search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "rajiv gandhi death cause"

    ராஜீவ் கொலை வழக்கில் தண்டனை பெற்றுள்ள 7 பேர் விடுதலையில் சட்ட நிபுணர்களின் கருத்து இன்னும் ஒரு வாரத்தில் கவர்னருக்கு வர உள்ளது.
    சென்னை:

    முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கடந்த 1991-ம் ஆண்டு மே 21-ந்தேதி தமிழகத்தில் தேர்தல் பிரசாரத்திற்கு வந்தபோது, மனித வெடிகுண்டு மூலம் படுகொலை செய்யப்பட்டார். இந்த சம்பவம் அப்போது நாடு முழுவதும் அதிர்ச்சி அலையை ஏற்படுத்தியது. இந்த வழக்கில் தண்டனை பெற்று 25 ஆண்டுகளுக்கு மேலாக பேரறிவாளன், முருகன், சாந்தன், ஜெயக்குமார், ராபர்ட் பயஸ், ரவிச்சந்திரன், நளினி ஆகியோர் சிறையில் இருந்து வருகின்றனர். இந்த வழக்கு நீண்ட நெடிய பயணத்தை கடந்து வந்திருக்கிறது.

    இந்த வழக்கின் திருப்பமாக, 7 பேர் விடுதலையில் உரிய அரசு முடிவு எடுக்கலாம் என்று கோர்ட்டு தெரிவித்ததால், 7 பேரை விடுதலை செய்ய வேண்டும் என்ற கோஷம் தமிழகத்தில் வலுத்தது. மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதா 7 பேர் விடுதலையை வலியுறுத்தி தமிழக சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றினார். மேலும் கடந்த ஆண்டு செப்டம்பர் 9-ந்தேதி 7 பேரையும் விடுதலை செய்யவேண்டும் என்று முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் கூடிய தமிழக அமைச்சரவை பரிந்துரை செய்து, கவர்னருக்கு அந்த தீர்மானம் அனுப்பி வைக்கப்பட்டது.

    அந்த தீர்மானம் வந்தவுடனேயே, இதுகுறித்த வழக்குகள் கோர்ட்டில் நிலுவையில் இருப்பதால், உடனடியாக தனது முடிவை கவர்னரால் அறிவிக்க முடியவில்லை. ஆனால் ஒரு நாளைக்கூட வீணாக்காமல் உடனடியாக ஆய்வு செய்யும் பணியை மேற்கொண்டார். உடனடியாக சட்டரீதியான ஆலோசனைகளை மேற்கொண்டார்.

    இந்த ஆலோசனையின்போது பலர் அவரிடம், ‘இது 20 ஆண்டுகளுக்கு மேலாக பல்வேறு கட்டங்களில் நீதிமன்றங்களில் பல வழக்குகளை சந்தித்திருக்கிறது. இந்த தீர்ப்புகளின் அடிப்படையில் நாம் இந்த பிரச்சினையை உற்றுநோக்க வேண்டியிருக்கிறது. எனவே தேசிய அளவிலான சட்ட நிபுணர்களின் கருத்தை எழுத்துப்பூர்வமாக கேட்டு, அதன்பேரில் முடிவெடுப்பதே சிறந்தது’ என்று கருத்து தெரிவித்தனர்.

    அதன் அடிப்படையில் இந்திய அளவில் தலை சிறந்த சட்ட நிபுணர்களின் கருத்துகளை கவர்னர் கேட்டு இருக்கிறார்.



    இந்தநிலையில் இந்த 7 பேரையும் விடுதலை செய்யக்கூடாது என்று சுப்ரீம் கோர்ட்டில் தொடரப்பட்ட வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது. இதனால் 7 பேர் விடுதலையில் எந்த தடையும் இருக்காது என்று பல்வேறு தரப்பினரும் கருத்து தெரிவித்து வருகிறார்கள்.

    அதேநேரத்தில், இந்திய அளவிலான சட்ட நிபுணர்களின் கருத்து இன்னும் ஒரு வாரத்தில் கவர்னர் கைக்கு வர உள்ளது. அதன் பின்னர் கவர்னர் தனது முடிவை அறிவிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 
    ×