search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Ponvannan"

    • 'பருத்தி வீரன்’ படம் தொடர்பான பிரச்சனை பேசுபொருளாகி இருக்கிறது.
    • இயக்குனர் அமீருக்கு ஆதரவாக சிலர் தங்களின் கருத்துக்களை சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.

    'பருத்தி வீரன்' படத்தின்போது நடந்த பல்வேறு பிரச்சினைகள் தொடர்பாக இயக்குனர் அமீர் மற்றும் தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா இடையேயான கருத்து பரிமாற்றம் கடந்த சில நாட்களாக சமூக வலைதளங்களில் பேசுபொருளாகி இருக்கிறது. இந்த விவகாரம் தொடர்பாக தயாரிப்பாளர் ஞானவேல் ராஜாவுக்கு ஆதரவாக திரைத்துறையை சேர்ந்த சிலரும், இயக்குனர் அமீருக்கு ஆதரவாக சிலரும் தங்களின் கருத்துக்களை சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.


    இந்நிலையில், இந்த பிரச்சனை தொடர்பாக நடிகர் பொன்வண்ணன் சமூக வலைதளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், "பருத்தி வீரன் திரைப்படம் பற்றிய தயாரிப்பாளர் ஞானவேல் அவர்களின் சமீபத்திய ஊடக பேட்டியைப்பார்த்தேன்! அத்திரைப்படத்தில் நடிகனாக மட்டுமல்லாமல், நான் பல்வேறு நிலைகளில் பங்காற்றியவன் என்ற வகையில் சில விளக்கங்கள் தர கடமைப்பட்டுள்ளேன்.

    அத்திரைப்படம் ஆரம்பித்து முதல் கட்ட படப்பிடிப்பு முடிந்த நிலையில், தயாரிப்பாளருக்கும் இயக்குனருக்கும் கருத்துவேறுபாடு ஏற்பட்டு, அடுத்தகட்ட படப்பிடிப்பு தள்ளிப் போய் கொண்டிருந்தது. அதற்கான முழுமையான காரணம் எங்களுக்கு அப்போது தெரியவில்லை. அதன்பின் இரண்டாம் கட்டப் படப்பிடிப்புகள் தொடங்கியபோது, அமீர் அவர்கள் பொறுப்பேற்று, பல நண்பர்கள், உறவினர்கள் மூலமாக கடன் வாங்கி படப்பிடிப்புக்கான செலவுகளை செய்தார் என்பதை நானறிவேன்!

    பல்வேறு கட்டங்களாக படப்பிடிப்பு தொடர்ந்தது. ஒவ்வொரு காட்சியமைப்பும் அவருக்கு திருப்தி வரும் வரை பல நாட்கள் எடுத்து கொண்டே இருந்தார். நானும், உடனிருந்த சமுத்திரகனியும், செலவுகளைச் சுட்டிக்காட்டி பேசிய போதெல்லாம் எங்களை சமாதானப்படுத்திவிட்டு, டப்பிங்.. எடிட்டிங்... ரீரெக்கார்டிங் என எல்லா நிலைகளிலும் சமரசம் செய்து கொள்ளாமல் இதே மன நிலையுடன்தான் வேலை பார்த்தார்.


    பொன்வண்ணன் அறிக்கை

    பல வருடங்கள் திரைத்துறையில் பயணித்து வந்த எனக்கு அந்த உழைப்பும், அர்பணிப்பும் மதிக்கத்தக்கதாக இருந்தது. இதனால்தான், பணத்துக்காக தனது "படைப்பிற்கு" என்றும் துரோகம் செய்பவரல்ல அமீர் என்பதை நான் அவருடன் தொடர்ந்து பயணித்தவன் என்ற முறையில் உறுதியாக சொல்லமுடியும்.

    படம் வெளியாகி உலக அளவிலும், இந்திய சினிமாவிலும், படைப்பு ரீதியாகவும், தொழில்நுட்பமாகவும், விமர்சனங்களாலும், வசூல் ரீதியாகவும், அதில் பங்குபெற்ற கலைஞர்களுக்கும் கிடைத்த 'தேசிய விருது" அங்கீகாரங்காளாலும் அது பெற்ற இடமோ உயரியது.

    படம் ஆரம்பிக்கப்பட்ட காலத்திலிருந்தே, பொருளாதாரம் சார்ந்து இருவருக்குமிடையே கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டு, வெளியீட்டுக்கு பின்பும் திரைத்துறை சார்ந்த பல்வேறு சங்கங்கள் தலையிட்டும், பிரச்சனை தீர்க்கப்படாமல் இருக்கிற இந்த நிலையில், தயாரிப்பாளர் ஞானவேல் தனது பக்க நியாயத்தை சொல்வதற்கு முழு உரிமையும் உள்ளது. ஆனால் அதில் ஒரு வரைமுறை இருக்க வேண்டும்.


    பொவண்ணன் அறிக்கை

    உலகமே அங்கீகரித்த படைப்பையும்,அதன் படைப்பாளியையும் உங்களின் தனிப்பட்டகாரணங்களுக்காக..திருடன், வேலைதெரியாதவர்.. என கொச்சைப்படுத்துவது ஏற்புடையதல்ல..! அந்த ஊடக பேட்டிமுழுக்க உங்களின் உடல்மொழியும், பேச்சுத்திமிரும்,வக்கிரமாக இருந்தது..!

    தங்கள் தயாரிப்பில் வந்த 'இருட்டறையில் முரட்டுக்குத்து' திரைப்படத்தை போன்று அளவுகோலாக வைத்து பருத்திவீரனையும், அதனது படைப்பாளியையும் எடைபோட்டுவிட்டீர்களோ! வேண்டாம் இந்த தரம் தாழ்ந்த மனநிலை..!

    இனியும் உங்களுக்கிடையேயான பிரச்சனைகளை அதற்கான பாதையில் நேர்மையாக அணுகி தீர்வு காணுங்கள்.!பருத்திவீரன் ஆரம்பிக்கப்பட்ட காலங்களில் அனைவருக்குமிடையே இருந்த நட்பும், உறவும் மீண்டும் மலரவேண்டும் என்ற ஆசைகளுடன்.. ப்ரியங்களுடன் பொண்வண்ணன்" என்று குறிப்பிட்டுள்ளார்.

    ரஞ்சித் ஜெயக்கொடி இயக்கத்தில் ஹரிஷ் கல்யாண் - ஷில்பா மஞ்சுநாத் நடிப்பில் வெளியாகி இருக்கும் `இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும்' படத்தின் விமர்சனம். #IspadeRajavumIdhayaRaniyum #HarishKalyan
    பொன்வண்ணனின் மகன் ஹரிஷ் கல்யாண். சிறுவயதிலேயே தாயை பிரிந்து வளரும் ஹரிஷ் தாய் பாசத்திற்காக ஏங்குகிறார். தனிமையையே விரும்பும் கோவக்காரராக வளர்கிறார். எந்த பிரச்சனை என்றாலும் முதல் அடி இவருடையதாக இருக்கும். பால சரவணனும், மாகாபா ஆனந்தும் இவரது நண்பர்கள்.

    இந்த நிலையில், பார்ட்டி ஒன்றில் நாயகி ஷில்பா மஞ்சுநாத்தை சந்திக்கிறார். அங்கு ஏற்படும் பிரச்சனையில் ஷில்பாவின் குடும்ப நண்பரை அடித்துவிடுகிறார். பின்னர் ஷில்பா ஒரு சில பிரச்சனைகளில் சிக்க அதிலிருந்து அவரை காப்பாற்றி விடுகிறார். இதையடுத்து ஷில்பாவுக்கு ஹரிஷ் மீது காதல் வர, இருவரும் நெருங்கி பழக ஆரம்பிக்கிறார்கள்.



    தனது காதலியின் மீதான ஈர்ப்பும், நெருக்கமும் அதிகரிக்க, அவளும் தன்னை விட்டு போய்விடுவாளோ என்று நினைக்கும் ஹரிஷ், ஷில்பாவை திருமணம் செய்து கொள்ள வற்புறுத்துகிறார். தனது வீட்டுப் பிரச்சனை காரணமாக ஷில்பா திருமணத்துக்கு ஒப்புக்கொள்ள மறுக்கிறார்.

    தனது அம்மா போலவே இவளும் தன்னை பிரிந்து சென்று விடுவாள் என்று எண்ணும் ஹரிஷ், தனது அம்மா மீதுள்ள கோபத்தையும் ஷில்பா மீது வெளிப்படுத்துகிறார்.



    இதனால் இவர்களுக்கிடையே என்னென்ன பிரச்சனைகள் வந்தது? ஹரிஷ் - ஷில்பா இணைந்தார்களா? அதன் பின்னணியில் என்ன நடந்தது? என்பதே படத்தின் மீதிக்கதை.

    பியார் பிரேமா காதல் படத்திற்கு பிறகு முற்றிலும் மாறுபட்ட கதாபாத்திரத்தில் ஹரிஷ் கல்யாண் நடித்திருக்கிறார். தனிமையை விரும்பும், அதிகமாக பேசாத கோவக்கார இளைஞனாக ரசிகர்களை கவர்கிறார். பாசம், காதல், ஆக்‌ஷன் என நடிப்பில் மிளிர்கிறார். ஷில்பா மஞ்சுநாத் துணிச்சலாக நடித்திருக்கிறார். காதல், கிளாமர் என ரசிகர்களை கவர்கிறார். மாகாபா ஆனந்த், பால சரவணன் காமெடிக்கு கைகொடுக்க, பொன்வண்ணன் அனுபவ நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார்.



    பெற்றோர் பிரிந்தால் குழந்தைகள் என்ன மாதிரியான அவஸ்தைக்குள்ளாவார்கள், அவர்களது ஏக்கம், அவர்களது வாழ்க்கை இப்படியும் மாறலாம் என்பதை உணர்ச்சிப்பூர்வமாக இயக்கியிருக்கிறார் ரஞ்சித் ஜெயக்கொடி. முதல் பாதி ரசிக்கும்படியாக விறுவிறுப்பாக செல்ல, இரண்டாவது பாதி நீளமாகவும், தேவையில்லாத சில காட்சிகள் இடம்பெற்று தொய்வை ஏற்படுத்துகின்றன. இளைஞர்கள் ரசிக்கும்படியான படமாக இயக்கியிருக்கிறார்.

    பின்னணி இசையில் சாம்.சி.எஸ். மிரட்டியிருக்கிறார். பாடல்களும் ரசிக்கும்படியாக இருக்கின்றன. ஏ.கவின்ராஜின் ஒளிப்பதிவு படத்திற்கு பலம். பவன் ஸ்ரீகுமாரின் படத்தொகுப்பு சிறப்பு.

    மொத்தத்தில் `இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும்' பிரிவின் வலி. #IspadeRajavumIdhayaRaniyum #IspadeRajavumIdhayaRaniyumReview #HarishKalyan #ShilpaManjunath

    ஜெயம் ரவி நடிப்பில் திரையரங்குகளில் ஓடிக் கொண்டிருக்கும் `அடங்க மறு' படத்தின் வெற்றி சந்திப்பில் பேசிய ஜெயம்ரவி, இந்த படத்தில் நடிக்கும் போது, எனது மனைவி எனக்கு அடங்கி இருந்ததாக கூறினார். #AdangaMaru #JayamRavi
    ஜெயம் ரவி நடித்து சமீபத்தில் வெளியான படம் அடங்க மறு படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. இந்த படத்தின் வெற்றி சந்திப்பில் ஜெயம் ரவி பேசும்போது,

    ‘இந்த படத்தை என் மாமியார் சுஜாதா தயாரித்து இருந்தார். என் மனைவி ஆர்த்தி எனக்கு அடங்கி இருந்தது என்பது இந்த படத்தில் நான் நடித்த சமயத்தில் மட்டும்தான்.

    ஆர்த்தி ஏதாவது சண்டை போட்டால் படப்பிடிப்புக்கு செல்லமாட்டேன் என்று பிளாக்மெயில் செய்ய தொடங்கினேன். என்னுடன் சண்டை போடுவதற்காகவே படப்பிடிப்பை சில நாட்கள் நிறுத்த முடியுமா? என்று அம்மாவிடம் ஆர்த்தி கேட்பார்.



    அந்த அளவுக்கு அவரை அதட்டி வைத்து இருந்தேன். இந்த படத்தின் படப்பிடிப்பு முடியும்வரை என்னிடம் அவர் அடங்கியே இருந்தார்’ என்று கூறினார். இதை கேட்டு மேடையில் இருந்த ஜெயம் ரவியின் மனைவி ஆர்த்தியும், மாமியார் சுஜாதாவும் சிரித்தனர். #AdangaMaru #JayamRavi #AdangaMaruSuccessMeet

    ஜெயம் ரவி பேசிய வீடியோவை பார்க்க:

    கார்த்திக் தங்கவேல் இயக்கத்தில் ஜெயம் ரவி - ராஷி கண்ணா நடிப்பில் வெளியாகி இருக்கும் `அடங்க மறு' படத்தின் விமர்சனம். #AdangaMaruReview #AdangaMaru #JayamRavi #RaashiKhanna
    சென்னையில் மைம் கோபி போலீஸ் இன்ஸ்பெக்டராக இருக்கும் காவல் நிலையத்தில் சப்-இன்ஸ்பெக்ரடராக பணிக்கு சேர்கிறார் ஜெயம் ரவி. அதே காவல்நிலையத்தில் மற்றொரு சப்-இன்ஸ்பெக்ரடராக இருக்கிறார் அழகம் பெருமாள். 

    ஜெயம் ரவி தனது அப்பா பொண்வண்ணன், அம்மா ஸ்ரீரஞ்சினி, அண்ணன் சுப்பு பஞ்சு, அண்ணனின் மனைவி, குழந்தைகள் என சந்தோஷமாக வாழ்ந்து வருகிறார். இவரது சொந்தக்கார பெண்ணான ராஷி கண்ணாவும், இவரும் காதலிக்கிறார்கள்.



    நேர்மையான போலீஸான ஜெயம் ரவி தனது வேலையை சரியாக செய்ய வேண்டும், யாருக்கும் பயப்படக் கூடாது என்ற எண்ணம் கொண்டவர். இந்த நிலையில், ஜெயம் ரவி விசாரிக்கும் வழக்குகளில் செல்வாக்கு மிக்கவர்களுக்கு சம்பந்தம் இருப்பதை ஜெயம் ரவி கண்டுபிடிக்க, அந்த வழக்குகளை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்ல முடியாத அளவிற்கு ஜெயம் ரவிக்கு முட்டுக்கட்டை போடப்படுகிறார்கள்.

    இந்த நிலையில், மாடியில் இருந்து இளம்பெண் ஒருவர் கீழே விழுந்து உயிரிழக்கிறார். இந்த வழக்கை விசாரிக்கும் ஜெயம் ரவி அந்த பெண் தற்கொலை செய்யவில்லை, இளைஞர்கள் சிலர் இணைந்து அந்த பெண்ணை தள்ளிவிட்டதை ஜெயம் ரவி கண்டுபிடிக்கிறார். மேலும் அவர்களை கைது செய்து சிறையில் அடைக்கிறார். ஆனால் அவர்கள் அனைவரும் அந்த வழக்கில் இருந்து விடுவிக்கப்படுகின்றனர்.



    ஜெயிலில் தனது மகனை அடித்ததற்காக ஜெயம் ரவியை பழிவாங்க, அவரது குடும்பத்தினரை கொன்று விடுகிறார்கள். மேலும் இந்த வழக்கை விபத்து என்றும் மாற்றிவிடுகின்றனர்.

    இதனால் தனது பதவியை ராஜினாமா செய்துவிட்டு, அதற்கு காரணமானவர்களை அவர்களது தந்தையின் மூலமே பழிவாங்குவதாக சபதம் செய்கிறார்.

    கடைசியில், ஜெயம் ரவி தனது சபதத்தை நிறைவேற்றினாரா? ராஷி கண்ணாவுடன் இணைந்தாரா? அடங்க மறுத்தாரா? அதன் பின்னணியில் என்ன நடந்தது? என்பதே படத்தின் மீதிக்கதை.



    நேர்மையான, துடிப்பான போலீஸ் அதிகாரியாக ஜெயம் ரவி சிறப்பாக நடித்திருக்கிறார். தனி ஒருவன் படத்திற்கு பிறகு தனி ஒருவனாக படத்தை தனது தோள்மேல் தூக்கி செல்கிறார். காதல், பாசம், சண்டை என தனது இயல்பான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார். ராஷி கண்ணாவுக்கு இந்த படம் ஒரு நல்ல தொடக்கமாக அமைந்திருக்கிறார். திரையில், அழகாக வந்து ரசிகர்களை கவர்கிறார்.

    பொன்வண்ணன், ஸ்ரீரஞ்சினி, சுப்பு பஞ்சு, மீரா வாசுதேவன் என அனைவரும் குடும்ப கதாபாத்திரத்தை ஏற்று கதையை நகர்த்துகின்றனர். குறிப்பாக சுப்பு பஞ்சுவின் இரு குழந்தைகளும் கவரும்படியாக நடித்துள்ளார்கள். மைம் கோபி, சம்பத் ராஜ், முனிஸ்காந்த், அழகம்பெருமாள் போலீஸாக கலக்கியிருக்கிறார்கள்.



    என்னதான் போலீஸ் அதிகாரியாக இருந்தாலும் உயர் அதிகாரியின் உத்தரவுக்கு கட்டுப்பட்டுத் தான் ஆக வேண்டும். என்ன நடந்தாலும் அதனை மீற முடியாது என்பதை மையப்படுத்தி படத்தின் திரைக்கதையை உருவாக்கி இருக்கிறார் கார்த்திக் தங்கவேல். நேர்மையான போலீஸ் ஒருவரை என்ன தான் அடக்க நினைத்தாலும், ஒருநாள் அவரது உணர்ச்சி வெடித்து, அடங்க மறுப்பதையும், சமூகத்தில் பெண்களுக்கு இழைக்கப்படும் குற்றத்தையும் படமாக உருவாக்கி இருக்கிறார். வசனங்கள் சிறப்பாக உள்ளது.

    சாம்.சி.எஸ். இசையில் பாடல்கள் சிறப்பாக வந்துள்ளன. பின்னணி இசையில் மிரட்டியிருக்கிறார். சத்யன் சூர்யன் ஒளிப்பதிவில் காட்சிகள் சிறப்பாக வந்துள்ளன.

    மொத்தத்தில் `அடங்க மறு' அத்து மீறு. #AdangaMaruReview #AdangaMaru #JayamRavi #RaashiKhanna

    கார்த்திக் தங்கவேல் இயக்கத்தில் ஜெயம் ரவி - ராஷி கண்ணா நடிப்பில் உருவாகி இருக்கும் அடங்க மறு' படத்தின் முன்னோட்டம். #AdangaMaru #JayamRavi #RaashiKhanna
    ஹோம் மூவி மேக்கர்ஸ் மூலம் சுஜாதா விஜயகுமார் தயாரித்துள்ள படம் `அடங்க மறு'.

    ஜெயம் ரவி நாயகனாகவும், ராஷி கண்ணா நாயகியாகவும் நடித்துள்ள இந்த படத்தில், சம்பத்ராஜ், முனீஷ்காந்த், பொன்வண்ணன், சுப்பு பஞ்சு, பாபு ஆண்டனி, அழகம் பெருமாள், மீரா வாசுதேவன் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்கள்.

    ஒளிப்பதிவு - சத்யன் சூரியன், இசை - சாம்.சி.எஸ்., படத்தொகுப்பு - ரூபன், கலை - லால்குடி என் இளையராஜா, சண்டைப்பயிற்சி - ஸ்டன்ட் சிவா, வசனம் - விஜி, நடனம் - தினேஷ், ஆடை வடிவமைப்பு - ஜே.கவிதா, இணை தயாரிப்பாளர் - ஆனந்த் ஜாய், தயாரிப்பு நிறுவனம் - ஹோம் மூவி மேக்கர்ஸ், தயாரிப்பு - சுஜாதா விஜயகுமார், இயக்கம் - கார்த்திக் தங்கவேல்.



    படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பில் இயக்குநர் பேசியதாவது,

    நான் 10 வருடத்திற்கு முன்பே இயக்குனராக வேண்டியது, ஆனால் தள்ளிபோட்டுக் கொண்டே இருந்தேன். ஒரு நாள் கதையை சுஜாதா விஜயகுமார் அவர்களிடம் சொன்னேன், அவருக்கு பிடித்து போனது. ஜெயம் ரவியிடம் கதையை சொல்லுங்க, பிடிச்சா பண்ணலாம் என்றார். கடந்த 3 வருடங்களில் நான் பார்த்த சம்பவங்களை வைத்து எழுதிய கதை. ரூபன், இளையராஜா என எல்லோருமே கடும் உழைப்பாளிகள், ஆரம்பத்தில் இருந்தே நண்பர்கள். 

    எதையும் யூகிக்க முடியாத அளவுக்கு, இந்த படத்தில் வித்தியாசமான நடிகர்கள் பலர் தேவைப்பட்டனர். நான் நினைத்த மாதிரி நடிகர்கள் கிடைத்தது பெரிய வரம். ஜெயம் ரவியை விட ராஷி கண்ணாவுடன் வேலை பார்க்கும்போது தான் எனக்கு மிகவும் பதட்டமாக இருந்தது. விஜி சார் வசனம் படத்துக்கு மிகப்பெரிய பலம் என்றார்.

    படம் வருகிற டிசம்பர் 21-ஆம் தேதி ரிலீசாக இருக்கிறது. #AdangaMaru #JayamRavi #RaashiKhanna

    நாசர் தலைமையினான அணி நடிகர் சங்கத்தினை நிர்வகித்து வரும் நிலையில், நடிகர் சங்க கட்டிடம் கட்டப்படுவதால் நடிகர் சங்கத் தேர்தல் 6 மாதம் தள்ளிவைக்கப்படுவதாக பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. #NadigarSangamMeet
    சென்னை:

    தென்னிந்திய நடிகர் சங்க பொதுக்குழு கூட்டம் சென்னை கலைவாணர் அரங்கில் நேற்று நடந்தது. கூட்டத்துக்கு சங்கத்தின் தலைவர் நாசர் தலைமை தாங்கினார்.

    பொதுச்செயலாளர் விஷால், பொருளாளர் கார்த்தி, துணைத்தலைவர்கள் பொன்வண்ணன், கருணாஸ் ஆகியோர் கலந்து கொண்டனர். கூட்டத்தில் மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் மு.கருணாநிதி, நடிகை ஸ்ரீதேவி ஆகியோருக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது. கூட்டத்தில் பொதுக்குழுவில் விஷால் பேசியதாவது:-

    ‘நடிகர் சங்கத்துக்கு சொந்தமான 19 கிரவுண்ட் நிலத்தில் புதிய கட்டிடம் கட்டப்பட்டு வருகிறது. அந்த இடத்தை ரூ.26 ஆயிரத்துக்கு வாங்கினார்கள். இப்போது அதன் மதிப்பு ரூ.150 கோடியில் இருந்து ரூ.200 கோடி வரை இருக்கும். கட்டிடம் கட்டுவதை எதிர்த்து பல தடைகள் ஏற்படுத்தினார்கள். கோர்ட்டுக்கு சென்றார்கள். அதையெல்லாம் மீறி கட்டிட வேலைகள் நடந்து வருகின்றன. எம்.ஜி.ஆர், சிவாஜி கணேசன், எஸ்.எஸ்.ராஜேந்திரன் உள்ளிட்டோர் ஆத்மா நமக்கு துணையாக இருக்கிறது.



    நடிகர் சங்கத்துக்கு புதிய கட்டிடத்தை கட்டி முடித்த பிறகு தான் எனது திருமணம் நடைபெறும். வேங்கட மங்கலத்தில் நடிகர் சங்கத்துக்கு சொந்தமான இடத்தை விற்றது தொடர்பாக முந்தையை நிர்வாகிகள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இவ்வாறு விஷால் பேசினார்.

    கூட்டம் முடிந்ததும் நிர்வாகிகள் நாசர், விஷால், கார்த்தி, பொன்வண்ணன், கருணாஸ் ஆகியோர் கூட்டாக நிருபர்களுக்கு பேட்டி அளித்தனர். அவர்கள் கூறியதாவது:-

    ‘நடிகர் சங்க பொறுப்பில் 3 வருடங்கள் சிறப்பாக பணியாற்றியுள்ளோம். உறுப்பினர்களுக்கு பல நலப்பணிகள் செய்துள்ளோம். வாக்குறுதி அளித்தபடி சங்க கட்டிடத்தையும் கட்டி வருகிறோம். உறுப்பினர்கள் பட்டியலில் உள்ள குறைகளை சரி செய்வதற்காக நடிகர் சங்க தேர்தலை தள்ளி வைக்க வேண்டும் என்று 10-க்கும் மேற்பட்ட உறுப்பினர்கள் சங்கத்துக்கு கடிதம் கொடுத்துள்ளனர். எனவே தேர்தலை 6 மாதத்துக்கு தள்ளிவைத்து பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றி உள்ளோம்.



    அனைத்து உறுப்பினர்களுமே தேர்தலை தள்ளி வைக்க ஆதரவு தெரிவித்தனர். அடுத்த மார்ச் மாதம் கட்டிட வேலைகளை முடித்து திறப்பு விழா நடத்த முடிவு செய்துள்ளோம். நடிகர் சங்க தேர்தலும் புதிய கட்டிடத்திலேயே நடைபெறும். நடிகர் சங்க கட்டிடத்தை கட்டி முடிக்க மேலும் ரூ.20 கோடி தேவைப்படுகிறது. எனவே நட்சத்திர கலைநிகழ்ச்சிகள் நடத்தி நிதி திரட்டுவது குறித்து ஆலோசித்து வருகிறோம். சர்வதேச தரத்தில் இந்த கட்டிடமும் அரங்குகளும் கட்டப்பட்டு வருகிறது என்றார்கள். 

    பொதுக்குழுவில் நடிகர்கள் விஜயகுமார், பாக்யராஜ், எஸ்.வி.சேகர், விஜய்சேதுபதி, ஜீவா, ஐசரி கணேஷ், பூச்சி முருகன், நந்தா, ஸ்ரீமன், கே.ராஜன், சரவணன், உதயா, ஆனந்தராஜ், நடிகைகள் லதா, சரோஜா தேவி, பூர்ணிமா, சச்சு, காஞ்சனா, சோனியா, சங்கீதா, குட்டி பத்மினி, ஷீலா, ரோகிணி, கோவை சரளா உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர். #NadigarSangamMeet #Vishal #Nasser

    ×