search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "prevent rumors"

    சமூக வலைத்தளங்கள் மூலம் வதந்திகள் பரப்புவதை தடுப்பது குறித்து மத்திய உள்துறை இன்று டெல்லியில் உயர்மட்ட ஆலோசனை நடக்கிறது.
    புதுடெல்லி:

    சமூக வலைத்தளங்களில், குறிப்பாக வன்முறை அதிகம் நடைபெற்றுவரும் காஷ்மீரில் ஆயுத போரைப்போலவே விஷத்தை கக்கும் வார்த்தைகள், போலியான செய்திகள், புரளிகள் பரவிவருவது மாநில நிர்வாகத்துக்கு பெரும் சிக்கலை ஏற்படுத்தி வருகிறது. வதந்திகள் பரவுவதன் மூலம் சட்டம்-ஒழுங்கு பிரச்சினை ஏற்படுவதுடன், எந்தவொரு நிகழ்வுக்கும் மதச்சாயம் பூசப்படுகிறது.

    அடுத்த 2 மாதங்களுக்கு அமர்நாத் யாத்திரை நடைபெற இருக்கும் நிலையில் இதுபோன்ற போலியான செய்திகள் பரவினால் மாநிலம் முழுவதும் மதவன்முறைகள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. சமீபத்தில் காஷ்மீர் போலீசார் டுவிட்டர் வலைத்தள பயன்பாட்டாளர்கள் 5 பேர் மீதும், வாட்ஸ்அப், பேஸ்புக் மூலம் தவறான தகவல் பரப்பியதற்காக அவர்களுக்கு இணையதள சேவை வழங்கிய நிறுவனங்கள் மீதும் வழக்கு பதிவு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

    காஷ்மீரின் இளைஞர்கள் கம்ப்யூட்டர்கள் அல்லது ஸ்மார்ட்போன்கள் மூலம் வீடுகளில் இருந்தோ, தெருக்களில் இருந்தோ இதுபோன்ற தவறான தகவல்களை சாதாரணமாக பரப்பிவிடுகிறார்கள். அதோடு டெல்லி போன்ற பிற மாநிலங்களிலோ, வெளிநாடுகளிலோ இருக்கும் காஷ்மீர் இளைஞர்களும் இதுபோன்ற செயல்களில் ஈடுபடுகிறார்கள்.

    எனவே சமூக வலைத்தளங்கள் மூலம் வதந்திகள் பரப்புவதை தடுப்பது குறித்து மத்திய உள்துறை அமைச்சகம் உயர்மட்ட ஆலோசனை கூட்டத்தை இன்று (திங்கட்கிழமை) டெல்லியில் நடத்துகிறது. உள்துறை செயலாளர் ராஜீவ் குப்தா தலைமையில் நடைபெறும் இந்த கூட்டத்தில் மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சக உயர் அதிகாரிகள், தொலைதொடர்பு துறை அதிகாரிகள், ஜம்மு காஷ்மீர் பாதுகாப்பு அதிகாரிகள் பலர் கலந்துகொள்கிறார்கள்.

    இந்த கூட்டத்தில் பாதுகாப்பு அதிகாரிகளுக்கு தகவல் தொழில்நுட்பம் தொடர்பான விதிகளை அமல்படுத்துவது, வதந்தி பரப்புவோர் மீது வழக்கு பதிவு செய்வது, இணையதள சேவை வழங்கும் நிறுவனங்களுடன் இணைந்து தீங்கை ஏற்படுத்தும் கருத்துகளை உடனுக்குடன் நீக்குவது, விரைவான சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்வது போன்றவை குறித்து விவாதிக்கப்படுவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    ×