search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "PulwamaAttack"

    காஷ்மீரில் நுழைய முயன்ற 2 பாகிஸ்தான் போர் விமானங்கள் ராணுவத்தினால் விரட்டியடிக்கப்பட்டதையடுத்து, பயணிகள் விமானங்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. #IndianAirForce #PakistanAFjetsChased
    ஸ்ரீநகர்:

    புல்வாமா தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக, ஜம்மு காஷ்மீரில் உள்ள எல்லைக் கட்டுப்பாட்டுக் கோடு பகுதியில் உள்ள பயங்கரவாத முகாம்களை அழிக்கும் நடவடிக்கையை இந்திய ராணுவம் மேற்கொண்டது. நேற்று  இந்திய விமானப்படை விமானங்கள், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதிக்குள் ஊடுருவி பயங்கரவாதிகளின் முகாமை குறிவைத்து சரமாரியாக குண்டுகளை வீசின. இதில் பயங்கரவாத முகாம் அழிக்கப்பட்டது. அதன் பின்னர் இரு நாடுகளுக்கிடையிலான பதற்றம் அதிகரித்துள்ளது.

    இந்நிலையில்  காஷ்மீர் வான் எல்லைப் பகுதிக்குள் இன்று காலை நுழைய முயன்ற பாகிஸ்தானின் 2 எஃப்16 ரக போர் விமானங்களை இந்திய ராணுவத்தினர் விரட்டியடித்தனர்.



    இதையடுத்து காஷ்மீர் வான் பகுதியில் பயணிகள் விமானங்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. போர் விமானங்கள் தவிர எந்த விமானங்களும் பறக்கக்கூடாது என கூறப்பட்டுள்ளது. அத்துடன், காஷ்மீரின் ஸ்ரீநகர், லே, பதான்கோட் ஆகிய விமான நிலையங்களுக்கு உச்சகட்ட பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.

    இதற்கிடையே, எல்லை தாண்டி ரஜோரி செக்டாரில் ஊடுருவிய பாகிஸ்தான் விமானங்கள், சிறிய ரக குண்டுகளை வீசியிருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. இதில் சேதம் ஏற்பட்டதாக தெரியவில்லை.  #IndianAirForce #PakistanAFjetsChased
    பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாத அமைப்புகள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என அமெரிக்கா அந்நாட்டிற்கு வலியுறுத்தி உள்ளது. #AmericaAdjoursPakistan #PulwamaAttack
    வாஷிங்டன்:

    புல்வாமா தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக, ஜம்மு காஷ்மீரில் உள்ள எல்லைக் கட்டுப்பாட்டுக் கோடு பகுதியில் உள்ள பயங்கரவாத முகாம்களை அழிக்கும் நடவடிக்கையை இந்திய ராணுவம் மேற்கொண்டது. நேற்று  இந்திய விமானப்படை விமானங்கள், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதிக்குள் ஊடுருவி பயங்கரவாதிகளின் முகாமை குறிவைத்து சரமாரியாக குண்டுகளை வீசின. இதில் பயங்கரவாத முகாம் அழிக்கப்பட்டது.

    இந்த பதிலடி தாக்குதலுக்கு பல்வேறு நாடுகள் ஆதரவு தெரிவித்து வருகின்றன. இந்நிலையில் அமெரிக்கா வெளியுறவுத்துறை மந்திரி மைக் பாம்பியோ ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-

    இந்திய விமானப்படையினர், பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாத அமைப்புகள் மீது நேற்று நடத்திய தாக்குதலையடுத்து, இந்திய வெளியுறவு துறை மந்திரி சுஷ்மா சுவராஜ் உடன் பேசினேன். அப்போது, பிராந்திய பாதுகாப்பு மற்றும் நாட்டின் அமைதியை பராமரிப்பது தொடர்பாக அவரிடம் எடுத்துரைத்தேன்.

    இதேபோல் பாகிஸ்தான் வெளியுறவு துறை மந்திரி குரேஷியிடம் பேசினேன். அவரிடம், பாகிஸ்தானில் உள்ள அனைத்து  பயங்கரவாத அமைப்புகள் மீதும் உடனடியாக கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்தேன்.



    இரு நாடுகளும் ராணுவ நடவடிக்கையை தவிர்த்துவிட்டு, நேரடியாக கலந்துரையாடி இந்த விவகாரத்தில் சுமூகமான தீர்வை கொண்டு வர வேண்டும் என இரு நாடுகளின் மந்திரிகளிடமும் வலியுறுத்தி உள்ளேன்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    இதேபோல் பிரான்ஸ், ஆஸ்திரேலியா போன்ற நாடுகளும், இந்தியா-பாகிஸ்தான் இடையே சமரசம் பிறக்க வேண்டும் என கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.  #AmericaAdjoursPakistan #PulwamaAttack

    காஷ்மீர் மாநிலத்தில் பிரிவினைவாத இயக்கங்களின் தலைவர்கள் கைது செய்யப்பட்டதை தொடர்ந்து அசம்பாவிதங்களை தடுக்கும் வகையில் 100 கம்பெனி துணை ராணுவப்படை அங்கு விரைந்துள்ளது. #Centredeployforces #100companiesforces #JammuKashmir #pulwamaattack
    ஜம்மு:

    காஷ்மீர் மாநிலத்தில் பாகிஸ்தானுக்கு ஆதரவாக செயல்பட்டு வரும் பிரிவினைவாத இயக்கங்களின் தலைவர்களான யாசின் மாலிக், அப்துல் ஹமித் பயாஸ் உள்ளிட்டவர்களை போலீசார் கைது செய்துள்ளனர். சிலர் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டுள்ளனர். மேலும் சிலரை போலீசார் தேடி வருகின்றனர்.

    இந்த அதிரடி கைது நடவடிக்கைக்கு அங்குள்ள மற்ற பிரிவினைவாத இயக்கங்கள் கண்டனம் தெரிவித்துள்ளன. இதுபோன்ற நடவடிக்கைகள் காஷ்மீரில் பதற்றத்தை இன்னும் அதிகரிக்க வைக்கும் என அந்த இயக்கங்களை சேர்ந்த பிரமுகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

    இந்த கருத்தை ஆமோதிக்கும் வகையில் இன்று பேட்டியளித்த காஷ்மீர் முன்னாள் முதல் மந்திரி மெஹ்பூபா முப்தி மத்திய அரசின் இந்த நடவடிக்கை நிலைமையை மேலும் தீவிரமாக்கும் என குறிப்பிட்டுள்ளார்.



    இதற்கிடையில், அரசியலமைப்பு சட்டம்  35A-வின்கீழ் ஜம்மு-காஷ்மீர் மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கப்படுவது தொடர்பாக சுப்ரீம் கோர்ட் விரைவில் விசாரணை நடத்துகிறது.

    இந்நிலையில், காஷ்மீரில் வன்முறை சம்பவங்கள் ஏற்படாமல் தடுக்கவும் சட்டம்-ஒழுங்கை பாதுகாக்கவும் கூடுதலாக துணை ராணுவப்படையினரை அனுப்பி வைக்குமாறு மாநில அரசின் சார்பில் கேட்டுக்கொள்ளப்பட்டது.

    இதைதொடர்ந்து, மத்திய ரிசர்வ் படையை சேர்ந்த 45 கம்பெனி வீரர்கள், எல்லைப் பாதுகாப்பு படையை சேர்ந்த 35 கம்பெனி வீரர்கள், ஷாஸ்திர சீமா பல் படையை சேர்ந்த 10 கம்பெனி வீரர்கள், இந்தோ-திபெத்திய எல்லை போலீஸ் படையை சேர்ந்த 10 கம்பெனி வீரர்கள் என 100 கம்பெனி வீரர்கள் (ஒரு கம்பெனி வீரர்கள் என்பது சுமார் 50 வீரர்கள் கொண்ட குழுவாகும்) காஷ்மீர் மாநிலத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டதாக மத்திய உள்துறை அமைச்சக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    இந்த படையினர் பதற்றம் நிறைந்த பகுதிகளில் பணியமர்த்தப்பட்டு சட்டம்-ஒழுங்கை பாதுகாக்கும் கண்காணிப்பு மற்றும் வன்முறையாளர்கள் மீது நடவடிக்கை எடுப்பது போன்ற பணிகளில் ஈடுபடுத்தப்படுவார்கள். #Centredeployforces #100companiesforces  #JammuKashmir #pulwamaattack
    காஷ்மீர் தாக்குதல் கொடூரமானது மற்றும் கோழைத்தனமானது என ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் கண்டனம் தெரிவித்துள்ளது. #PulwamaAttack #UN #AntonioGuterres
    நியூயார்க் :

    காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தில் கடந்த 14-ந்தேதி துணை ராணுவவீரர்கள் சென்ற வாகனம் மீது, வெடிகுண்டுகள் நிரப்பப்பட்ட காரை மோதி தற்கொலைப்படை பயங்கரவாதி நடத்திய தாக்குதலில் 40 வீரர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர்.

    இந்தியா மட்டும்இன்றி உலக நாடுகளை கடும் அதிர்ச்சிக்குள்ளாக்கிய இந்த தாக்குதலுக்கு பாகிஸ்தானை சேர்ந்த ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாத இயக்கம் பொறுப்பு ஏற்றது. அமெரிக்கா, ரஷியா உள்பட பல்வேறு உலக நாடுகள் இந்த தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்தன.

    ஐ.நா.சபை பொதுச் செயலாளர் ஆண்டனியோ குட்டரெஸ் இந்த தாக்குதலை வன்மையாக கண்டித்ததோடு, தாக்குதலுக்கு காரணமானவர்கள் நீதியின் முன் நிறுத்தப்பட வேண்டும் எனவும் வலியுறுத்தினார்.

    இந்தநிலையில் காஷ்மீர் தாக்குதல் கொடூரமானது மற்றும் கோழைத்தனமானது என ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் கண்டித்துள்ளது. இது தொடர்பாக ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:-

    காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தில் 40 துணை ராணுவவீரர்களை பலி கொண்ட ஜெய்ஷ்-இ-முகமது அமைப்பின் பயங்கரவாத தாக்குதல் கோழைத்தனமான செயல். இந்த தாக்குதலை ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் வன்மையாக கண்டிக்கிறது. இந்த தாக்குதலை ஏற்பாடு செய்தவர்கள், அதற்கு நிதியுதவி அளித்தவர்கள், அதனை வழிநடத்தியவர்கள் என அனைத்து தரப்பினரும் நீதியின் முன் நிறுத்தப்பட வேண்டும்.

    ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் உறுப்பினர்களாக உள்ள அனைத்து நாடுகளும், புல்வாமா தாக்குதலில் உயிர் இழந்த வீரர்களின் குடும்பங்களுக்கு ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துள்ளன. இந்த மோசமான அனுபவத்தில் இருந்து இந்திய மக்களும், அரசும் விரைவில் மீளவேண்டும்.

    உலக அமைதிக்கும், பாதுகாப்புக்கும் பயங்கரவாதம் மிகுந்த அச்சுறுத்தலாக உள்ளது. எந்த வடிவிலான பயங்கரவாதத்தையும் ஏற்க முடியாது. எங்கே நடந்தாலும், எதற்காக நடந்தாலும், எப்போது நடந்தாலும் ஒருபோதும் பயங்கரவாதத்தை ஆதரிக்க முடியாது.

    பயங்கரவாத நடவடிக்கைகளால் உலக அமைதிக்கும், பாதுகாப்புக்கும் பாதிப்பு ஏற்படும் போது அனைத்து நாடுகளும் சர்வதேச சட்டங்கள் மற்றும் ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் தீர்மானங்களுக்கு உட்பட்டு பயங்கரவாதத்தை எதிர்கொள்ள வேண்டும்.

    இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

    பாகிஸ்தானை சேர்ந்த ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாத அமைப்பின் தலைவரான மசூத் ஆசாரின் பெயரை சர்வதேச பயங்கரவாதிகளின் பட்டியலில் சேர்க்க வேண்டும் என்கிற இந்தியாவின் கோரிக்கைக்கு, சீனா தொடர்ந்து முட்டுக்கட்டை போட்டு வரும் நிலையில் ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலின் இந்த அறிக்கை முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது. #PulwamaAttack #UN #AntonioGuterres 
    பயங்கரவாத அமைப்புகளுக்கு செல்லும் பணத்தை தடுத்து நிறுத்துவதற்கு போதுமான நடவடிக்கை எடுக்க தவறிய பாகிஸ்தான் அரசுக்கு சர்வதேச நிதி நடவடிக்கை கண்காணிப்பு அமைப்பு கண்டனம் தெரிவித்துள்ளது. #PulwamaAttack #PakistanMFNstatus #WorldBank #FATFplenary
    பாரிஸ்:

    புல்வாமாவில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதல் எதிரொலியாக மிகவும் முக்கியத்துவமான நாடு என வர்த்தகத்துக்கான முன்னுரிமையுடன் பாகிஸ்தானுக்கு அளிக்கப்பட்ட சிறப்பு அந்தஸ்தை இந்தியா ரத்து செய்துள்ளது.

    பாகிஸ்தானில் இருந்து இந்தியாவுக்கு இறக்குமதி செய்யும் அனைத்து பொருட்களுக்கும் இனி 200 சதவீதம் அடிப்படை இறக்குமதி வரியாக (basic customs duty) விதிக்கப்படும். இந்த புதிய நடைமுறை உடனடியாக அமல்படுத்தப்படுகிறது என மத்திய நிதித்துறை மந்திரி அருண் ஜெட்லி அறிவித்தார்.

    இதற்கிடையில், பாகிஸ்தானில் இருந்து அந்நாட்டு அரசின் ஆதரவுடன் இயங்கிவரும் ஜெய்ஷ்-இ-முஹம்மத் பயங்கரவாத இயக்கத்துக்கு புல்வாமா தாக்குதலில் உள்ள தொடர்புகளை சர்வதேச நிதி நடவடிக்கை குழுவிடம் முறையீடு செய்ய இந்திய அரசு தீர்மானித்தது.


    மூன்றாண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் சர்வதேச நிதி நடவடிக்கை குழுவின் முக்கிய சீராய்வு ஆலோசனை கூட்டம் கடந்த 17-ம் தேதி தொடங்கி இன்றுடன் முடிவடையும் நிலையில், இந்தியாவில் பயங்கரவாத தாக்குதல்களை ஆதரித்துவரும் பாகிஸ்தானுக்கு எதிராக இந்த அமைப்பிடம் இந்தியா  உரிய ஆதாரங்களுடன் புகார் அளித்தது.

    இந்த புகாரின் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டால் தற்போது கடுமையான நிதி நெருக்கடியில் சிக்கியுள்ள பாகிஸ்தான், இனி உலக வங்கி, ஐ.எம்.எப். எனப்படும் சர்வதேச நிதியம், ஆசிய மேம்பாட்டு வங்கி மற்றும் ஐரோப்பிய யூனியன் வங்கி ஆகியவற்றில் இருந்து எந்த நிதியும் பெற முடியாது என்பது குறிப்பிடத்தக்கது.

    இந்நிலையில், பயங்கரவாத அமைப்புகளுக்கு செல்லும் பணத்தை தடுத்து நிறுத்துவதற்கு போதுமான நடவடிக்கை எடுக்க தவறிய பாகிஸ்தான் அரசுக்கு சர்வதேச நிதி நடவடிக்கை கண்காணிப்பு அமைப்பு இன்று கண்டனம் தெரிவித்துள்ளது.

    கடந்த ஜனவரி மாதம் வரையிலான நிலவரப்படி பயங்கரவாதிகளுக்கு செல்லும் நிதியுதவிகளை தடுத்து நிறுத்தும் கடமையில் பாகிஸ்தான் மிகவும் சுணக்கம் காட்டி வந்துள்ளது. இதற்காக விதிக்கப்பட்ட இறுதிக்கெடுவான வரும் மே மாதத்துக்குள் இதுதொடர்பாக பாகிஸ்தான் அரசு விரைந்து செயலாற்றாமல் போனால் எங்களது அமைப்பின் கருப்பு பட்டியலில் அந்நாட்டை வைக்க நேரிடும் எனவும் சர்வதேச நிதி நடவடிக்கை கண்காணிப்பு அமைப்பு எச்சரித்துள்ளது.

    பிரான்ஸ் நாட்டின் தலைநகரான பாரிஸ் நகரில் இருந்து இயங்கிவரும் சர்வதேச நிதி நடவடிக்கை குழு ஈரான் மற்றும் வடகொரியா உள்ளிட்ட நாடுகளை ஏற்கனவே கரும்புள்ளி குத்தப்பட்ட நாடுகளின் பட்டியலில் வைத்துள்ளது குறிப்பிடத்தக்கது. #PulwamaAttack #PakistanMFNstatus  #WorldBank #FATFplenary
    புல்வாமா தாக்குதலையடுத்து பாகிஸ்தானுடனான அனைத்து விளையாட்டு உறவுகளையும் இந்தியா முறித்துக்கொள்ள வேண்டும் என முன்னாள் வீரர் சவுரவ் கங்குலி கூறியுள்ளார். #SouravGanguly #PulwamaAttack
    புதுடெல்லி:

    காஷ்மீர் மாநிலத்தின் புல்வாமா மாவட்டத்தில் கடந்த வாரம் வியாழக்கிழமை ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாத இயக்கம் நடத்திய தற்கொலை தாக்குதலில் துணை ராணுவ வீரர்கள் 40 பேர் வீர மரணம் அடைந்தனர். இச்சம்பவத்திற்கு பலரும் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். கிரிக்கெட் வீரர்களும் இந்த தாக்குதலை வன்மையாகக் கண்டித்துள்ளனர்.



    உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில், பாகிஸ்தானுடனான போட்டியில் இந்தியா கலந்துகொள்ளக் கூடாது என இந்திய கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் கருத்து தெரிவித்திருந்தார். இதுதொடர்பாக கிரிக்கெட் வாரியம் ஆலோசனை நடத்தி வருகிறது.

    இந்நிலையில் டெல்லியில் நேற்று தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் கலந்து கொண்ட முன்னாள் இந்திய கிரிக்கெட் அணி கேப்டனான சவுரவ் கங்குலி பேசியதாவது:

    உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டிகளில் 10 அணிகள் பங்கேற்கின்றன. ஒவ்வொரு அணியும் மற்ற 9 அணிகளுடன் மோத வேண்டும். இம்முறை உலக கோப்பையில் இந்தியா ஒரு போட்டியில் விளையாடாமல் போனால், அணிக்கு பெரிய இழப்பு ஏதும் இல்லை.

    புல்வாமாவில் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதல் மிகவும் மோசமான ஒரு நிகழ்வு ஆகும். இரு நாடுகளுக்கிடையே எவ்வித தொடர்பும் இருத்தல் கூடாது. பாகிஸ்தானுடன் கிரிக்கெட் மட்டுமின்றி ஹாக்கி, கால்பந்து போன்ற அனைத்து விளையாட்டு உறவுகளையும் இந்தியா முறிக்க வேண்டும்.

    இந்த தாக்குதல் தொடர்பாக இந்தியர்கள் கூறும் கருத்துக்கள் சரியானதாகும். உலக கோப்பையில் இந்தியா பாகிஸ்தானுடன் விளையாட தேவையில்லை என கூறும்  இந்தியர்களின் மன உணர்வு நன்றாக புரிகிறது. இது குறித்து அரசு உறுதியான முடிவை மேற்கொள்ள வேண்டும் என எதிர்பார்க்கிறேன்.   

    இவ்வாறு அவர் பேசினார். #SouravGanguly #PulwamaAttack
    உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்த காவலர் ஒருவர், புல்வாமா தாக்குதலில் உயிரிழந்த வீரர்களின் குடும்பங்களுக்கு நிதி திரட்டி வருகின்றார். #PulwamaAttack #ConstableCollectingFund
    ராம்பூர்:

    ஜம்மு காஷ்மீர் மாநிலம் புல்வாமாவில் கடந்த வாரம் வியாழக்கிழமை ஜெய்ஷ் இ முகமது பயங்கரவாத அமைப்பு நடத்திய தற்கொலைத் தாக்குதலில் 40 துணை ராணுவ வீரர்கள் உயிரிழந்தனர். இதனையடுத்து நாட்டின் மக்கள் அனைவரும்  தங்களால் முடிந்த உதவிகளை இறந்த வீரர்களின் குடும்பங்களுக்கு செய்து வருகின்றனர்.  

    இந்நிலையில் மும்பையைச் சேர்ந்த தனியார் அமைப்பு ஒன்று ராணுவ வீரர்களின் குடும்பங்களுக்கு ரூ.17 லட்சம் நிதி திரட்டி வழங்கியது. அந்த வகையில் உத்தரபிரதேசத்தைச் சேர்ந்த போலீஸ் கான்ஸ்டபிள் ஃபெரோஸ் கான், இறந்த ராணுவ வீரர்களின் குடும்பங்களுக்கு நிதி திரட்டுவதற்காக, தனி ஆளாக ராம்பூர் பகுதியில் 3 நாள் பயணம் மேற்கொண்டுள்ளார்.

    இது குறித்து ஃபெரோஸ் கூறுகையில், ‘பயங்கரவாத தாக்குதலில் உயிரிழந்த வீரர்களின் குடும்பங்களுக்கு உதவி செய்ய விரும்பினேன். இதற்காக 3 நாள் அனுமதி கேட்டு, அவர்களுக்காக நிதி திரட்டி வருகிறேன். என்னால் முடிந்தது இதுதான். எனக்கு பலரும் ஆதரவு தெரிவித்து வருகின்றனர்’ என்றார்.  #PulwamaAttack #ConstableCollectingFund
    ராஜஸ்தான் மாநிலம் பிகானர் மாவட்டத்தில் உள்ள பாகிஸ்தானியர்கள் 48 மணி நேரத்திற்குள் வெளியேற வேண்டும் என கலெக்டர் உத்தரவு பிறப்பித்துள்ளார். #PulwamaAttack #BikanerCollectorAction
    பிகானர்:

    காஷ்மீர் மாநிலத்தின் தெற்கு பகுதியில் உள்ள புல்வாமா மாவட்டத்தில் கடந்த வாரம் வியாழக்கிழமை ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாத இயக்கம் நடத்திய தற்கொலை தாக்குதலில் துணை ராணுவ வீரர்கள் 40 பேர் வீர மரணம் அடைந்தனர்.

    பல்வேறு நாடுகளின் தலைவரும், அமைப்புகளும் இந்த கோர தாக்குதலுக்கு எதிர்ப்பும், கண்டனமும் தெரிவித்து வருகின்றனர். தாக்குதலைக் கண்டித்து பல்வேறு இடங்களில் போராட்டம் நடத்தப்பட்டு வருகிறது.

    இந்நிலையில் ராஜஸ்தான் மாநிலம் பிகானர் கலெக்டர் குமார் பால் கவுதம், அதிரடியாக நடவடிக்கை  மேற்கொண்டுள்ளார்.  பிகானர் மாவட்டத்தில் வசிக்கும் பாகிஸ்தானியர்கள் அடுத்த 48 மணி நேரத்தில் மாவட்டத்தை விட்டு வெளியேற வேண்டுமென உத்தரவிட்டு சுற்றறிக்கை அனுப்பி உள்ளார். பாகிஸ்தானைச் சேர்ந்த பயங்கரவாத அமைப்பு புல்வாமாவில் நடத்திய தாக்குதலைத் தொடர்ந்து சட்டம் ஒழுங்கு பிரச்சனை ஏற்படலாம் என்பதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

    மாவட்டத்தில் உள்ள  ஓட்டல்கள், தங்கும் விடுதிகள் என அனைத்து நிறுவனங்களுக்கும் சுற்றறிக்கை  அனுப்பப்பட்டுள்ளது. இந்த உத்தரவு  2 மாதங்கள் வரை செல்லுபடியாகும். மேலும் பாகிஸ்தான் சிம் கார்டுகளை பயன்படுத்தவும் தடை விதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.  #PulwamaAttack #BikanerCollectorAction
    புல்வாமா தாக்குதலில் பாகிஸ்தானைச் சேர்ந்த பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 40 வீரர்கள் உயிரிழந்த நிலையில், இதற்கு கண்டனம் தெரிவிக்கும் விதமாக இந்திய திரை தொழிலாளர் சங்கம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. #PulwamaAttack #PakistanActorsBanned
    மும்பை:

    ஜம்மு காஷ்மீர் மாநிலம் புல்வாமாவில் கடந்த வாரம் வியாழக்கிழமை ஜெய்ஷ் இ முகமது பயங்கரவாத அமைப்பு நடத்திய, தற்கொலைத் தாக்குதலில் 40 துணை ராணுவ வீரர்கள் உயிரிழந்தனர். இந்த தாக்குதலுக்கு இந்திய ராணுவம் தக்க பதிலடி கொடுக்க வேண்டும் என பல்வேறு தரப்பினரும் கூறி வருகின்றனர்.

    இதன் காரணமாக பல்வேறு அமைப்பினரும் பாகிஸ்தானுக்கு கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் அனைத்து இந்திய திரை தொழிலாளர் சங்கம் தங்கள் எதிர்ப்பை வெளிப்படுத்தும் வகையில் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

    இந்த அறிக்கையில், ‘ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் புல்வாமாவில் சிஆர்பிஎஃப் வீரர்கள் மீது பயங்கரவாதிகள் நடத்திய கோர தாக்குதலுக்கு கடுமையான கண்டனத்தை அனைத்து இந்திய திரைத் தொழிலார்கள் சங்கம் தெரிவிக்கின்றது. வீரர்களை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு எங்கள் ஆழ்ந்த இரங்கலை தெரிவிக்கின்றோம். மனிதநேயமற்ற இந்த தாக்குதலுக்கும், பயங்கரவாதத்திற்கும் எதிராக நாங்கள் என்றும் துணை நிற்போம்.



    இந்திய திரையுலகில் பாகிஸ்தானைச் சேர்ந்த எந்த திரைப்பட கலைஞர்களும் பணியாற்ற தடை விதிக்கிறோம். ஒருவேளை எந்த அமைப்பாவது பாகிஸ்தானைச் சேர்ந்த கலைஞர்களை பயன்படுத்தினால், அந்த அமைப்பு தடைவிதிக்கப்பட்டு, உறுப்பினர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்படும். தேசத்திற்கே முதல் முக்கியத்துவம். தேசத்திற்காக துணை நிற்போம்’ என குறிப்பிடப்பட்டுள்ளது. #PulwamaAttack #PakistanActorsBanned

    பிரதமர் மோடியை இன்று சந்தித்த அர்ஜென்டினா அதிபர் முன்னிலையில் 10 புதிய ஒப்பந்தங்கள் செய்யப்பட்டன. பயங்கரவாதத்துக்கு எதிராக இருநாட்டு தலைவர்களும் கூட்டுப் பிரகடனம் வெளியிட்டனர். #MauricioMacri #Modi #Pulwamaattack #tacklingterror
    புதுடெல்லி:

    அரசுமுறை பயணமாக இந்தியா வந்துள்ள அர்ஜென்டினா அதிபர் மவுரிகியோ மக்ரி டெல்லியில் இன்று பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து இருநாடுகளுக்கு இடையிலான பல்வேறு தரப்பு நட்புறவுகளை மேம்படுத்துவது தொடர்பாக முக்கிய ஆலோசனை நடத்தினார்.

    பின்னர், வெளியுறவுத்துறை செயலாளர் விஜய் கோகலே மற்றும் இருநாட்டு உயரதிகாரிகள் மட்டத்திலான முக்கிய பேச்சுவார்த்தை நடைபெற்றது. அப்போது இருநாடுகளுக்கும் இடையில் தகவல் தொழில்நுட்பம், தொலைத்தொடர்பு, அணுஎரிசக்தி, வேளாண்மை உள்ளிட்ட துறைகளில் 10 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையொப்பமாகின.

    பின்னர், இருநாட்டு தலைவர்களும் செய்தியாளர்கள் மத்தியில் உரையாற்றினர். அப்போது பேசிய மோடி, ‘பயங்கரவாதத்தை தூண்டிவிடும் சக்திகளிடம் பேச்சுவார்த்தை நடத்துவதற்கான நேரம் முடிந்து விட்டது என்பதை சமீபத்தில் நடந்த புல்வாமா தாக்குதல் நமக்கு காட்டியுள்ளது.

    பயங்கரவாதம் மற்றும் அதன் பின்னணியில் உள்ளவர்கள் மீது உலகநாடுகள் ஒன்றிணைந்து திடமான நடவடிக்கை எடுக்க வேண்டிய அவசியம் தற்போது ஏற்பட்டுள்ளது. இதை செய்வதில் நாம் காலம் தாழ்த்தினால் பயங்கரவாதத்தை ஊக்குவிப்பதாக அது அமைந்துவிடும்’ என்று குறிப்பிட்டார்.

    அவரது கருத்தை வழிமொழிந்த அர்ஜென்டினா அதிபர், பயங்கரவாதத்தை வேரறுக்க ஒருமித்த முடிவுடன் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று தெரிவித்தார்.

    சமீபத்தில் புல்வாமா தாக்குதலில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தாருக்கு எனது ஆழ்ந்த இரங்கல்களை தெரிவித்துக் கொள்கிறேன். அனைத்து வகையிலான பயங்கரவாத தாக்குதலையும் நாங்கள் வன்மையாக கண்டிக்கிறோம். மனிதத்துக்கு எதிரான இந்த பயங்கரவாத தீமையை எதிர்த்து உங்களுடன் ஒன்றிணைந்து போராடுவதில் நான் பெருமிதம் கொள்கிறேன் எனவும் அவர் குறிப்பிட்டார். #MauricioMacri #Modi #Pulwamaattack #tacklingterror 
    புல்வாமா தாக்குதலில் பாகிஸ்தானுக்கு தொடர்பு இருப்பதாக குற்றம்சாட்டப்பட்டு வரும் நிலையில், பாகிஸ்தான் தூதர் இன்று டெல்லியில் இருந்து தனது நாட்டிற்கு புறப்பட்டுச் சென்றார். #PulwamaAttack #PakistanEnvoy
    இஸ்லாமாபாத்:

    ஜம்மு காஷ்மீர் மாநிலம் புல்வாமா மாவட்டத்தில், பாகிஸ்தானைச் சேர்ந்த ஜெய்ஷ் இ முகமது பயங்கரவாத இயக்கம் நடத்திய தற்கொலைத் தாக்குதலில் பாதுகாப்பு படையினர் 40 பேர் உயிரிழந்தனர். பலர் காயமடைந்து மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். இந்த தாக்குதலுக்கு பிரதமர் மோடி உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சிகளின் தலைவர்கள் மற்றும் உலக நாடுகளின் தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர். 

    டெல்லியில் உள்ள பாகிஸ்தான் தூதர் சோகைல் மஹ்மூதுவை அழைத்து இந்தியா எதிர்ப்பை பதிவு செய்தது. அனுகூலமான நாடு என பாகிஸ்தானுக்கு வழங்கப்பட்ட அந்தஸ்தை திரும்ப பெற்றது. ஜம்மு காஷ்மீரில் பாகிஸ்தானுக்கு ஆதரவாக செயல்படும் பிரிவினைவாத தலைவர்களுக்கு வழங்கப்பட்ட போலீஸ் பாதுகாப்பு திரும்ப பெறப்பட்டது. பாகிஸ்தானுக்கான இந்திய தூதர் அஜய் பிகாரியை டெல்லிக்கு வரவழைத்து ஆலோசனை நடத்தப்பட்டது.

    ஆனால், புல்வாமா தாக்குதலுக்கும் தங்களுக்கும் எந்த தொடர்பும் இல்லை என பாகிஸ்தான் கூறியுள்ளது. பயங்கரவாத தாக்குதல் தொடர்பாக ஆதாரங்களை வழங்கினால் நடவடிக்கை எடுப்பதாகவும் கூறி உள்ளது.

    இந்நிலையில் பாகிஸ்தான் அரசும் டெல்லியில் உள்ள அந்நாட்டு தூதரை நாட்டிற்கு வரும்படி அழைத்தது. அதன்படி பாகிஸ்தான் தூதர் சோகைல் மஹ்மூத் டெல்லியில் இருந்து ஆலோசனை நடத்துவதற்காக தனது நாட்டுக்கு இன்று காலை புறப்பட்டுச் சென்றார். #PulwamaAttack #PakistanEnvoy
    புல்வாமா தாக்குதலையடுத்து அரசு எடுக்க வேண்டிய அடுத்தகட்ட நடவடிக்கை தொடர்பாக ஆலோசிக்க நாளை காலை டெல்லியில் அனைத்துக்கட்சி தலைவர்களின் அவசர கூட்டம் நடைபெறுகிறது. #Allpartymeeting #Parliamentlibrary #PulwamaAttack
    புதுடெல்லி:

    காஷ்மீர் மாநிலம், புல்வாமா மாவட்டத்தில் நேற்று பாகிஸ்தான் ஆதரவு பெற்ற பயங்கரவாத இயக்கத்தை சேர்ந்தவன் நடத்திய தற்கொலைப்படை தாக்குதலில் மத்திய துணை ராணுவப் படையை சேர்ந்த 40 வீரர்கள் கொல்லப்பட்டனர்.

    இதுதொடர்பாக, டெல்லியில் இன்று பிற்பகல் பாகிஸ்தான் தூதரை வரவழைத்து இந்திய உள்துறை அமைச்சகம் கண்டனம் தெரிவித்தது.  மேலும், மிகவும் முக்கியத்துவமான நாடு என வர்த்தகத்துக்கான முன்னுரிமையுடன் பாகிஸ்தானுக்கு அளிக்கப்பட்ட சிறப்பு அந்தஸ்தை இந்தியா ரத்து செய்தது. பாகிஸ்தானில் உள்ள இந்தியாவுக்கான தலைமை தூதரை உடனடியாக டெல்லி வருமாறு மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.



    இதைதொடர்ந்து, புல்வாமா தாக்குதலையடுத்து இந்திய அரசு எடுக்க வேண்டிய அடுத்தகட்ட நடவடிக்கை தொடர்பாக ஆலோசிப்பதற்காக நாளை காலை 11 மணியளவில் அனைத்துக்கட்சி தலைவர்களின் அவசர கூட்டம் நடைபெறுகிறது.

    பாராளுமன்றத்தில் உள்ள நூலக அரங்கில் நடைபெறும் நாளையை கூட்டத்தில் சில முக்கிய முடிவுகள் எடுக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. #Allpartymeeting #Parliamentlibrary #PulwamaAttack
    ×