search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Nutrition staff"

    திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் அலுவலக நுழைவு வாயில் முன்பு தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கம் சார்பில் 5 அம்ச கோரிக்கையை நிறைவேற்ற வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
    திருவள்ளூர்:

    தமிழ்நாடு சத்துணவு ஊழியர்கள் சங்கத்தின் திருவள்ளூர் மாவட்ட தலைவர் சிவா தலைமை தாங்கினார். மாவட்ட துணை தலைவர்கள் வெங்கடேசன், மலர்க்கொடி, மாலா, மாவட்ட இணை செயலாளர்கள் கருணாகரன், தேன்மொழி வனிதா, மாநில செயற்குழு உறுப்பினர் காந்திமதி ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு அழைப்பாளராக தமிழ்நாடு சத்துணவு ஊழியர்கள் சங்கத்தின் மாநில தலைவர் சந்திரசேகரன் கலந்து கொண்டு உரையாற்றினார்.

    இதில் திருவள்ளூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதியில் இருந்து வந்திருந்த 200-க்கும் மேற்பட்ட சத்துணவு ஊழியர்கள் கொளுத்தும் வெயிலில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள் கூறியதாவது:-

    சத்துணவு உண்ணும் மாணவர்களுக்கு காலை சிற்றுண்டி வழங்கும் திட்டத்தை சத்துணவு ஊழியர்களை கொண்டு நடை முறைப்படுத்த வேண்டும். அரசு ஊழியர்களுக்கு 58 வயதில் இருந்து 60 வயதாக உயர்த்தியதைப்போல் சத்துணவு ஊழியர்களின் பணி காலத்தை 60 வயதில் இருந்து 62 வயதாக உயர்த்த வேண்டும்.

    வரும் ஜூன் மாதம் பள்ளிகள் திறக்கும் நேரத்தில் ஆயிரக்கணக்கான அமைப்பாளர், சமையலர், உதவியாளர் பணியிடங்கள் காலியாக உள்ளது. இதனை உடனடியாக நிரப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    ஓய்வு பெற்ற சத்துணவு மற்றும் அங்கன்வாடி ஊழியர்களுக்கு ரூபாய் 6750 குடும்ப ஓய்வூதியம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.முடிவில் மாவட்ட பொருளாளர் குணசுந்தரி நன்றி கூறினார்.
    • ராஜபாளையத்தில் சத்துணவு ஊழியர்கள் ஆர்ப்பாட்டம் நடந்தது.
    • ஆர்ப்பாட்டத்தில் பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டது.

    ராஜபாளையம்

    சத்துணவு ஊழியர்களை முழுநேர அரசு ஊழியர்களாக்கி வரையறுக்கப்பட்ட ஓய்வூதியம், குடும்ப ஓய்வூதியம் போன்றவைகளை வழங்க கோரியும், பழைய பென்ஷன் திட்டத்தை மீண்டும் அறிவிக்க கோரியும் உள்பட தேர்தல் கால வாக்குறுதிகளை நிறைவேற்றக் கோரி விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

    சத்துணவு ஊழியர் சங்க செயலாளர் முத்து வெள்ளையப்பன் தலைமை தாங்கினார். தமிழ்செல்வி வரவேற்றார். விருதுநகர் மாவட்ட சி.ஐ.டி.யு. தொழிற்சங்க துணைத் தலைவர் கணேசன் துவக்க உரையாற்றினார். ஓய்வூதியர் சங்கம் சார்பில் ராஜ்குமார், சாலை பணியாளர் சங்கம் சார்பில் கருமலை, நூலகத் துறை சார்பில் ராஜகுரு உள்பட பலர் பேசினர்.

    தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாவட்ட தலைவர் பாலமுருகன் நிறைவு உரையாற்றினார். பேரூராட்சிகள் துறை சார்பில் மணிகண்டபிரபு நன்றி கூறினார். ஏராளமான சத்துணவு ஊழியர்கள் பங்கேற்றனர்.

    தமிழகத்தில் செயல்படுத்தப்பட்டு வரும் சத்துணவு திட்டத்திற்கான நிதியை மத்திய அரசு குறைத்துள்ளதற்கு திருநாவுக்கரசர் கண்டனம் தெரிவித்துள்ளார். #Congress #Thirunavukkarasar #NutritionCenter

    சென்னை:

    தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    காமராஜரால்1955ம் ஆண்டு சென்னையில் நடைபெற்ற ஆசிரியர்கள் மாநாட்டில் அறிவிக்கப்பட்டு, 1956 ம் ஆண்டு முதல் அரசு தொடக்க பள்ளியில் படித்த குழந்தைகளுக்கு மதிய உணவு வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டது.

    இத்திட்டம் 1982ம் ஆண்டு அன்றைய முதல்வர் எம்.ஜி.ஆரால் சத்துணவு திட்டமாக விரிவுபடுத்தப்பட்டது. இத்திட்டத்தால் இன்று 43 ஆயிரத்து 203 சத்துணவு மையங்களும், சத்துணவு அமைப்பாளர்கள், சமையல் உதவியாளர்கள் என 90 ஆயிரம் பேர் பணியாற்றி, நாள்தோறும் 52 லட்சம் பள்ளிக் குழந்தைகள் சத்துணவு சாப்பிட்டு வருகின்றனர்.

    தமிழக அரசின் மூலம் செயல்படுத்தப்பட்டு வந்த இத்திட்டத்திற்கு 1995 ம் ஆண்டு முதல் மத்திய காங்கிரஸ் அரசு மானியம் வழங்கியது. 60 சதவீதம் மத்திய அரசு நிதியும், மாநிலஅரசு 40 சதவீத நிதியும் ஒதுக்கி இத்திட்டம் செயல்பட்டு வந்த நிலையில் தொடர்ந்து தமிழக மக்களை புறக்கணிக்கின்ற மத்திய பா.ஜக. மோடி அரசு இதுவரை அளித்து வந்த 60 சதவீத நிதியை 40 சதவிதமாக குறைத்துள்ளது பெரும் கண்டனத்திற்குரியது.

    மத்திய அரசு நிதி குறைத்துள்ளது எனும் காரணம் காட்டி 8 ஆயிரம் சத்துணவு மையங்களை மூட தமிழக அரசு திட்டமிட்டுள்ளது. ஏழை எளிய மாணவர்களின் நலனில் இந்த அரசு அக்கறை காட்டாத அரசாக செயல்படுகிறது என்பதையும், 8000 சத்துணவு மையங்களை மூடுவதால், 24000 சத்துணவு ஊழியர்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் என்பதையும் கருத்தில் கொள்ளாத மாநில அ.தி.மு.க. அரசு, இத்திட்டத்திற்கு மத்திய அரசிடம் நிதி கோர உரிய அழுத்தத்தை காட்டாமல், மாறாக 8000 சத்துணவு மையங்களுக்கு மூடு விழா எடுக்க நினைக்கும் நிலை மாநில அ.தி.மு.க.வின் கையாலாகத்தனத்தையே காட்டுகிறது.

    தமிழகத்தில் உள்ள டாஸ்மாக் கடைகளின் எண்ணிக்கையை குறைக்கக் கூறி சென்னை உயர் நீதிமன்றம் அறிவுறுத்தியதை செயல்படுத்தாமல், கூடுதலாக கடைகளை திறக்க முயலும் அ.தி.மு.க. அரசு ஏழை எளிய மாணவர்களின் பசியை போக்கும் சத்துணவு மையங்களுக்கு மூடுவிழா நடத்தும் போக்கு கண்டிக்கத்தது.

    ஒரே கல்வித் தகுதி உள்ள ஆசிரியர்களுக்கு இருவிதமாக ஊதியம் வழங்காமல் ஒரே ஊதியம் கோரி அமைதியான முறையில் போராட்டம் நடத்திவரும் ஆசிரியர்களின் பிரதிநிதிகளை தமிழக முதல்வர் அழைத்து பேசி சுமூக தீர்வு காண வேண்டும்.

    இதுபோல் சத்துணவு ஊழியர்களின் வாழ்வாதாரத்தினையும் மனதில் கொண்டு ஏழை எளிய கல்விப் பயிலும் மாணவர்களின் நிலைப்பாட்டினையும் கருத்தில் கொண்டு தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென கேட்டுக் கொள்கிறேன்.

    இவ்வாறு திருநாவுக்கரசர் கூறி உள்ளார். #Congress #Thirunavukkarasar #NutritionCenter
    தமிழகம் முழுவதும் இன்று நடைபெற இருந்த சத்துணவு ஊழியர்கள் ஆர்ப்பாட்டம் ஒத்திவைக்கப்பட்டு உள்ளது. #NutritionStaff
    சென்னை:

    சத்துணவு திட்டத்துக்கு மத்திய அரசு வழங்கி வந்த மானியத்தை 60 சதவீதத்தில் இருந்து 40 சதவீதமாக குறைத்தது. இதனால், தமிழக அரசுக்கு ஏற்பட்ட கூடுதல் செலவை சமாளிக்க 25 மாணவ-மாணவிகளுக்கு குறைவாக மதிய உணவு சாப்பிடும் 8 ஆயிரம் சத்துணவு மையங்களை மூடுவதற்கு அரசு திட்டமிட்டது.

    இதற்கு எதிர்ப்பு தெரிவித்து சத்துணவு ஊழியர்கள் இன்று  மாநிலம் முழுவதும் கலெக்டர் அலுவலகங்கள் முன் ஆர்ப்பாட்டம் செய்வதாக அறிவித்து இருந்தனர். இந்த நிலையில், தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கத்தின் மாநில நிர்வாகிகள் கூட்டம் சென்னையில் நேற்று மாலை நடைபெற்றது.

    கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவு குறித்து தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்க மாநிலத் தலைவர் ப.சுந்தரம்மாள் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    மத்திய அரசு சத்துணவு திட்டத்துக்கு வழங்கும் மானியத்தை குறைத்ததன் காரணமாக 25 குழந்தைகளுக்கு குறைவாக உள்ள சத்துணவு மையத்தை மூடிவிட்டு அந்த மையங்களுக்கு வரும் மாணவர்களுக்கு அருகில் உள்ள பள்ளி சத்துணவு மையங்களில் ஒரு உதவியாளரை மட்டும் வைத்துக் கொண்டு உணவு சமைத்து அந்த குழந்தைகளுக்கு வழங்க வேண்டும். மேலும், அங்கு பணிபுரிந்த அமைப்பாளர், சமையலர், உதவியாளர்கள் எங்கு காலியிடங்கள் உள்ளதோ அங்கு மாற்றம் செய்யப்படுவார்கள் என சமூகநல ஆணையர் உத்தரவிட்டு இருந்தார். அதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் 27.12.2018 அன்று மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டம் நடத்த திட்டமிடப்பட்டு இருந்தது.


    இந்த நிலையில், 25 குழந்தைகளுக்கு குறைவாக உள்ள சத்துணவு மையங்களை மூடுவது இல்லை. அதே மையத்தில் பணியாற்றி வரும் சமையலர் அல்லது உதவியாளர் மட்டும் தொடர்ந்து அங்கு பணியாற்றவும், அமைப்பாளர்கள் மட்டும் காலியாக உள்ள பணியிடங்களுக்கு கலந்தாய்வு மூலம் அவர்கள் விருப்பத்தை பெற்று பணிமாற்றம் செய்யப்படுவார்கள் எனவும், 2019 டிசம்பர் 31-ந் தேதி வரை வயது முதிர்வு காரணமாக ஓய்வு பெறும் சத்துணவு அமைப்பாளர்கள் அதே மையத்தில் பணிபுரிவார்கள் எனவும் சமூகநல ஆணையர் உத்தரவிட்டு உள்ளார். எனவே, இன்று நடைபெற இருந்த சத்துணவு ஊழியர்கள் ஆர்ப்பாட்டம் தற்காலிகமாக ஒத்திவைக்கப்படுகிறது.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.  #NutritionStaff
    சத்துணவு மையங்களை மூட அரசு துடிப்பதா? என்று பாமக நிறுவனர் ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார். #Ramadoss

    சென்னை:

    பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    தமிழ்நாட்டில் 25க்கும் குறைவான மாணவர்களை கொண்ட பள்ளிகளில் செயல்பட்டு வரும் சத்துணவு மையங்களை உடனே மூட மாவட்ட ஆட்சியர்களுக்கு சமூக நலத்துறை ஆணையிட்டுள்ளது. சத்துணவு அமைப்பாளர்கள் பணியிடம் குறைப்பு, செலவுக் குறைப்பு ஆகிய நோக்கங்களுடன் எடுக்கப்பட்டுள்ள இந்த முடிவு அபத்தமானது. தமிழகத்தின் கல்விச்சூழலில் மோசமான விளைவுகளை ஏற்படுத்தக் கூடியது.

    தமிழக அரசின் சமூகநலத் துறை ஆணையர் அமுதவல்லி மாவட்ட ஆட்சியர்களுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக் கையில், மாணவர்கள் எண்ணிக்கை குறைவாகவுள்ள பள்ளிகளில் சத்துணவு மையங்களை மூடி, அவற்றில் பணியாற்றி வரும் சத்துணவு அமைப்பாளர்களை, காலியாக உள்ள இடங்களுக்கு மாற்றம் செய்ய வேண்டும். இந்தப் பணிகள் அனைத்தையும் திசம்பர் 28ஆம் தேதிக்குள் முடித்து, அதுகுறித்த அறிக்கையை தமக்கு அனுப்பி வைக்கும்படி கூறியிருக்கிறார். அதன்படி குறைந்த எண்ணிக்கையில் மாணவர்களைக் கொண்ட அரசு பள்ளிகளின் சத்துணவு மையங்கள் அதிரடியாக மூடப்பட்டு வருகின்றன.

    சமூக நலத்துறை அறிவித்துள்ள திட்டத்தின்படி, ஒரு பள்ளியில் சத்துணவு சாப்பிடுவோர் எண்ணிக்கை 25-க்கும் குறைவாக இருந்தால், அங்குள்ள சத்துணவு மையங்களில் உணவு சமைக்கப்படாது. மாறாக, அந்த பள்ளியில் ஒரு சமையல் உதவியாளர் மட்டும் இருப்பார். அருகிலுள்ள மற்றொரு பள்ளியில் சமைத்துக் கொண்டு வரப்படும் உணவை வாங்கி மாணவர்களுக்கு அவர் வழங்குவாராம். மலைப்பகுதிகளாக இருந்தால் சத்துணவு அமைப்பாளர் இல்லாமல், சமையலர் மட்டும் இருந்து உணவு சமைத்து வழங்குவாராம்.

    தமிழக அரசின் இந்த நடவடிக்கையை மேலோட்ட மாகப்பார்த்தால், ஒரு பள்ளிக்கான சத்துணவு மையம் மூடப்பட்டாலும், அப்பள்ளிக்கு இன்னொரு பள்ளியிலிருந்து உணவு வந்து விடுகிறதல்லவா? இதிலென்ன பாதிப்பு? என்று எண்ணத் தோன்றும். ஆனால், இதில் இருவகையான பாதிப்புகள் உள்ளன. முதலாவது வேலைவாய்ப்பு சார்ந்தது. இரண்டாவது கல்வி சார்ந்தது. தமிழகத்தில் 25க்கும் குறைவான மாணவர்கள் கொண்ட சத்துணவு மையங்களின் எண்ணிக்கை 8,000 ஆகும். ஒரு மையத்துக்கு ஓர் அமைப்பாளர், ஒரு சமையலர், ஒரு சமையல் உதவியாளர் இருப்பார்கள். இவர்களில் சமையல் உதவியாளர் தவிர்த்த மீதமுள்ள இரு பணியிடங்கள் ரத்து செய்யப்படும் என்பதால், 16,000 பணியிடங்கள் ஒழிக்கப்பட்டு விடும்.

    சத்துணவு அமைப்பாளர், சமையலர் ஆகிய பணியிடங்கள் ஆதரவற்ற பெண்களுக்கும், கைம்பெண்களுக்கும் முன்னுரிமை அடிப்படையில் வழங்கப்படுகிறது. இப்பணியிடங்கள் ஒழிக்கப்படுவதால் ஆதரவற்ற மற்றும் கைம்பெண்கள் 16 ஆயிரம் பேரின் வேலைவாய்ப்பு ரத்து செய்யப்பட்டுள்ளது. இது கண்டிக்கத்தக்கது.

    ஒரு பள்ளியில் சமைத்து இன்னொரு பள்ளியில் உள்ள மாணவர்களுக்கு சத்துணவு வழங்குவதில் ஏராளமான நடைமுறைச் சிக்கல்கள் உள்ளன. 25க்கும் குறைவான மாணவர்களைக் கொண்ட சத்துணவு மையங்களில் 99 சதவீதம் தொடக்கப் பள்ளிகள் தான். அவற்றுக்கு அருகிலுள்ள பள்ளிகள் பெரும்பாலும் உயர்நிலைப் பள்ளிகளாகவோ, மேல்நிலைப் பள்ளிகளாகவோ தான் இருக்கும். தொடக்கப் பள்ளிகளுக்கான உணவு இடைவேளையும் சற்று முன்பாகவும், மற்ற பள்ளிகளின் உணவு இடைவேளை சற்று தாமதமாகவும் தொடங்கும்.

    அதுமட்டுமின்றி, ஒரு பள்ளிக்கும் மற்றொரு பள்ளிக்கும் இடையிலான தொலைவு குறைந்தது 2 முதல் 3 கிலோ மீட்டர் இருக்கும். அதனால், உயர்நிலைப்பள்ளிகள், மேல்நிலைப் பள்ளிகளில் தயாரிக்கப்படும் சத்துணவு வந்த பிறகு தான், தொடக்கப் பள்ளி குழந்தைகள் சாப்பிட வேண்டும் என்றால், அவர்கள் வழக்கமான நேரத்தை விட அரை மணி நேரம் முதல் ஒரு மணி நேரம் வரை தாமதமாகும்.

    10 வயதுக்குட்பட்ட குழந்தைகளை உணவுக்காக மணிக்கணக்கில் காத்திருக்க வைப்பதை விட கொடுமையான மனித உரிமை மீறல் இந்த உலகில் வேறு எதுவும் இருக்க முடியாது.

    அதுமட்டுமின்றி, ஓரிடத்தில் தயாரிக்கப்பட்ட உணவை இன்னொரு இடத்திற்கு கொண்டு செல்வதில் சுகாதாரம், தூய்மை சார்ந்த பல சிக்கல்கள் உள்ளன. இத்தகைய காரணங்களால் குழந்தைகளுக்கு சரியான நேரத்தில் உணவு கிடைக்காவிட்டாலோ, உணவில் சுகாதாரக் குறைபாடு இருந்தாலோ, அவர்கள் படிப்பை பாதியில் நிறுத்திவிடும் ஆபத்து இருக்கிறது. இடைநிற்றலைத் தடுக்க வேண்டும் என்ற உன்னத நோக்கத்துடன் அறிமுகப்படுத்தப்பட்ட சத்துணவுத் திட்டம், இடைநிற்றலை ஊக்குவித்து விடக்கூடாது.

    ஒருவேளை மாணவர்கள் அனைவரும் அரசு பள்ளிகளில் இருந்து விலக வேண்டும்; அதைக் காரணம் காட்டி பள்ளிகளை மூடிவிட வேண்டும் என்பதற்காகவே அரசு இவ்வாறு செய்கிறதா? என்பது தெரியவில்லை.

    ஏழைக் குடும்பங்களைச் சேர்ந்த அரசு பள்ளி மாணவர்கள் தொடர்ந்து படிப்பதை உறுதி செய்யவும், இடை நிற்றலைத் தடுக்கவும் மாணவர்களுக்கு அவர்களது பள்ளியிலேயே உணவு தயாரித்து வழங்கப்பட வேண்டியது அவசியமாகும். எனவே, சத்துணவு மையங்களை மூடும் முடிவை அரசு கைவிட வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார். #Ramadoss

    பள்ளிக்குழந்தைகளின் நலனை கருதி சத்துணவு ஊழியர்கள் போராட்டத்தை கைவிட வேண்டும் என்று அமைச்சர் சரோஜா வேண்டுகோள் விடுத்துள்ளார். #TNMinister #saroja #Nutritionstaff
    சென்னை:

    அமைச்சர் சரோஜா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    தமிழ்நாட்டில் மட்டும் தான் ஒரு சத்துணவு மையத்திற்கு சத்துணவு அமைப்பாளர், சமையலர் மற்றும் சமையல் உதவியாளர் என 3 பணியாளர்களும், சில மையங்களில் 4 பணியாளர்களும் பணிபுரிந்து வருகின்றனர்.

    சத்துணவு அமைப்பாளர்கள் தேவைப்படும் உணவுப் பொருட்களை பாதுகாப்பாக இருப்பு வைப்பது, அன்றாடம் சமைப்பதற்கு காய்கறிகள் மற்றும் தாளிதப் பொருட்களை வாங்கி வழங்குவது, பொருட்களின் கணக்கை பராமரிப்பது ஆகிய பணிகளை செய்கின்றனர்.

    தமிழ்நாட்டில் சத்துணவு பணியாளர்களுக்கு ஆண்டு தோறும் 3 சதவீதம் ஊதிய உயர்வுடன் சிறப்பு காலமுறை ஊதியம், வழங்கி வருவது மட்டுமல்லாமல், மத்திய அரசின் ஏழாவது ஊதியக் குழுவின் பரிந்துரைகளையும் ஏற்று, சத்துணவுப் பணியாளர்களின் ஊதியத்தை அரசு உயர்த்தி வழங்கியுள்ளது.

    அது மட்டுமன்றி, அவர்களுக்கு பல்வேறு சலுகைகளையும் தமிழ்நாடு அரசு வழங்கி வருகிறது.

    அகவிலைப்படி, வீட்டு வாடகைப்படி, நகர ஈட்டுப்படி, மருத்துவப்படி ஆகியவற்றை உள்ளடக்கி, இன்றைய தேதியில் பணியில் சேரும் ஒரு அமைப்பாளர் ரூ.10,353/ம், சமையலர் ரூ.6,429/ம், சமையல் உதவியாளர் ரூ.5,230/ம் ஒரு மாத சம்பளமாக பெறுவர்.

    ஏற்கனவே பணியில் உள்ள பணியாளர்கள் தாங்கள் பணி செய்த காலத்திற்கேற்ப இதைவிட அதிக ஊதியம் பெற்று வருகின்றனர்.


    தமிழ்நாட்டில் மட்டும் தான் சத்துணவு அமைப்பாளர் என்ற பணியிடம் உள்ளது. ஆனால், பிற மாநிலங்களில் சத்துணவு அமைப்பாளர் என்ற பணியிடமே இல்லை.

    51.96 லட்சம் மாணாக்கர்களின் பசியினை போக்கும் இத்திட்டத்தினை சிறப்பாக நடைமுறைப்படுத்தி வரும் சத்துணவுப் பணியாளர்களின் நலனைப் பேணிக்காக்க தமிழ்நாடு அரசு தற்போது வழங்கி வரும் பல்வேறு சலுகைகளை கருத்தில் கொண்டும், சத்துணவு பணியாளர்களுக்கு 7-வது ஊதியக் குழுவின் பரிந்துரையின்படி ஊதிய விகிதத்தினை மாற்றி அமைத்திருப்பதைக் கருத்தில் கொண்டும், சத்துணவுத் திட்டத்தின் கீழ் பயன்பெறும் லட்சக்கணக்கான குழந்தைகளின் நலனைக் கருத்தில் கொண்டும், போராட்டத்தில் ஈடுபட்டுள்ள பணியாளர்கள் தங்களது போராட்டத்தை கைவிட்டு உடனடியாக பணிக்கு திரும்ப வேண்டும் என அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.  #TNMinister #saroja #Nutritionstaff
    திருவள்ளூரில் இன்று காலை சத்துணவு ஊழியர்கள் மீண்டும் 2-வது நாளாக மறியல் செய்தனர். #Nutritionstaff #Nutritionstaffstruggle

    திருவள்ளூர்:

    சத்துணவு ஊழியர்கள் அனைவருக்கும் காலமுறை ஊதியம் வழங்க வேண்டும், குடும்ப பாதுகாப்புடன் கூடிய ஓய்வூதியமாக ரூ. 9 ஆயிரம் வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் சத்துணவு ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.

    திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகம் முன்பு கடந்த வியாழக் கிழமை முதல் சத்துணவு ஊழியர்கள் சங்கத்தினர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். நேற்று முதல் தொடர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு சாலை மறியலில் ஈடுபட்டு வருகின்றனர்.

    நேற்று காலை அனுமதியின்றி சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட சத்துணவு ஊழியர்களை போலீசார் கைது செய்து தனியார் திருமண மண்டபத்தில் தங்கவைத்து மாலையில் விடுவித்தனர்.

    இந்த நிலையில் இன்று காலை அவர்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி மீண்டும் 2-வது நாளாக மறியல் செய்தனர். திருவள்ளூர் கலெக்டர் அலுவலகம் அருகே 100-க்கும் மேற்பட்ட சத்துணவு ஊழியர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தி சாலை மறியலில் ஈடுபட்டனர். அவர்களை போலீசார் கைது செய்தனர்.

    இதில் மாவட்டத் தலைவர் சிவா, மாநில செயற்குழு உறுப்பினர் கலைமணி, மாநிலத் தலைவர் சுந்தரம்மாள், மாவட்டச் செயலாளர் சந்திரசேகரன், மாநிலச் செயலாளர் ஆண்டாள், அரசு ஊழியர் சங்கத்தின் மாவட்டத் தலைவர் இளங்கோவன், மாவட்டச் செயலாளர் காந்திமதிநாதன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். #Nutritionstaff #Nutritionstaffstruggle

    தஞ்சை மாவட்டத்தில் போராட்டம் நடத்திய சத்துணவு ஊழியர்கள் 1000 பேரை போலீசார் கைது செய்தனர்.

    தஞ்சாவூர்:

    தஞ்சை மாவட்டம் முழுவதும் அங்கன்வாடி பணியாளர்கள் 1246 பணியிடங்கள் நிரப்பகோரி விண்ணப்பங்கள் பெறப்பட்டது. இதற்கான நேர்காணல் 30.8.2017 முதல் 1.9.2017 வரை நடைபெற்றது.

    நேர்காணல் நடைபெற்று 1 வருடம் ஆகியும் இன்னும் அதற்கான பணி ஆணை வழங்கவில்லை. இதனால் 400-க்கும் மேற்பட்ட அங்கன்வாடி மையங்களில் உதவியாளர்கள் மற்றும் பணியாளர்களின் பணியிடங்கள் காலியாக உள்ளது. இதன்காரணமாக அங்கன்வாடியில் உள்ள 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட குழந்தைகளின் நிலைமை கேள்வி குறியாகி உள்ளது. மேலும் அங்கன் வாடியில் பணிபுரியும் பணியாளர்களுக்கு கூடுதல் பணி சுமை உள்ளது.

    இதில் மாவட்ட நிர்வாகம் தாமதமாக செயல்படுவதை கண்டித்தும், தமிழக அரசு பணி நியமன ஆணை வழங்காததை கண்டித்தும் தஞ்சை மாவட்டத்தில் உள்ள அனைத்து அங்கன்வாடி பணியாளர்கள் கலெக்டர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்த அனுமதி கேட்டு மறுக்கப்பட்டு இருந்தது.

    இந்நிலையில் இன்று தஞ்சை கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறை தீர்க்கும் கூட்டம் நடைபெற்றது. மாவட்ட தலைவர் விஜயராகவன் தலைமையில் 300 பேர் அங்கன்வாடி சாவியை ஒப்படைத்து போராட்டம் நடத்த கலெக்டர் அலுவலகத்திற்கு வந்தனர்.

    முன்னதாக அங்கு காவலுக்கு நின்று கொண்டிருந்த வல்லம் டி.எஸ்.பி ஜெயச்சந்திரன் தலைமையிலான போலீசார் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அவர்கள் அனைவரையும் கைது செய்தனர்.

    தஞ்சை கலெக்டர் அலுவலகத்த்தில் நடைபெற இருந்த இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொள்ள கும்பகோணம், பாபநாசம், திருவையாறு உள்ளிட்ட பல பகுதிகளில் இருந்தும் ஏராளமானோர் கலந்து கொண்டனர். இதில் தஞ்சை மாவட்டத்தில் மொத்தம் 1000 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

    ×