என் மலர்
நீங்கள் தேடியது "Progesterone Hormone"
- கருவுறுதலுக்கு புரோஜெஸ்ட் டிரோன் ஹார்மோன் மிகவும் அவசியம்.
- ஆரோக்கியமான மாதவிடாய்க்கு முக்கியமானது.
புரோஜெஸ்ட்டிரோன் என்பது ஒரு பெண்ணின் மாதவிடாய் சுழற்சியின் இரண்டாம் பாதியில், கருமுட்டை விடுப்பின் பின்னர் கருப்பையில் உற்பத்தி செய்யப்படும் முதன்மை இனப்பெருக்க ஹார்மோன் ஆகும்.

கருவுறுதலுக்கு இது மிகவும் அவசியம். அதனால் இதை கர்ப்பத்தின் ஹார்மோன் என்றும் அழைக்கிறார்கள். இது, ஆரோக்கியமான மாதவிடாய்க்கு முக்கியமானது.
குறைவான புரோஜெஸ்ட்டிரோன் ஒரு பெண்ணின் இளமை பருவத்தில் அல்லது மாதவிடாய் முடிவதற்கு அதாவது மெனோபாசுக்கு முன்னர் ஏராளமான பாதிப்புகளை உண்டாக்கும்.

அறிகுறிகள்
சராசரி மாதவிடாய் சுழற்சி 28-30 நாட்கள் ஆகும். 25 நாட்களுக்கும் குறைவான மாதவிடாய் சுழற்சிகள், ஒரேமாதத்தில் இருமுறை வருகிற மாதவிடாய், சிறிது சிறிதாக வரும் ஸ்பாட்டிங் போன்றவை குறைந்த புரோஜெஸ்ட்டிரோன் அளவைக் குறிக்கலாம். இதனால் கருப்பையில் எண்டோமெட்ரியத்தின் வளர்ச்சியை சரிவர பராமரிக்க முடியாது. எனவே ஸ்பாட்டிங் ஏற்படலாம்.

புரோஜெஸ்ட்டிரோன் குறைவால் முதல் மூன்று மாத கர்ப்பங்களில் கருச்சிதைவு ஏற்பட வாய்ப்பு அதிகம் உள்ளது. குறைந்த புரோஜெஸ்ட்டிரோன் அளவு ஈஸ்ட்ரோஜன் ஆதிக்கத்திற்கு பங்களிக்கலாம். அல்லது ஈஸ்ட்ரோஜன் மற்றும் புரோஜெஸ்ட்டிரோன் இடையே ஏற்றத்தாழ்வு ஏற்படலாம். இதனால் கடுமையான ரத்தப்போக்கு, வலி மிகுந்த மாதவிடாய், மனநிலை மாற்றங்கள், தூக்கமின்மை ஏற்படுகிறது.
உணவுப் பழக்கவழக்கங்கள்
புரோஜெஸ்ட்டிரோன் அளவை அதிகரிக்க உணவில் வைட்டமின் சி அதிகமுள்ள சிட்ரஸ் பழங்கள் சாப்பிட்டால் நல்ல பலனை தரும்.
ஹார்மோன் ஆரோக்கியத்திற்கு நல்ல கொழுப்புகள் முக்கியம். ஏனெனில் அவை இனப்பெருக்க ஹார்மோன்களுக்கான கட்டுமானத்திற்கு அத்தியாவசியமானது.

அலிசி விதை (பிளாக் சீட்), ஆளி விதை, சியா விதை, பூசணி விதை, தேங்காய், பாதாம், பிரிம்ரோஸ் எண்ணெய், நல்லெண்ணெய் போன்றவை நல்லது.
புரோஜெஸ்ட்டிரோன் அளவை அதிகரிக்க வைட்டமின் பி6 மற்றும் துத்தநாகம் போன்ற ஊட்டச்சத்துக்கள் அதிகம் உள்ள உணவுகளும் உதவியாக இருக்கும்.
மத்தி மீன், சால்மன், சூரை மீன், ஆட்டுக்கல்லீரல், கொண்டைக்கடலை, வேர்க்கடலை, பட்டாணி, பருப்பு வகைகள், அவகேடோ, பெர்ரி பழங்கள், முட்டை ஆகியவற்றை உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.
மனஅழுத்தம் புரோலாக்டின் மற்றும் கார்டிசோல் இரண்டையும் அதிகரிக்கலாம். இது கரு முட்டை வெளிவரும் போது புரோஜெஸ்ட்டிரோன் அளவை பாதிக்கும். சீரான உடற்பயிற்சி, யோகா, இறை தியானம் நல்ல பலனைத் தரும்.
சித்த மருத்துவம்
1) குமரி லேகியம்: காலை, இரவு 1-2 கிராம் வீதம் உணவுக்கு பின் சாப்பிட வேண்டும்.
2) சதாவரி லேகியம்: காலை, இரவு 1-2 கிராம் வீதம் உணவுக்கு பின் சாப்பிட வேண்டும்.
3) கல்யாண முருங்கை இலை, விஷ்ணுகிரந்தி, அசோகப்பட்டை, கரு நொச்சி, ஆலம் விழுது, கருஞ்சீரகம், சதகுப்பை, மரமஞ்சள் போன்ற மூலிகைகளில் செய்த ஏராளமான மருந்துகள் உள்ளன. இவற்றை சித்த மருத்துவரின் ஆலோசனைப்படி சாப்பிட்டால் நல்ல பலனைப் பெறலாம்.
- பருவமடையும் போது ஈஸ்ட்ரோஜன் அளவுகள் உயரும்.
- மாதவிடாய் சுழற்சியில் புரோஜெஸ்ட்டிரோன் ஹார்மோன் முக்கியப் பங்கு வகிக்கிறது.
மகளிரின் ஆரோக்கியமான மாதவிடாய் சுழற்சிக்கு ஈஸ்ட்ரோஜன் மற்றும் புரோஜெஸ்ட்டிரோன் ஹார்மோன் இரண்டுமே இன்றியமையாதது. மாதவிடாய் சுழற்சியின் முதல் பாதியில் ஈஸ்ட்ரோஜன் அதிகமாக இருக்கும். இது பாலிகுலர் பிரீயட் என்று அழைக்கப்படுகிறது.

இந்த காலகட்டத்தில் முதல் இரண்டு வாரங்களில் கருமுட்டை விடுவிப்பு நடைபெறுகிறது. இதன் பின்னர் புரோஜெஸ்ட்டிரோன் ஹார்மோன் ஆதிக்கம் செலுத்துகிறது.
இனப்பெருக்க காலங்களில் சினைப்பைகள் ஈஸ்ட்ரோஜனின் பெரும்பகுதியை உருவாக்குகின்றன. இதுதவிர சிறுநீரகங்களின் மேல் உள்ள அட்ரீனல் சுரப்பிகள் மற்றும் அடிபோஸ் திசுக்கள் (உடல் கொழுப்பு) ஈஸ்ட்ரோஜனை சுரக்கின்றன. கர்ப்ப காலத்தில் நஞ்சுக்கொடியும் ஈஸ்ட்ரோஜனை சுரக்கிறது.

ஈஸ்ட்ரோஜன் செயல்பாடுகள்
ஈஸ்ட்ரோஜன் மனநிலையை ஒழுங்குபடுத்துவதில் முக்கிய பங்கு வகிக்கிறது. உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்தும் மூளையின் பாகங்கள் உட்பட உடலில் எல்லா இடங்களிலும் ஈஸ்ட்ரோஜன் செயல்படுகிறது.
மனநிலையை மாற்றும் செரோடோனின் ரசாயனத்தையும் மூளையில் உள்ள செரோடோனின் ஏற்பிகளின் எண்ணிக்கையையும் அதிகரிக்கிறது.
மூளையில் 'நல்ல உணர்வு' ரசாயனங்களான எண்டோர்பின்களின் உற்பத்தி மற்றும் விளைவுகளை மாற்றியமைக்கிறது. நரம்புகளை சேதங்களிலிருந்து பாதுகாத்தல் மற்றும் நரம்பு வளர்ச்சியைத் தூண்டுகிறது.

சினைப்பைகள் கருமுட்டையை வெளியிடும் போது, கர்ப்பத்திற்கு தயார்படுத்த கருப்பையின் எண்டோமெட்ரியம் புறணியை அடர்த்தியாக்குகிறது. கருமுட்டை வெளிவரும் நாட்களில் ஈஸ்ட்ரோஜன் உச்சத்தை அடைகிறது. இது மிகவும் வளமான காலம். கர்ப்பப்பை சளிச்சுரப்பை அதிகரித்து கருவுறுதல் நிகழ, விந்தணு நீந்த உதவுகிறது.
பருவமடையும் போது ஈஸ்ட்ரோஜன் அளவுகள் உயரும். மார்பகங்கள் மற்றும் ஒட்டுமொத்த உடல் அமைப்பில் மாற்றங்கள் ஏற்பட்டு இரண்டாம் நிலை பாலின பண்புகளுக்கு வழிவகுக்கிறது. சீரான மாதவிடாய் சுழற்சி நடைபெற புரோஜெஸ்ட்டிரோன் ஹார்மோனுடன் முக்கியப் பங்கு வகிக்கிறது.
இந்த ஹார்மோன்கள் மாதவிடாயை சீராக வைத்திருக்க ஒரு நுட்பமான சமநிலையில் இணைந்து செயல்படுகின்றன. தாம்பத்தியத்திற்கு வசதியாக யோனி சுவர்களை மென்மையாகவும், மீள்தன்மையுடனும், உயவூட்டுவதாகவும் வைத்து, வலியைக் குறைக்கிறது.

மெனோபாஸ் காலம்
பெண்களுக்கு மாதவிடாய் நிற்கும் மெனோபாஸ் காலத்தில் ஈஸ்ட்ரோஜன் சுரக்கும் அளவுகுறையும். இது மாதவிடாய் நிறுத்தத்திற்கு சில காலங்களுக்கு முன்பே ஆரம்பிக்கும். தொடர்ந்து 12 மாதங்களுக்கு மாதவிடாய் இல்லாதபோது அதிகாரப்பூர்வமாக மெனோபாஸ் தொடங்குகிறது. இது பொதுவாக 51 வயதில் நடக்கும்.
இந்த வயது நபருக்கு நபர் வேறுபடும். மாதவிடாய் நின்றவுடன், ஈஸ்ட்ரோஜன் அளவுகள் குறைந்து, யோனி வறட்சி, மனநிலை மாற்றங்கள், இரவில் வியர்த்தல் போன்ற அறிகுறிகள் காணப்படும்.
ஈஸ்ட்ரோஜன் குறைபாடு காரணமாக மனநிலை மாற்றங்கள் அடிக்கடி ஏற்படும். ஒழுங்கற்ற மாதவிடாய் சுழற்சி, தலைவலி, சிறுநீர்ப் பாதை தொற்று ஏற்பட வாய்ப்பு உண்டு.

ஈஸ்ட்ரோஜன் ஹார்மோன் சமநிலை ஏற்படுத்தும் உணவுகள்:
ஆளி விதைகள் மற்றும் அலிசி விதைகள் (பிளாக் சீட்), சோயா பீன் இவைகளில் உள்ள பைட்டோ ஈஸ்ட்ரோஜன்கள், ஐசோபிளேவன் போன்றவை ஈஸ்ட்ரோஜன் சமநிலைக்கு உதவும்.
பாலுக்கு மாற்றாக சோயா பால் குடிக்கலாம். உலர்ந்த அத்திப்பழம், பேரீச்சம்பழம், கருப்பு திராட்சைப்பழம், பூண்டு, பெருங்காயம், எள் விதைகள், முட்டைக்கோஸ், காலிபிளவர், பிரக்கோலி, வேர்க்கடலை, பாதாம், பிஸ்தா, வால்நட், பெர்ரி வகை பழங்கள், கருஞ்சீரகம், பெருஞ்சீரகம், கோதுமை ஆகியவை நல்லது.
மன அழுத்தத்தை நீக்க இறை பிரார்த்தனை, தியானம், உடற்பயிற்சி செய்ய வேண்டும். போதுமான நேரம் இரவில் தூங்க வேண்டும்.