search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "post election clashes"

    இந்தோனேசியாவில் அதிபர் விடோடோவின் வெற்றியை எதிர்த்து எதிர்க்கட்சியினர் வன்முறை போராட்டத்தில் ஈடுபட்டனர். இது தொடர்பாக 20க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
    ஜகார்த்தா:

    இந்தோனேசியாவில், அதிபர் பதவிக்கான தேர்தலில் தற்போதைய அதிபர் ஜோகோ விடோடா (வயது 57) வெற்றி பெற்றதாக அந்நாட்டு தேர்தல் ஆணையம் நேற்று அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.  விடோடோவிற்கு 55.5 விழுக்காடு வாக்குகளும், அவரை எதிர்த்துப் போட்டியிட்ட ஓய்வுபெற்ற ராணுவ அதிகாரி, ஜெனரல் பிரபாவோ சுபியாந்தோவிற்கு 44.5 விழுக்காடு வாக்குகளும் கிடைத்ததாக அறிவிக்கப்பட்டது.

    இந்த தேர்தலில் மோசடி நடைபெற்றதாக பிரபாவோ குற்றஞ்சாட்டியிருந்தார். அதன் காரணமாக, அவர் தேர்தல் முடிவுகளை எதிர்த்து மேல்முறையீடு செய்யக்கூடும் என்றும் அவருடைய ஆதரவாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடக்கூடும் என்றும் தகவல் வெளியானது. இதனால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக முக்கிய பகுதிகளில் போலீசார் குவிக்கப்பட்டனர். தலைநகர் ஜகார்த்தாவில் மட்டும் 3000 போலீசார் குவிக்கப்பட்டிருந்தனர்.

    இந்த நிலையில், ஜோகோ விடோடோவின் வெற்றியை எதிர்த்து தலைநகர் ஜகார்த்தாவின் பல்வேறு பகுதிகளில் எதிர்க்கட்சி சார்பில் ஆர்ப்பாட்டங்கள், கண்டன பேரணிகள் நடைபெற்றன. முதலில் அமைதியாக போராட்டம் நடைபெற்றது. நேரம் செல்லச் செல்ல போராட்டக்காரர்கள் வன்முறையில் ஈடுபட்டனர். வாகனங்களுக்கு தீவைத்தும், போலீசார் மீது பட்டாசுகளை கொளுத்திப் போட்டும் எதிர்ப்பு கோஷங்கள் எழுப்பினர். இதனால் பதற்றம் உருவானது.



    இதையடுத்து போலீசார் கண்ணீர் புகை குண்டுகளை வீசி போராட்டக்காரர்களை விரட்டியடித்தனர். இந்த வன்முறையின்போது 6 பேர் பலியானதாகவும், 200 பேர் காயமடைந்ததாகவும் உள்ளூர் ஊடகத்தில் செய்தி வெளியானது. வன்முறை தொடர்பாக 20க்கும் மேற்பட்டோரை போலீசார் கைது செய்துள்ளனர். வன்முறை பரவாமல் தடுப்பதற்காக, போலீசார் ரோந்து சுற்றி வருகின்றனர். 
    ×