search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "MukkombuDam"

    அணைக்கரையில் உள்ள கீழணையின் தூண்களில் விரிசல்கள் வெள்ளத்தால் அதிகரித்திருப்பதால் அணைக்கரை பாலத்தில் போக்குவரத்தை நிறுத்த வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தி உள்ளார். #MukkombuDam #Ramadoss

    சென்னை:

    பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    திருச்சி மாவட்டம் முக்கொம்பு பகுதியில் கொள்ளிடத்தின் குறுக்கே கட்டப்பட்டுள்ள மேலணையின் 9 மதகுகள் உடைந்ததால் பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ள நிலையில், தஞ்சை மாவட்டம் அணைக்கரையில் உள்ள கீழணையின் தூண்களில் ஏற்கனவே ஏற்பட்ட விரிசல்கள் வெள்ளத்தால் அதிகரித்திருப்பதாக தெரிய வந்துள்ளது. ஆனால், கீழணையை பாதுகாக்க நடவடிக்கை எடுக்கப்படாதது கண்டிக்கத்தக்கது.

    கொள்ளிடம் தொடங்கும் இடத்தில் 1836-ம் ஆண்டு மேலணையை கட்டிய அதே ஆர்தர் காட்டன் என்ற அதிகாரி தான் அடுத்த 4 ஆண்டுகள் கழித்து 1940-ம் ஆண்டில் அணைக்கரையில் கீழணையைக் கட்டினார்.

    தஞ்சாவூர், நாகை, கடலூர் மாவட்டங்களில் 1.32 லட்சம் ஏக்கர் நிலங்களுக்கு பாசன ஆதாரமாக திகழும் இந்த அணையும் முறையான பராமரிப்பு இல்லாமல் கடந்த 2002-ம் ஆண்டு வலு விழந்தது. அதன்பின் 16 ஆண்டுகளாகியும் அதனால் ஏற்படும் பாதிப்புகளை நிரந்தரமாகத் தடுக்க தமிழக ஆட்சியாளர்கள் உறுதியான நடவடிக்கைகள் எதையும் எடுக்கவில்லை என்பது தான் வேதனை.

    கீழணை வலுவிழந்ததற்கான காரணங்களை கடந்த 2002-ம் ஆண்டில் காவிரி தொழில்நுட்பக் குழுவின் தலைவராக இருந்த பேராசிரியர் மோகன கிருஷ்ணன் ஆய்வு செய்தார். கீழணை அமைந்துள்ள பாலம் போக்குவரத்துக்கு ஏற்றதல்ல என்பதைக் கண்டறிந்த அவர், அப்பாலத்தில் கனரக ஊர்திகள் செல்ல தடை விதிக்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு பரிந்துரைத்தார்.

    ஆனால், அப்பரிந்துரையை அப்போதைய ஜெயலலிதா அரசு ஏற்றுக் கொள்ள வில்லை. தொடர்ந்து கனரக ஊர்திகள் போக்குவரத்துக்கு அனுமதிக்கப்பட்டதால் 2009-ம் ஆண்டில் பாலத்தின் 13-வது மதகில் விரிசல் ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து அந்த ஆண்டு ஏப்ரல் 15-ந்தேதி பாலத்தை மீண்டும் ஆய்வு செய்த மோகனகிருஷ்ணன் கீழணை அமைந்துள்ள அணைக்கரை பாலத்தில் போக்குவரத்தை முற்றிலுமாக நிறுத்த பரிந்துரைத்தார்.

    அதன்படி அணைக்கரை பாலத்தில் சில ஆண்டுகளுக்கு பேருந்துகள் உள்ளிட்ட கனரக ஊர்திகள் செல்ல தடை விதிக்கப்பட்டது. அதுமட்டுமின்றி ரூ.7.5 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு பராமரிப்புப் பணிகள் மேற் கொள்ளப்பட்டன. ஆனாலும், சில மாதங்களில் அணைக்கரைப் பாலத்தில் மீண்டும் போக்குவரத்து அனுமதிக்கப்பட்டதால் அணை மீண்டும் பாதிக்கப்பட்டது.

    கீழணையில் 5 முதல் 18 வரையிலான 14 நீர்வழி மதகுகள் சேதமடைந்துள்ளன. காவிரிப் பாசன மாவட்டங்களில் கடந்த இரு நாட்களாக பயணம் மேற்கொண்டுள்ள நான், அங்குள்ள விவசாயிகள் மற்றும் விவசாய சங்க நிர்வாகிகளிடம் இது குறித்து விசாரித்தேன்.

    அண்மையில் ஏற்பட்ட வெள்ளத்தால் கீழணை தூண்களிலும், மதகுகளிலும் ஏற்பட்ட விரிசல்கள் அதிகரித்திருப்பதாகவும், மேலணை இடிந்த பிறகு கீழணைக்கு எந்த நேரத்தில் எத்தகைய ஆபத்து ஏற்படுமோ என்ற அச்சத்தில் தாங்கள் வாழ்வதாகவும் விவசாயிகள் தெரிவித்தனர்.

    கீழணையில் தொடர்ந்து போக்குவரத்து அனுமதிக்கப்பட்டால் அதற்கு எந்த நேரமும் ஆபத்து நேரலாம் என்பது தான் அப்பகுதியில் உள்ள உழவர்களின் கருத்தாக உள்ளது. மேலணை உடைந்து 4 நாட்கள் ஆகிவிட்ட நிலையில் கீழணையின் வலிமை மற்றும் பாதுகாப்பு குறித்து பொதுப்பணித்துறை அதிகாரிகள் இதுவரை எந்த ஆய்வுகளையும் மேற் கொள்ளவில்லை. கீழணை உள்ளிட்ட தமிழ்நாட்டு அணைகளின் பாதுகாப்பு குறித்த வி‌ஷயத்தில் அரசின் அக்கறை என்ன என்பதை இதிலிருந்தே அறியலாம்.

    கீழணையில் கனரக ஊர்திகள் போக்குவரத்துக்கு தடை விதிக்க வேண்டும் என்று 16 ஆண்டுகளுக்கு முன்பும், அனைத்து வாகனப் போக்குவரத்துக்கும் தடை விதிக்க வேண்டும் என்று 9 ஆண்டுகளுக்கு முன்பும் பரிந்துரைக்கப்பட்ட நிலையில், அப்பரிந்துரைகளை செயல்படுத்தாததன் மூலம் கீழணையின் பாதுகாப்புக்கு திராவிடக் கட்சிகளின் அரசுகள் பெரும் துரோகம் செய்துள்ளன.

    அணைக்கரையிலிருந்து கும்பகோணம் செல்லும் ஊர்திகளை மதனத்தூர் நீலத்தநல்லூர் கொள்ளிடம் பாலம் வழியாக இயக்குவதன் மூலம் கீழணையில் ஊர்திப் போக்குவரத்தை தவிர்க்க முடியும். கடந்த காலங்களில் இவ்வாறு செய்யப்பட்டுள்ளது.

    விக்கிரவாண்டியிலிருந்து கும்பகோணம் வழியாக தஞ்சாவூர் செல்லும் இருவழிச் சாலையை நான்கு வழிச் சாலையாக மாற்றும் திட்டத்தை விரைந்து செயல் படுத்துவதன் மூலம் இந்தப் பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வு காண முடியும்.

    ஆனால், இந்தத் திட்டம் தயாரிக்கப்பட்டு 9 ஆண்டுகள் ஆன நிலையில், இப்போது தான் முதற்கட்ட பணிகள் தொடங்கியுள்ளன. இந்தப் பணிகளை விரைந்து நிறைவேற்றி முடிக்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். இதுதவிர கீழணைக்கு மாற்றாக அதே பகுதியில் வலிமையான புதிய அணை கட்டுவதற்கான வாய்ப்புகளையும் அரசு ஆராய வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    ×