search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "nakshatra vratam"

    • நட்சத்திர விரதம் இருந்தால் உச்சம் பெற்ற வாழ்க்கை அமையும்.
    • திதி விரதமிருந்தால் விதி மாறும்.

    பொதுவாகவே விரதங்கள் மூன்று வகைப்படும். ஒன்று வார விரதம், மற்றொன்று திதி விரதம். மூன்றாவது நட்சத்திர விரதமாகும். 'வார விரதத்தை மேற்கொண்டால் சீரான வாழ்க்கை அமையும். நட்சத்திர விரதம் இருந்தால் உச்சம் பெற்ற வாழ்க்கை அமையும். திதி விரதமிருந்தால் விதி மாறும். எனவே ஒருவருக்கு விதிக்கப்பட்ட "விதி" மாற வேண்டுமானால் திதி பார்த்து விரதம் இருந்து அதற்குரிய தெய்வத்தை வழிபாடு செய்ய வேண்டும்.

    மார்க்கண்டேயனுக்கு என்றும் பதினாறு என்று, விதியை இறைவன் மாற்றியமைத்த கதையை நீங்கள் அறிந்திருப்பீர்கள். அதைப்போல நமக்கு விதிக்கப்பட்ட விதி எதுவாக இருந்தாலும் அதை மாற்றக்கூடிய ஆற்றல் விரதங்களுக்கு உண்டு. உண்ணா விரதம் இருந்து இந்த நாட்டிற்கு சுதந்திரம் வாங்கிக் கொடுத்தார் மகாத்மா காந்தி, உண்மையாக நாம் விரதம் இருந்து உள்ளன்போடு வழிபட்டால் சுகங்களை வழங்குவார் முருகப்பெருமான்.

    "சுக்குக்கு மிஞ்சிய மருந்தும் இல்லை. சுப்ரமணியருக்கு மிஞ்சிய தெய்வமும் இல்லை" என்பது நம் முன்னோர் வாக்கு. உடல் ஆரோக்கியத்திற்கு சுக்கு மருந்தாக இருப்பது போல உள்ளம் சீராக இருக்க வள்ளல் முருகனின் வழிபாடு நமக்கு கைகொடுக்கின்றது. அந்த முருகப்பெருமானை எப்போது வேண்டுமானாலும் வழிபடலாம். இருந்தாலும் அவருக்கு உகந்த நாளில் வழிபடுகின்ற பொழுது எண்ணற்ற நற்பலன்கள் இதயம் மகிழும் விதம் நமக்கு வந்து சேருகின்றது.

    மனித வாழ்க்கையில் முக்கியத்துவம் பெறுவது இரண்டு விழாக்கள். ஒன்று திருமண விழா, மற்றொன்று வாரிசு பிறக்கும் திருநாள். அங்ஙனம் வாரிசு உண்டாக வள்ளல் முருகனை விரதம் இருந்து வழிபட வேண்டிய திருநாள் கந்தசஷ்டி விழாவாகும். முருகனுக்கு உகந்த விரதங்களில் ஒன்று சஷ்டி விரதமாகும். அந்த சஷ்டியை கந்த சஷ்டி என்று குறிப்பிடுவது வழக்கம். அதாவது கந்தனுக்குரிய சஷ்டி, கந்தசஷ்டி ஆகும்.

    முருகனுக்குரிய திதி விரதங்களில் முக்கியமானது சஷ்டி திதி. "சஷ்டியில் இருந்தால் தானே அகப்பையில் வரும் என்பது பழமொழி. இந்த பழமொழிதான் நாளடைவில் மருவி "சட்டியில் இருந்தால் தானே அகப்பையில் வரும்" என்று மாற்றம் பெற்றுவிட்டது.

    திருமண வீடுகளில் உணவு பரிமாறும் பொழுது சாம்பார், கூட்டு, போன்றவைகள் குறைவாக இருந்தால் கரண்டியில் எடுக்கும் போது குறைவாகவே வரும். அப்பொழுது சட்டியில் இருந்தால் தானே அகப்பையில் வரும்" என்று சொல்வதை நாம் கேட்கலாம். ஆனால் அதன் உண்மையான விளக்கம். `சஷ்டி திதியிலே முருகனுக்கு விரதமிருந்தால் 'அகப்பை எனப்படும் கருப்பையில் குழந்தை உருவாகும் என்பதைக் குறிப்பதாகும்.

    குழந்தை பாக்கியம் இல்லாத தம்பதியர் இந்த விரதத்தை முறையாக மேற்கொண்டு முருகப்பெருமானை வழிபட்டால் அழகான குழந்தையை பத்துத் திங்களில் பெற்று மகிழ்வர். கந்த சஷ்டி விழாக்காலத்தில் ஆறு நாட்களும் விரதம் இருக்க இயலாதவர்கள் சஷ்டியன்று முழுமையாக விரதம் இருப்பது நல்லது.

    இந்த ஆண்டு தீபாவளிக்கு அடுத்த நாள் கந்த சஷ்டி ஆரம்பமாகின்றது. பிறகு ஆறாவது நாள் கார்த்திகை 2-ந்தேதி (18.11.2023) சூரசம்ஹார நிகழ்வு அதாவது கந்த சஷ்டி விழா வருகின்றது. அன்றைய தினம் சூரசம்ஹாரம் முடித்து வெற்றிக் களிப்போடு இருக்கும் முருகப்பெருமானை வழிபட்டு இனிப்பு பொருள் உண்டு விரதத்தை நிவர்த்தி செய்வது நல்லது.

    முருகப்பெருமான் செந்தூரில் சூரனை சம்ஹாரம் செய்ததாக புராண வரலாறு சொல்வதால், அன்றையதினம் திருச்செந்தூரில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் முருகப்பெருமானை வழிபட செல்கின்றனர். திருச்செந்தூரின் கடல் ஓரத்தில் செந்தில்நாதன் அரசாங்கம். தேடித் தேடி வருவோர்க் கெல்லாம் தினமும் கூடும் தெய்வாம்சம் என்று கவியரசு கண்ணதாசன் வர்ணித்திருப்பார்.

    எனவே அப்படிப்பட்ட தெய்வாம்சம் நமக்கு கிடைக்க திருவருள் கைகூட, குருபீடமாக வீற்றிருக்கும் திருச்செந்தூருக்கு சென்று வழிபட்டு வரலாம். அங்கு செல்ல முடியாதவர்கள் அருகில் இருக்கும் முருகப்பெருமான் ஆலயங்களுக்குச் சென்று ஆறுமுகப்பெருமானை வழிபட்டு வரலாம்.

    வீட்டிலுள்ள பூஜை அறையிலும் ஆறுமுகப்பெருமான் வள்ளி, தெய்வானையுடன் கூடிய தெய்வ படத்தை வைத்தும் வழிபட்டு வரலாம். புத்திரப்பேறு மட்டுமல்லாமல் புகழ், கீர்த்தி, செல்வாக்கு, போன்ற பதினாறு பேறுகளும் பெற்று செல்வ வளத்தோடு வாழ இந்த வழிபாடு கைகொடுக்கின்றது.

    கந்தன்பெயரை எந்தநாளும் சொல்லிப் பாருங்கள்

    கவலையெல்லாம் தீரும் இது உண்மைதானுங்க!

    செந்தில்வேலன் புகழ்படித்தால் செல்வம் சேருங்க!

    தேசமெல்லாம் கொடிபறக்கும் வாழ்வைப் பாருங்க!

    என்று கவிஞர் பெருமக்கள் வள்ளி மணாளனை வர்ணித்து கவசம் பாடியிருக்கின்றார்கள்.

    ×