search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Pannari Mariamman"

    • அனைத்து சக்திகளுக்கும் ஆதாரமாக இருப்பது பராசக்தியாகும்.
    • நான்கு பக்கங்களாலும் இத்தலம் வனத்தால் சூழப்பட்டுள்ளது.

    அனைத்து சக்திகளுக்கும் ஆதாரமாக இருப்பது பராசக்தியாகும். அப்பராசக்தியே பல்வேறு பெயர்களுடன் பல்வேறு தலங்களிலும் குடிகொண்டுள்ளாள். அச்சக்தியே கொங்கு நாட்டின் வடமேற்கு எல்லை அருகில் மைசூர் செல்லும் பாதையில் பிரதானமாக வீற்றிருக்கும் பண்ணாரி மாரியம்மன் மிகவும் சக்தி வாய்ந்த காவல் தெய்வமாகும்.

    இத்தலம் ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தில் இருந்து மேற்கே 14 கிலோ மீட்டர் தொலைவில் அடர்ந்த வனத்தினிடையே அமைந்துள்ளது. நான்கு பக்கங்களாலும் இத்தலம் வனத்தால் சூழப்பட்டுள்ளது.

    அடர்ந்த காட்டுப் பகுதியில் யானைகளும், காட்டுப்பன்றிகளும், மான்களும், நரிகளும், வண்ண மயில்களும், குரங்குகளும், முயல்களும், கரடிகளும் மற்றும் மிகக் கொடிய விஷ ஜந்துகளும் சர்வ சாதாரணமாக உலாவும். இத்தலத்தில் தெற்குப் பார்த்த வண்ணமாக எழுந்தருளியுள்ள பண்ணாரி மாரியம்மன் சுயம்பு லிங்க வடிவமாக உள்ளாள்.

    சுமார் 300 ஆண்டுகளுக்கு முன்பு இவ்விடம் அடர்ந்த வனப்பகுதியாக இருந்தது. இவ்விடத்தில் வற்றாத காட்டாறு ஓடிக்கொண்டே இருக்கும். காட்டாற்றின் பெயரோ தோரணப்பள்ளம் என்பதாகும். இக்காட்டாறு இத்தலத்தின் மேற்குப்புறத்தில் உள்ளது.

    திம்பம் மலையின் அடிவாரம் அன்னை பண்ணாரி அம்மனின் அவதாரம் இவ்விடத்தில் நிகழப்போகிறது என்பதை உலகிற்கு அறிவிக்கவோ என்னவோ இக்காட்டாற்றின் துறையில் பசுவும், புலியும் ஒரே இடத்தில் நீர் குடிக்கும் நிகழ்வுகள் நிகழ்ந்துள்ளன.

    இச்சுற்று வட்டார கிராம மக்கள் தங்கள் ஆடு, மாடுகளை மேய்ப்பதற்கு இவ்வனப்பகுதிக்குச் செல்வது வழக்கம். இம்மக்கள் மாடுகளுக்குப் பட்டிகள் அமைத்து வனப் பகுதியிலேயே தங்கிக் கொள்வார்கள். தினசரி காலையில் மாடுகளை மேய்ப்பதற்கு ஓட்டிச் செல்வார்கள்.

    பின்னர் மாலையில் மாடுகளை ஓட்டி வந்து பட்டியில் அடைப்பார்கள். காலையிலும், மாலையிலும் பாலைக் கறந்து மாட்டின் உரிமையாளருக்குக் கொடுப்பார்கள்.

    ஒரு பட்டியிலிருந்து காரம்பசு (மாடு) ஒன்று கறக்கச் சென்றால் கறப்பதற்கு நில்லாமல் தன் கன்றுக்கும் கொடுக்காமல் இருப்பதை மாடுகளை மேய்ப்பவன் அறிந்தான். மறுநாள் மாட்டினைப் பின்தொடர்ந்து சென்று கவனித்தான்.

    அப்பசு தினந்தோறும் பாலை ஒரு வேங்கை மரத்தின் அடியில் கணங்கு புற்கள் சூழ்ந்த ஒரு குறிப்பிட்ட இடத்தில் தன்னிச்சையாகப் பொழிவதை மறைவில் இருந்து பார்த்தான்.

    இந்நிகழ்ச்சியை பார்த்த அவன் மறுநாள் சுற்றுவட்டார கிராம மக்கள் ஊர்ப் பெரியவர்களிடமும் விவரத்தைச் சொல்லி அனைவரையும் அழைத்துக்கொண்டு மாட்டினைப் பின்தொடர்ந்து சென்று ஒரு குறிப்பிட்ட இடத்தில் காரம்பசு பால் சொரிவதைக் காண்பித்தான்.

    அனைவரும் இவ்வரிய நிகழ்ச்சியினைக் கண்டு மெய்சிலிர்த்து நின்றார்கள். இதுதெய்வத்தின் திருவிளையாடல் என்று எண்ணிக் கைகூப்பித் தொழுதார்கள்.

    மக்கள் அனைவரும் அவ்விடத்தை சுத்தம் செய்யும் போது கணங்கு புற்கள் சூழ்ந்த ஒரு புற்றும் அதன் அருகில் சுயம்புலிங்கத் திருவுருவும் வேங்கை மரத்தின் அடியில் இருப்பதைக் கண்டார்கள்.

    அப்போது அக்கூட்டத்தில் இருந்த ஒருவருக்கு தெய்வ அருள் உண்டாகி தான் கேரளா மாநிலம் வண்ணார்காடு (மண்ணார்க்காடு) என்ற ஊரிலிருந்து பொதிமாடுகளை ஓட்டிக்கொண்டு மைசூர் செல்லும் மக்களுக்கு வழித் துணையாக வந்தேன் என்றும் எழில் மிகுந்த இவ்வியற்கை சூழலில் தான் தங்கி விட்டதாகவும் தன்னை இனிமேல் பண்ணாரி அம்மன் எனப்போற்றி வழிபட்டு வாருங்கள் எனவும் அருள்வாக்கில் கூறினார்.

    அன்னையின் அருள்வாக்கின்படி அவ்விடத்தில் கணங்குப்புற்கள் கொண்டு ஒரு குடில் அமைத்துக் கிராமிய முறைப்படி நாள்தோறும் பண்ணாரி அன்னையை வழிபட்டு வந்தனர். பின்பு ஊர் மக்கள் அன்னையின் சிறப்பு கருதி அன்னைக்கு விமானத்துடன் கூடிய சிறு கோவில் அமைத்து பத்மபீடத்துடன் திரு உருவம் அமைத்து வழிபட்டு வருகின்றனர்.

    ×