search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Mohamed Choli"

    • அதிபர் முகமது சோலியும், சீன ஆதரவாளராக கருதப்படும் முக்கிய எதிர்க்கட்சி தலைவரான முகமது மூயிசும் நேரடியாக மோதினார்கள்.
    • 54.6 சதவீத ஓட்டுகள் பெற்று முகமது மூயிஸ் வெற்றி பெற்றார்.

    மாலத்தீவு:

    இந்திய பெருங்கடலில் அமைந்துள்ள தீவு கூட்ட நாடான மாலத்தீவில் அதிபர் தேர்தல் நடை பெற்றது. இந்த தேர்தலில் இந்திய ஆதரவு நிலைப்பாட்டை கொண்டவராக அறியப்படும் அதிபர் முகமது சோலியும், சீன ஆதரவாளராக கருதப்படும் முக்கிய எதிர்க்கட்சி தலைவரான முகமது மூயிசும் நேரடியாக மோதினார்கள்.

    கடந்த 9-ந்தேதி அதிபரை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் நடந்தது. இதில் 50 சதவீதத்துக்கும் அதிகமான வாக்குகளை யாரும் பெறவில்லை. அந்நாட்டை பொறுத்தவரை அதிபராக 50 சதவீதம் ஓட்டுகளை பெற வேண்டும்.

    இதையடுத்து இறுதிகட்ட வாக்குப்பதிவு நடந்தது. இதில் மொத்தம் 85 சதவீத ஓட்டுகள் பதிவானது. இதற்கான ஓட்டு எண்ணிக்கை நடந்தது. இதில் 54.6 சதவீத ஓட்டுகள் பெற்று முகமது மூயிஸ் வெற்றி பெற்றார். அதிபர் முகமது சோலி தோல்வியை தழுவினார். அவர் தான் வெளியிட்ட எக்ஸ் வலைதளத்தில் அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்ட முகமது மூயிசுக்கு வாழ்த்துக்களை தெரிவித்து உள்ளார். 61 வயதான முகமது சோலி நவம்பர் மாதம் 17-ந்தேதி வரை புதிய அதிபர் பதவியேற்கும் வரை தற்காலிக அதிபராக பதவி வகிப்பார்.

    சீன ஆதரவு நிலைப்பாட்டை கொண்ட முகமது மூயிஸ் மாலத்தீவு அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டு உள்ளதால் இந்தியாவுடனான உறவில் பாதிப்பு ஏற்படலாம் என கூறப்படுகிறது.

    ஏனென்றால் தேர்தல் பிரசாரத்தின் போது அவர் அதிபர் சோலி மீது கடும் குற்றச்சாட்டுகளை சுமத்தினார். தனது ஆட்சியில் இந்தியாவுக்கு அளவுக்கு அதிகமாக இடமளிப்பதாகவும், மாலத்தீவில் இந்திய ராணுவத்தினர் இருப்பது நாட்டின் இறையாண்மைக்கு எதிரானது என அவர் தெரிவித்தார்.

    மேலும் தான் அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டால் இந்திய ராணுவத்தினரை மாலத்தீவில் இருந்து திருப்பி அனுப்பப் போவதாக அறிவித்தார்.

    இந்த குற்றச்சாட்டை அதிபர் முகமது சோலி மறுத்தார். மாலத்தீவில் நடந்து வரும் கட்டமைப்பு பணிகளுக்காக இந்திய ராணுவம் வந்துள்ளதாகவும், இதனால் நாட்டின் இறையாண்மைக்கு எந்த பாதிப்பும் இல்லை என அவர் தெரிவித்தார்.

    ×