search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Nekonda"

    • தெலுங்கானாவின் வாரங்கல் மாவட்டத்தில் அமைந்துள்ளது நெகோண்டா ரெயில் நிலையம்.
    • திருப்பதி, ஐதராபாத் போன்ற முக்கிய நகரங்களுக்குச் செல்லும் ரெயில்கள் இங்கு நின்று செல்வதில்லை.

    ஐதராபாத்:

    தெலுங்கானா மாநிலத்தில் உள்ள வாரங்கல் மாவட்டத்தில் அமைந்துள்ளது நெகோண்டா கிராமம். நர்சம்பேட்டா தொகுதியில் உள்ள நெகோண்டா ரெயில் நிலையத்தில் திருப்பதி, ஐதராபாத் போன்ற முக்கிய நகரங்களுக்குச் செல்லும் ரெயில்கள் நின்று செல்வதில்லை.

    ரெயில் நின்று செல்ல என்ன செய்ய வேண்டும் என கிராம மக்கள் கேட்டதற்கு, 3 மாதத்துக்கு வருமானம் இருந்தால் மட்டுமே இங்கு ரெயிலை நிறுத்திச் செல்லமுடியும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

    இதற்கிடையே, பயணிகள் கோரிக்கை காரணமாக சமீபத்தில் செகந்திராபாத்தில் இருந்து குண்டூருக்கு செல்லும் இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் நெகோண்டாவில் தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. இங்கு நின்று செல்லும் ஒரே ரெயிலையும் இழந்துவிடக் கூடாது என்பதை மனதில் கொண்டு நெகோண்டா கிராம மக்கள் ஒன்றுதிரண்டனர்.

    அவர்கள் 'நெகோண்டா டவுன் ரெயில்வே டிக்கெட் மன்றம்' என்ற வாட்ஸ்அப் குழுவை உருவாக்கி சுமார் 400 பேர் உறுப்பினர்களாக சேர்ந்தனர். அவர்கள் மூலம் ரூ. 25 ஆயிரம் நன்கொடை பெறப்பட்டது. இதன்மூலம், நெகோண்டாவில் இருந்து கம்மம், செகந்திராபாத் மற்றும் பிற இடங்களுக்கு தினசரி ரெயில் டிக்கெட்டுகளை வாங்குகிறார்கள்.

    தினமும் 60-க்கும் மேற்பட்ட டிக்கெட்டுகள் வாங்கப்பட்டாலும் அதனை பயணிக்க பயன்படுத்துவதில்லை. ரெயில் நிலையத்துக்கு வருமானம் காட்டவே இப்படிச் செய்வதாக அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.

    தங்கள் ஊரில் ரெயில்கள் நின்று செல்வதற்காக டிக்கெட் எடுத்து வரும் கிராம மக்களுக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது.

    ×