search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "New Year food celebration"

    • புத்தாண்டை வரவேற்பது என்பது நாட்டுக்கு நாடு வேறுபடுகிறது.
    • புத்தாண்டு அன்று திராட்சை உண்பது அதிர்ஷ்ட வருடமாக்கும் என்று நம்பப்படுகிறது.

    புது வருடம் தொடங்கும்போது, கோவிலுக்குச் செல்வது, புதிய ஆடை உடுத்துவது, வீட்டில் சிறப்பு வழிபாடு செய்வது, சிறப்பு உணவு சமைப்பது என்பதெல்லாம் உலகெங்கும் இருக்கும் நடைமுறைப் பழக்கம்.

    இருப்பினும், உணவில் மட்டும் வெவ்வேறு வகையான நம்பிக்கையுடன் புதுமையான உணவுகள் செய்து, சாப்பிட்டு, புத்தாண்டை வரவேற்பது என்பது, மாநிலத்துக்கு மாநிலம், நாட்டுக்கு நாடு வேறுபடுகிறது.

    அவ்வகையில் தமிழ் புத்தாண்டில் நமது பழக்கம், முக்கனிகள், நவதானியம், வெல்லம் வைத்து வழிபாடு செய்வதும், உணவில் வடை பாயசம் செய்வதும் பழக்கம் என்றால், தெலுங்கு வருடப் பிறப்பில் பச்சடி சிறப்பு உணவாக இருக்கிறது.

    அதுபோல், கிரேக்க நாட்டில், புத்தாண்டு அன்று, வெங்காயத்தை கதவில் கட்டித் தொங்க விடுவதும், வெங்காயம் சமைத்து உண்பதும் வழக்கமாக உள்ளது. வெங்காயத்தில் உள்ள அடுக்குகள் போல், இனம் விருத்தி அடையும் என்றும், மறு பிறவி கிடைக்கும் என்பதும் நம்பிக்கை. இதேபோன்று, அதிகம் விதைகள் கொண்ட மாதுளையும் கருதப்படுகிறது.


    ஐரோப்பிய நாடுகளில், 12 மாதங்களைக் குறிக்கும் வகையில், 12 பழங்கள் சாப்பிடுவதும், தொடர்ச்சியை குறிக்கும் வகையில் வட்ட வடிவத்தில் உள்ள கேக், பன், சாக்லேட் சாப்பிடுவதும் வழக்கம்.

    அயர்லாந்து நாட்டில் புத்தாண்டு அன்று பட்டர் பிரட் உணவுகள் சிறப்புணவாக இருக்கிறது. பிலிப்பைன்சில் 13 வகையான, வட்ட வடிவத்தில் இருக்கும் பழங்கள் மட்டும் உணவில் வழங்கப்படுகிறது. சீனாவில், உடைந்து போகாத நீளமான நூடுல்ஸ் சாப்பிடுவது, வரும் வருடத்தில் நீண்ட ஆயுளைக் கொடுக்கும் என்று நம்பப்படுகிறது.

    ஸ்காண்டினேவியன் நாட்டில், வெள்ளி போன்று மின்னும் herring வகை மீன்கள் ( முரண் கெண்டை/ நுணலை) சாப்பிட்டால், அந்த வருடம் முழுவதும் அதிஷ்டம் இருக்கும் என்று நம்பப்படுகிறது.


    இத்தாலியில், தங்க நாணயம் போன்று இருப்பதாகக் கருதப்படும் பருப்புகளை பன்றி யுடன் சமைத்து சாப்பிடுவது, புத்தாண்டு சிறப்பு உணவாக இருக்கிறது.

    ஜப்பான் நாட்டில் மோச்சி அரிசியில் தயாரித்த கேக் சாப்பிடுவதும், அந்த அரிசியை கோவிலுக்கு வழங்குவதும் அந்த வருடத்தை சிறப்பாகக்கும் என்பது நம்பிக்கை.

    ஸ்பெயின் நாட்டில், புத்தாண்டு முந்தைய நாள் மற்றும் புத்தாண்டு அன்று திராட்சை உண்பது அந்த வருடத்தை அதிர்ஷ்ட வருடமாக்கும் என்று நம்பப்படுகிறது.

    தென் அமெரிக்காவில், புத்தாண்டு அன்று, அரிசி மற்றும் சிவப்பு பீன்ஸ் சேர்த்து தயாரிக்கப்படும் Hoppin' John என்னும் உணவு உண்பது வழக்கமாக உள்ளது.

                                                                                                                                                                               -வண்டார்குழலி ராஜசேகர் 

    ×