்டத்தில் வேலூர் மாவட்டம் சார்பில் தேர்தல் நிதியாக ரூ.1 கோடி மு.க. ஸ்டாலினிடம் வழங்கப்பட்டது. #DMK #MKStalin

    மராட்டியத்தில் மராத்தா சமூகத்தினர் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து 2 எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமா செய்தனர். #Maharashtrabandh #MarathaQuotaStir
    மும்பை:

    மராட்டிய மாநிலத்தில் மராத்தா சமூகத்தினர் மாநில மக்கள் தொகையில் 30 சதவீதம் பேர் உள்ளனர். அரசியல் செல்வாக்கு மிக்கவர்களாக கருதப்படும் இவர்கள் கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் இட ஒதுக்கீடு கோரி நடத்தி வரும் போராட்டம் வன்முறையாக மாறியது.

    மும்பையில் நேற்று முழு அடைப்பு போராட்டத்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. இதையொட்டி பல இடங்களில் சாலை மறியல் நடந்தன. அப்போது பஸ்கள் மீது கல்வீசப்பட்டது. ஒரு பஸ் தீவைத்து எரிக்கப்பட்டது. பல பஸ்களின் டயர்கள் சேதப்படுத்தப்பட்டன.

    பல்வேறு பகுதிகளில் போராட்டக்காரர்களுக்கும், போலீசாருக்கும் இடையே மோதல் சம்பவங்கள் நிகழ்ந்தன. இதில் 3 போலீசார் காயம் அடைந்தனர்.

    மும்பை மட்டுமின்றி மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் பேரணி நடந்தது. ரெயில் மறியலும் நடந்தது. சிலஇடங்களில் ரெயில்கள் மீது கற்கள் வீசப்பட்டன. இதனால் ரெயில்சேவை பாதிக்கப்பட்டது.


    இட ஒதுக்கீடு கோரிக்கையை வலியுறுத்தி மேலும் ஒருவர் தற்கொலை செய்துள்ளார். ஏற்கனவே 2 பேர் தற்கொலை செய்து இருந்தனர்.

    மராத்தா சமூகத்தினர் 2016-17ம் ஆண்டு 58 பேரணியை நடத்தி இருந்தனர். இது அமைதியாக நடந்து முடிந்தது. ஆனால் நேற்று நடந்த முழு அடைப்பு கலவரமாக மாறியது. 2 போலீஸ் வாகனம் உள்பட 50 வாகனங்கள் கொளுத்தப்பட்டன.

    இந்த நிலையில் மராத்தா சமூகத்தினர் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து 2 எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமா செய்தனர். அவுரங்காபாத்தை சேர்ந்த சிவசேனா எம்.எல்.ஏ. ஹர்‌ஷவர்தன் ஜாதவ் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். தனது ராஜினாமா கடிதத்தை அவர் இ.மெயில் மூலம் சபாநாயகருக்கு அனுப்பியுள்ளார்.

    இதேபோல தேசியவாத காங்கிரஸ் கட்சியை சேர்ந்த எம்.எல்.ஏ. ஒருவரும் பதவி விலகியுள்ளார்.

    மராத்தா சமூகத்தினரின் போராட்டம் பட்னாவிஸ் அரசுக்கு நெருக்கடியை ஏற்படுத்தி உள்ளது. #MarathaReservation #Maharashtrabandh #MarathaQuotaStir #MarathaReservationProtest
    அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள், மாவட்ட செயலாளர்கள் கூட்டம் சென்னையில் இன்று (திங்கட்கிழமை) நடைபெறுகிறது. இந்தக் கூட்டத்தில், உறுப்பினர் சேர்க்கை குறைந்தது குறித்து முக்கிய ஆலோசனை செய்யப்படுகிறது.
    சென்னை:

    அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள், மாநில நிர்வாகிகள், மாவட்ட செயலாளர்கள் கூட்டம் சென்னை ராயப்பேட்டையில் உள்ள அ.தி.மு.க. தலைமை அலுவலகத்தில் இன்று மாலை 4.30 மணியளவில் நடைபெறுகிறது. அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளரும், துணை முதல்- அமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம், கட்சியின் இணை ஒருங்கிணைப்பாளரும், முதல்- அமைச்சருமான எடப்பாடி பழனிசாமி ஆகியோர் தலைமையில் நடைபெறும் இந்தக் கூட்டத்தில், உறுப்பினர் சேர்க்கை குறைந்தது குறித்து முக்கிய ஆலோசனை செய்யப்பட இருக்கிறது.

    ஏற்கனவே, மறைந்த முதல்- அமைச்சர் ஜெயலலிதா, அ.தி.மு.க.வில் 1½ கோடி தொண்டர்கள் இருப்பதாக கூறிவந்தார். இந்த எண்ணிக்கையை 2 கோடியாக உயர்த்த வேண்டும் என்ற எண்ணத்தில் புதிய உறுப்பினர்கள் சேர்க்கை தொடங்கப்பட்டது. மேலும், பழைய உறுப்பினர்களை தக்கவைத்துக்கொள்ளவும் உறுப்பினர்கள் புதுப்பிப்பு பணியும் நடைபெற்றது.

    ஆனால், ஜெயலலிதா மறைவுக்கு பிறகு அ.தி.மு.க.வில் பிளவு ஏற்பட்டு, டி.டி.வி.தினகரன், திவாகரன், ஜெ.தீபா ஆகியோர் தலைமையில் புதிய அணிகள் உருவானதால், எதிர்பார்த்த அளவுக்கு உறுப்பினர்கள் சேர்க்கையை நடத்த முடியவில்லை. இதனால், உறுப்பினர்கள் சேர்க்கைக்கான காலக்கெடு அதிகரிக்கப்பட்ட போதிலும், அந்தப் பணி மந்தகதியிலேயே நடைபெற்றது.

    நேற்று முன்தினம் வரை புதிய உறுப்பினர்கள் சேர்க்கை, பழைய உறுப்பினர்கள் புதுப்பிப்பு என 90 லட்சம் பேர் மட்டுமே அ.தி.மு.க.வில் இணைந்துள்ளதாக கூறப்படுகிறது. ஏற்கனவே இருந்த 1½ கோடி தொண்டர்களில் இருந்து பெரும் பாலானவர்கள் விலகியதை கேட்டு, அ.தி.மு.க. தலைமை அதிர்ச்சியடைந்துள்ளது.

    இந்த நிலையில்தான், அ.தி.மு.க. தலைமை கழக நிர்வாகிகள், மாவட்ட செயலாளர்கள், எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் நடைபெறுகிறது. இந்தக் கூட்டத்தில், உறுப்பினர்கள் சேர்க்கை குறைந்தது குறித்து கட்சி நிர்வாகிகளிடம் ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி ஆகியோர் கருத்து கேட்க இருக்கின்றனர். அவர்களின் கருத்துகளின் அடிப்படையில் உறுப்பினர் சேர்க்கையை அதிகப்படுத்துவதற்கான நடவடிக்கை அ.தி.மு.க. தலைமை எடுக்கும் என்று அக்கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. 
    தமிழக சட்டசபையில் நீட் தேர்வு தொடர்பான கவன ஈர்ப்பு தீர்மானத்திற்கு பதிலளித்து அமைச்சர் விஜயபாஸ்கரின் பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்து தி.மு.க. மற்றும் காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் வெளிநடப்பு செய்தனர். #TNAssembly #DMKCongressWalkout #NEETissue
    சென்னை:

    நீட் தேர்வில் தோல்வி அடைந்ததால் தமிழக மாணவி பிரதீபா தற்கொலை செய்துகொண்டது தொடர்பாக சட்டசபையில் இன்று தி.மு.க. சார்பில் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வரப்பட்டது. இந்த தீர்மானம் மீது பேசிய மு.க.ஸ்டாலின், நீட் தேர்விற்கு 2017ல் அனிதாவையும் இந்த ஆண்டு பிரதீபாவையும் இழந்திருப்பதாக கூறினார். மேலும், நீட் தேர்வில் இருந்து விலக்கு பெறுவதற்கு அரசு என்ன செய்தது? என்றும் கேள்வி எழுப்பினார்.

    நீட் தேர்வு தொடர்பாக சட்டசபையில் நிறைவேற்றிய தீர்மானத்திற்கு குடியரசு தலைவரின் ஒப்புதலை பெற அரசு எடுத்த நடவடிக்கை என்ன? என்றும் கேள்வி எழுப்பினார்.



    இதற்கு பதிலளித்து சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் பேசினார். அப்போது நீட் தேர்வில் இருந்து விலக்கு பெறுவதற்கு தமிழக அரசு மேற்கொண்ட முயற்சிகள் குறித்து விளக்கினார். தீர்ப்புக்கு கட்டுப்பட்டு நீட் தேர்வை ஏற்றுக்கொள்ள வேண்டிய நிலை ஏற்பட்டதாகவும் அவர் கூறினார்.

    அவரது பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்து தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் வெளிநடப்பு செய்தனர். காங்கிரஸ் மற்றும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் எம்.எல்.ஏ.க்களும் சபை நிகழ்வுகளை புறக்கணித்து வெளியேறினர்.  #TNAssembly #DMKCongressWalkout #NEETissue

    தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவத்தைக் கண்டித்து சென்னையில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட கனிமொழி, திருமாவளவன் உள்ளிட்ட எம்.எல்.ஏ.க்கள் கைது செய்யப்பட்டனர். #SterliteProtest #DMKBandh
    சென்னை:

    தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தில் வன்முறை ஏற்பட்டதால் போலீசார் துப்பாக்கி சூடு நடத்தியதில் 13 பேர் பலியானார்கள்.

    இதற்கு பொறுப்பேற்று முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பதவி விலக கோரியும், டி.ஜி.பி. ராஜேந்திரனை பதவி நீக்கம் செய்ய கோரியும், தி.மு.க. உள்ளிட்ட அனைத்து கட்சிகள் சார்பில் தமிழ்நாடு முழுவதும் இன்று மறியல் போராட்டம் நடைபெற்றது.

    தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் ஒரு திருமண விழாவில் கலந்து கொள்ள மதுராந்தகம் சென்றிருந்தார். அங்கு திருமணத்தை நடத்தி வைத்த பின் தூத்துக்குடி துப்பாக்கி சூட்டை கண்டித்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டார்.

    அவருடன் புதுமண தம்பதியும், கட்சி தொண்டர்களும் ரோட்டில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    சென்னை எழும்பூரில் தி.மு.க. மகளிரணி செயலாளர் கனிமொழி எம்.பி. தலைமையில் மறியல் போராட்டம் நடைபெற்றது.

    இதில் விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன், மனிதநேய மக்கள் கட்சித் தலைவர் ஜவாஹிருல்லா, எம்.எல்.ஏ.க்கள் பி.கே.சேகர்பாபு, ப.ரங்கநாதன், கே.எஸ்.ரவிச்சந்திரன், தாயகம் கவி மற்றும் தோழமை கட்சி நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டனர்.


    ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றவர்கள் அ.தி.மு.க. அரசுக்கு எதிராக கண்டன முழக்கமிட்டனர். எடப்பாடி பழனிசாமி அரசு உடனே பதவி விலக வேண்டும் என்று வலியுறுத்தி கோ‌ஷம் எழுப்பினார்கள். மறியலிலும் ஈடுபட்டனர். உடனே கனிமொழி- திருமாவளவன் உள்பட எம்.எல்.ஏ.க்கள் அனைவரையும் போலீசார் கைது செய்தனர்.

    தியாகராயநகர் பஸ் நிலையம் அருகே மாவட்டச் செயலாளர் ஜெ.அன்பழகன் எம்.எல்.ஏ. தலைமையில் நிர்வாகிகள் கண்டன முழக்கமிட்டனர்.

    இதில் அண்ணாநகர் மோகன், கு.க.செல்வம், பகுதி செயலாளர்கள் ஜெ.கருணாநிதி, கே.ஏழுமலை, அகஸ்டின்பாபு உள்ளிட்ட ஏராளமானோர் பங்கேற்றனர். அவர்களும் கைது செய்யப்பட்டனர்.

    சைதாப்பேட்டையில் மாவட்டச் செயலாளர் மா.சுப்பிரமணியன் எம்.எல்.ஏ. தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம்- மறியல் நடைபெற்றது.

    இதில் தென்சென்னை மாவட்ட காங்கிரஸ் தலைவர் கராத்தே தியாகராஜன், தி.மு.க. பகுதி செயலாளர் கிருஷ்ணமூர்த்தி, சைதை குணசேகரன், மகேஷ்குமார் உள்ளிட்ட ஏராளமான கட்சி நிர்வாகிகளும் கூட்டணி கட்சியினரும் பங்கேற்றனர்.

    குன்றத்தூரில் மாவட்டச்செயலாளர் தா.மோ. அன்பரசன் எம்.எல்.ஏ. தலைமையில் பஸ் நிலையம் அருகே மறியல் போராட்டம் நடைபெற்றது. இதில் பட்டூர் ஜபருல்லா, சத்தியமூர்த்தி உள்பட ஏராளமானோர் மறியலில் ஈடுபட்டனர். அவர்கள் அனைவரையும் போலீசார் கைது செய்தனர்.

    குரோம்பேட்டை பஸ் நிலையத்தில் பல்லாவரம் எம்.எல்.ஏ. இ.கருணாநிதி தலைமையில் மறியல் பேராட்டம் நடைபெற்றது.

    இதில் காங்கிரஸ் கட்சி பிரமுகர் தீனதயாளன், ம.தி.மு.க. சார்பில் ரஜினி மற்றும் ஜோசப் அண்ணா துரை, ரமேஷ் உள்பட ஏராளமானோர் மறியலில் ஈடுபட்டனர். அவர்கள் அனைவரையும் போலீசார் கைது செய்தனர்.

    இதே போல் நகரின் பல பகுதிகளில் தி.மு.க. கூட்டணி கட்சியினர் மறியலில் ஈடுபட்டு கைதானார்கள். #SterliteProtest #DMKBandh
    ×