search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Qatar peace talks"

    • பெண்கள் மற்றும் குழந்தைகளை விடுவித்தே ஆக வேண்டும் என இஸ்ரேல் வலியுறுத்தியது
    • மீண்டும் ஒரு இடைநிறுத்தத்திற்கு அமெரிக்கா முயன்று வருகிறது என கமலா ஹாரிஸ் தெரிவித்தார்

    கடந்த அக்டோபர் 7 அன்று தொடங்கிய இஸ்ரேல்-ஹமாஸ் போரில் இடைநிறுத்தம் ஏற்பட அரபு நாடான கத்தார் அரசு முயன்று வருகிறது. இதை தொடர்ந்து சமரச பேச்சு வார்த்தைக்காக இஸ்ரேல் நாட்டின் உளவு அமைப்பான மொஸாட் (Mossad) அதிகாரிகள் கத்தார் சென்றிருந்தனர்.

    இதையடுத்து ஒரு வார போர் இடைநிறுத்தத்திற்கு இஸ்ரேல் சம்மதித்தது. இஸ்ரேல் வசம் உள்ள பாலஸ்தீன பயங்கரவாதிகளையும், ஹமாஸ் அமைப்பினரிடம் உள்ள இஸ்ரேலிய பணய கைதிகளையும் பரஸ்பரம் இரு தரப்பினரும் விடுவித்தனர்.

    ஆனால், இஸ்ரேலிலிருந்து அக்டோபர் 7 அன்று கொண்டு செல்லப்பட்ட பணய கைதிகள் அனைவரும் இன்னமும் விடுவிக்கப்படவில்லை. ஹமாஸ் அமைப்பினர் பலவந்தமாக கொண்டு சென்ற இஸ்ரேலிய பணய கைதிகளை விடுவிக்க வேண்டும் எனும் கோரிக்கையில் இஸ்ரேல் பின்வாங்க மறுத்தது.

    பெண்கள் மற்றும் குழந்தைகளை ஹமாஸ் விடுவிக்க முதலில் ஒப்பு கொண்டு பிறகு பின்வாங்கி விட்டதாக இஸ்ரேல் குற்றம் சாட்டியது. இதனால் இந்த போர் இடைநிறுத்தத்தை கடந்த வெள்ளியன்று இஸ்ரேல் முடிவுக்கு கொண்டு வந்தது.

    இதை தொடர்ந்து, இஸ்ரேல் மீண்டும் தாக்குதலை தொடங்கி உள்ளது. மீண்டும் தொடங்கிய போரில் 24 மணி நேரத்தில் காசா பகுதியில் ஹமாஸ் அமைப்பினரையும் இஸ்லாமிய ஜிஹாத் எனும் அமைப்பினரையும் குறி வைத்து 400க்கும் மேற்பட்ட இடங்களில் தாக்குதல் நடத்தியதாக இஸ்ரேலிய ராணுவ படை அறிவித்தது.

    ஆண்களை விடுவிக்க வேறுவிதமான நிபந்தனைகளை ஹமாஸ் முன்வைத்ததாகவும், ஆனால் பெண்கள் மற்றும் குழந்தைகளை விடுவிக்காத வரை எந்தவித பேச்சு வார்த்தைக்கும் ஒப்பு கொள்ள முடியாது என இஸ்ரேல் திட்டவட்டமாக தெரிவித்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

    கத்தார் முன்னெடுத்த போர் இடைநிறுத்த முயற்சிகள் தோல்வியடைந்ததால், அங்கு பேச்சுவார்த்தைக்காக சென்றிருந்த இஸ்ரேல் நாட்டின் மொஸாட் உளவு (Mossad Intelligence) அமைப்பினரை இஸ்ரேல் திரும்ப அழைத்து கொண்டு விட்டது.

    இந்நிலையில் போர் மீண்டும் தீவிரமடைவதை தடுக்க கத்தாருடன் அமெரிக்கா இணைந்து பணியாற்றி வருகிறது.

    "ஏதேனும் உறுதியான வழிகளில் மீண்டும் போர் இடைநிறுத்தம் நடைபெற நாங்கள் முயன்று வருகிறோம். காசா பகுதியில் மனிதாபிமான உதவிகள் தொடர்ந்து கிடைக்கவும், ஹமாஸ் வசம் உள்ள பணய கைதிகள் அனைவரும் பத்திரமாக மீட்கப்படவும், அதே சமயம் அப்பாவி பாலஸ்தீனர்கள் உயிரிழப்பதை தடுக்கவும் ஒரு வழிமுறையை ஆலோசித்து வருகிறோம்." என அமெரிக்காவின் நிலை குறித்து அமெரிக்க துணை அதிபர் கமலா ஹாரிஸ் இது குறித்து கருத்து தெரிவித்தார்.

    போர் மீண்டும் தொடங்கியுள்ளதால், இனி நீண்ட நாட்களுக்கு தொடரலாம் என்றும் உயிரிழப்புகள் இன்னமும் அதிகரிக்கலாம் என்றும் அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.

    ×