என் மலர்
நீங்கள் தேடியது "Pasuram-2"
- நம்மை உயரச் செய்கின்ற பாவை நோன்பிற்கான வழிமுறைகளைக் கேளுங்கள்.
- அம்பலத்துப் பெருமானின் மலர்பாதங்களை காணும் பாக்கியம் நமக்கு கிடைத்திருக்கிறது.
திருப்பாவை
பாடல்:
வையகத்து வாழ்வீர்காள்! நாமும் நம் பாவைக்குச்
செய்யும் கிரிசைகள் கேளீரோ! பாற்கடலுள்
பையத் துயின்ற பரமன் அடி பாடி
நெய்யுண்ணோம்; பாலுண்ணோம்; நாட்காலை நீராடி
மையிட்டெழுதோம்; மலரிட்டு நாம் முடியோம்;
செய்யாதன செய்யோம்; தீக்குறளைச்
சென்றோதோம்;
ஐயமும் பிச்சையும் ஆந்தனையும் கைகாட்டி
உய்யுமா றெண்ணி உகந்தேலோ ரெம்பாவாய்.
விளக்கம்:
கண்ணன் வாழ்ந்த காலத்தில் அவனுடன் வாழும் பேறுபெற்ற மங்கையரே! நம்மை உயரச் செய்கின்ற பாவை நோன்பிற்கான வழிமுறைகளைக் கேளுங்கள்! நோன்பின் போது கண்களுக்கு மையிட்டும், கூந்தலில் பூச்சூடியும் அழகுபடுத்திக் கொள்ளாமல் இருப்போம். செய்யக்கூடாதவை என்று பெரியோர்களால் விலக்கப்பட்டவற்றை செய்யாது இருப்போம். பிறரைப் பற்றி புறங்கூறுவதை விட்டு விடுவோம். பாற்கடலில் துயில்கொள்கின்ற பரந்தாமனின் திருவடிகளை போற்றிப் பாடியபடி, வேண்டா வெறுப்பாய் கட்டாயத்தினால் நோன்பு நோற்காமல், மிகுந்த மகிழ்ச்சியுடன் அதிகாலையில் நீராடி கர்வம் இன்றி தானமும், தருமமும் செய்வோம்.
திருவெம்பாவை
பாடல்:
பாசம் பரஞ்சோதி கென்பாய் இராப்பகல்நாம்
பேசும்போ தெப்போதிப் போதார் அமளிக்கே
நேசமும் வைத்தனையோ? நேரிழையாய்!
நேரிழையீர்!
சீசீ இவையும் சிலவோ? விளையாடி
ஏசும் இடமீதோ? விண்ணோர்கள் ஏத்துதற்குக்
கூசும் மலர்பாதம் தந்தருள வந்தருளும்
தேசன் சிவலோகன் தில்லைச்சிற் றம்பலத்துள்
ஈசனார்க் கன்பர்யாம் ஆரேலோர் எம்பாவாய்!
விளக்கம் :
பகலும், இரவும் நாம் பேசும்போதெல்லாம், உன் அன்பெல்லாம் அந்த பரமனுக்கே உரியது என்பாய். இப்போது மலர்கள் தூவப்பட்ட படுக்கையின் மீது ஆசை கொண்டு விட்டாய் போலும்! (உறக்கத்தில் உள்ள பெண்). "சீசீ! நீங்கள் விளையாட்டாக ஏசுவதற்கு ஏற்ற இடம் இதுதானோ?!". (மற்ற பெண்கள்) "விண்ணுலகத் தேவர்களின் கண்களையும் கூசச் செய்கின்றதில்லை அம்பலத்துப் பெருமானின் மலர்பாதங்களை காணும் பாக்கியம் நமக்கு கிடைத்திருக்கிறது. நம் இல்லம் தேடி வந்து அருளும் இறைவனை நாம் நாடிச் செல்ல வேண்டாமா? பெண்ணே எழுந்திரு".
- பாவை நோன்புக்கென செய்யக்கூடிய விதிமுறைகளைக் கேளுங்கள்.
- இறைவனின் மலர் பாதங்கள் அவர்களின் கண்களை கூசச்செய்கிறது.
திருப்பாவை
பாடல்
வையத்து வாழ்வீர்காள்! நாமும் நம்பாவைக்குச்
செய்யுங் கிரிசைகள் கேளீரோ! பாற்கடலுள்
பையத் துயின்ற பரமன் அடிபாடி,
நெய்யுண்ணோம்; பாலுண்ணோம்; நாட்காலை நீராடி
மையிட் டெழுதோம்; மலரிட்டு நாம் முடியோம்;
செய்யா தனசெய்யோம்;
தீக்குறளைச் சென்றோதோம்;
ஐயமும் பிச்சையும் ஆந்தனையும் கைகாட்டி
உய்யுமா றெண்ணி உகந்தேலோ ரெம்பாவாய்.
விளக்கம்
இந்த பூமியில் பிறந்து வாழ்பவர்களே! மார்கழி மாத பாவை நோன்புக்கென செய்யக்கூடிய விதிமுறைகளைக் கேளுங்கள்.
திருப்பாற்கடலில் பாம்பணையில் துயில்கின்ற பரந்தாமனின் திருவடியை அன்புடன் பாட வேண்டும். நெய், பால் ஆகியவற்றை உண்ணக்கூடாது. அதிகாலையில் எழுந்து நீராடி, கண்ணுக்கு மை தீட்டாமல், கூந்தலில் பூ சூடிக்கொள்ளாமல் இருக்க வேண்டும். குறிப்பாக பிற ரைப்பற்றி கோள் சொல்லக்கூடாது. பிறருக்கு தீங்கு செய்யக்கூடாது. செய்யத்தகாத காரியங்களையும் செய்யக்கூடாது.
யோகிகளுக்கும், தவசிகளுக்கும் நாமாக சென்று தர்மம் செய்ய வேண்டும். பிறருக்கு கொடுக்கும் போது செருக்கு இல்லாமலும், வெறுப்பு இல்லாமலும், பரமன் அடிபணிந்து செய்ய வேண்டும்.
திருவெம்பாவை
பாடல்
பாசம் பரஞ்சோதிக்கென்பாய் இராப்பகல் நாம்
பேசும் போதெப்போது இப்போதார் அமளிக்கே
நேசமும் வைத்தனையோ நேரிழையாய்
நேரிழையீர் சீசி இவையுஞ் சிலவோ விளையாடி
ஏசும் இடம் ஈதோ விண்ணோர்கள் ஏத்துதற்குக்
கூசும் மலர்ப்பாதம் தந்தருள வந்தருளும்
தேசன் சிவலோகன் தில்லைச் சிற்றம்பலத்துள்
ஈசனார்க்கு அன்பர் யாம் ஆரேலோர் எம்பாவாய்
விளக்கம்
சிறந்த அணிகலன்களை அணிந்திருக்கும் பெண்ணே! இரவும் பகலும் நாம் பேசும் போது, யாவும் கடந்து நிற்கின்ற ஒளிவடி வான இறைவன் மீது பாசம் வைத்திருப்பதாகச் சொல்வாய். அதே அன்பை இந்த மலர் படுக்கையின் மீது எப்போது வைத்தாய். பெண்களே!
நீங்கள் கேலியாக பேசி விளையாடுவதற்கு இது ஏற்ற இடம் அல்ல. தேவர்கள் சிவபெருமானை வாழ்த்துவதும், வணங்குவதுமாக உள்ளனர். இறைவனின் மலர் பாதங்கள் அவர்களின் கண்களை கூசச்செய்கிறது. ஒளிமயமான ஈசன் தனது திருவடிகளை இம்மண்ணில் படும்படி அருள்புரிய வந்துள்ளார். சிவலோகத்தில் வீற்றிருக்கும் அவர், தில்லை சிதம்பரத்தில் நம்மைக் காக்க எழுந்தருளியுள்ளார். நாம் சென்று வழிபடுவோம்.