search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "mythological stories"

    • ஈசன் ஒருர் மட்டுமே கங்கையை கட்டுப்படுத்த வல்லவர்.
    • கங்கையைப் பாதாளம் அழைத்துச் சென்றான் பகீரதன்.

    ஆதிகாலத்தில் அயோத்தியை ஆண்ட இசுவாகு குலத்தில் சகரர் என்பவர். குழந்தைப்பேறின்மையால் இறைவனை வேண்டி தவம் செய்ததின் பயனாய் அவரது முதல் மனைவி சுமதிக்கு 60 ஆயிரம் குழந்தைகளும் 2-வது மனைவி கேசினி என்பவளுக்கு ஒரு குழந்தையும் பிறந்தனர். சில காலம் கழித்து சகரர் அசுவமேத யாகம் செய்ய ஏற்பாடுகள் செய்தார்.

    சகரர் அசுவமேதயாகம் செய்தால் தன்னுடைய பதவி போய்விடுமோ என்று அஞ்சினான் இந்திரன். குதிரையை தூக்கிச்சென்று பாதாள லோகத்தில் தவம் செய்து கொண்டிருந்த கபில மகரிஷியின் ஆசிரமத்தில் கட்டிவைத்து விட்டான்.

    அந்த குதிரையை தேடிச்சென்ற சகரரின் புதல்வர்கள் ஆறுபதாயிரம் பேரும் கபிலரின் ஆசிரமத்தில் குதிரை இருப்பதைக் கண்டு கபிலரை திட்டியதுடன் அவரை துன்புறுத்தத் தொடங்கினார்கள் கோபம் அடைந்த கபில மகரிஷி அவர்களை சபித்து சாம்பலாக்கி விட்டார்.

    அனைத்தையும் அறிந்த சகரர் மன்னன் கபிலரை வணங்கி தான் செய்யும் அஸ்வமேத யாக குதிரை தங்கள் ஆசிரமத்தில் இருந்ததினால் இந்த குழப்பங்கள் வந்தது. தன் புதல்வர்களை மன்னிக்குமாறும் அவர்களுக்கு சாப விமோசனம் தந்து நற்கதி அடைவதற்கு வழி சொல்லுமாறும் தன் குதிரையை எடுத்துச்செல்ல அனுமதிக்குமாறும் கேட்டுக்கொண்டார்.

    சகரரின் வேண்டுகோளை ஏற்ற கபிலமகரிஷி குதிரையை எடுத்துச்செல்ல அனுமதி கொடுத்து மேலுலகத்தில் இருக்கும் கங்கையை பூலோகம் வரவழைத்து இந்த சாம்பலை புனிதப்படுத்தினால் இவர்கள் நற்கதி அடைவார்கள் என்று விமோச்சனம் கூறினார். இதனை கேட்டு மகிழ்ந்த சகரர் குதிரையை எடுத்துச் சென்று அசுவமேத யாகத்தை முடித்தார்.

    முதல் மனைவியின் வாரிசுகள் அறுபதாயிரம் பேரும் சாம்பலானதால் இரண்டாவது மனைவியின் புதல்வன் நாட்டின் அரச பதவியை ஏற்றுக்கொண்டார். அவனுக்குப் பின் அவனது புதல்வன் பகீரதன் ஆட்சி பொறுப்பை ஏற்றக்கொண்ட போது தமது முன்னோர்கள் ஆறுபதாயிரம் பேருக்கு நடந்ததை தெரிந்துகொண்டார்.

    பின்பு நாட்டை துறந்து கங்கையை பூலோகம் கொண்டு வர பிரம்ம தேவரை நினைத்து காட்டில் கடும் தவம் இயற்றினான். இவரின் தவத்தில் மகிழ்ந்த பிரம்மதேவர் மகிழ்ந்து கங்கையை பூமிக்கு அனுப்ப இசைந்தார்.

    பிரம்மாவிடம் ஆலோசனை பெற்ற பகீரதன், விண்ணுலகம் சென்று அங்கே கங்கையைப் பார்த்து வணங்கித் தன் முன்னோர்களின் வரலாற்றைக் கூறி அவர்கள் நற்கதி அடைய வேண்டி கங்கை பூமிக்கு வந்து பின் பாதளத்துக்கு வந்து தன் முன்னோர்கள் மோட்சம் அடைய உதவ வேண்டும் என வேண்டிக்கொண்டான்.

    அதற்கு கங்கை பகீரதா நான் பூமிக்கு வரச் சம்மதிக்கிறேன் ஆனால் நான் விண்ணில் இருந்து பூமிக்கு வருகையில் அந்த வேகத்தை பூமி தாங்க மாட்டாள் நான் வரும் வேகத்தை என்னால் குறைக்கவும் இயலாது. என்னை எவரேனும் தாங்கிப் பிடித்து மெல்ல மெல்ல பூமியில் விட ஏற்பாடு செய்தால் நான் வருகிறேன் என்று கூறினாள்.

    பகீரதனும் விண்ணுலகத்து தேவர்களிடமும் பராக்கிரம சாலிகளிடமும் கங்கையின் வேண்டுகோளைக் கூறி அவர்களை வந்து கங்கையைத் தாங்கிப் பிடிக்க வேண்டினான். ஆனால் கங்கையின் உண்மையான வேகம் அறிந்த அனைவரும் மறுத்துவிட்டனர்.

    பகீரதன் மஹாவிஷ்ணுவை வேண்ட அவர் இச்செயல் ஈசன் ஒருவரால் மட்டுமே இயலும் அவரே கங்கையைக் கட்டுப்படுத்த வல்லவர் அவரைத் தியானித்து தவம் செய்து அவர் அருளைப் பெறு என்று கூறினார்.

     பகீரதன் ஈசனைக் குறித்துத் தவம் இருந்து வேண்டினான் மனம் மகிழ்ந்த ஈசனும் அவனுக்குக் காட்சி அளித்து பகீரதா உன் தவம் குறித்து மகிழ்ச்சி அடைந்தோம். உன் முன்னோர்களைக் கடைத்தேற்ற நீ கையாண்ட வழிகளையும் உன் விடா முயற்சியையும் உறுதியையும் பாராட்டுகிறேன். கங்கை பூமிக்கு வரும் போது எனது சடாபாரத்தை விரித்துப் பிடிக்கிறேன். கங்கை அதிலே குதிக்கட்டும் அதில் இருந்து அவளைக் கீழே பாய்ந்து தவழச் செய்து விடுகிறேன் என்றார்.

    பகீரதனும் கங்கையிடம் ஈசனின் உதவியைக் குறித்துத் தெரிவிக்க அவளும் மகிழ்வோடு சப்தமிட்டுக்கொண்டு பூமியை நோக்கி வேகமாகப் பாய்ந்து வந்தாள். ஈசன் தன் சடையை விரித்துப் பிடித்தார். அப்போது கங்கைக்குள் அகங்காரம் புகுந்தது நான் மிகவும் வேகமாக வருகின்றேன். என் ஆற்றலையும் வேகத்தையும் இந்த ஈசனால் தாங்க இயலுமா என யோசித்தாள்.

     எல்லாம் வல்ல ஈசன் கங்கையின் மன ஓட்டத்தை புரிந்து கொண்டார். நதி ரூபத்தில் அவளுடைய நீரோட்டத்தைத் தன் சடையிலேயே முடிந்து சுருட்டி விட்டார் திணறிப் போன கங்கை வெளிவர முடியாமல் தவித்து தன் அகங்காரத்தை போக்கிக்கொண்டாள்.

    பகீரதனோ கங்கையைக் காணாமல் கலக்கமடைந்தான் ஈசனை நோக்கி மீண்டும் ஒற்றைக்காலில் தவமிருந்தான். பகீரதன் முன் தோன்றிய ஈசன், கங்கையின் கர்வத்தை ஓடுக்க வேண்டியே தாம் இவ்விதம் செய்ததாகக் கூறிவிட்டு கங்கையை மெல்ல மெல்ல வெளியே விட்டார். அவளை அப்படியே தாங்கிக் கொண்டு இமயத்தில் நந்தியெம்பெருமான் விட கங்கை அங்கிருந்து பாயத் தொடங்கினாள்.

    பகீரதன் அவளைப் பின் தொடர்ந்தான் வழியில் ஜான்ஹவி என்னும் ரிஷியின் ஆசிரமம் இருந்தது கங்கை வந்த வேகத்தில் அந்த ஆசிரமத்தை முற்றிலும் நீரால் அழித்து முனிவரையும் உருட்டித் தள்ள ஆயத்தமானாள் கோபம் கொண்ட முனிவர் கங்கையை அப்படியே தன் கைகளால் கங்கையை எடுத்து அள்ளிக் குடித்து விட்டார் கங்கை மீண்டும் சிறைப்பட்டாள். பகீரதன் கலங்கியே போனான்.

    முனிவரின் கால்களில் வீழ்ந்து வணங்கித் தன் ஆற்றாமையையும் கங்கைக்காகத் தான் மன்னிப்புக் கோருவதாயும் தெரிவித்தான். அவன் நிலை கண்டு இரங்கிய ஜான்ஹவி முனிவர் கங்கையைத் தம் செவி வழியே மிக மிக மெதுவாக விட்டார் இதன் பிறகு தடை ஏதுமில்லாமல் பாய்ந்த கங்கையைப் பாதாளம் அழைத்துச் சென்றான் பகீரதன்.

     அங்கே கபில முனிவரை சந்தித்து ஆசிகள் பெற்றுக்கொண்டு தம் மூதாதையரின் சாம்பலை கங்கை நீரில் நனைத்துப் புனிதமாக்கினான். சகரர் புத்திரர்கள் அறுபதாயிரம் பேருக்கும் நற்கதி கிடைத்தது. அன்று முதலே கங்கை பூமியில் பாய ஆரம்பித்தது.

    ×