search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "objections"

    அசாம் தேசிய குடிமக்கள் பதிவேட்டில் பெயர்களை சேர்ப்பது தொடர்பாக விண்ணப்பிக்கும் கால அவகாசத்தை உச்ச நீதிமன்றம் மேலும் நீட்டித்துள்ளது. #AssamNRC #SupremeCourt
    புதுடெல்லி:

    அசாம் மாநிலத்தில் சட்டவிரோதமாக குடியேறிய வங்கதேசத்தவர்களை கண்டறியும் வகையில் தேசிய குடிமக்கள் பதிவேடு (என்ஆர்சி) தயாரிக்கப்பட்டது. இதன் இறுதி வரைவு பட்டியல் கடந்த ஜூலை மாதம் வெளியிடப்பட்டது. இதில் 40 லட்சத்துக்கும் மேற்பட்டோரின் பெயர்கள் விடுபட்டது சர்ச்சையை ஏற்படுத்தியது. இதுபற்றி விளக்கம் அளித்த அசாம் அரசு, இந்த பட்டியலில் விடுபட்டவர்கள் பெயர்களை சேர்க்க அவகாசம் அளிப்பதாக கூறியது.

    இந்த விவகாரம் தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், அசாம் தேசிய குடிமக்கள் பதிவேட்டில் விடுபட்ட மக்கள் தங்கள் பெயர்களை சேர்த்துகொள்ள செப்டம்பர் 25-ம் தேதி முதல் 60 நாட்கள் வரை அவகாசம் வழங்கினர்.

    இந்த அவகாசம் முடிவடைந்த நிலையில் இவ்வழக்கு இன்று தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான அமர்வு முன்பு மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது தேசிய குடிமக்கள் பதிவேட்டில் பெயர்களை சேர்க்க வழங்கப்பட்டுள்ள கால அவகாசத்தை டிசம்பர் 15-ம் தேதி வரை நீட்டித்து நீதிபதிகள் உத்தரவிட்டனர். 

    பட்டியலில் விடுபட்டவர்கள் தங்கள் பெயர்களை சேர்ப்பதற்கான கோரிக்கைகளையும், தவறுகள் இருந்தால் அதற்கு ஆட்சேபனைகளையும் உரிய ஆவணங்களுடன் தெரிவிக்கலாம். 

    மேலும், மாநில ஒருங்கிணைப்பாளரால் நிராகரிக்கப்பட்ட, 1951ம் ஆண்டின் என்ஆர்சி சான்று, 1966 மற்றும் 1971ல் வழங்கப்பட்ட வாக்காளர் அடையாள அட்டைகள், 1971 வரையிலான அகதிகள் பதிவு சான்றிதழ் மற்றும் 1971 வரையிலான ரேசன் கார்டு ஆகிய 5 ஆவணங்களை என்ஆர்சி பதிவுக்கான ஆவணங்களாக ஏற்றுக்கொள்ள வேண்டும் என்றும் நீதிபதிகள் உத்தரவிட்டனர். 

    மேலும், புதிதாக விண்ணப்பித்தவர்களுக்கு ஜனவரி 15-ம் தேதிக்குள் நோட்டீஸ் அனுப்பி, பிப்ரவரி 1-ம் தேதிக்குள் ஆவணங்களை சரிபார்க்க வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது. #AssamNRC #SupremeCourt 
    ×