search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "PM election"

    பாகிஸ்தான் நாடாளுமன்றம் இன்று (திங்கட்கிழமை) கூடுகிறது. இந்த நிலையில், எதிர்க்கட்சி தலைவர்கள் முக்கிய ஆலோசனை நடத்தி உள்ளனர். #Pakistan #Parliament #PMElection
    இஸ்லாமாபாத்:

    பாகிஸ்தான் நாடாளுமன்றத்துக்கு கடந்த மாதம் 25-ந் தேதி தேர்தல் நடந்தது. இந்த தேர்தலில் எந்தவொரு கட்சிக்கும் தனிப்பெரும்பான்மை கிடைக்காமல், தொங்கு நாடாளுமன்றம் உருவாகி உள்ளது.

    116 இடங்களுடன் தனிப்பெரும் கட்சியாக வந்து உள்ள முன்னாள் கிரிக்கெட் வீரர் இம்ரான்கானின் பாகிஸ்தான் தெஹ்ரீக் இ இன்சாப் கட்சி, சிறிய கட்சிகளுடன் சேர்ந்து அரசு அமைக்க உள்ளது.

    இந்த நிலையில், பாகிஸ்தான் நாடாளுமன்றம் இன்று (திங்கட்கிழமை) கூடுகிறது. இதற்கான அழைப்பை அந்த நாட்டின் ஜனாதிபதி மம்னூன் உசேன் விடுத்து உள்ளார். இன்று புதிய உறுப்பினர்கள் பதவி ஏற்பார்கள்.



    அதைத் தொடர்ந்து சபாநாயகர், துணை சபாநாயகர், பிரதமர் பதவிகளுக்கான தேர்தல் நடைபெறும்.

    நாடாளுமன்ற தேர்தலில் பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப்பின் பாகிஸ்தான் முஸ்லிம் லீக் கட்சி (நவாஸ்) 64 இடங்களை கைப்பற்றி உள்ளது. மற்றொரு முன்னாள் பிரதமரான மறைந்த பெனாசிர் பூட்டோவின் பாகிஸ்தான் மக்கள் கட்சி 43 இடங்களில் வெற்றி பெற்று உள்ளது. இவ்விரு கட்சிகளும் தேர்தலுக்கு பின்னர் கைகோர்த்து உள்ளன. இது ஒரு பக்கம் இம்ரான்கான் கட்சிக்கு தலைவலியை ஏற்படுத்தி உள்ளது.

    நடக்க உள்ள சபாநாயகர், துணை சபாநாயகர், பிரதமர் பதவிகளுக்கான தேர்தலில் இம்ரான்கானின் பாகிஸ்தான் தெஹ்ரீக் இ இன்சாப் கட்சிக்கு இந்தக் கட்சிகள் பலத்த போட்டியை உருவாக்கும்.

    இந்த நிலையில் நேற்று முன்தினம் லாகூர் மாதிரி நகரில் உள்ள பாகிஸ்தான் முஸ்லிம் லீக் கட்சி (நவாஸ்) தலைவர் ஷாபாஸ் ஷெரீப்பின் இல்லத்தில் எதிர்க்கட்சி தலைவர்கள் கூட்டம் நடந்தது.

    இந்த கூட்டத்தில் ஷாபாஸ் ஷெரீப், பாகிஸ்தான் மக்கள் கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் பிரதமருமான யூசுப் ராஸா கிலானி, முன்னாள் நாடாளுமன்ற எதிர்க்கட்சி தலைவர் சையத் குர்ஷீத் ஷா, பாகிஸ்தான் முஸ்லிம் லீக் கட்சி (நவாஸ்) மூத்த தலைவர் கவாஜா ஆசிப், முன்னாள் நாடாளுமன்ற சபாநாயகர் அயாஸ் சாதிக் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில் பாகிஸ்தான் நாடாளுமன்ற சபாநாயகர், துணை சபாநாயகர், பிரதமர் தேர்தல் குறித்து முக்கிய ஆலோசனை நடத்தி, கூட்டு வியூகம் ஒன்றை பாகிஸ்தான் முஸ்லிம் லீக் கட்சியும் (நவாஸ்), பாகிஸ்தான் மக்கள் கட்சியும் வகுத்து உள்ளன.

    பிரதமர் தேர்தலில் எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளராக பாகிஸ்தான் முஸ்லிம் லீக் கட்சி (நவாஸ்) தலைவர் ஷாபாஸ் ஷெரீப் நிறுத்தப்படுகிறார்.இம்ரான் கானுக்கு ஷாபாஸ் ஷெரீப் கடும் போட்டியை உருவாக்குவார் என்ற எதிர்பார்ப்பு பாகிஸ்தானில் நிலவுகிறது.  #Pakistan #Parliament #PMElection 
    ×