search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Puratasi month"

    • திருமாலின் நாமத்தை ஜபித்து விஷ்ணுவை வழிபடுகிறார்கள்.
    • புரட்டாசி ஏகாதசியும் சிறப்பானதுதான்.

    சித்திரை தொடங்கிக் கணக்கிடப்படும் பன்னிரண்டு தமிழ் மாதங்களில் புரட்டாசி மாதம் ஆறாவது மாதம். இம்மாதம் முப்பத்தியோரு நாட்களை உடையது.

    `மாதங்களில் நான் மார்கழியாக இருக்கிறேன்` என்று கண்ணன் கீதையில் சொன்னாலும், அன்பர்கள் புரட்டாசியையும் பெருமாளுக்குரிய மாதமாகவே கருதுகிறார்கள்.


    திருமாலின் வடிவமான திருப்பதி வேங்கடவனின் ஆசி பெற விரும்பும் அன்பர்கள், வேங்கடாஜலபதியை விசேஷமாகப் புரட்டாசியில் வழிபடுகிறார்கள்.

    அதற்கு ஒரு காரணம் உண்டு. வெங்கடாஜலபதி திருப்பதியில் அவதரித்தது ஒரு புரட்டாசி மாத திருவோண நட்சத்திரத்தில் தான்.

    படிப்படியாய் மலையில் ஏறி திருப்பதி மலையப்பனை தரிசித்துப் பிரார்த்தனை செய்தால், நம்மை எப்படி கடக்க முடியும் என மலைக்க வைத்த துன்பங்களெல்லாம் படிப்படியாய்க் குறைந்து நிம்மதி தோன்றும் என்று அடியவர்கள் நம்புகிறார்கள்.

    வைணவர்கள் மட்டுமல்லாமல் சைவர்களில் பலரும் கூட புரட்டாசி சனிக்கிழமையன்று நெற்றியில் நாமம் இட்டுக் கொண்டு திருமாலின் நாமத்தை ஜபித்து விஷ்ணுவை வழிபடுகிறார்கள்.

    வேங்கடவனுக்கு மாவிளக்கு ஏற்றிப் பிரார்த்தனை செய்யும் மரபு பல குடும்பங்களில் வழிவழியாக வருகிறது. அவர்களெல்லாம் மாவிளக்கு ஏற்ற புரட்டாசி சனிக்கிழ மையைத்தான் தேர்ந்தெடுக்கிறார்கள்.

    புரட்டாசி காலஞ்சென்ற நம் குடும்ப முன்னோர்களை வழிபடுவதற்குரிய மாதமாகவும் கருதப் படுகிறது. முன்னோருக்கு நீர்க்கடன் செலுத்தும் மகாளய அமாவாசை புரட்டாசி மாதத்தில்தான் வருகிறது.

    பவுர்ணமி தொடங்கி அமாவாசை முடிய உள்ள பதினைந்து நாட்கள் அடங்கிய காலகட்டம் `மகாளய பட்சம்` எனப்படுகிறது. அந்தப் பதினைந்து நாட்களும் நம் முன்னோர் மேலுலகில் இருந்து வந்து நம்மோடு தங்கிச் செல்கிறார்கள் என்பதும் அந்த நாட்களில் அவர்களைப் பிரார்த்தனை செய்வதால் அவர்கள் ஆசியைப் பெறமுடியும் என்பதும் அன்பர்களின் நம்பிக்கை.

    பித்ருக்களுக்கு நீர்க்கடன் செலுத்துதல் பழங்காலம் தொட்டே தமிழர்களிடம் நிலவிவந்த ஒரு பழக்கம். திருக்குறளும் நீத்தாருக்கு நீர்க்கடன் செய்யும் அவசியத்தைப் பேசுகிறது.

    ஒருவன் தன் சம்பாத்தியத்தை ஐந்தாய்ப் பிரித்து அதில் ஒரு பங்கை நீத்தார் கடன் செலுத்தப் பயன்படுத்தவேண்டும் என்கிறார் திருவள்ளுவர்.

    `தென்புலத்தார் தெய்வம் விருந்து ஒக்கல்

    தான் என்றாங்கு

    ஐம்புலத்தாறு ஓம்பல் தலை'

    என்கிற திருக்குறளில் பித்ருக்களுக்கு நீர்க்கடன் செலுத்தவேண்டும் என்பதைச் சொல்லும்போது `காலமான முன்னோர், கடவுள், விருந்தினர், சுற்றத்தார், தான்` என்ற வரிசையில் பித்ருக்களை முதலில் வைக்கிறார் வள்ளுவர் என்பதும் கவனத்திற்குரியது.


    புரட்டாசி அமாவாசை மட்டுமா, புரட்டாசி ஏகாதசியும் சிறப்பானதுதான். அன்று உண்ணாநோன்பு மேற்கொண்டு பெருமாளைத் துளசியால் அர்ச்சித்து வழிபட்டுப் பலனடைகிறார்கள் பக்தர்கள்.

    தேவியை வழிபடும் நவராத்திரியும் இந்த மாதத்துப் பண்டிகைதான். இது பெண்களுக்கே உரிய பண்டிகை. `காளையர்க்கு ஓரிரவு சிவராத்திரி ஆனால் கன்னியர்க்கு ஒன்பதுநாள் நவராத்திரி' என்பன கண்ணதாசன் வரிகள்.

    அழகிய படிகளைக் கட்டி பொம்மைகளை அவற்றில் வரிசையாய்க் கொலு வீற்றிருக்கச் செய்து கொண்டாடப்படும் நவராத்திரி போன்றதொரு பண்டிகை உலகில் வேறெங்கும் இருப்பதாகத் தெரியவில்லை.

    மண் பொம்மைகளைச் செய்து அவற்றின் விற்பனை மூலம் கிடைக்கும் வருவாயைக் கொண்டு வாழும் கைவினைக் கலைஞர்கள் ஆண்டுதோறும் ஆவலாக எதிர்பார்ப்பது நவராத்திரிப் பண்டிகையைத் தான். வருடம் முழுவதற்குமான அவர்களின் வாழ்க்கைக்கு புரட்டாசியில் வரும் நவராத்திரி விற்பனைதான் வழி செய்கிறது.

    கவுரி விரதம், மகாலட்சுமி விரதம், தசாவதார விரதம் போன்ற பற்பல வித்தியாசமான விரதங்கள் எல்லாம் புரட்டாசியில்தான் வருகின்றன.

    புரட்டாசி ஆன்மிக மாதம் என்பதற்கு மேலும் ஓர் எடுத்துக்காட்டு வேண்டுமென்றால் பற்பல மகான்கள் பிறந்திருப்பது இந்த மாதத்தில்தான் என்பதைச் சொல்லலாம்.

    வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம் வாடிய வள்ளலார் புரட்டாசியில் பிறந்தவர்தான். திருவள்ளுவரின் புலால் உண்ணாமைக் கோட்பாட்டைத் தீவிரத்தோடு வலியுறுத்திய மகான் என்ற பெருமையும் அவருக்கு உண்டு.

    புரட்டாசி வள்ளலார் பிறந்த மாதம் என்பதால் அந்த மாதத்திலாவது அசைவ உணவை முற்றிலுமாகத் தவிர்க்கும் பழக்கம் சிலரிடம் காணப்படுவது பொருத்தமானதுதான்.

    வைணவச் சான்றோரும் தமிழ் வடமொழி இரண்டிலும் மிகச் சிறந்த நூல்களைப் படைத்தவருமான வேதாந்த தேசிகர் பிறந்ததும் புரட்டாசியில் தான்.

    திருமந்திரம் என்ற அரிய தத்துவச் செய்யுள் நூலைப் படைத்தவரும் திருவிடை மருதூரில் சமாதிக் கோயில் கொண்டிருப்பவருமான திருமூலர் அவதரித்ததும் ஒரு புரட்டாசி மாதத்தில்தான்.

    தாகூரால் மகாத்மா என அழைக்கப் பட்ட காந்தி அடிகளும் அவரது கொள்கைகளால் ஈர்க்கப்பட்டு இளம் வயதிலேயே சுதந்திரப் போரில் உயிர் நீத்த கொடிகாத்த குமரன் பிறந்ததும் புரட்டாசியில்தான். ராமாயணம் என்ற மகத்தான இதிகாசத்தைப் படைத்த ஆதிகவி வால்மீகி அவதரித்ததும் புரட்டாசி அனுஷ நட்சத்திரத்தில்தான்.

    மறுமையில் வீடுபேறு அடைவதற்குரிய புண்ணியச் செயல்களைச் செய்யும் மாதம் இது என்பதாலோ என்னவோ, இம்மையில் வீடு வாங்குதல் போன்ற செயல்களைப் பொதுவாகப் புரட்டாசி மாதத்தில் செய்வதில்லை.

    புதுமனை புகுவிழாக்களையோ புது வியாபாரம் தொடங்குதல் போன்றவற்றையோ அதுபோன்ற எந்தப் புது முயற்சியையுமே புரட்டாசியில் செய்யும் வழக்கமில்லை.

    பூண்டு வெங்காயம் போன்றவற்றை இந்த மாதத்தில் உணவில் சேர்க்காமல் தவிர்ப்பவர்கள் உண்டு. புரட்டாசி மாதம் முழுவதிலும் முடியவில்லை என்றாலும் புரட்டாசி சனிக்கிழமை அன்றாவது அசைவத்தையும் பூண்டு வெங்காயத்தையும் தவிர்ப்பவர்கள் நிறையப் பேர் உண்டு.

    புரட்டாசி சனிக்கிழமையன்று முழுவதுமாக உண்ணாவிரதம் இருப்பவர்களும் கூட உண்டு.

    திருமாலைப் பற்றிய பக்திப் பனுவல்களில் சமஸ்கிருதத்தில் எழுதப்பட்ட நாராயணீயம் முக்கியமானது. நாராயணனைப் போற்றி நாராயண பட்டதிரி அருளிய நூலே நாராயணீயம்.

    குருவாயூரப்பனை முன்னிலைப் படுத்தி அவருடன் பேசுவது போலான உத்தியில் எழுதப்பட்டுள்ள இந்த நூலை எப்போது பாராயணம் செய்தாலும் புண்ணியம்தான். என்றாலும் திருமாலுக்குரிய புரட்டாசி மாதத்தில் பாராயணம் செய்வது விசேஷமானது.

    ஒரு பக்தி நூலைப் பாராயணம் செய்வதால் ஏற்படும் பலன்களைப் பற்றிச் சொல்லக் கூடியது அந்த நூலின் இறுதியில் அமைந்து ள்ள பலச்ருதி என்ற பகுதி.

    நாராயணீயத்தின் பலச்ருதி என்பது உடல் ஆரோக்கியம்தான். நம் உடல் நலனை வலுப்படுத்தக் கூடிய மந்திர சக்தி நிறைந்த சுலோகங்களைக் கொண்டது நாராயணீயம்.

    பத்துப் பத்துக் கவிதைகளாக அமைந்த நாராயணீயத்தின் நூறு தசகங்களில் ஒவ்வொரு தசகத்தின் இறுதியாக அமையும் பாடலிலும் `என் நோயிலிருந்து என்னைக் காத்தருள் இறைவா!` என்ற பொருளுடைய வாக்கியம் கட்டாயம் இடம்பெற்றிருக்கும்.

    நாராயணீயத்தைப் புரட்டாசி மாதத்தில் பாராயணம் செய்வதால் நோய்நீங்கி நல்ல உடல்நலத்தோடு கூடிய ஆரோக்கியமான வாழ்க்கையைப் பெற முடியும்.

    திருமாலின் ஆயிரம் நாமங்களைக் கூறி அவரைத் துதிக்கும் சகஸ்ர நாமத்தையும் புரட்டாசியில் நாள்தோறும் ஜபிப்பது நல்ல பலனைத் தரும்.

    புரட்டாசியில் செய்யும் ராமநாம ஜபம் அதிகப் பலன்தரக் கூடியது. வால்மீகி ராமாயணம், கம்ப ராமாயணம், பாகவதம், மகாபாரதம் முதலிய திருமாலின் பெருமைகளைப் பேசும் நூல்களை இந்த மாதத்தில் பாராயணம் செய்வது சிறப்பு.

    கண்ணன் அருளிய கீதையை மனமொன்றி வாசித்து அதுசொல்லும் கருத்துகளை ஆழ்மனத்தில் சிந்திப்பதற்குரிய விசேஷ மாதமும் புரட்டாசியே.

    பலர் பல்வேறு நேர்த்திக் கடன்களை நிறைவேற்றுவதாக மனத்தில் வேண்டிக் கொள்வதுண்டு. ஆனால் உலகச் சூழலில் பற்பல காரணங்களால் அத்தகைய நேர்த்திக் கடன்களை உடனுக்குடன் செலுத்த இயலாமல் போவதும் உண்டு.

    செலுத்தாமல் தாமதமான நேர்த்திக் கடன்களைச் செலுத்துவதற்குரிய மாதமும் புரட்டாசிதான். விட்டுப்போன நேர்த்திக் கடன்களைப் புரட்டாசி மாதத்தில் செலுத்தினால், இறைவன் அந்தத் தாமதத்தை மன்னித்து அன்பர்களுக்கு அருள் புரிவார் என நம்பப் படுகிறது.

    புரட்டாசியில் திருப்பதி, ஸ்ரீரங்கம், குணசீலம், ஸ்ரீவில்லிப்புத்தூர் முதலான வைணவத் திருத்தலங்களில் பிரம்மோத்சவத் திருவிழா கொண்டாடப் படுகிறது.

    பத்து முதல் பன்னிரண்டு நாட்கள் நடைபெறும் இந்த உற்சவத்தில் காலையும் மாலையும் பல்வேறு கொண்டாட்ட நிகழ்ச்சிகள் இடம்பெறும். திருப்பதி பிரம்மோத்சவமும் திருவரங்க பிரம்மோத்சவமும் மிகப் பிரசித்தமானவை.

    புரட்டாசி மாதத்தில் நாம் வழிபடும் திருமால், தொன்றுதொட்டுத் தமிழர்கள் வழிபட்டுவரும் தெய்வமாவார். தொல்காப்பியம் என்ற மிகப் பழைய தமிழ் இலக்கண நூல் திருமாலை `மாயோன்` என்ற பெயரால் குறிப்பிடுகிறது.

    ஐம்பெருங் காப்பியங்களில் ஒன்றான சிலப்பதிகாரத்தில் `ஆய்ச்சியர் குரவை` என்ற பகுதியில் மதுரையில் வாழும் இடைக்குலப் பெண்கள் திருமாலைப் போற்றுவதாக அமைந்த பாடல்கள் இடம்பெற்றுள்ளன.

    `மடம்தாழும் நெஞ்சத்துக் கஞ்சனார் வஞ்சம்

    கடந்தானை நூற்றுவர்பால் நாற்றிசையும்

    போற்ற

    படர்ந்து ஆரணம் முழங்க பஞ்சவர்க்குத்

    தூது

    நடந்தானை ஏத்தாத நா என்ன நாவே!

    நாராயணா என்னா நா என்ன நாவே!'

    என்றெல்லாம் அந்தப் பகுதியில் திருமாலைப் போற்றுகிறார் சமணப் புலவரான இளங்கோ அடிகள்.

    படைத்தல் காத்தல் அழித்தல் ஆகியவை இறைச்சக்தியின் மூன்று பெரும் தொழில்கள். அவற்றில் காக்கும் தொழிலைச் செய்பவர் திருமால். அவருக்கு உகந்த புரட்டாசி மாதத்தில் அவரைப் பிரார்த்திப்பதன் மூலம் நம் இன்னல்கள் அனைத்திலிருந்தும் நாம் காக்கப் படுவோம்.

    தொடர்புக்கு-thiruppurkrishnan@gmail.com

    • திருப்பதி ஏழுமலையானுக்கு புரட்டாசி உகந்த மாதம் ஆகும்.
    • திருப்பதியில் நேற்று 85,626 பேர் தரிசனம் செய்தனர்.

    திருப்பதி:

    திருப்பதி ஏழுமலையானுக்கு புரட்டாசி உகந்த மாதம் ஆகும். நாளை புரட்டாசி மாதம் பிறப்பதால் பக்தர்கள் முதல் நாளிலேயே ஏழுமலையானை தரிசிக்க நாடு முழுவதிலும் இருந்து குவிந்து வருகின்றனர்.

    சனி, ஞாயிறு தொடர் விடுமுறை மற்றும் நாளை அரசு விடுமுறை என்பதால் பக்தர்கள் பஸ், கார், வேன் மூலமாகவும் நடை பயணமாகவும் திருப்பதிக்கு வந்த வண்ணம் உள்ளனர். திருப்பதி மலையில் எங்கு பார்த்தாலும் பக்தர்கள் கூட்டம் காணப்படுகிறது.

    பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்ததால் வைகுண்டம் க்யூ காம்ப்ளக்ஸ் முழுவதும் பக்தர்கள் நிரம்பி வழிகின்றனர்.

    இதனால் தரிசன வரிசையில் இருந்து 2 கிலோமீட்டர் தூரம் வரை பக்தர்கள் வரிசையில் காத்திருக்கின்றனர். ரூ.300 ஆன்லைன் சிறப்ப தரிசன டிக்கெட் உள்ள பக்தர்கள் 15 மணி நேரத்திலும் நேரடி இலவச தரிசனத்தில் வந்த பக்தர்கள் 18 முதல் 24 மணி நேரம் வரை காத்திருந்து தரிசனம் செய்து வருகின்றனர்.

    நாளை புரட்டாசி மாதம் முதல்நாள் என்பதால் மேலும் கூடுதலாக பக்தர்கள் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

    திருப்பதியில் நேற்று 85,626 பேர் தரிசனம் செய்தனர். 33,138 பக்தர்கள் முடி காணிக்கை செலுத்தினர். ரூ 4.13 கோடி உண்டியல் காணிக்கை வசூலானது.

    • புரட்டாசி மாதம் தேய்பிறையில் வரும் ஏகாதசியே அஜா ஏகாதசி.
    • திருமாலின் திருநாமங்களைச் சொல்லி வழிபாட்டில் ஈடுபட வேண்டும்.

    புரட்டாசி மாதம் தேய்பிறையில் வரும் ஏகாதசியை அஜா ஏகாதசி என்று சொல்வார்கள். நம்மில் பலரும் காரணம் இல்லாமல் துன்பங்களை அனுபவிப்பார்கள். மனக்கவலைகளுக்கு ஆளாவார்கள், அலுவலகங்களில் பல பிரச்சினைகள் வந்து கொண்டே இருக்கும். இவற்றுக்குக் காரணம் நாம் முன் ஜென்மங்களில் செய்த பாவங்களே ஆகும்.

    என்னதான் நாம் இந்த ஜென்மத்தில் இறைவனை மனதார தியானித்து நல்லனவற்றையே பேசி, செய்து வந்தாலும் நமக்கு காரணம் இல்லாமல் ஏன் குழப்பங்களும் கஷ்டங்களும் வருகின்றன? அதற்கு காரணம் முன்வினைப்பயன். அதை சீராக்குவதுதான் அஜா ஏகாதசி விரதம்.

    இதற்கு ஆதாரமாக புராணக் கதை இருக்கிறது. இது பலருக்கும் தெரிந்த கதைதான்.

    அரசனாக வாழ்ந்த அரிச்சந்திரன் ஒரு கட்டத்தில் வாழ்க்கையை இழந்து, அரசப் பதவியை இழந்து காட்டில் கஷ்டப்பட்டான். அது மட்டுமா? காசுக்காக மனைவியை அடிமையாக விற்றான். கடுகாட்டில் பிணங்களை எரித்துப் பிழைத்தான்.

    அந்த சூழ்நிலையில் கவுதம முனிவர் அவனைச் சந்தித்தார். விசுவாமித்திரர் அரிச்சந்திரனை பரீட்சிக்கிறார் என்றாலும் அவனது இந்த துன்பங்களுக்குக் காரணம் அவன் முற்பிறவியில் செய்த பாவங்களே. அவைதான் விசுவாமித்திர முனிவருக்கு இத்தகைய எண்ணங்களை உருவாக்கின என்று ஞான திருஷ்டியில் அறிந்தார்.

    அரிச்சந்திரனை அழைத்து புரட்டாசி மாதத்தில் வரும் அஜா ஏகாதசி விரதத்தைப் பற்றி விவரித்தார். `மன்னனே நீ இந்த விரதத்தைத் தவறாமல் கடைப்பிடித்து வந்தால் உனக்கு நன்மை கிடைக்கும்' என்றார்.

    அரிச்சந்திரனும் 9 ஆண்டுகள் தொடர்ந்து அஜா ஏகாதசி விரதத்தை அனுசரித்தான். அதன் பலனாக விசுவாமித்திரர் வைத்த பரீட்சையில் வென்றான். அது மட்டுமா? அவனுக்கு மும்மூர்த்திகளின் தரிசனமும் கிடைத்தது. மீண்டும் நாட்டை பெற்றதோடு உலகில் அழியாப் புகழோடு வாழ்ந்தான்.

    நமது முன்ஜென்ம பாவங்களை நீக்கி இந்த வாழ்க்கையில் மகிழ்ச்சியையும், நிம்மதியையும் அளிக்கக்கூடியது அஜா ஏகாதசி விரதம். மற்ற ஏகாதசி விரதங்களைப் போலவேதான் இதையும் அனுசரிக்க வேண்டும். திருமாலின் திருநாமங்களைச் சொல்லி வழிபாட்டில் ஈடுபட வேண்டும்.

    குறைந்தது பத்து நிமிடங்களாவது கண் மூடி அமர்ந்து பெருமாளை தியானித்து என் முன் ஜென்ம தகாத வினைப் பலன்களை அழிப்பாய் ஐயனே என்று வேண்ட வேண்டும். இரவில் விஷ்ணு புராணத்தை படிக்கலாம். நாம ஜபம் செய்யலாம். மறுநாள் காலை நீராடி பெருமாள் கோயிலுக்கு சென்று துளசி தீர்த்தத்தை அருந்தி பின்னர் உணவு உண்ண வேண்டும். அப்படி செய்தால் முன்ஜென்ம பாவங்கள் யாவும் நீங்கி நலம் பெறலாம்.

    • வாரத்தின் கடைசி நாளான ஞாயிற்றுக் கிழமை என்பதால் வழக்கத்தை விட கூட்டம் களைகட்டியது.
    • அதிகாலை முதலே மீன்மார்க்கெட்டில் மக்கள் கூட்டம் குவிந்து விற்பனை அதிக அளவில் இருந்ததால் வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.

    ராயபுரம்:

    புரட்டாசி மாதம் நாளை தொடங்க உள்ளது. பெருமாளுக்கு உகந்த இந்த மற்றும் முழுவதும் பெரும்பாலானோர் அசைவம் சாப்பிடாமல் விரதம் இருப்பது வழக்கம். இதைத்தொடர்ந்து இன்று காசிமேடு மீன் மார்க்கெட்டில் மீன்வாங்க ஏராளமானோர் குவிந்தனர். வாரத்தின் கடைசி நாளான ஞாயிற்றுக் கிழமை என்பதால் வழக்கத்தை விட கூட்டம் களைகட்டியது.

    காசிமேடு மீன்பிடி துறைமுகத்திற்கு இன்று காலை 180 முதல் 200 விசைப்படகுகள் கரைக்கு திரும்பின. வஞ்சிரம், சங்கரா உள்ளிட்ட பெரி யவகை மீன்கள் வரத்து அதிக அளவில் இருந்தன. இதனால் மீன்விலை குறைந்து இருந்தது. வஞ்சிரம் ரூ.500-க்கும், சங்கரா ரூ.300-க்கும் விற்கப்பட்டது. அதிகாலை முதலே மீன்மார்க்கெட்டில் மக்கள் கூட்டம் குவிந்து விற்பனை அதிக அளவில் இருந்ததால் வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.

    காசிமேடு மீன்மார்க் கெட்டில் மீன்விலை (கிலோவில்)வருமாறு:-

    பெரிய இறால் - ரூ. 300.

    இதேபோல் ஆடு, கோழி இறைச்சி கடைகளிலும் இன்று கூட்டம் அதிக அளவில் காணப்பட்டது. இதுகுறித்து இறைச்சி கடைக்காரர் ஒருவர் கூறும்போது, நாளை புரட்டாசி மாதம் தொடங்க உள்ள நிலையில் இன்று வழக்கத்தை விட வியாபாரம் அதிகம் தான். அடுத்த மாதம் முழுவதும் பெரிய அளவில் வியாபாரம் இருக்காது. அதைசமாளித்து தான் ஆக வேண்டும்.விலை சற்று குறைய வாய்ப்பு உள்ளது. என்றார்.

    • பொதுமக்களின் கூட்டம் அதிகரித்து காண்பதோடு தங்களுக்கு தேவையான மீன்களை போட்டி போட்டுக் கொண்டு வாங்கி செல்வது வழக்கம் .
    • ஆட்டு இறைச்சி கிலோ ரூ.700, கோழி கிலோ ரூ.240-க்கும் விற்பனை செய்யப்பட்டது.

    கடலூர்:

    புரட்டாசி மாதம் என்றாலே பெருமாள் வழிபடுவதற்கு உகந்த மாதமாக இருப்பதோடு, மாதம் முழுவதும் அசைவம் உண்ணாமல் மக்கள் விரதம் முறையை கடைபிடித்து சனிக்கிழமைகளில் சிறப்பு வழிபாடு மேற்கொண்டு வருவது வழக்கம். கடலூர் துறைமுகத்தில் எப்போதும் வாரந்தோறும் ஞாயிற்றுக்கிழமைகளில் மீன்கள் வாங்குவதற்கு பொதுமக்களின் கூட்டம் அதிகரித்து காண்பதோடு தங்களுக்கு தேவையான மீன்களை போட்டி போட்டுக் கொண்டு வாங்கி செல்வது வழக்கம் . இந்த நிலையில் இன்று ஆவணி மாதம் கடைசி நாள் என்பதாலும், நாளை புரட்டாசி மாதம் தொடங்க உள்ள நிலையில் கடலூர் துறைமுகம் மற்றும் இறைச்சி கடைகளில் இன்று அதிகாலை முதல் வழக்கத்தை விட அதிக அளவில் பொதுமக்கள் குவிந்தனர்.

    பின்னர் தங்களுக்கு தேவையான மீன்களை ஆர்வமுடன் வாங்கி சென்றனர். இதில் பெரிய வகை பாறை மீன் கிலோ ரூ.350 முதல் ரூ.400 வரை விற்பனை செய்யப்பட்டது. பன்னி சாத்தான் மீன் ரூ.400 முதல் 450 வரையிலும், பெரிய வகை நெத்திலி கிலோ ரூ.200 கனவாய் வகை மீன் கிலோ ரூ.150-க்கும், பெரிய வகை இறால் கிலோ ரூ.500-க்கும், நண்டு ரூ.250-க்கும் விற்பனை செய்யப்பட்டது. ஆட்டு இறைச்சி கிலோ ரூ.700, கோழி கிலோ ரூ.240-க்கும் விற்பனை செய்யப்பட்டது.

    • அறைக்குள் விளக்காக இருக்கும் முன்னோர்களை திருப்திப்படுத்த வழிபட வேண்டிய நாள்.
    • புரட்டாசி மாதம் வரும் அமாவாசையே மகாளய அமாவாசை.

    மறைந்தவர்களுக்கு மகாளய அமாவாசை என்று சொல்வது வழக்கம். வாழ்க்கையில் முன்னேற்றம் ஏற்பட நீங்கள் முன்னோர்களை வழிபட வேண்டிய நாள், இந்த மகாளய அமாவாசையை மறந்துவிடாதீர்கள். முன்னோர்களுக்கு திதி கொடுக்க வேண்டிய தேதியை மறந்தவர்கள், திதி கொடுக்க மறந்தவர்கள் அன்றைய தினத்தில் திதி கொடுத்தால் அதை முன்னோர்கள் மனதார ஏற்றுக்கொள்வர்.

    அறைக்குள் விளக்காக இருக்கும் முன்னோர்களை திருப்திப்படுத்த வழிபட வேண்டிய நாள் அமாவாசை ஆகும். எல்லா மாதங்களிலும் அமாவாசை வந்தாலும் தை மாதம் வரும் அமாவாசையை 'தை அமாவாசை' என்றும், ஆடி மாதம் வரும் அமாவாசையை 'ஆடி அமாவாசை' என்றும், புரட்டாசி மாதம் வரும் அமாவாசையை 'மகாளய அமாவாசை' என்றும் சிறப்பு வாய்ந்ததாக சொல்வா்.

    புரட்டாசி மாதம் 27-ந் தேதி (14.10.2023) சனிக்கிழமை அன்று வருகிறது. அன்றைய தினம் முன்னோர்களை நினைத்து வழிபாடு செய்வதன் மூலமும், பித்ருக்களுக்கு திதி கொடுப்பதன் மூலமும் முன்னேற்றங்களை வரவழைத்துக் கொள்ள இயலும். திதி கொடுத்தால் விதி மாறும் என்பது முன்னோர் வாக்கு. தடைக் கற்களை படிக்கற்களாக மாற்றுவது இந்த முன்னோர் வழிபாடுதான்.

    • போதிய விலை கிடைக்காததால் ஆடுகளை விற்பனை செய்யாமல் திரும்ப ஓட்டி வரும் நிலை ஏற்பட்டுள்ளது என்று கவலை தெரிவித்தார்.
    • வாரந்தோறும் நடக்கும் இந்த சந்தையில் கோடிக்கணக்கில் விற்பனை நடைபெறும்.

    மூலனூர்:

    திருப்பூர்‌ மாவட்டம் மூலனூர் அருகே உள்ள கன்னிவாடி ஆட்டுச் சந்தை மிகப்பெரிய ஆட்டுச்சந்தையாகும்‌. இங்கு நடைபெறும் வாரச் சந்தைக்கு செம்மறி மற்றும் வெள்ளாடுகள், நாட்டுக்கோழிகள் ஆகியவற்றை விவசாயிகள் மற்றும் ஆடுகள் வளர்ப்போர் அதிகம் விற்பனைக்கு கொண்டு வருவார்கள்.

    மூலனூருக்கு அருகில் உள்ள வெள்ளகோவில், பரமத்தி, அரவக்குறிச்சி, ஒட்டன்சத்திரம் உள்ளிட்ட பகுதிகளில் அதிகமாக மானாவரி நிலங்கள் இருப்பதால் இப்பகுதி விவசாயிகளும், பொதுமக்களும் அதிகமாக ஆடுகளை வளர்த்து தங்கள் வருமானத்தை ஈட்டி வருகின்றனர்.

    இந்த வாரம் சந்தைக்கு ஈரோடு, கோபி, பவானி, அந்தியூர், மேட்டூர், மேச்சேரி, சேலம் பகுதிகளில் இருந்து வியாபாரிகள் வெள்ளாடு மற்றும் செம்மறி ஆடுகளை விற்பனைக்கு கொண்டு வந்தனர். அதேபோல சந்தையில் ஆடுகள் வாங்குவதற்கு தமிழ்நாடு மட்டுமின்றி கர்நாடகா, ஆந்திரா, கேரளா, மத்திய பிரதேசத்தில் இருந்து வியாபாரிகள் குறைந்த அளவே வந்திருந்தனர்.

    புரட்டாசி மாதத்தில் இறைச்சி நுகர்வு குறைவாக இருக்கும் என்பதால் கடந்த இரு வாரம் முன்பு 10 கிலோ எடை கொண்ட ஆடு ரூ.5 ஆயிரத்துக்கு மேல் விற்பனையான நிலையில், இந்த வாரம் ரூ.4 ஆயிரம் முதல் 4500 வரை மட்டும் விலை போனது.

    இதுகுறித்து மூலனூர் பகுதியை சேர்ந்த விவசாயி லோகநாதன் கூறுகையில், திருப்பூர் மாவட்டத்தில் மிகப்பெரிய ஆட்டு சந்தையாக கன்னிவாடி சந்தை உள்ளது. இந்தப் பகுதியை சுற்றி ஏராளமான மானாவாரி நிலங்கள் இருப்பதால் விவசாயிகளுக்கு வருமான ஆதாரமாக ஆடுகள்‌ வளர்ப்பே கைகொடுக்கிறது. மாடுகள் வைத்து பால் உற்பத்தி செய்ய பசுந்தீவனங்கள் தேவைப்படுவதால் இப்பகுதியில் கறவை மாடுகள் வளர்ப்பது குறைவாகும்.

    வாரந்தோறும் நடக்கும் இந்த சந்தையில் கோடிக்கணக்கில் விற்பனை நடைபெறும். ஆனால் புரட்டாசி மாதம் என்பதால் ஆடுகள் விற்பனையும் சரிந்து விலையும் ஆயிரம் வரை குறைந்து விற்பனையாகிறது‌. போதிய விலை கிடைக்காததால் ஆடுகளை விற்பனை செய்யாமல் திரும்ப ஓட்டி வரும் நிலை ஏற்பட்டுள்ளது என்று கவலை தெரிவித்தார்.

    • மீன் மார்க்கெட்களிலும் , சிக்கன் மற்றும் மட்டன் கடைகளிலும் கூட்டம் அலைமோதி காணப்படும்.
    • அசைவ ஹோட்டல்களில் கூட்டம் இல்லாமல் குறைந்த வாடிக்கையாளர்களே இருந்ததை காண முடிந்தது.

    கடலூர்:

    புரட்டாசி மாதம் என்றாலே பெருமாளுக்கு உகந்த மாதமாகும். இதன் காரணமாக புரட்டாசி மாதம் முழுவதும் பெரும்பாலான மக்கள் பெருமாள் கோவில்களுக்கு சனிக்கிழமைகளில் செல்வதோடு வீடுகளில் அசைவம் சமைக்காமலும், சாப்பிடாமலும் விரதம் இருப்பது வழக்கமாகும். இது மட்டும் இன்றி புரட்டாசி மாதங்கள் சனிக்கிழமைகளில் நாமம் போட்டு நாராயண கோபால எடுத்து சிறப்பு வழிபாடு செய்வதும் வழக்கமாக உள்ளது. இதன் காரணமாக புரட்டாசி மாதம் தொடங்குவதற்கு முன்பு பெரும்பாலான வீடுகளில் தங்களுக்கு தேவையான அசைவ உணவுகளை விரும்பி உண்பார்கள். இதனைத் தொடர்ந்து புரட்டாசி மாதம் தொடங்கியவுடன் தங்கள் விரதமுறையை பொதுமக்கள் கடைப்பிடிப்பார்கள். இந்த நிலையில் இன்று புரட்டாசி மாதம் தொடங்கியது.

    இதன் காரணமாக எப்போதும் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் ஆயிரக்கணக்கான மக்கள் திரண்டு கடலூர் துறைமுகம் மற்றும் மீன் மார்க்கெட் களிலும் , சிக்கன் மற்றும் மட்டன் கடைகளிலும் கூட்டம் அலைமோதி காணப்படும். இந்த நிலையில் இன்று புரட்டாசி தொடங்கியதால் கடலூர் துறைமுகம், மீன் மார்க்கெட்களில் கூட்டம் இன்றி வெறிச்சோடி காணப்பட்டது. மேலும் இன்று ஞாயிற்றுக்கிழமை காலை முதல் கூட்டமின்றி வெறிச்சோடி காணப்பட்டது குறிப்பிடத்தக்கதாகும். இதனை தொடர்ந்து கூட்டம் இன்றி காணப்பட்டாலும் சிக்கன், மட்டன் மற்றும் மீன் விலைகளில் எந்த மாற்றமும் இல்லை. இது மட்டும் இன்றி அசைவ ஹோட்டல்களில் கூட்டம் இல்லாமல் குறைந்த வாடிக்கையாளர்களே இருந்ததை காண முடிந்தது.   

    ×