search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Murugan Worship"

    • முருகப்பெருமான் விரும்பி அமர்ந்த மலை பழனி மலை.
    • அறுபடை வீடுகளுள் 3-ம் படைவீடாக விளங்குகிறது.

    கலியுக கடவுள் என பக்தர்களால் அழைக்கப்படும் முருகப்பெருமான் விரும்பி அமர்ந்த மலை பழனி மலை ஆகும். இது அறுபடை வீடுகளுள் 3-ம் படைவீடாக விளங்குகிறது. இத்திருத்தலத்தில் திருக்கார்த்திகை, பங்குனிஉத்திரம், தைப்பூசம், சூரசம்ஹாரம் உள்ளிட்ட திருவிழாக்கள் வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது.

    இதில் தைப்பூச திருவிழாவுக்கு மற்ற திருவிழாக்களை காட்டிலும் அதிக அளவில் பக்தர்கள் பாதயாத்திரையாக வந்து பழனியாண்டவனை தரிசனம் செய்துவிட்டு செல்கின்றனர். பொதுவாக தைப்பூச திருவிழா வெற்றி விழா எனவும் அழைக்கப்படுகிறது.

    "தை பிறந்தால் வழி பிறக்கும்" என்ற வழக்காடு சொல்லுக்கு ஏற்ப இந்த தைப்பூச நன்னாளில் தங்கள் வேண்டுதல்களை நிறைவேறும் வகையில் வேண்டிக் கொள்ளும் பக்தர்களின் வாழ்வில் ஒளி ஏற்றப்படும் திருநாளாக தைப்பூசம் அமைகிறது.

    தை மாதத்தில் பூச நட்சத்திரத்தோடு நிறைந்த முழுமதி கூடும் மங்கல நாள் அன்று முருகப்பெருமானை வேண்டி கொண்டாடப்படும் வெற்றித் திருவிழாவாக தைப்பூசம் திகழ்கிறது. சூரர்களை அழித்து உலக உயிரினங்களை துன்பத்தில் இருந்து மீட்ட தினமே தை மாதத்தில் வரும் பூச நட்சத்திர நாளாகும்.

    இதனைப் போற்றும் விதமாக தைப்பூச திருவிழா ஆண்டுதோறும் முருகன் கோவில்களில் வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகின்றது. பழனியில், உபகோவிலான பெரியநாயகி அம்மன் கோவிலில் 10 நாட்கள் தைப்பூச திருவிழா வெகு விமரிசையாக கொண்டாடப்படும். தைப்பூச நாளில் பக்தர்கள் முருகப்பெருமானை மனமுருக வேண்டினால் பூரண அருள் பெறலாம்.

    • திருச்செந்தூரில் முருகன் ஞானகுருவாக அருளுகிறார்.
    • திருச்செந்தூர் குரு தலமாக கருதப்படுகிறது.

    திருச்செந்தூரில் முருகன் ஞானகுருவாக அருளுகிறார். அசுரர்களை அழிக்கும் முன்பு, குருபகவான் முருகனுக்கு அசுரர்களை பற்றிய வரலாறை இத்தலத்தில் கூறினார். எனவே இத்தலம், குரு தலமாக கருதப்படுகிறது. பிரகாரத்தில் உள்ள மேதா தட்சிணாமூர்த்தி கூர்மம், அஷ்ட நாகங்கள், அஷ்டயானைகள், மேதாமலை என நான்கு ஆசனங்களின் மீது அமர்ந்திருக்கிறார். இவருக்கு பின்புறம் உள்ள கல்லால மரத்தில் 4 வேதங்களும், கிளிகள் வடிவில் இருக்கிறது.

    அறிவு, ஞானம் தரும் மூர்த்தியாக அருளுவதால் இவரை, `ஞானஸ்கந்த மூர்த்தி' என்று அழைக்கிறார்கள். வழக்கமாக கைகளில் அக்னி, உடுக்கையுடன் காட்சி தரும் தட்சிணாமூர்த்தி, இங்கு மான், மழுவுடன் காட்சி தருகிறார். குருபெயர்ச்சியன்று திருச்செந்தூர் முருகனை வணங்கினால், தீய பலன்கள் குறையும்.

    தமிழகத்தில் உள்ள முருகன் கோவில்களில் ஒன்றில் கூட வேல் இல்லாமல் இல்லை. இவை வேல் என்னும் குறியீட்டின் முக்கியத்துவத்தைக் குறிப்பிடுவதாக உள்ளன. தமிழகத்தில் சுந்தரவேல், சக்திவேல், கதிர்வேல், கனகவேல், வடிவேல், குமரவேல், கந்தவேல், ஞானவேல், வேலப்பன், வேல்ச்சாமி, வேலன், வேலாயுதம் போன்ற பெயர்கள் ஆண்களுக்கு அதிகமாகச் சூட்டப்பட்டுள்ளதைக் பார்க்கும் போது வேலின் பெருமையை உணரலாம்.

    கந்தபுராணத்தில் முருகனின் கையில் இருக்கும் வேல் மகத்துவம் பற்றி கூறப்பட்டுள்ளது. கந்தபுராணம் வேலினைப் புகழ்ந்து கூறியிருப்பதுடன் வேலுக்கும் முருகனுக்கும் இடையிலான தொடர்புகளைத் தெளிவு படுத்துகின்றது. வேல் என்னும் குறிப்பு வேட்டையாடல், வேட்டைத் தலைவர், முருகனின் பூசாரி, முருகனின் போர்க்குணம் மற்றும் முருகனை உணர்த்தும் மறை பொருளாக அமைந்துள்ளது.

    வேல் விடுமினையோன், திறல்வேலன், வேல் கொண்டன்று பொருதவீரன், துங்கவடிவேலன், பிரசண்ட வடிவேலன், வேல் தொட்ட மைந்தன், அசுரர் தெறித்திட விடும் வேலன் என பலவாறாக முருகனைப் புகழ்ந்துரைக்கும் அருணகிரியார் காலம் முதல் முருகனது வேல் புதிய கோணத்தில் செல்வாக்குப்பெற்று பரலாயிற்று, ஆழ்ந்த முருக பக்தரான அருணகிரியார் பாடிய வேல் வகுப்பு, வேல்விருத்தம் ஆகியவை வேலின் முக்கியத்துவத்தை விளக்குகின்றன.

    வேலின் தன்மைகளை உயர்வுபடுத்திக் காட்டிய அருணகிரிநாதர் வேலின் சக்திக்குத் தனிப்பட்ட அர்த்தத்தை வழங்கியுள்ளார்.

    வேலைப்பற்றித் தனித்தனியாகப் பாடிய ஒரே முருக பக்தரும் புலவருமான அருணகிரியார் வேலானது இருளினை அகற்றக் கூடிய சுடரொளிகளான தீ, சூரியன் மற்றும் சந்திரன் ஆகிய இயற்கைச் சக்திகளை விளக்கக் கூடிய குறியீடு என குறிப்பிட்டுள்ளார்.

    வேற்கோட்டம் என்ற சொல்லாட்சியானது, தமிழகத்தில் முருகனைச் சுட்டிக்காட்டக்கூடிய ஒரு அடையாளப் பொருள் என்பதை தெளிவு படுத்துகின்றது. இன்றும் வட ஆற்காடு மாவட்டத்தில் உள்ள திருப்பத்தூர், கோவை மாவட்டத்தில் உள்ள பூராண்டான் பாளையம், மதுரை மாவட்டத்தில் பசுமலைக்கு அருகில் உள்ள குமரகம் ஆகிய இடங்களில் வேல் ஒன்றே நட்டுவைக்கப்பட்டு வணங்கப்படுகின்றது.

    திருச்செந்தூர், திருப்பரங்குன்றம் போன்ற முருகன் தலங்களில் உள்ள முருகன் ஆலயக் கோபுரங்களில் பெரிய அளவில் வேல்வடிவச் சுடர் விளக்குகள் பொருத்தப்பட்டுள்ளன. அவை வெகு தொலைவு வரை முருகன் கோவிலின் இருப்பிடத்தைச் சுட்டிக்காட்டுகின்றன.

    • அன்னையிடம் வேல் வாங்கிய நாள் - தைப்பூசம்
    • அறுவரும் ஒருவர் ஆன நாள் - கார்த்திகை.

    * முருகன் தோன்றிய நாள் - வைகாசி விசாகம்

    * அறுவரும் ஒருவர் ஆன நாள் - கார்த்திகையில் கார்த்திகை

    * அன்னையிடம் வேல் வாங்கிய நாள் - தைப்பூசம்

    * அசுரரை அழித்தாட்கொண்ட நாள் -ஐப்பசியில் சஷ்டி

    * வள்ளியைத் திருமணம் புரிந்த நாள் - பங்குனி உத்திரம் இப்படி... அன்னையிடம் வேல் வாங்கி, முதன் முதலாக, திருக்கையில் வேல் ஏந்திய நாளே -தைப்பூசம்.

    `வேல்' என்றால் என்ன?

    வேல் என்பது தமிழ்த் தொன்மத்தின் தனித்த அடையாளம். `வெல்' என்ற வினைச்சொல்லே நீண்டு `வேல்' என்ற பெயர்ச்சொல் ஆகிறது. ஆகவே, வேல் என்றால் -வெற்றி என்று அர்த்தமாகும். ஆயிரம் ஆயுதங்கள் இருப்பினும், தமிழ் மன்னர்களின் தனித்த பெருமிதம் -வேல் ஆண்டாளே, வென்று பகை கெடுக்கும் நின் கையில் "வேல்" போற்றி-ன்னு தான் மாயோனாகிய கண்ணனைப் பாடுறா வேலும் சங்கும் சங்கத் தமிழ் மரபு திருமங்கை ஆழ்வார் கையில் இப்பவும் வேல் உண்டு.

    சங்ககாலத் தமிழ் மண்ணில், வேல் வழிபாடே மிகுந்து இருந்தது. பின்னாளில் தான் ஆறு முகங்களும், பன்னிரு கரங்களும் ஆகமம், அது இது-ன்னு நுழைத்த பின்பே, ஒரு சாராரின் தலையீட்டால், மற்ற வழிபாடுகள் மெல்ல மெல்லப் புகுந்தன சிலப்பதிகாரத்தில், வேலுக்கு எனத் தனிக் கோட்டமே இருக்கும்.

    இந்த வேல் வழிபாடு நாளடைவில் நின்று விட்டது. வேல் வழிபாடுன்னா நாகரிகம் இல்லாதவர்கள் கும்புடுவது, விக்ரஹாதி மந்திர வழிபாடே நாகரிகம் என்று ஆகி விட்டது. பல தொன்மையான கோவில்களில் முருகன் சிலையே இருக்காது வெறும் வேல் வழிபாடு தான்.

    பழமுதிர்சோலை, திருச்செங்கோடு, ஈழத்தில் செல்வர் சந்நிதி, மலேசியாவில் பத்துமலை, உள்ளிட்ட பல ஊர்களில் எல்லாம் வேல் வழிபாடு தான் நடைமுறையில் உள்ளது. வேலும் ஈட்டியும் வேறு வேறு ஆயுதங்கள்.

    * வேலின் முகம் -அகன்று விரிந்து இருக்கும் ஈட்டியின் முகம் அகலாது குறுகி இருக்கும்.

    * வேலின் கீழ் நுனி - வட்டமாக முடியும் ஈட்டியோ நேர்க்கோட்டில் முடியும்.

    * வேல் - பெருமை மிக்கது மன்னர்களும், படைத் தலைவர்களுமே பெரும்பாலும் ஏந்துவார்கள்.

    * ஈட்டி - அனைத்து போர் வீரர்களிடமும் உண்டு.

    * வேல் எறிவதும், சிறந்த பகைவர்களை நோக்கியே எல்லார் மேலேயும் வேல் எறிந்து விடுவதில்லை.

    * ஆண்கள்-பெண்கள், இருவருமே வேல் பிடித்து ஆடின செய்திகள், சங்கத் தமிழில் உள்ளன.

    இப்படி, பண்டைத் தமிழ்ச் சமூகம், `வேல்' முன்னிறுத்தி, தன் மரபுகளை ஒத்து வாழ்ந்தது. இன்றும் கிராமத்தவர்கள், இந்த வேல் வழிபாட்டையே அதிகம் போற்றுகிறார்கள். தொலைந்து போன வேல் வழிபாடு, தமிழ் வழி வழிபாட்டை மீண்டும் முன்னிறுத்த, அருணகிரி நாதர் முயற்சிகள் பல செய்தார்.

    பின்னால் வந்த பல கவிஞர்களும், வேலைப் போற்றிப் பாடியுள்ளார்கள் பாரதியாரின் வேலன் பாட்டு, அதில் மிகவும் பிரபலம் முருகன் அன்னையிடம் வேல் வாங்கும் காட்சியை, சிக்கல் சிங்காரவேலர் சன்னிதியில், ஒவ்வொரு ஆண்டும் நடித்துக் காட்டுவது வழக்கம்.

    அப்போது சிங்காரவேலர் திருமேனி, வேலின் கொதியால் வியர்க்கிறது என்று சொல்வாரும் உளர். முருகன் திருமேனியைத் துடைத்து எடுப்பதும் வழக்கம்.

    முருகன் வேறு, வேல் வேறு அல்ல. முருகனைப் போலவே வேலுக்கும் ஆறு முகம் உண்டு. ஆறு படைகள் உண்டு.

    • முருகப்பெருமான் ஆலயம் சென்றும் வழிபட்டு வரலாம்.
    • பகை அழியும். நவக்கிரக தோஷம் நம்மை நெருங்காது.

    தைப்பூசம் அன்று காலையில் எழுந்து குளித்து தூய்மையான உடை உடுத்தி முருகப்பெருமானை வழிபட வேண்டும். முருகப்பெருமான் படத்திற்கு அல்லது விக்கிரகத்திற்கு முருகப்பெருமானின் நாமங்களைச் சொல்லி அர்ச்சனை செய்ய வேண்டும். வெற்றிலை, பாக்கு, பழம், தேங்காய் படைத்து, சுவாமிக்கு நைவேத்தியம் செய்வது நல்லது.

    சிலர் அன்று முழுவதும் எதையும் சாப்பிடாமல் உபவாசம் இருப்பார்கள். சிலர் பாலும் பழமும் மட்டும் எடுத்துக் கொண்டு ஒரு பொழுது சாப்பிட்டு விரதம் இருப்பார்கள். தைப்பூசம் அன்று முருகப்பெருமான் ஆலயம் சென்றும் வழிபட்டு வரலாம். அன்றைய தினம் தேவையற்ற வார்த்தைகளை பேசுவதோ, கோபப்படுவதோ, வீண் விவாதங்கள் செய்வதோ கூடாது. முருகப்பெருமான் நாமத்தை மட்டுமே சொல்லிக் கொண்டிருக்க வேண்டும்.

    முருகப்பெருமானை நினைத்து தைப்பூச விரதம் இருந்தால், பகை அழியும். நவக்கிரக தோஷம் நம்மை நெருங்காது. குழந்தை பேறு இல்லாதவர்களுக்கு குழந்தை பேறு கிடைக்கும். நீதிமன்ற வழக்குகள் சாதகமாக முடியும்.

    ×