search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Perungalathur"

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • சீனிவாசராகவன் தெரு மற்றும் தாம்பரம் கிழக்கு புறவழிச்சாலை என 4 வழித்தடங்களுக்கும் செல்லும் வகையில் அமைக்கப்பட்டு வருகிறது.
    • அமைச்சர் தா.மோ.அன்பரசன், ரிப்பன் வெட்டி பொதுமக்கள் பயன்பாட்டுக்கு திறந்து வைத்தார்.

    தாம்பரம்:

    சென்னை தாம்பரம் அடுத்த பெருங்களத்தூர் ரெயில் நிலையம் அருகில் போக்குவரத்து நெரிசலை குறைக்க ரூ.234 கோடியில் மேம்பாலம் அமைக்கப்பட்டு வருகிறது. நீள்வட்ட சுற்றுப்பாதையுடன் கூடிய இந்த மேம்பாலம் சென்னை-செங்கல்பட்டு, செங்கல்பட்டு-சென்னை, மேலும் சீனிவாசராகவன் தெரு மற்றும் தாம்பரம் கிழக்கு புறவழிச்சாலை என 4 வழித்தடங்களுக்கும் செல்லும் வகையில் அமைக்கப்பட்டு வருகிறது.

    இதில் செங்கல்பட்டு - சென்னை மற்றும் சீனிவாசராகவன் தெருவுக்கு செல்லும் பாலம் ஏற்கனவே பொதுமக்கள் பயன்பாட்டுக்கு திறந்து வைக்கப்பட்ட நிலையில், சென்னை - செங்கல்பட்டு வழித்தட மேம்பாலத்தை டி.ஆர்.பாலு எம்பி, செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் அருண்ராஜ் ஆகியோர் முன்னிலையில் அமைச்சர் தா.மோ.அன்பரசன், ரிப்பன் வெட்டி பொதுமக்கள் பயன்பாட்டுக்கு திறந்து வைத்தார்.

    இதில் எம்எல்ஏக்கள் எஸ்.ஆர்.ராஜா, இ.கருணாநிதி, வரலட்சுமி மதுசூதனன், தாம்பரம் மாநகராட்சி மேயர் வசந்தகுமாரி, கமிஷனர் பாலச்சந்தர், துணை மேயர் கோ.காமராஜ், மண்டல குழு தலைவர்கள் டி.காமராஜ், எஸ்.இந்திரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

    • பெருங்களத்தூரில் கடும் வாகன நெரிசல் ஏற்பட்டு வருகிறது.
    • அனைத்து துறையினரின் ஒருங்கிணைப்பு இல்லாததே இதற்கு காரணம்.

    தாம்பரம்:

    சென்னையின் புறநகர் பகுதியான பெருங்களத்தூர் மற்றும் அதனை சுற்றி உள்ள பகுதிகள் அசுர வளர்ச்சி பெற்று உள்ளன. இதனால் இங்குள்ள சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலை வாகன போக்கு வரத்திற்கு முக்கியமான சாலையாக உள்ளது.

    தாம்பரம் மற்றும் அதனை சுற்றி உள்ள புறநகர் பகுதிகளில் வாகனங்களின் எண்ணிக்கை பல மடங்கு உயர்ந்துவிட்டன. இதனால் முக்கிய சந்திப்பு இடமாக உள்ள பெருங்களத்தூரில் கடும் வாகன நெரிசல் ஏற்பட்டு வருகிறது.

    போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில் பெருங்களத்தூரில் மேம்பாலம் கட்டுவதற்கு நெடுஞ்சாலை துறையும், ரெயில்வே நிர்வாகமும் இணைந்து திட்டமிட்டது.

    அதன்படி பெருங்களத்தூர் ரெயில்நிலையத்தின் இரு பக்கங்களிலும் இருந்த, எல்.சி.32, எல்.சி.33 ரெயில்வே கேட்டுகளை, நிரந்தரமாக மூடிவிட்டு, அந்த இடத்தில் ரவுண்டானாவுடன் கூடிய மேம்பாலம் அமைக்க திட்டமிடப்பட்டது.

    இதற்காக முதலில் கடந்த 2000-ம் ஆண்டில் ரூ.86 கோடி ஒதுக்கப்பட்டு ஆய்வு பணிகள் நடந்தன. நிலங்களை கையகப்படுத்துவது உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகளால் இந்த பணி ஆரம்ப கட்டத்திலேயே இருந்தது.

    பின்னர் கடந்த 2018-ம் ஆண்டில் மீண்டும் மேம்பாலப் பணி மறுமதிப்பீடு செய்யப்பட்டு, ரூ.236 கோடியில் புதிதாக திட்டம் உருவாக்கப்பட்டது.

    இதைத்தொடர்ந்து பெருங்களத்தூரில் முட்டை வடிவில் ரவுண்டானாவுடன் கூடிய பிரமாண்டமான மேம்பாலம் வடிவமைக்கப்பட்டு பணிகள் தொடங்கப்பட்டது.

    இந்த மேம்பாலம் பெருங்க ளத்தூர், பீர்க்கன்கரணை, சதானந்தபுரம், நெடுங்குன்றம், மற்றும் வண்டலூர், தாம்பரம் ஆகிய பகுதிகளை இணைக்கும் விதத்தில் அமைக்கப்பட்டு வருகிறது.

    செங்கல்பட்டு-தாம்பரம் மார்க்கமாக, வண்டலூரில் இருந்து பீர்க்கன்கரணை ஏரிக்கரை வரையில், மேம்பாலப்பணி முடிக்கப்பட்டு அந்த பாதை கடந்த 2022-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் போக்குவரத்துக்கு திறந்து விடப்பட்டது. இதனால் பெருங்களத்தூரில் போக்குவரத்து நெரிசல் ஓரளவு குறைந்தது.

    இதன் தொடர்ச்சியாக மேம்பாலத்தின் மேற்குப் பகுதியான, ெரயில்வே பாதையை கடந்து, சீனிவாச நகர், புதுப்பெருங்களத்தூர் வழியாக, காமராஜ் நெடுஞ்சாலையில் இணையும், மேம்பால பணி தீவிரப்படுத்தப்பட்டு முடிக்கப்பட்டது. அந்த மேம்பாலப்பாதை கடந்த ஆண்டு(2023) ஜூன் மாதம் போக்குவரத்து பயன்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டது.

    மேம்பாலத்தின் 3-வது கட்டமான தாம்பரம்-செங்கல்பட்டு மார்க்கத்தில் உள்ள மேம்பால பணி கடந்த ஆண்டு டிசம்பர் மாதத்திற்குள் முடிந்து செயல்பாட்டுக்கு வந்து விடும் என்று தெரிவிக்கப்பட்டது. ஆனாலும் பல்வேறு பணிகள் தாமதமானது.

    தற்போது தாம்பரம்-செங்கல்பட்டு மார்க்கமான மேம்பால ப்பணியும் முடிந்து இறுதி கட்டத்தில் உள்ளது. எனவே இந்த பாதை அடுத்த மாதம் (ஆகஸ்டு) மாதத்தில் 2 வாரத்தில் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    இதற்கிடையே பெருங்களத்தூர் மேம்பாலத்தில் கடைசியாக உள்ள 4-வது கட்டமான கிழக்குப் பகுதியில் இருந்து சதானந்தபுரம், நெடுங்குன்றம் பகுதியை இணைக்கும் மேம்பால பணிகள் அமைப்பதில்தான் சிக்கல் ஏற்பட்டு உள்ளது. இதில் வனத்துறை நிலம் குறுக்கிடுவதால், பணிகள் தாமதம் அடைந்துள்ளது.

    மேலும் அப்பகுதியில் உள்ள பெருங்களத்தூர் துணை மின் நிலையம் தற்போது செயல்பாட்டில் உள்ளது. அந்தத் துணை மின் நிலையத்தை முழுமையாக இடமாற்றம் செய்தால் தான் மேம்பாலப்பணியை தொடர முடியும் என்ற சிக்கலும் ஏற்பட்டு உள்ளது.

    துணை மின்நிலை யத்திற்கான மாற்று இடம் அமைவதில் பிரச்சி னைகள் ஏற்பட்டு உள்ளதால் மேம்பால பணிகள் முடங்கிப் போய் நிற்கிறது.

    இப்போது புது பெருங்களத்தூர் நேதாஜி சாலையில், மின்வாரிய துணை மின் நிலையத்தை அமைப்பதற்கு தேவையான நிலத்தை ஒதுக்கீடு செய்து இருப்பதாக தெரிகிறது.

    இதைப்போல் மின்வாரிய அலுவலகத்தையும் முழுவதுமாக இடமாற்றம் செய்யவும் மற்றும் கட்டுமான பணிகளுக்காக மின்வாரியத்திற்கு நிதியும் ஒதுக்கப்பட்டு உள்ளது.

    இதையடுத்து இந்த பணிக்கான டெண்டர் விடப்பட்டு, பணிகள் விரைவில் தொடங்க இருப்பதாக கூறப்படுகிறது.

    பெருங்களத்தூர் துணை மின் நிலைய அலுவலகம் வருகிற 8 மாதத்திற்குள் முழுமையாக இடமாற்றம் செய்யப்பட்டு விடும் என்று அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.

    இதன் பின்னர் சதானந்தபுரம், நெடுங்குன்றம் பகுதியை இணைக்கும் மேம்பால பணிகள் வேகமெடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எனவே பெருங்களத்தூர் மேம்பாலம் முழுமையாக செயல்பாட்டுக்கு வர இன்னும் 2 ஆண்டுகள் வரை காத்திருக்க வேண்டும் என்றே தெரிகிறது.

    இதுகுறித்து நெடுஞ்சாலைத்துறை அதிகாரி ஒருவர் கூறும்போது, `பெருங்களத்தூர் மேம்பாலத்தின் இறுதிக்கட்டமான மேற்குப் பகுதியில் சதானந்தபுரம், நெடுங்குன்றம் ஆகிய பகுதிகளை இணைக்கும் மேம்பால பணி, தற்காலிகமாக தடைப்பட்டு நிற்கிறது.

    வனத்துறை நிலம் குறுக்கீடு, துணை மின்நிலையம் இடமாற்றம் அதற்கு காரணமாக இருந்தது. அதில் துணை மின் நிலையம் இடமாற்றப் பணிகள், டெண்டர் விடப்பட்டு வேலை தொடங்கி விட்டது. துணை மின் நிலையம் முழுமையாக இடமாற்றம் செய்யப்பட்டதும் பணிகள் தொடங்கும்.

    இதைப்போல் வனத்துறையிடம் நிலம் பெறுவதில், மாநில மத்திய அரசுகள் இடையே பேச்சுவார்த்தைகள் நடந்து முடியும் நிலையில் உள்ளன. மேம்பால பணியை விரைந்து முடித்து முழுவதும் செயல்பாட்டுக்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது' என்றார்.

    பொதுமக்கள் கூறும்போது, `பெருங்களத்தூரில் 20 ஆண்டுகளுக்கும் மேலாக மேம்பாலம் கட்டும் பணி நடந்து கொண்டு இருக்கிறது. அனைத்து துறையினரின் ஒருங்கிணைப்பு இல்லாததே இதற்கு காரணம். மேம்பாலத்தின் 4 கட்ட பணிகளும் முடிந்து மேம்பாலம் முழுமையாக செயல்பாட்டுக்கு வந்தால்தான் போக்குவரத்து நெரிசலுக்கு நிரந்தர தீர்வு ஏற்பட்டு முழுமையான பலன் கிடைக்கும்' என்றனர்.

    • 5 நாட்கள் விடுமுறை இன்றுடன் முடிந்த நிலையில் மக்கள் சென்னை திரும்பி வருகின்றனர்.
    • மதுராந்தகம் அருகே ஆத்தூர் சுங்கச்சாவடியில் வாகனங்கள் திரண்டுள்ளன.

    பொங்கல் பண்டிகை முன்னிட்டு தமிழகத்தில் மூன்று நாட்கள் அரசு விடுமுறை அறிவிக்கப்பட்டது.

    ஏற்கனவே சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமையும் விடுமுறை என்பதால், மொத்தம் 5 நாட்கள் தொடர் விடுமுறை இருந்தது.

    இதனால், வெளி மாவட்ட மற்றும் வெளி மாநில மக்கள் ஆகியோர் சொந்த ஊர்களுக்கு கடந்த வெள்ளி மற்றும் சனிக்கிழமைகளில் படையெடுத்தனர்.

    5 நாட்கள் விடுமுறை இன்றுடன் முடிந்த நிலையில் மக்கள் சென்னை திரும்பி வருகின்றனர்.

    சிங்கப்பெருமாள் கோவில் அருகே ஜிஎஸ்டி சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.

    மேலும், மதுராந்தகம் அருகே ஆத்தூர் சுங்கச்சாவடியில் வாகனங்கள் திரண்டுள்ளன.

    கூடுதல் கவுண்டர்கள் அமைக்கப்பட்டாலும், சூழலுக்கு ஏற்ப வாகனங்கள் இலவசமாக அனுமதிக்கப்படுவதால் தற்போது வரை போக்குவரத்து நெரிசல் கடுமையாக இல்லை எனவும் கூறப்படுகிறது.

    • படுகாயம் அடைந்த தமிழ்செல்வியை மீட்டு தாம்பரத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை.
    • தாம்பரம் ரெயில்வே போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

    செங்கல்பட்டு சுந்தரமூர்த்தி வினாயகர் கோவில் தெருவை சேர்ந்தவர் மூர்த்தி. இவரது பேரனுக்கு மொட்டை அடிக்கும் நிகழ்ச்சிக்கு தேவையான பொருட்களை வாங்குவதற்காக சுந்தரமூர்த்தி நேற்று இரவு வெளியில் சென்றார்.

    பின்னர் பொருட்களை வாங்கிக்கொண்டு மூர்த்தி, அவரது மனைவி தமிழ்செல்வி, மற்றும் மகள் ஆகியோர் பஸ்சில் வீடு திரும்பினர். போக்குவரத்து நெரிசல் காரணமாக பெருங்களத்தூர் ரெயில் நிலையம் அருகே இறங்கி 3 பேரும் ரெயிலில் செல்ல முடிவு செய்தனர்.

    இதற்காக பெருங்களத்தூர் ரெயில் நிலையத்துக்கு சென்றனர். பின்னர் தமிழ் செல்வியை 1- வது நடைமேடையில் நிற்குமாறு கூறிவிட்டு மூர்த்தியும் அவரது மகளும் டிக்கெட் எடுப்பதற்காக சென்றனர். அப்போது தமிழ்செல்வி நின்று கொண்டிருந்த 1- வது நடை மேடையில் மர்ம நபர் ஒருவர் சுற்றிக்கொண்டிருந்தார்.

    அவர் திடீரென தமிழ்செல்வியின் மீது தாக்குதலில் ஈடுபட்டார். தான் கையில் வைத்திருந்த கத்தி போன்ற கூர்மையான ஆயுதத்தால் குத்தினார். இதில் தமிழ்செல்வியின் வலது கையில் கத்தி குத்து விழுந்தது. இதில் காயம் அடைந்த அவர் வலியால் அலறி துடித்தார். உடனடியாக அங்கிருந்தவர்கள் ஓடி வந்தனர். அதற்குள் மர்ம நபர் அங்கிருந்து ஓடி விட்டார்.

    பின்னர் படுகாயம் அடைந்த தமிழ்செல்வியை மீட்டு தாம்பரத்தில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். இது தொடர்பாக தாம்பரம் ரெயில்வே போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

    இந்நிலையில், பெருங்களத்தூர் ரெயில் நிலையத்தில் தமிழ்செல்வியை கத்தியால் குத்திவிட்டு தப்பிய நபரை போலீசார் கைது செய்துள்ளனர்.

    சுப்பிரமணியன் என்பவரை தாம்பரம் ரெயில்வே போலீசார் கைது செய்து நடவடிக்கை எடுத்துள்ளனர். கத்திகுத்து தொடர்பாக போலீசார் மேற்கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.

    பெருங்களத்தூர் அருகே குடியிருப்புக்குள் சுற்றிய 5 அடிநீள முதலையை இளைஞர்கள் பிடித்து வனத்துறையிடம் ஒப்படைத்தனர்

    தாம்பரம்:

    பெருங்களத்தூர் அருகே உள்ள ஆலப்பாக்கம் பகுதியில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு குட்டையில் இருந்து சுமார் ஐந்து அடி நீளமுள்ள முதலை ஒன்று சாலையை கடந்து செல்வதை அப்பகுதி மக்கள் பார்த்தனர்.

    இதனால் பொதுமக்கள் அச்சத்தில் இருந்தனர். முதலையை உடனடியாக பிடிக்க வேண்டும் என்று பொது மக்கள் கோரிக்கை விடுத்து வந்தனர்.

    இந்தநிலையில் நேற்று நள்ளிரவு மீண்டும் அதே பகுதியில் முதலை ஒன்று சாலையை கடந்து குடியிருப்பு பகுதிகளை நோக்கி சென்றது. இதனை கண்ட அப்பகுதி வாலிபர்கள் போலீசுக்கும், வனத் துறையினருக்கும் தகவல் தெரிவித்தனர்.

    ஆனால் அவர்கள் வருவதற்கு தாமதம் ஏற்பட்டது. இதையடுத்து வாலிபர்களே ஒன்று சேர்ந்து சுமார் ஒரு மணி நேரம் போராடி முதலையை பிடித்தனர். பின்னர் கயிற்றால் முதலையின் வாய் மற்றும் கால் பகுதியிகளை கட்டி வைத்தனர். பிடிபட்ட முதலை சுமார் 5 அடி நீளம் இருந்தது.

    இதுபற்றி அறிந்ததும் அப்பகுதி மக்கள் ஏராளமானோர் அங்கு திரண்டனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. முதலை பிடிபட்டது பற்றி வன விலங்குகள் மீட்பு குழுவினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

    அவர்களும், வனத்துறையினரும் விரைந்து வந்து முதலையை மீட்டு எடுத்து சென்றனர்.

    வண்டலூர் உயிரியல் பூங்காவில் சிறிய குட்டிகளாக இருக்கும் முதலைகளை பறவைகள் உணவுக்காக அங்கிருந்து தூக்கி வந்து விடுகின்றன. அப்படி வரும் முதலைகள் தவறி நீர்நிலைகளில் விழுந்து அங்கேயே வளர்ந்து விடுகிறது.

    ஆண்டுதோறும் வெயில் காலங்களில் ஏரி, குளங்களில் நீர் வற்றுவதால் முதலைகள் அங்கிருந்து வெளியேறி குடியிருப்பு பகுதிகளில் உலா வருகிறது.

    இப்போது வெயிலின் தாக்கத்தால் குட்டையில் உள்ள நீர் வற்றி வருவதால் முதலைகள் ஊருக்குள் வர ஆரம்பித்துள்ளது. இதே போல் பல முதலைகள் குட்டைகளில் உள்ளன. அவற்றை வனதுறையினர் உடனடியாக பிடிக்க வேண்டும்.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.

    பெருங்களத்தூர் அருகே நெடுங்குன்றம் ஏரியில் முதலைகள் நடமாடுவதால் அந்த பகுதியை சுற்றியுள்ள பொதுமக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.

    தாம்பரம்:

    சென்னை பெருங்களத்தூர் அருகே நெடுங்குன்றம் ஏரி உள்ளது. நேற்று காலை ஆடு,மாடு மேய்ப்பவர்களும், துணி துவைப்பவர்களும் ஏரிக்கு அருகில் சென்றனர்.

    அப்போது ஏரியில் 6 அடி நீளமுள்ள 5 முதலைகள் மிதந்து கொண்டிருந்தன. இதைப்பார்த்து அவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். இதுபற்றி வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.

    இதையடுத்து இன்று வனத் துறையினர் ஏரிப்பகுதிக்கு விரைந்து சென்றனர். பைனா குலர் மூலம் ஏரியில் முதலை நடமாட்டத்தை கண்காணித்தனர்.

    வெயில் காலம் தொடங்கும் நேரத்தில் தண்ணீர் வற்றுவதால் ஏரியில் முதலை தென்படுகிறது.

    வண்டலூர் பூங்காவில் முதலை பண்ணையும் உள்ளது. அங்குள்ள சிறிய முதலை குட்டிகளை தூக்கிச் செல்லும் பறவைகள் அருகில் உள்ள ஏரிகளில் போட்டு விட்டு சென்று விடுகின்றன. அப்படி போடப்படும் முதலைகள் ஏரிகளில் உள்ளன.

    இதன் காரணமாக முதலை பண்ணையில் தற்போது முதலை குட்டிகளை பறவைகள் தூக்கி செல்லாத படி வலை கட்டியுள்ளோம். நெடுங்குன்றம் ஏரியில் உள்ள முதலைகளை பிடிக்க நடவடிக்கை எடுத்து வருகிறோம்.

    இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

    நெடுங்குன்றம் ஏரியில் முதலைகள் நடமாடுவதால் அந்த பகுதியை சுற்றியுள்ள பொதுமக்கள் அச்சம் அடைந்துள்ளனர். ஏரிப்பகுதிக்கு செல்லவும் பொதுமக்கள பயப்படுகிறார்கள்.

    பெருங்களத்தூர் சதானந்தபுரம் ஏரியில் 6 மாதங்களுக்கு முன்பு இதே போல் முதலை நடமாட்டம் காணப்பட்டது. ஆனால் அந்த முதலை இதுவரை பிடிபடவில்லை. தற்போது நெடுங்குன்றம் ஏரியிலும் முதலை நடமாட்டம் காணப்படுகிறது.

    தீபாவளி பண்டிகைக்காக வெளியூர் சென்றிருந்தவர்கள் இன்று காலை சென்னை திரும்பியதால் பெருங்களத்தூர் பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
    தாம்பரம்:

    தீபாவளி பண்டிகைக்காக சென்னையில் வசிக்கும் தென் மாவட்டத்தை சேர்ந்தவர்கள் சொந்த ஊர்களுக்கு சென்றிருந்தனர்.

    தீபாவளி தொடர் விடுமுறை முடிந்து இன்று காலை அவர்கள் சென்னை திரும்பினர். ஒரே நேரத்தில் ஏராளமான கார்களிலும், பஸ்களிலும் அவர்கள் வந்ததால் சாலைகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

    இந்த நிலையில் இன்று காலை பெருங்களத்தூருக்கு அனைத்து வாகனங்களும் ஒரே நேரத்தில் வந்தன. இதனால் பஸ் நிலையத்தில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. வண்டலூரில் இருந்து பெருங்களத்தூர் வரை அதிகாலை முதல் ஏராளமான வாகனங்கள் அணிவகுத்து நின்றன.

    நெரிசலை சமாளிக்க போக்குவரத்து போலீசாரும், போக்குவரத்து அதிகாரிகளும் தீவிர நடவடிக்கையில் ஈடுபட்டனர். அரசு பஸ்கள், தனியார்கள் பஸ்கள் நிறுத்த தனித்தனி இடம் ஒதுக்கப்பட்டிருந்தது.

    காலை சுமார் 10 மணிக்கு பின்னரே போக்குவரத்து சீரானது. நெரிசல் காரணமாக காலையில் பள்ளி, கல்லூரிக்கு சென்ற மாணவ-மாணவிகளும், வேலைக்கு செல்வோரும் பாதிக்கப்பட்டனர். வண்டலூரில் இருந்து பெருங்களத்தூர் வரை சாலையை அகலப்படுத்தும் பணி முடிந்துள்ளது. இதனால் வாகன நெரிசல் குறைந்து இருந்தது.
    ×