என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "Periya Palayam"
- தாலியை அம்மனுக்கு காணிக்கையாக செலுத்து கிறார்கள்.
- பாளையம் என்றால் படை வீடு என்று பொருள்.
பாளையம் என்றால் படை வீடு என்று பொருளாகும். பெரியபாளையம் என்றால் பெரிய படை வீடு என்பதாகும். சென்னையில் இருந்து சுமார் 45 கி.மீ. தொலைவில் பெரியபாளையம் உள்ளது. அங்கு அருள்மிகு ரேணுகாதேவி பவானி பெரியபாளையத்து அம்மனாக கொலு வீற்றிருக்கிறாள்.
பக்தர்கள் குடும்பம் குடும்பமாக வந்து அம்மனை வழிபாடு செய்த வண்ணம் இருக்கிறார்கள். பக்தியுடன் அம்மனின் பெயரைக் கூறி வரும் பக்தர்களின் எண்ணிக்கை சமீபகாலமாக நாளுக்கு நாள் பெருகிக் கொண்டே இருக்கிறது.
இங்கு மற்ற இடங்களில் காண இயலாத வித்தியாசமான சிறப்பு ஒன்று உண்டு. அது அம்மனுக்கு பிரியமான வேப்பிலைகளை கொண்டு தயாரிக்கப்பட்ட வேப்பிலை சரத்தை உடம்பில் கட்டிக்கொண்டு ஆலயத்தை சுற்றி வந்து தங்கள் பிரார்த்தனையை நிறைவேற்றுகிறார்கள் என்பதுதான்.
பெரியபாளையத்து அம்மன் ஒரு கையில் சக்ராயுதமும் மற்றொரு கையில் கபாலக்கிண்ணமும் ஏந்தி நிற்கிறாள். இந்த கபாலக்கிண்ணத்தில் மகாலட்சுமி, துர்க்கை, சரஸ்வதி ஆகிய மூவரும் அடங்கி இருப் பதாகதத்துவம் உண்டு. அதனால் உலக வாழ்க்கைக்கு தேவையான செல்வம், கல்வி, உடல் சக்தி (வீரம்) மூன்றையுமே அன்னை வழங்குகிறாள் என்பது நம்பிக்கை.
உடல் நலம் பெறவும், நீண்ட ஆயுளை ஆரோக்கியத்துடன் அடையவும் பெரியபாளை யத்து அம்மனை நினைத்தப் படி வருபவர்கள் அதிகம். குறிப்பாக பெண்கள் கணவன் நோய்வாய்பட்டிருந்தால் தங்கள் மாங்கல்யம் நிலைத்து நிற்க அம்மனை வேண்டி கொள்கிறார்கள். பின்னர் தங்கள் தாலியை அம்மனுக்கு காணிக்கையாக செலுத்து கிறார்கள்.
இப்படி பெரியபாளையத்து அம்மன் பெருமைகளை சொல்லிக் கொண்டே பொகலாம்.
ஜலமூர்த்தி அவதாரம்
பெரியாபளையம் அன்னை பவானி அம்மன் பரமசிவனின் அஷ்ட்டமூர்த்திகளில் ஜலமூர்த்தியான `பவர்' என்ற அம்சத்தின் தேவி என்று கருதப்படுகிறார்.
வாழ்வின் வடிவமாய், வாழ்விற்கு மூலமாய், வாழ்வினை அளிப்பதாய் உள்ளது தண்ணீர். தண்ணீருக்கு அத்தன்மையை அளித்து, திகழும் அன்னை பவானி, தன்னை வழிபடும் அன்பர்களுக்கு வாழ்வினை அளிப்பவள் என்று கருதப்படுகிறார்.
இவ்வுலகில் எது பொய்த்தாலும், பவானியின் அருள் பொய்ப்பதில்லை. வைசூரி, காலரா பொன்ற கொள்ளை நோய்களில் இருந்து மக்களைக் காத்தருளும் அன்னை இவள். உயிர்ப்பலி இடுவது தடை செய்யப் பட்டுள்ளதால், பக்தர்கள் ஆடு, கோழி முதலியவற்றை உயிருடன் காணிக்கையாக செலுத்துகின்றனர்.
- புற்று இருந்த இடத்தில் பாளையத்தம்மனுக்கு கோவில் கட்டப்பட்டது.
- சுயம்பு மீது வெள்ளி கவசமிடப்பட்டு வணங்கப்பட்டு வருகிறது.
பெரியபாளையம் கோவில் உள்ள இடம் ஆதி காலத்தில் புற்று மேடாக இருந்த இடமாகும். பவானி அம்மன் வளையல் வியாபாரி ஒருவர் மூலம் திருவிளையாடல் நடத்தி தான் அங்கு இருப்பதை இந்த உலகுக்கு உணர்த்தினாள். அதன் பிறகே புற்று இருந்த இடத்தில் பாளையத்தம்மனுக்கு கோவில் கட்டப்பட்டது. இதன் பின்னணியில் உள்ள தல வரலாறு வருமாறு:-
சில நூற்றாண்டுகளுக்கு முன்பு, ஆந்திராவில் உள்ள பலிஜா நாயுடு இனத்தை சேர்ந்தவர்கள் வளையல் விற்பதற்காக சென்னைக்கு வருவார்கள். வளையல் மூட்டைகளை தலையில் சுமந்தபடி கால்நடையாகவே வந்து செல்வார்கள்.
பெண்களின் கையில் வளையல் பொட்டு விட்டவுடன் மங்களகரமாக வாழ்த்துவதற்கு அறிகுறியாக, வளையல் அணிந்த பெண்களுக்கு மஞ்சள், குங்குமம் கொடுப்பார்கள். இதற்காகவே அவர்கள் பொட்டலங்களில் மஞ்சள், குங்குமம் கொண்டு வருவார்கள்.
ஒரு சமயம், ஒரு வளையல் வியாபாரி, சென்னையில் வியாபாரத்தை முடித்துக் கொண்டு நடை பயணமாக ஆந்திராவுக்குத் திரும்பி கொண்டிருந்தார். ஆரணி ஆறு பகுதி வந்ததும் மதிய உணவு சாப்பிட்டார். பிறகு பெரியபாளையத்தில் ஒரு வேப்ப மரத்தடியில் அமர்ந்து சற்று நேரம் தூங்கினார்.
சிறிது நேரம் கழித்து கண் விழித்தார். அருகில் வைத்திருந்த வளையல் மூட்டை காணாததை அறிந்து அதிர்ச்சி அடைந்தார். அங்கும் இங்கும் தேடினார். வளையல் மூட்டை கிடைக்கவில்லை.
அப்பொது அவரது கண்ணில் பெரிய பாம்பு புற்று தென்பட்டது. சந்தேகத்துடன் அந்த புற்றுக்குள் எட்டிப் பார்த்தார். வளையல் மூட்டை அங்கு கிடந்தது.
ஒரு கம்பை எடுத்து வந்து வளையல் மூட்டையை எடுக்க முயன்றார். அவரால் முடியவில்லை. நீண்டநேரம் பொராடியும் அவரால் வளையல் மூட்டையை எடுக்க இயலவில்லை.
அதற்கு மேலும் அங்கு நிற்க துணிவு இல்லாத அவர் ஆந்திராவில் உள்ள தன் வீட்டுக்குத் திரும்பி சென்றுவிட்டார். அன்று இரவு அவர் தூங்கிக் கொண்டிருந்த பொது, அவருக்கு ஒரு கனவு வந்தது. கனவில் பவானி அம்மன் தோன்றினாள்.
`நான் ரேணுகாதேவி. பெரியபாளையத்தில் பவானி ஆக அவதாரம் எடுத்துள்ளேன். உன் வளையல் மூட்டை விழுந்துள்ள புற்றில் சுயம்புவாக கோவில் கொண்டுள்ளேன். இதை நினைத்து நீ பயப்படாதே. நீ மீண்டும் உடனே அங்கு வா. அங்கு வந்து என்னை தினமும் வணங்கி வழிபட ஒரு கோவில் எழுப்பு' என்று உத்தரவிட்டாள்.
திடுக்கிட்டு விழித்த வளையல்காரருக்கு வியர்த்துக் கொட்டியது. மறுநாளே வளையல், மஞ்சள், குங்குமம் மூட்டைகளுடன் சென்னைக்கு புறப்பட்டார்.
பெரியபாளையம் வந்ததும், அந்த புற்றைப் பார்த்தார். அந்த பகுதி ஊர் மக்களை அழைத்து, அம்மன் கனவில் உத்தரவிட்டதை கூறினார்.
அந்த பகுதி விவசாயிகள் நீண்ட நாட்களாக, அந்த புற்றை அகற்றிவிட்டு, அதில் வயல் உண்டாக்க வேண்டும் என்று நினைத்திருந்தனர். வளையல் வியாபாரி சொன்னதும் கடப்பாரை எடுத்து வந்து புற்றை இடித்து அகற்ற தொடங்கினார்கள்.
பாதி புற்று இடிக்கப்பட்ட நிலையில் ``ணங்'' என்று ஒரு சத்தம் கேட்டது. கடப்பாரையில் ரத்தம் காணப்பட்டது.
அதோடு புற்றில் இருந்து ரத்தம் வழிந்தது. அந்த பகுதி முழுவதும் ரத்தம் கசிந்தது. பூமியே ரத்தத்தால் நனைந்து பொனது.
இதைப் பார்த்து அந்த பகுதி மக்களுக்கு கூடுதல் பயம் வந்துவிட்டது. நடுங்கியபடி புற்றை முழுமையாக அகற்றிப் பார்த்தனர். அதற்குள் சுயம்பு ஒன்று இருந்தது. அதன் மேல் பகுதியில் இருந்து தான் ரத்தம் குபுகுபு என்று வந்து கொண்டிருந்தது.
உடனே வளையல் வியாபாரி தன்னிடம் இருந்த மஞ்சளை எடுத்து ரத்தம் பீறிட்டு வந்த இடத்தில் வைத்து அழுத்தினார். மறுநிமிடம் ரத்தம் நின்று போனது.
இதையடுத்து அந்த இடத்தில் சுயம்புவை மூலமாகக் கொண்டு அம்பிகைக்கு கோவில் கட்டப்பட்டது. கோவில் கருவறையில் சுயம்பு மீது வெள்ளி கவசமிடப்பட்டு வணங்கப்பட்டு வருகிறது.
தற்போதும் அந்த கவசத்தை அகற்றிவிட்டு பார்த்தால் சுயம்பு உச்சியில் கடப்பாரை பட்ட காயத்தின் வடுவைக் காணலாம். இப்படி தன்னை வெளிப்படுத்திக் கொண்ட பெரிய பாளையத்து பவானியம்மன், தன்னை நம்பி, நாடி வரும் லட்சோப லட்ச பக்தர்களுக்கு வேண்டும் வரம் களை வாரி, வாரி வழங்கி ஆசீர்வதித்துக் கொண்டிருக்கிறாள்.
- உத்தரவாகினியாக ஓடும் ஆரணி நதியைப் பார்த்தவாறு ஐமுக்தீஸ்வரர் அமர்ந்துள்ளார்.
- பஞ்ச பூதங்கள் சாப விமோசனம் பெற்ற தலம்
பெரியபாளையத்தில் ஆரணியாற்றங்கரையில் வீற்றிருந்து பக்தர்களுக்கு கேட்ட வரம் தரும் பவானி அம்மன் பல நூற்றாண்டுகளுக்கு முன்பே புற்றுக்குள் சுயம்புவாக தோன்றி விட்டாள். அந்த இடத்தை மூலமாக கொண்டு கோவில் ஒவ்வொரு காலக்கட்டத்திலும் வளர்ச்சி பெற்றுள்ளது.
சுமார் 25 ஆண்டுகளுக்கு முன்பு கூட இந்த கோவில் கருவறை மற்றும் ஒரு மண்டபத்துடன் மட்டுமே இருந்தது. பக்தர்கள் எண்ணிக்கை பெருக, பெருக கோவிலும் வளர்ச்சி அடைந்தது. கோவிலை சுற்றி மிக அழகான பிரகார மண்டபம் கட்டி உள்ளனர்.
கோவிலுக்குள் நுழையும் பகுதி இரு பக்கமும் கடைகளால் நிறைந்துள்ளது. அதை கடந்து சென்றால் முதலில் சித்திபுத்தி விநாயகரை வணங்கலாம். பிறகு விநாயகர் சன்னதி பின்புறம் உள்ள மாதங்கி அம்மனை வழிபட வேண்டும்.
அதில் இருந்து பிரகார மண்டபத்துக்கு வந்து விடலாம். முன் பக்க வாசல் வழியாக வந்தால் கருவறையில் பவானி அம்மனின் `பளீர்' தோற்றத்தை கண்டு மனம் உருகி தரிசிக்கலாம்.
இதையடுத்து உள்ள சுற்றுப் பிரகாரத்தில் பவானி அம்மன் உற்சவர் சன்னதி உள்ளது. உற்சவரை வணங்கி விட்டு அருகில் உள்ள வாசல் வழியாக பெரிய பிரகாரத்துக்கு வரலாம்.
அந்த பிரகாரத்தை வலப்புறமாக சுற்றி வருதல் வேண்டும். அந்த பிரகாரப் பாதையில் வள்ளி-தெய்வானை சமேத முருகர், பெருமாள், தாயார், ஆஞ்சநேயர், பரசுராமர் சன்னதிகள் உள்ளன. இந்த சன்னதிகளுக்கும் சென்று தவறாது வழிபட வேண்டும். கோவில் வலது பக்கத்தில் சற்றுத் தொலைவில் புற்று கோவில் உள்ளது. அங்கு சென்றும் வழிபட வேண்டும்.
பிறகு கோவில் வளாகத்தில் அமர்ந்து வழிபாட்டை நிறைவு செய்யலாம்.
கோவில் மூலஸ்தானம் மீதும், முன் பகுதியிலும் கோபுரங்கள் கட்டப்பட்டுள்ளன. என்றாலும் பெரியபாளையத்தம்மன் கோவிலில் பிரமாண்ட ராஜகோபுரம் இருந்தால் பக்தர்கள் மனம் மகிழ்ச்சி பெறும்.
கோவிலுக்குள் நுழையும் பகுதியில் உள்ள நடைபாதை கடைக்காரர்களுக்கு வியாபாரம் பாதிக்காதபடி வேறொரு இடம் கொடுத்து விட்டு அங்கு மிக உயரமான ராஜகோபுரம் கட்டினால் பாளையத்தம்மன் கோவிலுக்கு அது ஒரு முத்திரையாக இருக்கும்.
பஞ்ச பூதங்கள் சாப விமோசனம் பெற்ற தலம்!
சென்னைவாசிகளுக்குப் பெரியபாளையத்தை பற்றித் தெரியாமல் இருக்காது. அருள்மிகு பவானி அம்மன் என்னும் சக்தி வாய்ந்த நாயகி, இங்கே குடி கொண்டு தன் அரசாட்சியை செலுத்தி வருகிறாள்.
மஞ்சளின் மணம் துலங்க... வேப்பிலையின் வாசம் விளங்க... இவள் குடி கொண்டிருக்கும் பெரிய பாளையம் ஆலயத்துக்குள் அடி எடுத்து வைத்தாலே போதும்... அருள் மழை சுரக்கும்.
பெரியபாளையம் பவானி அம்மனைத் தரிசிப்பதற்கு அவள் சந்நிதியை நாடி நித்தமும் வரும் பக்தர்கள் ஏராளம். தன் அருளுக்குப் பாத்திரமாகும் அடியவர்களின் கோரிக்கைகளை இன்முகத்துடன் ஏற்றுக் கொண்டு, அவர்களைக் குறை இல்லாமல் வாழ வைத்து வருகிறாள் பவானி அம்மன்.
சாதாரண நாளில் கூட பக்தர்களின் கூட்டம் இங்கு விழி பிதுங்கும் என்றால், ஆடி மற்றும் தை முதலான விசேஷ காலங்களில் இங்கு கூடும் கூட்டத்துக்கு கேட்கவே வேண்டாம். லட்சக்கணக்கான பக்தர்கள் இங்கு திரண்டு, பவானி அம்மனுக்குத் தங்களது நேர்த்திக் கடனை செலுத்துவார்கள்.
பவானி அம்மன் கோயில் கொண்ட இந்த பெரிய பாளையத்தில் விசேஷமான சிவாலயம் ஒன்றும் இருக்கிறது என்பது இங்கு வந்து செல்லும் பக்தர்கள் எவருக்கும் தெரியாது என்பது துரதிர்ஷ்டமே! இத்தனைக்கும் சென்னையில் இருந்து செல்லும் பக்தர்கள், இந்த சிவாலயத்தை தாண்டித்தான் அம்மனின் ஆலயத்துக்குள் அடி எடுத்து வைக்க முடியும்.
ஆனால், இந்த சிவாலயம் அமைந்திருக்கும் விவரம் பலருக்கும் தெரியாது. ஓரளவு நல்ல பராமரிப்பிலேயே இந்த ஆலயம் இருந்து வருவது, பாராட்டத்தக்கது.
பவானி அம்மன் ஆலயத்துக்கு செல்லும் முன்பாக, பெரியபாளையம் பேருந்து நிலையத்தை ஒட்டி அமைந்துள்ளது அன்னபூர்ணாம்பா சமேத ஐமுக்தீஸ்வரர் ஆலயம். அருமையான சிவாலயம். இந்த தலத்து இறைவனை புராணங்கள் போற்றிப் புகழ்கின்றன. பஞ்ச பூதங்கள் தங்கள் சாபம் நீங்குவதற்காக வணங்கித் துதித்துள்ளனர்.
புண்ணிய நதியாம் ஆரணி நதிக்கு அந்த பக்கம் அருள்மிகு பவானி அம்மன் திருக்கோயில், இந்த பக்கம் ஐமுக்தீஸ்வரர் திருக்கோயில்.
சிறியது என்றும் சொல்ல முடியாது. பெரியது என்றும் சொல்ல முடியாது. அந்த அளவுக்கு கச்சிதமான ஆலயம். ராஜகோபுரம், விமானங்கள், பிராகாரங்கள், ஏராளமான பரிவார தெய்வங்கள் என்று ஐமுக்தீஸ்வரர் ஆலயம் அருமையாக காட்சி தருகிறது. மேற்குப் பார்த்த சிவ தலம்.
உத்தரவாகினியாக ஓடும் ஆரணி நதியைப் பார்த்தவாறு ஐமுக்தீஸ்வரர் அமர்ந்துள்ளார். ஆயினும், ஆலயத்துக்கான பிரதான நுழைவாயில் மெயின் ரோடு அமைந்திருக்கும் கிழக்குப் பக்கம்தான் இருக்கிறது. தவிர, வடக்குப் பக்கமும் ஒரு வாயில் உள்ளது. பாதுகாப்பு மற்றும் சுகாதாரம் கருதி விசேஷ நாட்கள் தவிர, மற்ற தினங்களில் இந்த வாயிலை மூடியே வைத்திருக்கிறார்கள்.
இந்த ஐமுக்தீஸ்வரர் லிங்க வடிவத்தை மாபெரும் தவ சிரேஷ்டரான வால்மீகி முனிவர், பிரதிஷ்டை செய்து வணங்கியதாகத் தல புராணம் கூறுகிறது. பாரத தேசமெங்கும் சென்று இறை வழிபாடு செய்து வந்த வால்மீகி முனிவர், ஒரு முறை இந்த ஆரணி நதிக் கரைக்கும் வந்தார்.
பொங்கிப் பிரவாகிக்கும் நதியின் அழகிலும், இதன் கரை அமைந்துள்ள அமைப்பிலும் மயங்கிய முனிவர், இங்கேயே சில காலம் தங்கி, சிவனை நினைந்து தவம் புரிந்தார். மாபெரும் முனியின் மாதவத்துக்கு இரங்கிய எம்பெருமானார் பார்வதிதேவியுடன் அவருக்குக் காட்சி தந்து அருளினார்.
வால்மீகி முனிவர் மகிழ்ந்தது. 'யாம் பெற்ற இந்த இன்பத்தை இந்த வையகமும் பெற வேண்டும் இறைவா... எனவே, தாங்கள் இங்கேயே உறைய வேண்டும்'' என்று கோரிக்கை வைத்தார்.
எம்பெருமானும் மனம் கனிந்தார். லிங்க சொரூபமாக இதே தலத்தில் குடி கொண்டார். இங்கே ஓர் ஆலயம் எழுப்பி, தினமும் மூன்று காலம் பூஜைகள் நடத்தி வழிபட்டார் வால்மீகி. முனிவர் தங்கி இருந்த இந்த இடத்துக்கு, 'வால்மீகி ஆசிரமம்' என்ற பெயரும் இருப்பதாக தல புராணம் சொல்கிறது.
தவிர, பஞ்சபூதங்களான ப்ருத்வி (மண்), நீர், நெருப்பு, காற்று, ஆகாயம் ஆகிய ஐந்துக்கும் அதிபதியான தேவதைகள் தங்களது சாபம் தீர்வதற்காக இந்த இறைவனிடம் வந்ததாக தல புராணம் தெரிவிக்கிறது. இந்த ஐந்து பேருக்கும் சாபம் நீக்கி, முக்தி அளித்ததால்தான் 'ஐமுக்தீஸ்வரர்' என இறைவன் அழைக்கப்பட்டாராம்.
மண், நீர், நெருப்பு, காற்று, ஆகாயம் ஆகிய பஞ்சபூதங்களும் சிவபெருமானை நேரில் கண்டு வணங்குவதற்காக ஒரு முறை கயிலாயம் சென்றனர். அப்போது, கயிலயங்கிரியைக் காவல் காத்து வரும் நந்திதேவரின் முறையான அனுமதி பெறாமலேயே ஐந்து பேரும் உள்ளே நுழைந்து விட்டார்கள்.
நந்திதேவரின் கோபத்துக்கு ஆளான தங்களுக்கு உள்ளே சாபம் காத்திருக்கிறது என்பது தெரியாமலேயே கயிலைவாசனின் முன்னால் போய் பயபக்தியுடன் நின்றார்கள்.
அது- கயிலை வாசன் கடும் தவத்தில் இருக்கும் நேரம்... அந்த வேளையில் எவரும் அவரைத் தொந்தரவு செய்யக் கூடாது. இதை மீறினால் அவ்வளவுதான்! பாவம், பஞ்சபூதங்களுக்கு இந்த விவரம் தெரியாது போலும்!
''இறைவா... கயிலைவாசா... நீலகண்டா... எம் பெருமானே... உன்னைத் துதித்து உன் அருள் பெற வேண்டியே, பஞ்சபூதங்களாகிய நாங்கள் இப்போது இங்கே வந்துள்ளோம். எங்களுக்கு இரங்கி, அருள் புரிந்து எங்களைக் காத்தருள்வாய் காலகண்டா'' என்று தொழுதார்கள்.
அருளை எதிர்பார்த்துச் சென்றவர்களின் வாழ்வில் இருள்தான் படர்ந்தது. சில விநாடிகள் கழித்துக் கயிலை வாசன் கண் திறக்கும்போது, அந்த உக்கிரத்தை பஞ்சபூதங்களால் தாங்கிக் கொள்ள முடியவில்லை. இறைவனின் கோப முகத்தைப் பார்த்து ஏகத்துக்கும் நடுங்கி விட்டனர். தாங்கள் ஏதோ தவறு இழைத்து விட்டோம் என்பது அவர்களுக்குப் புரிந்தது.
இறைவன் அவர்களைப் பார்த் துத் திருவாய் மலர்ந்தருளினார்: ''பஞ்சபூதங்களே... தவறு புரிந்து விட்டீர்கள். நந்திதேவரை அலட் சியம் செய்து, அவரின் அனுமதி இல்லாமல் என்னைத் தரிசிக்க வந்ததே தவறு.
என்னைத் தரிசிக்க வேண்டிய காலம் அல்லாத வேளையில் உள்ளே புகுந்து என் பணிக்கு இடையூறு விளைவித்து விட்டீர்கள். அனுமதி இல்லாமல் குரங்குகள் போல் கயிலாயத்தில் நுழைந்த நீங்கள் குரங்கு வடிவிலேயே பூலோகத்தில் அலைவீர்கள்'' என்று சபித்தார்.
பஞ்சபூதங்கள் அதிர்ந்து போனார்கள். பிறகு, அவர்கள் அனைவரும் ஒட்டுமொத்த குரலில், ''இறைவா... எங்களின் தவறை நாங்கள் உணர்ந்து விட்டோம். நந்தி தேவரின் அனுமதி இல்லாமல் முறை தவறிய வேளையில் கயிலாயத்துக்குள் புகுந்தது எங்களின் பிழை.
இதற்காக வருந்துகிறோம். எங்களின் விதிப்படி தாங்கள் கொடுத்த சாபத்தை ஏற்றுக் கொள்கிறோம். பூலோகத்தில் குரங்குகளாகவே திரிகிறோம்.
என்றாலும், இந்த சாபம் எங்களுக்குச் சற்று கடுமையாக இருக்கிறது. எனவே, குறுகிய காலத்திலேயே நாங்கள் பழைய உருவை அடைய ஒரு விமோசனத்தையும் தந்தால் நன்றி உடையவர்களாக இருப்போம்'' என்றனர். பஞ்சபூதங்களின் பரிதவிப்பில் மனம் இரங்கினார் இறைவனார்.
'தொண்டை நாட்டிலே உத்தர வாகினியாக ஆரணி நதி பாயும் பிரதேசத்தில், வால்மீகி முனிவர் பூஜித்த சுயம்பு லிங்க வடிவம் தாங்கிய திருக்கோயில் ஒன்று உள்ளது. அங்கு வந்து என்னை வழிபடுங்கள். சாபம் நீங்கும்!'' என்றருளினார்.
சாப விமோசனம் பெற்ற திருப்தியில் கயிலாயத்தை விட்டுப் புறப்பட்ட பஞ்சபூதங்கள் பூலோகத்துக்கு வந்தனர். இறைவனார் அருளியபடி, ஆரணி நதிக் கரை வந்து, அங்கு வால்மீகி முனிவர் வணங்கிய சுயம்பு வடிவத்தை வணங்கி, சாபம் நீங்கப் பெற்றனர்.
பஞ்சபூதங்கள் இங்கு குரங்கு வடிவில் தங்கி இருந்து, இறைவனை வழிபட்டு சாபத்தைப் போக்கிக் கொண்ட நிகழ்வை விளக்கும் சுதைச் சிற்பம் ஒன்று ஆலயத்துக்குள் காணப்படுகிறது. அதாவது, லிங்க பாணத்தில் நெற்றிப் பகுதியில் ஐந்து குரங்குகள் காணப்படுகின்றன.
இதே நிகழ்வை விளக்கும் விதமாக ஒரு லிங்க வடிவமும் (சிலா) ஆலயத்துக்குள், அம்பாள் சந்நிதிக்கு அருகில் தரிசனம் தருகிறது. பல்லவ ராஜாக்கள் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் இந்த ஆலயத்தை கட்டி யதாகச் செய்தி. இதைக் கடந்ததும் கொடி மரம், பலிபீடம், நந்திதேவர் மண்டபம். கடந்து உள்ளே போனால் ஐமுக்தீஸ்வரர் மற்றும் அன்ன பூர்ணாம்பாவை தரிசிக்கலாம்.
பிராகார வலத்தில், ஐயப்பன் சந்நிதி, பலிபீடம்- மயில் வாகனத்துடன் கூடிய வள்ளி- தெய்வானை சமேத ஆறுமுகனார் சந்நிதி, சனீஸ்வரர் சந்நிதி, சண்டிகேஸ்வரர் சந்நிதி, யாகசாலை மண்டபம்... இப்படி நீள்கிறது பிராகார வலம். தவிர பிராகார வலத்தின்போது ஐமுக்தீஸ்வரரின் கருவறை கோஷ்டத்தில் துர்கை, பிரம்மா, மகாவிஷ்ணு, தட்சிணாமூர்த்தி, விநாயகர் ஆகியோரை தரிசிக்கலாம். இங்கு, தல விருட்சமான வில்வத்தையும் காணலாம்.
இறைவனுக்கும் இறைவிக்கும் அடுத்தடுத்து சந்நிதிகள். மேற்குப் பார்த்தவை. இரு தெய்வங்களுக்கும் பொதுவான மகா மண்டபம். இங்கே ஆலய வாகனங்கள் பராமரிக்கப்பட்டு வருகின்றன. மூஞ்சூறு, மயில், ரிஷபம், பிரதோஷ ரிஷபம் என்று வாகனங்கள் பளிச் சென்று காணப்படுகின்றன.
ஈசன் சந்நிதிக்கு நுழைவதற்கு முன் இடப் பக்கமாக ஒரு மண்டபத்தில் உற்சவர் விக்கிரகங்கள் வைக்கப்பட்டுள்ளன. சிவாலயத்துக்கு உண்டான அனைத்து விக்கிரகங்களும் இங்கு தரிசனம் தருகின்றன.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்