என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Pasuram-13"

    • இலங்கை மன்னன் ராவணன் தலையை கிள்ளி எறிந்தவன்.
    • இறைவன் செந்தாமரை மலர் நிறம் உடையவன்.

    திருப்பாவை

    பாடல்

    புள்ளின்வாய் கீண்டானை, பொல்லா அரக்கனைக்

    கிள்ளிக் களைந்தானைக் கீர்த்திமை பாடிப்போய்,

    பிள்ளைகள் எல்லாரும் பாவைக் களம்புக்கார்;

    வெள்ளி எழுந்து, வியாழம் உறங்கிற்று;

    புள்ளும் சிலம்பினகாண்; போதரிக் கண்ணினாய்!

    குள்ளக் குளிரக் குடைந்து நீராடாதே,

    பள்ளிக் கிடத்தியோ? பாவாய்! நீ நன்னாளால்

    கள்ளம் தவிர்ந்து கலந்தேலோ ரெம்பாவாய்.

    விளக்கம்:

    பறவை வடிவத்தில் வந்த பகாசுரனின் வாயைப் பிளந்தவன், ராமனாக அவதாரம் எடுத்தபோது இலங்கை மன்னன் ராவணன் தலையைக்கிள்ளி எறிந்தவன். இப்படிப் பட்ட ஸ்ரீமன்நாராயணனின் புகழைப் பாடிக் கொண்டு, எல்லோரும் பாவை நோன்பு நோற்கும் இடத்திற்கு சென்றுவிட்டார்கள். வியாழன் என்னும் கோள் மறைந்துவிட்டது. வெள்ளி என்ற கோள் உதயமாகிவிட்டது. பறவைகள் கீச்சிடுகின்றன. பூப்போன்ற கண்களை கொண்டவளே! இந்த குளிர்ந்த நீரில் நீராடி பரந்தாமனை பாடாமல் படுத்தே கிடக்கலாமோ? இது நல்ல நாள்? கண்ணனிடம் வரம்பெறும் நாளில் தூக்கம் என்கிற திருட்டுத்தனத்தை விட்டுவிட்டு எங்களோடு சேர்ந்து நீராட வருவாயாக!

    திருவெம்பாவை

    பாடல்

    பைங்குவளைக் கார்மலரால் செங்கமலப் பைம்போதால்

    அங்கங் குருகினத்தால் பின்னும் அரவத்தால்

    தங்கள் மலங்கழுவு வார்வந்து சார்தலினால் எங்கள் பிராட்டியும் எங்கோனும் போன்றிசைந்த

    பொங்கு மடுவிற் புகப்பாய்ந்து பாய்ந்துநம்

    சங்கஞ் சிலம்பச் சிலம்பு கலந்தார்ப்பக் கொங்கைகள் பொங்கக் குடையும் புனல்பொங்கப்

    பங்கயப் பூம்புனல்பாய்ந் தாடேலோர் எம்பாவாய்.

    விளக்கம்

    நீர் நிரம்பிய குளத்தில் பசுமையும் கருமையும் கலந்த கருங்குவளை மலர்கள் உள்ளன. செந்தாமரை மலர்களும் உள்ளன. நாம் வணங்கும் உமையவள் குவளை மலர் நிறமுடையவள். இறைவன் செந்தாமரை மலர் நிறம் உடையவன். குருகு எனப்படும் குறுக்கத்தி மாலை அம்பிகையை அலங்கரிக்கிறது. இந்த பொய்கை இறைவியும், இறைவனும் இணைந்தது போல் காணப்படுகிறது. பறவைகளினால் பலதரப்பட்ட ஓசைகள் உண்டாகின்றன. தங்கள் அழுக்கைப் போக்க அங்கு பலர் நீராட வருகிறார்கள். இப்படிப்பட்ட தாமரை மலர்கள் படர்ந்த பொய்கையில், கால் சிலம்புகள் ஒலிக்கவும். சங்குகள் ஒலிக்கவும், மார்பகங்கள் மகிழ்ச்சியில் பூரிக்கவும், நீர்த்துளிகள் சிதறவும் மூழ்கி நீராடுவோம்!

    ×