search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "NTA Chief"

    • நாடு முழுக்க 24 லட்சம் பேர் நீட் தேர்வை எழுதினர்.
    • கருணை மதிப்பெண்கள் வழங்கப்பட்டது சர்ச்சையை ஏற்படுத்தியது.

    மருத்துவ படிப்பில் சேர்வதற்காக நாடு முழுக்க நீட் தேர்வு நடத்தப்படுகிறது. தேசிய தேர்வு முகமை சார்பில் இந்த தேர்வு நடத்தப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு நீட் தேர்வு மே 5 ஆம் தேதி நடைபெற்றது. இதில் நாடு முழுக்க 24 லட்சம் பேர் எழுதினர். சமீபத்தில் இந்த தேர்வு முடிவுகள் வெளியாகின.

    இதனிடையே நீட் தேர்வில் ஏராளமான குளறுபடிகள் நடைபெற்றதாகவும், வினாத்தாள் முன்கூட்டியே வெளியானதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது. இதோடு ஆள் மாறாட்டம், குறிப்பிட்ட தனியார் மையத்தில் இருந்து அதிகம் பேர் முதலிடம் பெற்றது என பல்வேறு குற்றச்சாட்டுக்களை மாணவர்கள் முன்வைத்தனர்.

    இந்த வரிசையில் 1563 மாணவர்களுக்கு கருணை மதிப்பெண்கள் வழங்கப்பட்ட விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்த விவகாரம் தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் பல்வேறு வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டன. இவற்றில் இந்த ஆண்டு நடத்தப்பட்ட நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டது.

    நீட் தேர்வு குளறுபடிகள் தொடர்பான பிரச்சினை பூதாகாரம் ஆகியுள்ள நிலையில், தேசிய தேர்வு முகமையின் தலைவரை மாற்றி மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. தேசிய தேர்வு முகமையின் தலைவராக இருந்த சுபோத் குமார் சிங் மாற்றப்பட்டு அவருக்கு பதிலாக ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி பிரதீப் சிங் கரோலா புதிய தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.

    தேசிய தேர்வு முகமையின் தலைவர் மாற்றப்பட்டு இருப்பதோடு, நீட் தேர்வு முறைகேடுகள் குறித்த விசாரணை சிபிஐ-இடம் ஒப்படைக்கப்பட்டு இருக்கிறது. அதன்படி நீட் தேர்வு வினாத்தாள் கசிந்த விவகாரம், கருணை மதிப்பெண்கள் வழங்கப்பட்டது என இது தொடர்பான அனைத்து பிர்ச்சினைகள் குறித்த விசாரணையை சி.பி.ஐ. துவங்கியுள்ளது.

    முன்னதாக போட்டி தேர்வுகளை கண்காணிக்க உயர்மட்ட குழு ஒன்றை மத்திய அரசு அமைத்தது. மேலும், மத்திய அரசு தேர்வுகளில் முறைகேடுகளில் ஈடுபட்டால் அதிகபட்சம் பத்து ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் ரூ. 1 கோடி அபராதம் விதிக்கும் புதிய சட்டம் அமலுக்கு வந்துள்ளது.

    ஏற்கனவே நடைபெற்ற நீட் தேர்வு விவகாரத்தில் ஏராளமான முறைகேடுகள் நடைபெற்றதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளதை அடுத்து, இன்று நடைபெற இருந்த நீட் முதுநிலை தேர்வு ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டு இருக்கிறது.  

    ×