என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "rain less"

    வடகிழக்கு பருவமழை முடிவடையும் நிலையில் சென்னை உள்பட 9 மாவட்டங்களில் குறைவான அளவே மழை பெய்து இருக்கிறது. இதனால் வரக்கூடிய நாட்களில் தண்ணீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் உள்ளது. #Rain #Watershortage
    சென்னை:

    தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை காலம் என்பது அக்டோபர் மாதம் தொடங்கி டிசம்பர் மாதம் வரை ஆகும். ஓராண்டு மழைப்பொழிவில் 48 சதவீதத்தை இந்த பருவமழை காலத்தில் தான் தமிழகம் பெறுகிறது.

    வடகிழக்கு பருவமழை காலத்தில் தமிழகம் மற்றும் புதுச்சேரி சராசரியாக 44 செ.மீ. மழை பெய்யும். அந்த வகையில் கடந்த 2016-ம் ஆண்டு வடகிழக்கு பருவமழை பெரிய அளவில் தமிழகத்தை ஏமாற்றியது. இயல்பான அளவை விட 61 சதவீதம் குறைவாக மழை பெய்தது. கடந்த ஆண்டை (2017) பொறுத்தவரையில், 9 சதவீதம் தான் குறைவாக மழை பெய்து இருந்தது.

    இந்த ஆண்டை பொறுத்தவரையில், வட கிழக்கு பருவமழை இயல்பை விட அதிகம் பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருந்தது. ஆனால் இந்த ஆண்டு அக்டோபர் மாதம் தொடங்க வேண்டிய மழை நவம்பர் 1-ந் தேதி தான் தொடங்கியது. இன்னும் 10 நாட்களில் வடகிழக்கு பருவமழை முடிந்து விடும்.

    இதுவரை சராசரி மழைப்பொழிவில் இருந்து 21 சதவீதம் குறைவாக மழை பெய்து இருப்பதாக தெரிவிக்கப்பட்டு இருந்தாலும், சென்னை உள்பட 9 மாவட்டங்களில் இன்னும் பெரிய அளவில் மழையை பெறவில்லை என்பதை வானிலை ஆய்வு மைய புள்ளி விவரங்கள் (நேற்றைய நிலவரப்படி) சுட்டிக்காட்டுகின்றன.

    குறிப்பாக சென்னை, தர்மபுரி, கரூர், கிருஷ்ணகிரி, சேலம் மாவட்டங்களில் 50 சதவீதத்துக்கும் குறைவாகவே மழை பெய்து இருக்கிறது. சென்னையை எடுத்துக்கொண்டால், வடகிழக்கு பருவமழை தொடங்கியதில் இருந்து இதுவரை 74 செ.மீ. மழை பெய்திருக்க வேண்டும். ஆனால் 34 செ.மீ. மழை தான் பெய்து இருக்கிறது. இது இயல்பை விட 54 சதவீதம் குறைவு.

    இதேபோல், வேலூர், திருச்சி, திருவள்ளூர், பெரம்பலூர் ஆகிய மாவட்டங்களில் 60 சதவீதம் மழை பெய்துள்ளது.

    சென்னையின் நீர் ஆதாரங்களான பூண்டி, சோழவரம், புழல், செம்பரம்பாக்கம் ஆகிய ஏரிகளில் வெறும் 1.5 டி.எம்.சி. நீர் மட்டுமே இருக்கிறது. கடந்த ஆண்டில் இதே நேரத்தில் 5 டி.எம்.சி. நீர் இருப்பு இருந்தது. அப்படி இருந்துமே கடந்த ஆண்டில் தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட்டது.

    இந்த நிலையில் தற்போது இருக்கும் நீர் இருப்பை பார்க்கும்போது, வரக்கூடிய நாட்களில் சென்னையில் தண்ணீர் தட்டுப்பாடு ஏற்படும் என்பதில் சந்தேகம் இல்லை. #Rain #Watershortage
    ×