search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "PSLC C-42"

    பூமி கண்காணிப்பு செயற்கைகோளை, பி.எஸ்.எல்.வி. சி-42 ராக்கெட்டில் பொறுத்தி, வரும் ஆகஸ்டு மாதம் விண்ணில் செலுத்த இஸ்ரோ திட்டமிட்டு உள்ளது என்று இஸ்ரோ விஞ்ஞானிகள் கூறினர்.
    சென்னை:

    இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) தற்போது பி.எஸ்.எல்.வி. சி-42 ராக்கெட்டை விண்ணில் ஏவுவதற்காக ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ்தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் உள்ள முதலாவது ஏவுதளத்தில் ஒருங்கிணைப்பு பணிகள் நடந்து வருகின்றன. இந்த ராக்கெட்டில் செலுத்துவதற்காக 800 முதல் 1,000 கிலோ எடைகொண்ட பூமி கண்காணிப்பு செயற்கைகோளை இஸ்ரோ வடிவமைத்து வருகிறது.

    மேலும் வெளிநாடுகளைச் சேர்ந்த 250 கிலோ எடைகொண்ட 20 முதல் 30 செயற்கைகோள்களையும் இணைத்து வரும் ஆகஸ்டு மாதம் விண்ணில் ஏவ இஸ்ரோ திட்டமிட்டு உள்ளது. இதில் வெளிநாடுகளைச் சேர்ந்த புதிய வாடிக்கையாளர்களும் தங்கள் செயற்கைகோள்களை விண்ணில் ஏவுவதற்காக இஸ்ரோவிடம் அளித்து உள்ளனர். இவற்றை செலுத்துவதற்கான ஆயத்தபணியில் விஞ்ஞானிகள் ஈடுபட்டுள்ளனர்.

    இந்த ஆண்டு ஏவப்படும் 4-வது ராக்கெட் பி.எஸ்.எல்.வி. சி-42 ஆகும். அதில் பி.எஸ்.எல்.வி. ரகத்தில் 3-வதாக உள்ளது.

    வெளிநாடுகளில் உள்ள வாடிக்கையாளர்களிடம் உள்ள செயற்கைகோள்களை வாங்கி இஸ்ரோவுக்கு அளித்து வரும் ஆன்ட்ரிக்ஸ் நிறுவனம் தற்போது பி.எஸ்.எல்.வி. சி-42 ராக்கெட் மூலம் விண்ணுக்கு ஏவுவதற்காக 20 முதல் 30 செயற்கைகோள்களை வாங்கி இஸ்ரோவுக்கு அளித்து உள்ளது.

    தகவல் தொடர்புக்காக 5 ஆயிரத்து 400 கிலோ எடையில் பிரமாண்டமாக தயாரிக்கப்பட்ட ‘ஜி.சாட்- 11’ செயற்கைகோளை பிரெஞ்சு கயானாவில் இருந்து ஐரோப்பிய நாட்டு ராக்கெட்டில் விண்ணில் செலுத்தவும் இஸ்ரோ திட்டமிட்டு உள்ளது. இதற்கான இறுதிகட்ட சோதனை பெங்களூருவில் உள்ள இஸ்ரோ ஆய்வு மையத்தில் நடந்து வருகிறது. விரைவில் இதை விண்ணில் செலுத்தும் தேதி அறிவிக்கப்படும்.

    இஸ்ரோ இதுவரை 237 வெளிநாட்டு வாடிக்கையாளர்களின் செயற்கைகோள்களை விண்ணில் செலுத்தி உள்ளது.

    அதேபோன்று ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள விண்வெளி ஆய்வு மையத்தில் ராக்கெட்டுகள் ஆய்வு செய்யும் ஆய்வகம் ரூ.630 கோடியிலும், ராக்கெட் ஒருங்கிணைப்பு வசதி கொண்ட மையம் ரூ.475 கோடி மதிப்பிலும் அமைக்கும் பணி நடந்து வருகிறது. இந்தப்பணிகள் அனைத்தும் நடப்பாண்டு இறுதியில் முடிவடைந்து செயல்பாட்டுக்கு வர உள்ளது.

    அதற்கு பிறகு முதல் ஏவுதளத்தில் இருந்து 15 ராக்கெட்டுகளையும், 2-வது ஏவுதளத்தில் இருந்து 11 ராக்கெட்டுகளையும் ஏவும் திறனை ஸ்ரீஹரிகோட்டா விண்வெளி ஆய்வு மையம் பெறும்.

    இந்த தகவல்களை இஸ்ரோ விஞ்ஞானிகள் கூறினார்கள். 
    ×