search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Periyakatupakkam"

    • இறைவனை பல வழிகளில் நாம் தரிசிக்க முடியும். அதில் ஒரு வழியே பஜனை.
    • நாம சங்கீர்த்தனம் வாயிலாக இறைவனை வழிபடுவார்கள்.

    முந்தைய காலங்களில் கிராமப் புறங்களில் ஒரு சிறிய கோவிலை அமைத்து, அதில் ராமபிரான் அல்லது கண்ண பிரான் திரு உருவப்படங்களை வைத்து வழிபடும் வழக்கம் இருந்தது. இத்தகைய கோவில்கள் 'பஜனைக் கோவில்கள்' என்று அழைக்கப்பட்டன.

    இறைவனை பல வழிகளில் நாம் தரிசிக்க முடியும். அதில் ஒரு வழியே பஜனை. நமது முன்னோர்கள் ஒன்றாய்க் கூடி பஜனைப் பாடல்களை இசையோடு பாடுவதன் மூலம் இறைவனை தரிசிக்க முடியும் என்ற நம்பிக்கையில், பல ஊர்களிலும் பஜனை மடங்களை நிறுவினர்.

    காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் உள்ள கிராமம் மற்றும் நகர்ப் புறங்களில் பஜனைக் கோவில்கள் இருப்பதைக் காணலாம். இந்த பஜனைக் கோவில்களில் சனிக்கிழமை மற்றும் ஏகாதசி, மார்கழி மாதங்களில் பக்தர்கள் ஒன்று கூடி பஜனை இசைத்து நாம சங்கீர்த்தனம் வாயிலாக இறைவனை வழிபடுவார்கள்.

    இந்த பஜனை கோவில்கள் நாளடைவில் விரிவுபடுத்தப்பட்டு, கருவறையில் ராமபிரான், ருக்மணி - சத்யபாமா சமேத வேணுகோபாலர் ஆகியோரது சிலைகளை பிரதிஷ்டை செய்து முழுமையாக ஆலயமாக மாற்றப்பட்டன.

    அப்படிப்பட்ட ஒரு கோவில்தான் செங்கல்பட்டு மாவட்டம் திருக்கழுக்குன்றம் தாலுகா பெரியகாட்டுப்பாக்கம் என்ற கிராமத்தில் அமைந்துள்ள ருக்மணி - சத்யபாமா சமேத வேணுகோபால சுவாமி திருக்கோவில்.

    சுமார் முன்னூறு ஆண்டுகளுக்கு முற்பட்டதாகக் கருதப்படும் இந்த பஜனைக் கோவிலில், நவநீதக் கண்ணன் ஆராதிக்கப்பட்டு வந்துள்ளார். 1904-ம் ஆண்டு முதல் தற்போது வரை தொடர்ந்து ஒவ்வொரு மாதமும் ஏகாதசி தினத்தில் சிறப்பு திருமஞ்சனம் நடைபெற்று வருகிறது.

    நவநீதக்கண்ணன் பஜனைக் கோவிலாகத் திகழ்ந்த இத் தலத்தில், முதலில் ருக்மணி - சத்யபாமா சமேத வேணு கோபால சுவாமியை பிரதிஷ்டை செய்த மக்கள், பின்னர் பல்வேறு திருப்பணி மூலமாக கருடாழ்வார் சன்னிதி, ஆஞ்சநேயர் சன்னிதி, சக்கரத்தாழ்வார் சன்னிதி, காளிங்க நர்த்தனர் சன்னிதி, தும்பிக்கை ஆழ்வார் சன்னிதி ஆகிய சன்னிதிகளையும் அமைத்தனர்.

    கோவிலுக்குள் நுழைந்ததும் ஒரு சிறிய சன்னிதியில் சிறிய திருவடியான பக்த ஆஞ்சநேயர் அருள்பாலிக்கிறார். தொடர்ந்து பலிபீடமும், அதற்குப் பின்னால் பெரிய திருவடியான கருடாழ்வார் சன்னிதியும் உள்ளன.

    கருவறையின் முன்னால் சுதைச்சிற்ப வடிவில் துவாரபாலகர்கள் இருபுறமும் காட்சி தருகிறார்கள். கருவறைக்குள் ருக்மணி - சத்யபாமா சமேத வேணுகோபால சுவாமி நின்ற திருக்கோலத்தில் அருள்புரிகிறார்.

    வேணுகோபால சுவாமி புல்லாங்குழலை தனது திருக்கரங்களில் ஏந்தியுள்ளார். உற்சவர்களாக ருக்மணி - சத்யபாமா சமேத வேணுகோபால சுவாமி, ஆஞ்சநேயர், ஆண்டாள் மற்றும் நவநீதக்கண்ணன் இருக்கிறார்கள்.

    இத்தலத்தில் பொங்கல் பண்டிகை, மாட்டுப்பொங்கல் அன்று பரிவேட்டை உற்சவம், கிருஷ்ணஜெயந்தி, ராமநவமி, அனுமன் ஜெயந்தி, நரசிம்ம ஜெயந்தி, திருவாடிப்பூரம், வைகுண்ட ஏகாதசி, புரட்டாசி மூன்றாவது வாரம் சிறப்பு வழிபாடுகள், விஷேச சிறப்பு கல்யாண உற்சவம் முதலானவை விமரிசையாக நடை பெறுகின்றன.

    ஒவ்வொரு மாதமும் வளர்பிறை ஏகாதசி மற்றும் தேய்பிறை ஏகாதசி அன்று தவறாமல் அபிஷேக ஆராதனைகள் நடைபெறுகின்றன.

    சந்தான பாக்கியம் அளிக்கும் தலமாக விளங்கும் இத்தலத்திற்கு வந்து, இத்தல இறைவனை வழிபட்டால் குழந்தைப் பேறு நிச்சயம் கிடைக்கும் என்கிறார்கள்.

    மன அமைதியை நாடுவோர் இத்தலத்திற்கு ஒரு முறை வந்து வேணுகோபால சுவாமியை மனம் குளிர தரிசித்தால் நம் மனம் முழுவதும் அமைதி பரவுவது நிச்சயம். ஒரு கால பூஜை நடைபெறும் இவ்வாலயம் தினமும் காலை 8 மணி முதல் 9 மணி வரை ஒரு மணிநேரம் திறந்திருக்கும்.

    அமைவிடம்

    திருக்கழுக்குன்றத்தில் இருந்து 10 கிலோமீட்டர் தொலைவில் வீராபுரம் - விட்டிலாபுரம் சாலையில் அமைந்துள்ளது, பெரியகாட்டுப்பாக்கம் திருத்தலம்.

    ×