என் மலர்
நீங்கள் தேடியது "Parihara Temple"
- தென்காசி கடையநல்லூர் தாலுகாவில் உள்ளது இந்த கோவில்.
- ஆடிப்பூர வளைகாப்பு திருவிழா இங்கு மிகவும் பிரசித்தி பெற்றது.
உலகமே சக்தி மயமானது என்பதை மனிதர்களுக்கு உணர்த்தும் ஆன்மீக சொருபங்கள். இத்தகைய அருட் திறம் வாய்ந்த ஆலயங்களில் ஒன்று தான் தென்காசி மாவட்டத்தில் அருள்வாக்கிற்கு பெயர் பெற்ற கடைய நல்லூர் தாலுகா, புளியங்குடி நகரில் அரசு மருத்துவமனை அருகில் கோபுர நகரில் அமைந்துள்ள முப்பெரும் தேவியர் பவானி அம்மன் ஆலயம்.
இக்கோவிலில் ஆடிமாதம் நடைபெறும் ஆடிப்பூர வளைகாப்பு திருவிழா இங்கு மிகவும் பிரசித்தி பெற்றது. இந்நாளில் அம்மாக்களிடம் குழந்தை வரம் வேண்டி வரும் கன்னியர்களுக்கும், நீண்ட நாள் குழந்தை வரம் இல்லாதவர்களுக்கும், குழந்தை பாக்கியம் பெற்றவர்களுக்கும் இக்கோவிலில் வளையல், குங்குமம் வளைகாப்பும், 21 வகையான சாதங்களும், பிரசாதமாக வழங்கப்படும். இந்த அருட்பிரசாதத்தை பெற்றவர்களுக்கு குழந்தைச்செல்வம் கட்டாயம் கிடைக்கும் என்பது ஐதீகம்.
இக்கோவிலில் கொடுக்கப்படும் மஞ்சள் காப்பு பிரசாதத்தை 'ஜெய்பவானி' என்று சொல்லி நெற்றியில் பூசிக் கொண்டால் அனைத்து செயல்களும் நன்மையாக நடக்கும்.
- காவேரி தென்கரை தலங்களில் 9-வது தலமாக உள்ளது.
- இந்த கோவில் சுமார் 2 ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்தது.
தஞ்சை மாவட்டத்தில் குறிப்பாக காவிரி கரையோர பகுதிகளில் பல்வேறு சிவாலயங்கள் புராதான பெருமையோடு உள்ளன. சிறப்புமிக்க இந்த கோவில்களில் திருக்காட்டுப்பள்ளி அக்னீஸ்வரர் கோவிலும் ஒன்று.
அக்னி பகவானுக்கு யாகங்களால் உண்ட நெய்யால் வந்த வயிற்று நோயும், யாகத்தில் போடப்படும் பொருட்களை சுட்டெரித்த பாவமும் நீங்க வேண்டி திருக்காட்டுப்பள்ளியில் எழுந்தருளி உள்ள இறைவனை வேண்டியுள்ளார்.
இறைவன் கட்டளைப்படி இந்த கோவிலில் உள்ள அக்னி தீர்த்தம் என்ற தீர்த்த குளத்தை ஏற்படுத்தி, அந்த தீர்த்த நீரால் இறைவனை நீராட்டி வழிபட்டு தனது வயிற்று நோயும், பாவங்களும் நீங்க பெற்றுள்ளார்.
மேலும் அக்னி பகவான் இறைவனிடம் இத்திருத்தலத்துக்கு வருகை புரிந்து என்னால் தோற்றுவிக்கப்பட்ட அக்னி தீர்த்தத்தில் நீராடி சிவனை வழிபட்டால் அவர்களது பாவங்களையும், வயிற்று நோயையும் போக்கி அவர்களுக்கு சிறந்த வாழ்வை அளிக்க வேண்டும் என வேண்டிக் கொண்டார். இறைவனும் அக்னி தேவனின் வேண்டுகோளை ஏற்று வேண்டிய வரங்களை அளித்தார்.
அன்று முதல் திருக்காட்டுப்பள்ளி சிவன் கோவில் அக்னீஸ்வரம் என்ற பெயர் பெற்றது. வயிற்று நோய் உள்ளவர்கள் இத்தல இறைவனை முறையாக வணங்கினால் நோயில் இருந்து விடுபடலாம் என்பது பக்தா்களின் நம்பிக்கை.
கோவிலுக்கு செல்லும் வழி
அக்னீஸ்வரர் கோவிலுக்கு சென்னையில் இருந்து வர விரும்பும் பக்தர்கள் ரெயிலில் தஞ்சை வந்து அங்கிருந்து தஞ்சை பழைய பஸ் நிலையத்துக்கு சென்று பஸ் மூலம் திருக்காட்டுப்பள்ளிக்கு சென்று பஸ் நிலையம் அருகில் உள்ள அக்னீஸ்வரர் கோவிலை அடையலாம். நெல்லை பகுதிகளில் இருந்து இந்த கோவிலுக்கு வர விரும்பும் பக்தர்கள் ரெயில் மூலம் தஞ்சையை அடைந்து மேற்கண்ட வழித்தடத்தில் பயணித்து கோவிலை அடையலாம்.
- திண்டுக்கல் மேலக் கோட்டையில் உள்ளது இந்த கோவில்.
- இந்த கோவிலில் இந்த பரிகாரத்தை செய்தால் திருமண தடைகள் அகலும்.
திண்டுக்கல்லில் இருந்து சுமார் 14 கி.மீ தொலைவில் உள்ளது, மேலக் கோட்டை. இங்கு 'தலை வெட்டி பிள்ளையார்' அருள்பாலித்து வருகிறார். கல்யாணத் தடையால் கலங்கி தவிப்பவர்கள், இங்கு வந்து பொங்கல் படையலிட்டு ரோஜா மற்றும் சம்பங்கி மாலையை விநாயகருக்கு அணிவிக்க வேண்டும்.
மேலும் பச்சரிசி, எள், வெல்லம் கலந்த கலவையை கீழே சிந்தியபடி விநாயகரை மூன்று முறை வலம் வர வேண்டும். பிறகு விநாயகரின் கழுத்தில் உள்ள மாலையை வாங்கி, கழுத்தில் இரண்டு முறை எடுத்து போட்டுக்கொள்ள வேண்டும்.
விநாயகரின் கழுத்திலேயே திரும்பவும் அந்த மாலையை அணிவித்து விட்டு, திரும்பி பார்க்காமல் வந்துவிட வேண்டும். இதையடுத்து சீக்கிரமே கல்யாண வரன் தேடி வரும் என்பது ஐதீகம்.
- ஈரோட்டில் இருந்து 6 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது இந்த திருத்தலம்.
- இந்த ஆலயத்தில் நின்ற கோலத்தில் முருகப்பெருமான் அருள்பாலிக்கிறார்.
ஈரோடு மாவட்டத்தில் உள்ள திண்டல் என்ற இடத்தில் சிறிய குன்றின் மேல் முருகப்பெருமான் திருக்கோவில் அமைந்துள்ளது. குன்றிருக்கும் இடமெல்லாம் குமரன் இருக்கும் இடம் என்ற சொல்மொழிக்கு ஏற்ப, இந்த ஆலயமும் முருகனின் அருள் ஆலயங்களின் வரிசையில் முக்கிய இடம் பிடிக்கிறது.
இந்த ஆலயத்தில் நின்ற கோலத்தில் முருகப்பெருமான் அருள்பாலிக்கிறார். புத்திரப்பேறு இல்லாதவர்கள், இத்தல முருகனுக்கு அபிஷேகம் செய்து, ஏழைகளுக்கு அன்னதானம் வழங்கி வழிபாடு செய்தால், விரைவில் குழந்தை பாக்கியம் கிடைக்கும் என்பது அசைக்க முடியாத நம்பிக்கை.
ஈரோட்டில் இருந்து பெருந்துறை செல்லும் வழியில் சுமார் 6 கிலோமீட்டர் தொலைவில், திண்டல் திருத்தலம் உள்ளது.
- ஸ்ரீரங்கத்திற்கு அடுத்தபடியாகப் போற்றப்படும் தலம்.
- சிறந்த பிரார்த்தனைத்தலம்.
சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே இருக்கிறது, அரியக்குடி என்ற ஊர். இங்கு லட்சுமி நரசிம்மர் ஆலயம் உள்ளது. இந்த ஆலயத்தில் சக்கரத்தாழ்வாரும் அருள்பாலிக்கிறார். இத்தல லட்சுமி நரசிம்மருக்கு அர்ச்சனை செய்து, எழைகளுக்கு அன்னதானம் வழங்கினால், கடன் பிரச்சினைகள் தீரும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.
ஸ்ரீரங்கத்திற்கு அடுத்தபடியாகப் போற்றப்படும் தலம். தென் திருவேங்கடமுடையான் தலம். நகரத்தார் கோயில்களான 9 கோயில்களில் உள்ள வைணவத்தலம். சிறந்த பிரார்த்தனைத்தலம். இந்தத் தலத்திற்கு நேர் எதிரே இந்த லட்சுமி நரசிம்மப்பெருமாள் மகாலட்சுமியுடன் சேவை சாதிக்கிறார். பெருமாள் கோயிலுக்கு நிகரான தொன்மை சிறப்பு மிக்கது இந்த நரசிம்மர் கோயில். பிரசித்திபெற்ற அரியக்குடி ராமானுஜ அய்யங்காரின் அவதாரத் தலம்.
மகாலட்சுமியினை ஆலிங்கனம் செய்த வண்ணம் தென் திருவேங்கடமுடையான் நின்ற திருக்கோலத்தில் அருட் பாலிக்கிறார். கிழக்கு திருமுகமாக ஸ்ரீதேவி பூமி தேவி நாச்சியார் உள்ளனர்.
காரைக்குடியிலிருந்து கிழக்கே 4 கி.மீ. தூரத்தில் உள்ள அரியக்குடியில் இக்கோயில் அமைந்துள்ளது.
- தற்போது இந்த கோவிலைச் சுற்றிலும் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொம்மைகள் உள்ளன.
- தற்போது அனைவரும் சிமெண்டால் செய்யப்பட்ட பொம்மைகளை வைக்கிறார்கள்.
கடலூரில் இருந்து சுமார் 22 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது, தென்னம்பாக்கம் கிராமம். இங்குள்ள அய்யனார் கோவில், மதுரை அழகர் கோவிலைப் போன்று பிரசித்திப்பெற்றதாகும். இந்தக் கோவிலுக்கு கடலூரில் இருந்து தூக்கணாம்பாக்கம் வழியாகவும், புதுச்சேரியில் இருந்து ஏம்பலம் வழியாகவும், வில்லியனூர் வழியாகவும் செல்லலாம். இங்குள்ள இறைவன் 'அழகுமுத்து அய்யனார்' என்று அழைக்கப்படுகிறார். இவர் தலையில் கிரீடமும், வலது கையில் பிரமாண்ட வாளும், இடது கையில் கேடயமும் தாங்கி கம்பீரமாக காட்சி தருகிறார்.
கோவிலுக்குள் நுழையும் போது பிரமாண்ட குதிரை, யானை சிலைகளை தரிசிக்கலாம். இவற்றில் அய்யனாரின் வாகனமாக கருதப்படும் குதிரை, 375 ஆண்டுகள் பழமையானதாக சொல்லப்படுகிறது. அய்யனார் கையில் உள்ள வாளைச் சுற்றிலும், ஏராளமான வேண்டுதல் சீட்டுகள் கட்டப்பட்டுள்ளன. அவற்றை அய்யனார் நிறைவேற்றுவதாக நம்பிக்கை.
தற்போது இந்தக் கோவிலைச் சுற்றிலும் எங்கு பார்த்தாலும், பொம்மைகள் அணிவகுத்து நிற்கின்றன. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை, டாக்டர், வக்கீல், போலீஸ் என பல்வேறு பொம்மைகள் காணப்படுகின்றன. குழந்தை வரம் கேட்பவர்கள் 27 நாட்கள் விரதம் இருந்து 3 முறை வந்து சித்தரை வேண்டினால், 28-வது நாள் குழந்தை பாக்கியம் கிடைக்கும் என்ற நம்பிக்கை உள்ளது. அப்படி வேண்டுதல் நிறைவேறியவர்கள் குழந்தை பொம்மை செய்து கோவில் முன்பாக வைக்கிறார்கள்.
இதேபோல் கை, கால் பிரச்சினை உள்ளவர்கள் பிரார்த்தனை செய்து, அது குணமான பிறகு கை அல்லது கால் உருவம் செய்து வைக்கின்றனர். திருமணமாகாதவர்கள் இங்கு வந்து வேண்டிக்கொள்கிறார்கள். அது நிறைவேறியதும், மணமக்கள் கோல பொம்மையை செய்து வைத்து நேர்த்திக்கடன் செலுத்துகின்றனர்.
அந்த வரிசையில் டாக்டர், என்ஜினீயர், வக்கீல், போலீஸ் போன்ற ஆசைகள் நிறைவேறினால், அந்த தோற்றத்தில் செய்யப்பட்ட பொம்மைகளை செய்து வைக்கின்றனர். இப்படி எண்ணற்ற பொம்மைகள் இங்கே இருப்பதை வைத்தே, இந்த ஆலயம் எவ்வளவு சக்திவாய்ந்தது என்பதை உணர்ந்துகொள்ள முடியும். தற்போது இந்த கோவிலைச் சுற்றிலும் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொம்மைகள் உள்ளன.
கடந்த காலங்களில் மண்ணால் செய்யப்பட்ட பொம்மைகளை வைத்து பக்தர்கள் வழிபட்டுள்ளனர். அது நாளடைவில் மழையில் நனைந்து கரைந்து போனது. அதனால் தற்போது அனைவரும் சிமெண்டால் செய்யப்பட்ட பொம்மைகளை வைக்கிறார்கள்.
- இந்த கோவில் 130 ஆண்டுகள் பழமை வாய்ந்தது.
- கிராம தெய்வமாக விளங்குகிறது மாகாளியம்மன் ஆலயம்.
திருப்பூர் மாவட்டம், திருப்பூர் மாநகராட்சி, நெருப்பெரிச்சல் கிராமம், 5-வது வார்டுக்குட்பட்ட கூலிபாளையத்தில் அமைந்துள்ள மாகாளியம்மன் கோவில் சுற்று வட்டாரத்தில் உள்ள கோவில்களில் மிகப்பழமையான கோவிலாகவும், மிகவும் பிரசித்தி பெற்ற கோவிலாகவும் உள்ளது.
வேண்டி வரும் பக்தர்களின் குறைகளை போக்கும் வல்ல தெய்வமாக விளங்கும் மாகாளியம்மனின் அருளை பக்தர்கள் பெறவும், அம்மனின் பிரசித்தியை உலகம் அறிந்து கொள்ளவும், கோவில் புதுப்பிக்கப்பட்டு, கும்பாபிஷேக விழா வெகு விமரிசையாக நடைபெற உள்ளது.
உலகில் ஆன்மாக்கள் உய்யும் வண்ணம் எந்நாட்டிலும் பொன் நாடாகவும், நமது கொங்குநாட்டின் சிறந்த பகுதியாகவும் ஸ்ரீபுரி என்னும் மஹாலட்சுமி வாசம் செய்கின்ற தொழில் நகரமாம் திருப்பூர் நொய்யல் நதியின் வடபால் அமைந்துள்ள திவ்யமான கூலிபாளையம் எனும் பகுதியில் 130 ஆண்டுகளுக்கும் பழமையான தன்னை நாடிவரும் பக்தர்களின் மனக்குறைகள் நீங்கிடவும், வேண்டி வரும் பக்தர்களுக்கு வேண்டியதை அருள்பாலிக்கும் கிராம தெய்வமாக விளங்குகிறது மாகாளியம்மன் ஆலயம்.
இந்த ஆலயத்தில் புதிதாக கல்ஹார திருப்பணிகள் செய்வித்து, துவார சக்திகள் ராகு, கேது, குதிரை, சிலா உருவ திருமேணிகள் அமைக்கப்பட்டு தை மாதம் 12-ம் நாள் அதாவது இன்று (வியாழக்கிழமை) காலை 9 மணிக்கு மேல் 10.30 மணிக்குள் விநாயகர், மாகாளியம்மனுக்கு மகா கும்பாபிஷேக பெருஞ்சாந்தி பெருவிழா நடைபெறுகிறது.
கும்பாபிஷேக விழாவில் பக்தகோடி பெருமக்கள் கலந்து கொண்டு, மாகாளியம்மனை வணங்கி, இம்மையிலும், மறுமையிலும் நீங்காத செல்வம் பெற கோவில் திருப்பணி குழுவினர் அன்புடன் அழைக்கின்றனர்.
- இக்கோவில் பரசுராமனின் தோஷம் நீக்கிய தலம் ஆகும்.
- அர்ச்சனை செய்து வழிபட்டால் சகல தோஷங்களும் நீ்ங்கும் என பக்தர்களால் நம்பப்படுகிறது.
தஞ்சை மாவட்டம் திருக்காட்டுப்பள்ளிக்கு வடக்கு பகுதியில் கொள்ளிடம் ஆற்றின் கரையில் விஷ்ணம்பேட்டை கிராமத்தில் அமைந்துள்ளது திருக்கானூர் கரும்பீஸ்வரர் திருக்கோவில்.
இக்கோவில் பரசுராமனின் தோஷம் நீக்கிய தலம் ஆகும். இத்தலத்தில் உள்ள சிவனையும், அம்பாளையும் வணங்கினால் உடல்நலக்குறைவு நீங்கி திருமணத்தடை அகலும் என்றும், குழந்தை பாக்கியம் கிடைக்கும் என்பதும் வளமான வாழ்க்கையை கரும்பீஸ்வரர் அருள்வார் என்பதும் பக்தர்களின் நம்பிக்கை.
திருக்கானூர் கரும்பீஸ்வரர் கோவிலில் தல விருட்சம் வில்வ மரத்தின் இலைகளால் செம்மேனி நாதருக்கு அர்ச்சனை செய்து வஸ்திரம் சாற்றி, நெய் தீபம் ஏற்றி சிவகவசம் பாராயணம் செய்தால் நீண்ட நாட்களாக உடல் நலக்குறைவால் அவதிப்படுபவர்கள் நோய் நீங்கி நல்வாழ்வு பெறுவார்கள் என்றும், சவுந்தரநாயகி அம்பாளுக்கு புத்தாடை அணிவித்து, செவ்வரளி மாலை சாற்றி தீபமிட்டு அர்ச்சனை செய்ய திருமண தடை நீங்கி, திருமணம் கைகூடும் என்றும், செம்மேனியப்பருக்கும், அம்பாளுக்கும் எருக்கமாலை அணிவித்து பால், தயிர், நெய், தேன், பன்னீர் அபிஷேகம் செய்ய சந்தானபாக்கியம் கிடைக்கும் என்பதும் ஐதீகம்.
சப்தமி நாளில் இக்கோவிலில் மூலவரையும், அம்பாளையும் அர்ச்சனை செய்து வழிபட்டால் சகல தோஷங்களும் நீ்ங்கும் என இன்றும் பக்தர்களால் நம்பப்படுகிறது.
திருக்கானூர் கரும்பீஸ்வரர் கோவிலுக்கு தென் மாவட்டங்களில் இருந்து வர விரும்பும் பக்தர்கள் முதலில் பஸ் அல்லது ரெயில் மூலம் தஞ்சைக்கு வர வேண்டும். பின்னர் தஞ்சையில் இருந்து பஸ் மூலம் திருக்காட்டுப்பள்ளி பஸ் நிலையத்துக்கு வந்து அங்கிருந்து ஆட்டோ மூலம் திருக்காட்டுப்பள்ளி காவிரி பாலத்தை கடந்து சென்றால் கோவிலை அடையலாம்.
- இங்கு எமகண்டவேளை பூஜைகள் விசேஷம்.
- இக்கோவிலில் கேதுபகவானை தனிச் சந்நதியில் தரிசிக்கலாம்.
சென்னை அருகே உள்ள போரூர் - குன்றத்தூர் சாலையில் உள்ளது கெருகம்பாக்கம். இங்கிருந்து ஒரு கிலோமீட்டர் தூரம் சென்றால், நீலகண்டேஸ்வரர் திருக்கோவில் இருக்கிறது. போரூர் சந்திப்பில் இருந்து 3 கி.மீ. தொலைவில் உள்ளது.
இது கேது பகவானுக்குரிய தலமாக கருதப்படுகிறது. செவ்வாய்க்கிழமை அன்று இங்கு சிறப்பு பூஜைகள் நடைபெறுகின்றன. இறைவனின் திருநாமம், நீலகண்டேஸ்வரர், அம்பிகையின் திருநாமம் ஆதிகாமாட்சியம்மை என்பதாகும். சுவாமி கருவறையின் வலது பக்கம் சண்டிகேஸ்வரர் இருக்கிறார்.
இக்கோயிலில் கேதுபகவானை தனிச் சந்நதியில் தரிசிக்கலாம். இரு நாகங்கள் பின்னிப் பிணந்திருக்க, நடுவில் 'காளிங்க நர்த்தன கண்ணன்'போல இவர் அருள்பாலிக்கிறார். எமகண்ட வேளை கேதுவிற்கு உரியது என்பதால் இவர் சந்நதியில் செய்யப்படும் எமகண்டவேளை பூஜைகள் விசேஷம்.
ஈசனுக்கும் நந்திக்கும் இடையே உள்ள மேல் விதானத்தில், சூரியனை கேது விழுங்குவது போல் ஒரு சிற்பம் காணப்படுகிறது. இதன் கீழ் நின்று ஈசனையும் அம்பிகையையும் மனமுருக வேண்டினால் கேதுவின் கெடுபலன்கள் குறைகிறது. வெளிச்சுற்றில் கேது பகவான் தனிச் சன்னிதியில் அருள்பாலிக்கிறார். புடைப்புச் சிற்பமாக இருக்கும் பின்னிப் பிணைந்த இரண்டு சர்ப்பங்களின் நடுவில் உள்ள நடன கோபாலன், கேதுவாக கருதப்படுகிறார்.
கேது சரியில்லை எனில் திருமண வாழ்க்கையில் பிரச்னைகள் வரும்; எந்த காரியமானாலும் அலைச்சலுடன்தான் முடிக்கவேண்டியிருக்கும். எனவே கெருகம்பாக்கம் நீலகண்டேஸ்வரரை தரிசிக்கும்போது கேதுவினால் ஏற்படும் பிரச்னைகள் தீரும்.
- 27 நட்சத்திர தோஷங்கள் நீங்குவதற்கு மகாயாகம் நடத்தப்படுகிறது.
- இந்த கோவில் திருவண்ணாமலை வந்தவாசி தாலுகா இஞ்சிமேடு கிராமத்தில் உள்ளது.
திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி தாலுகா, பெரணமல்லூர் ஒன்றியம், இஞ்சிமேடு கிராமத்தில், ஸ்ரீ பெருந்தேவிதாயார் சமேத வரதராஜபெருமாள் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஸ்ரீ வரதராஜபெருமாள் தனி சன்னதி, ஸ்ரீ பெருந்தேவி தாயார் சன்னதி, கல்யாண லட்சுமி நரசிம்மர் சன்னதி, ராமர், லட்சுமணர், சீதாதேவி, ஆஞ்சநேயர், கருடாழ்வார் தனி சன்னதிகள் உள்ளன.
பிரதி மாதம் சுவாதி நட்சத்திரம், மூல நட்சத்திரம் ஆகிய நட்சத்திர நாட்களில் 27 நட்சத்திர தோஷங்கள் நீங்குவதற்கு மகாயாகம் நடத்தப்படுகிறது. இதில் திருமணத்தடை, வேலை வாய்ப்பு, குழந்தை பாக்கியம், உலக நன்மைக்காகவும், மழை வேண்டியும் பல்வேறு நன்மைக்காகவும் யாகம் நடத்தப்படுகிறது.
பிரதிமாதம் உத்திரம் நட்சத்திரத்தில் கோ சாலையில் உள்ள பசுக்களுக்கு சிறப்பு பூஜை நடைபெறுகிறது. இதில் வியாபாரம், திருமணநாள், பிறந்த நாள், குழந்தை வரம், பெயர் சூட்டுதல், நோய் நொடி இல்லாமல் வாழ்வதற்கும் முன்பதிவு செய்து கொண்டு கோ பூஜையில் கலந்து கொண்டு வழிபடலாம். இந்த கோவிலில் புத்தாண்டு திருவிழா, தைமாத திருவிழா, திருப்பாவாடை அன்னக்கூடை திருவிழா, பவுத்திர உற்சவம், திருக்கல்யாணம், ஊஞ்சல் சேவை, கருடசேவை, கிருஷ்ணஜெயந்தி ஆகியவை முக்கிய விழாக்களாக நடக்கின்றன.
பெருந்தேவி தாயார் சிறப்பு
பல்வேறு கோரிக்கைகளை பெருந்தேவி தாயாரிடம் வைத்து மண் அகல்விளக்கில் தீபம்ஏற்றி 48 நாள் மஞ்சள் வைத்து வணங்கி வந்தால் நன்மைகள் நடக்கும்.
- பக்தர்களை காக்கும் அம்மன் ஆலயங்கள் தமிழகத்தில் பல உள்ளன.
- தீர்த்தக்குளம் கோவில் அருகில் மிகப்பெரிய அளவில் அமைந்து உள்ளது.
கோடை காலத்தில் பரவும் அம்மை நோயில் இருந்து பக்தர்களை காக்கும் அம்மன் ஆலயங்கள் தமிழகத்தில் பல இருந்தாலும் பட்டுக்கோட்டை அருகே உள்ள கரம்பயம் முத்துமாரியம்மன் கோவில், பக்தர்கள் மனதில் நீங்காத இடத்தை பெற்று உள்ளது.
டெல்டா மாவட்டங்களில் அம்மை நோய் தீர்க்கும் முக்கிய கோவில்களில் ஒன்றாக கரம்பயம் முத்துமாரியம்மன் கோவில் உள்ளது.
கரம்பயம் முத்துமாரியம்மன் கோவிலுக்கு கரம்பயம் மட்டுமின்றி கரம்பயத்தை சுற்றியுள்ள சுமார் 35-க்கும் மேற்பட்ட கிராம மக்களும், அருகில் உள்ள நகர மக்களில் யாருக்காவது அம்மை நோய் ஏற்பட்டால் அவர்களை அழைத்து வந்து கரம்பயம் முத்துமாரியம்மன் கோவிலில் தங்க வைத்து தீர்த்தம் என்று சொல்லக்கூடிய அபிஷேக பால் வாங்கி கொடுப்பார்கள்.
நான்கு அல்லது ஐந்து நாட்களில் அவர்கள் நோய் பூரண குணமடைந்து விடுவது இன்றும் வழக்கத்தில் உள்ளது. இதற்கு நேர்த்திக்கடனாக முடி இறக்கி காணிக்கை செலுத்துவது, அலகு குத்துவது, காவடி எடுப்பது, பால்குடம் எடுப்பது, வடம் பிடித்து தேர் இழுப்பது உள்ளிட்ட வேண்டுதல்களை பொதுமக்கள் நிறைவேற்றி வருகின்றனர்.
கரம்பயம் முத்துமாரியம்மன் கோவில் திருவிழாவின்போது அம்பாள் வீதி உலா வந்து பொதுமக்களை பார்த்து மகிழ்ந்து அவர்களுக்கு தேவையான அனைத்து வேண்டுதல்களையும் நிறைவேற்றி தருவார் என்பது பக்தர்களின் நம்பிக்கை.
கரம்பயம் முத்துமாரியம்மன் கோவில் தீர்த்தக்குளம் கோவில் அருகில் மிகப்பெரிய அளவில் அமைந்து உள்ளது. அம்மை நோயால் பாதிக்கப்படும் பக்தா்கள் நோய் தீர்ந்த உடன் இ்ந்த கோவில் தீா்த்தக்குளத்தில் நீராடி பின்னர் தங்கள் நேர்த்திக்கடனை செலுத்துகிறார்கள். மேலும் கோவிலுக்கு வரும் அனைத்து பக்தா்களும் தீர்த்தக்குளத்தில் உள்ள புனித நீரை தங்கள் தலையில் தெளித்த பின் கோவிலுக்கு செல்கிறாா்கள்.
தீர்த்தக்குளத்தில் அம்மை நோய் தீர்க்கும் அற்புத சக்தி இருப்பதாக பக்தர்கள் நம்புகிறார்கள். எனவே பிரசித்தி பெற்ற கரம்பயம் முத்து மாரியம்மன் கோவில் தீர்த்தக்குளம் பக்தா்கள் மனதில் நீங்காத இடத்தை பெற்று உள்ளது.
கரம்பயம் முத்துமாரியம்மன் கோவில் தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டையில் இருந்து 7 கி.மீட்டர் தொலைவில் உள்ளது. சென்னையில் இருந்து இந்த கோவிலுக்கு வர விரும்பும் பக்தர்கள் கிழக்கு கடற்கரை சாலை வழியாக பட்டுக்கோட்டைக்கு வந்து அங்கிருந்து கரம்பயம் முத்து மாரியம்மன் கோவிலை அடையலாம். தென்மாவட்டங்களில் இருந்து இந்த கோவிலுக்கு வர விரும்பும் பக்தர்கள் பஸ் அல்லது ரெயில் மூலம் தஞ்சைக்கு வந்து அங்கிருந்து பட்டுக்கோட்டைக்கு செல்லும் வழியில் 7 கி.மீட்டர் தொலைவிற்கு முன்பு உள்ள கோவிலை அடையலாம்.
- மதுரையில் இருந்து 24 கி.மீ. தொலைவில் உள்ளது திருவாதவூர்.
- சனி கிரக தோஷங்கள் நிவர்த்தியாகும் என்பது நம்பிக்கை.
மதுரையில் இருந்து 24 கி.மீ. தொலைவில் உள்ளது திருவாதவூர். மதுரை ஒத்தக்கடையில் இருந்து கிளை பிரிந்து செல்லும் சாலையில், சுமார் 20 கி.மீ. தொலைவு பயணித்தால், திருவாதவூர் திருத்தலத்தை அடையலாம்.
மாணிக்கவாசகர் அவதரித்த புண்ணியத் திருத்தலம் இது. இங்கே உள்ள ஆலயத்தில் குடிகொண்டிருக்கும் இறைவனின் திருநாமம் திருமறைநாதர். வேதநாயகன். அம்பாளின் திருநாமம் வேதவல்லி.
சனி பகவான் இந்தத் தலத்துக்கு வந்து, சிவபெருமானை தவமிருந்து வழிபட்டார். இதனால் வாத நோய் நீங்கப் பெற்றார் சனி பகவான். எனவே, இந்தத் தலத்து இறைவனை வழிபட்டால், கைகால் குடைச்சல், செயல் இழப்பு, பக்கவாதம் முதலான வாத நோய்ப் பிரச்சினைகள் விரைவில் குணமாகும் என்பது ஐதீகம்.
மேலும் இங்கே சனி பகவான் தனிச்சந்நிதியில் கோயில் கொண்டிருக்கிறார். எனவே இங்கு வந்து வாத நோயில் இருந்து விடுபட்ட சனீஸ்வரரையும் வேண்டிக்கொண்டால், சனி கிரக தோஷங்களும் நிவர்த்தியாகும் என்பது நம்பிக்கை. திருவாதவூரில் மாணிக்கவாசகர் அவதரித்தது விசேஷம். சனி பகவான் நோய் நீங்கப் பெற்றது சிறப்பு. அதேபோல் பைரவரும் இங்கு மகத்துவம் வாய்ந்தராகப் போற்றப்படுகிறார்.
இங்கு உள்ள பைரவர் மிகுந்த மகிழ்ச்சியுடனும் கனிவுடனும் காட்சி தருகிறார். திருவாதவூரில் சந்நிதி கொண்டிருக்கும் பைரவரை எட்டு அஷ்டமியில் வழிபட்டு வந்தால், தொலைந்து போன வாகனங்கள், பொருட்கள் திரும்பவும் கிடைக்கும் என்கிறார்கள் பக்தர்கள்.
அதேபோல், திருமறைநாதர், சனிபகவான், பைரவர் முதலானோரை சந்தர்ப்பம் கிடைக்கும் போது இந்தத் தலத்துக்கு வந்து தரிசித்து, ஐந்து நல்லெண்னெய் தீபம் ஏற்றி வழிபட்டால், சகல தோஷங்களும் நீங்கும் என்பது உறுதி.
வீட்டில் திருவாதவூர் தெய்வங்களை மனதில் நினைத்து விளக்கேற்றி வழிபட்டு வந்தால், தொலைந்து போன பொருட்கள், வாகனங்கள் கிடைக்கும்.
மிகத் தொன்மையான திருவாதவூர் சிவனை வேண்டுங்கள். எல்லா தொல்லைகளில் இருந்தும் விடுபடுவீர்கள்.