search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Ratsasan"

    கடந்த ஆண்டு வெளியாகி சூப்பர் ஹிட்டான ராட்சசன் படம் பற்றிய செய்திக்கு நடிகை அமலாபால் ஆதங்கமாக பதிலளித்திருக்கிறார்.
    ராம்குமார் இயக்கத்தில் கடந்த ஆண்டு வெளியான திரைப்படம், ‘ராட்சசன்’. விஷ்ணு விஷால், அமலா பால் நடித்திருந்த இந்தப் படம் ரசிகர்களை கவர்ந்து சூப்பர் ஹிட்டானது. தற்போது இந்த படம் தெலுங்கில் ரீமேக் செய்யப்பட்டு வருகிறது.

    இந்த நிலையில், ‘தமிழில் விஷ்ணு விஷால் சூப்பராக நடித்திருப்பார். அவரைப்போல தெலுங்கில் பெல்லம்கொண்டா ஸ்ரீனிவாசால் நடிக்க முடியாது’ என அமலாபால் கூறியதாக தெலுங்கு இணையதளங்களில் செய்திகள் வெளியானது. இதை நடிகை அமலாபால் மறுத்திருக்கிறார்.



    மேலும் இதுகுறித்து, ‘முட்டாள்தனத்துக்கும் வதந்திக்கும் இடையிலான மெல்லிய கோடு உங்கள் கண்களுக்கு தெரிவதில்லை’ என ஆதங்கத்தை கூறியிருக்கிறார்.
    தமிழ், தெலுங்கில் பட வாய்ப்பு இல்லாமல் தவித்து வரும் அனுபமா பரமேஸ்வரன், தனது அடுத்த ரிலீசான ‘ராட்சஷகுடு’ படத்தை எதிர்பார்த்து காத்திருக்கிறார். #AnupamaParameshwaran #Rakshasudu
    ‘பிரேமம்’ மலையாள படத்தின் மூலம் பிரபலமானவர் அனுபமா பரமேஸ்வரன். தமிழ், தெலுங்கு, கன்னடம் ஆகிய மூன்று மொழி படங்களிலும் நடித்து வருகிறார். 

    தனுஷ் ஜோடியாக ‘கொடி’ படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார். இந்த படத்துக்குப்பிறகு தமிழில் அவருக்கு புதிய பட வாய்ப்புகள் எதுவும் வரவில்லை. தெலுங்கில் அவர் நடித்த ‘தேஜ் ஐ லவ் யூ,’ ‘உன்னடி ஒகடே சிந்தகி,’ ‘ஹலோ குரு ப்ரேமா கோஸ்ரம்,’ ‘கிருஷ்ணார்ஜுன யுத்தம்’ ஆகிய படங்களும் வெற்றி பெறவில்லை. இதனால் புதிய தெலுங்கு பட வாய்ப்புகள் எதுவும் அவருக்கு வரவில்லை.



    தமிழ், தெலுங்கு ஆகிய இரண்டு மொழிகளிலும் படவாய்ப்பு இல்லாத நிலையில், விரைவில் திரைக்கு வரயிருக்கும் ‘ராட்சஷகுடு’ என்ற தெலுங்கு படத்தை எதிர்பார்த்திருக்கிறார். அது, விஷ்ணு விஷால் நடித்த ‘ராட்சசன்’ படத்தின் ரீமேக் ஆகும். இந்த படம் நிச்சயமாக தனக்கு கைகொடுக்கும் என்று அவர் எதிர்பார்த்து காத்திருக்கிறார். #AnupamaParameshwaran #Rakshasudu

    ராம்குமார் இயக்கத்தில் விஷ்ணு விஷால், அமலாபால் நடிப்பில் வெளியான ‘ராட்சசன்’ படத்திற்கு மிகப்பெரிய கௌரவம் கிடைத்துள்ளது. #Ratsasan
    வணிக ரீதியிலான பொழுதுபோக்கு படங்களின் மத்தியில், ஒரு சில திரில்லர் சினிமாக்கள் மக்களிடையே மிகப்பெரிய அதிர்வுகளை உண்டாக்கும். அந்த வகையிலான ஒரு திரைப்படம் தான் ‘ராட்சசன்’. இப்படத்தின் வித்தியாசமான கதையமைப்பால் மக்களிடையே பெரும் வரவேற்பு பெற்று இருக்கிறது. 

    இந்த படம் தமிழ்நாடு முழுவதும் மிகப்பெரிய வெற்றியை பெற்றதோடு, வணிக ரீதியாக அதிக வசூல் செய்த படம் என்று நிரூபணம் ஆகியுள்ளது. இது தமிழ் சினிமாவிற்கு பெரும் அங்கீகாரத்தை வழங்கியிருக்கிறது. 

    ராட்சசன் படத்தின் பெருமைகளுக்கு மகுடம் சூட்டுவது போல, தற்போது இந்த படம் IMDB தரவரிசையில் இந்தியாவின் சிறந்த படங்களின் வரிசையில் இரண்டாவது மிகச்சிறந்த படமாக மதிப்பிடப்பட்டுள்ளது. தென்னிந்திய திரைப்படங்களின் வரிசையில் முதல் இடத்தை பிடித்திருக்கிறது. இது ஒட்டுமொத்த தென்னிந்திய சினிமாவுக்கே புத்துணர்ச்சி அளித்திருக்கிறது.

    மேலும் IMDB தர வரிசையில் தென்னியந்திய சினிமாக்களில் ராம்சரணின் ரங்கஸ்தலம், விஜய்சேதுபதியின் 96 மற்றும் கீர்த்தி சுரேஷ் நடித்த மகாநதி ஆகிய படங்களும் சிறந்த படங்கள் பட்டியலில் இடம் பிடித்துள்ளன.



    ராட்சசன் படத்தில் விஷ்ணு விஷால், அமலா பால், கிறிஸ்டோபர் சரவணன் ஆகியோர் நடித்திருந்தனர். ராம்குமார் இயக்க, ஆக்சஸ் பிலிம் பேக்டரி சார்பில் ஜி.டில்லிபாபு தயாரித்திருந்தார்.
    ராம்குமார் இயக்கத்தில் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும் `ராட்சசன்' படத்தில் கிறிஸ்டோபர் என்கிற கதாபாத்திரத்தில் வில்லனாக நடித்துள்ளவரை படக்குழு நேற்று அறிமுகப்படுத்தியது. #Ratsasan #VishnuVishal
    முண்டாசுப்பட்டி படத்திற்கு பிறகு ராம்குமார் - விஷ்ணு விஷால் இரண்டாவது முறையாக இணைந்திருக்கும் `ராட்சசன்' படத்திற்கு ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்திருக்கிறது.

    ரசிகர்களை சீட்டின் நுனியிலேயே உட்கார வைக்கும் சைக்கோ த்ரில்லர் கதையான இந்த படம் 25 நாட்களை கடந்து திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. இந்த நிலையில், நேற்று நடைபெற்ற படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பில் படத்தில் வில்லனாக, சைக்கோ கொலைகாரனாக நடித்திருந்தவர் சரவணன் என்பவரை படக்குழு அறிமுகப்படுத்தியுள்ளது.

    சரவணன் என்பவர் தான் ராட்சசன் படத்தில் கிறிஸ்டோபர் என்ற மிரட்டலான வில்லன் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.



    அந்த சைக்கோ கொலைகாரனை கண்டுபிடிக்க போராடும் போலீஸ் அதிகாரியாக விஷ்ணு விஷால் நடித்திருக்கிறார். விஷ்ணு ஜோடியாக அமலாபாலும், முக்கிய கதாபாத்திரத்தில் சூசேன் ஜார்ஜ், சஞ்சய், காளி வெங்கட், ராம்தாஸ் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். 

    ஆக்சஸ் பிலிம் ஃபாக்ட்ரி மற்றும் டிரைடன்ட் ஆர்ட்ஸ் நிறுவனம் இணைந்து தயாரித்துள்ள இந்த படத்திற்கு ஜிப்ரான் இசையமைத்துள்ளார். #Ratsasan #VishnuVishal

    தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருக்கும் விஷ்ணு விஷால், மற்ற தயாரிப்பாளர்கள் சம்பளம் தராததால் நான் தயாரிப்பாளர் ஆனேன் என்று கூறியிருக்கிறார். #VishnuVishal
    ராட்சசன் படத்துக்காக ரஜினியே போன் செய்து பாராட்டியதில் உற்சாகமாக இருக்கிறார் விஷ்ணு விஷால். அவர் தயாரிப்பாளராக மாறியதன் பின்னணி பற்றி கேட்டதற்கு ’நல்ல படங்கள்ல நடித்தேன்; அதுல சில படங்களில் எனக்கு பாதிச் சம்பளம்கூட கைக்கு வரவில்லை. அதையெல்லாம் பொருட்படுத்தாமதான், ஓடிக்கிட்டு இருந்தேன். சில தயாரிப்பாளர்கள் நான் ஓடுறதைப் பயன்படுத்திக்கிட்டாங்க.

    ‘கமர்ஷியல் படம்னு நீங்க இறங்கினா... காணாமப் பேயிடுவீங்க’னு சம்பளம் தராத ஒரு தயாரிப்பாளர் சொன்னார். யோசிச்சா, அவர் சொல்றது சரின்னுதான் தோணுச்சு. அதை மாத்தத்தான், `வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன்’ படத்துல நடிச்சேன்.

    அதுக்கு வேற ஒருத்தர்தான் தயாரிப்பாளர், சில பிரச்னைகளால நானே தயாரிக்க வேண்டியதா போயிடுச்சு. `கதாநாயகன்’ படத்துக்கும் அதே நிலைமைதான். இப்படி சினிமாவுல தொடர்ந்து எதையாவது கத்துக்கிட்டே இருக்கேன். சுருக்கமாச் சொல்லணும்னா, எனக்குத் தயாரிப்பாளர் ஆகணும்னு ஆசை கிடையாது, சூழ்நிலை ஆக்கிடுச்சு” என்று கூறினார்.
    நடிகர் ரஜினி, ராட்சசன் படத்தை பார்த்து, அப்படத்தின் கதாநாயகனான விஷ்ணு விஷாலுக்கு போன் செய்து பாராட்டி இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளார். #Rajini #Ratsasan
    விஷ்ணு விஷால் நடிப்பில் தற்போது வெளியாகி இருக்கும் படம் ‘ராட்சசன்’. இதில் இவருக்கு ஜோடியாக அமலாபால் நடித்துள்ளார். முண்டாசுப்பட்டி படத்தை இயக்கிய ராம்குமார் இப்படத்தை இயக்கியுள்ளார். திரில்லர் கதையம்சத்துடன் வெளியான இப்படம் ரசிகர்களிடம் வரவேற்பு பெற்று வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது.

    இந்நிலையில், இப்படத்தை பார்த்த ரஜினி, விஷ்ணு விஷாலுக்கு போன் செய்து பாராட்டி அவருக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்திருக்கிறார். இது குறித்து விஷ்ணு விஷால் கூறும்போது, ‘சூப்பர் ஸ்டார் ரஜினி எனக்கு போன் செய்து இன்ப அதிர்ச்சி கொடுத்தார். ராட்சசன் படத்தை பார்த்த அவர், பென்டாஸ்டிக், பென்டாஸ்டிக், பென்டாஸ்டிக், நடிப்பு தூள் கிளப்பிட்டிங்க, போலீஸ் யூனிபார்ம்ல செம்ம பிட். வில்லன் யாரு? சூப்பர் பாடி லாங்வேஜ், இயக்குனருடன் உங்கள் கூட்டணி சூப்பர்’ என்றார்.



    ரஜினியின் பாராட்டு படக்குழுவினரை சந்தோஷத்தில் ஆழ்த்தியுள்ளது. மேலும், ரஜினிக்கு படக்குழுவினர் பாராட்டும் தெரிவித்துள்ளனர்.
    விஜய் சேதுபதியின் 96 மற்றும் விஷ்ணு விஷாலின் ராட்சசன் படங்களை பார்த்த இயக்குநர் ஷங்கர் படத்தையும், படக்குழுவையும் பாராட்டியுள்ளார். #96TheMovie #Ratsasan
    பிரேம்குமார் இயக்கத்தில் விஜய் சேதுபதி - திரிஷா நடிப்பில் கடந்த 4-ந் தேதி வெளியாகிய 96 படத்திற்கு ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. பள்ளிக் காதலை மையமாக வைத்து உருவாகி இருக்கும் இந்த படத்திற்கு ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. குறிப்பாக இளைஞர்கள் படத்தை கொண்டாடி வருகின்றனர். 

    அதுமட்டுமின்றி தமிழ் சினிமாவில் உள்ள பலரும் படத்தையும், படக்குழுவையும் பாராட்டி வருகின்றனர். 

    அதேபோல் ராம்குமார் இயக்கத்தில் விஷ்ணு விஷால் - அமலாபால் நடிப்பில் 5-ந் தேதி வெளியான சைக்கோ த்ரில்லர் படமாக ராட்சசன் படத்திற்கும் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு இருப்பதால், இரு படங்களின் காட்சிகளின் எண்ணிக்கையும் கணிசமாக உயர்ந்து வருகிறது.
    இந்த நிலையில், படத்தை பார்த்த பிரம்மாண்ட இயக்குநர் ஷங்கர் 96, ராட்சசன் படக்குழுவை பாராட்டியுள்ளார். இதுகுறித்து ஷங்கர் அவரது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளதாவது,

    `96, ஏதாவது ஒரு காட்சியில் தனிப்பட்ட முறையில் நம்மை தொடர்புபடுத்துகிறது. அதுவே இந்த படத்தின் அழகு. விஜய் சேதுபதி அற்புதமான நடிப்பு. திரிஷாவை பார்க்கும் போது மகிழ்ச்சியாக உள்ளது. பிரேம்குமாருக்கு வாழ்த்துக்கள். ராட்சசன், மற்றொரு சுவாரஸ்யமான படம். ரசிகர்கள் இயக்குநர் ராம்குமாருக்கு கைதட்டி வாழ்த்து தெரிவிப்பதை பார்க்க மகிழ்ச்சியாக உள்ளது. அது அவருக்கே உரியதாகும்' இவ்வாறு கூறியுள்ளார். #96TheMovie #Ratsasan

    ராம்குமார் இயக்கத்தில் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும் ராட்சசன் படப்பிடிப்பு முடிந்த பிறகு இயக்குநரை பாராட்ட சென்றேன், ஆனால் அவரோ பதறி அங்கிருந்து சென்றுவிட்டதாக அமலாபால் கூறினார். #Ratsasan #AmalaPaul
    ராம் குமார் இயக்கத்தில் விஷ்ணு விஷால் - அமலாபால் நடிப்பில் திரையரங்குகளில் ஓடிக் கொண்டிருக்கும் ராட்சசன் படத்தின் நன்றி தெரிவிக்கும் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. அதில் நடிகை அமலாபால் பேசியதாவது,

    படம் ரிலீசாகும் போது கடுமையான போட்டி இருந்தது. படம் வெற்றி பெற்றதில் மகிழ்ச்சி. ராட்சசன் படத்தில் எனக்கு ஒரு அழகான கதாபாத்திரம் கிடைத்திருக்கிறது. ராம் ஒரு எளிஜிபில் பேச்சிலர். யாருக்கும் தெரியாது என்று நினைக்கிறேன். முண்டாசுப்பட்டி படத்திற்கு பிறகு கல்யாணம் பண்ணியிருந்தால் நடந்திருக்கும் என்று ராமிடம் சொல்லிக் கொண்டே இருப்பேன். இந்த படத்துக்கு அப்புறம் எல்லாரும் கொஞ்சம் டென்சன் ஆயிருவாங்க, இந்த படத்தின் படப்பிடிப்பில் அனைவருமே கஷ்டப்பட்டோம். படப்பிடிப்பு முடிந்த உடனே ராமுக்கு நன்றி தெரிவித்து அவரை அரவணைத்து பாராட்ட சென்றேன். ஆனால் அவரோ பதறியடித்து ஓடியேவிட்டார். ரொம்ப சிறந்த மனிதர்.



    நிறைய நல்ல கதைகளில் நடிக்க வேண்டும் என்று விரும்புகிறேன். இந்த படத்தில் நான் நடிக்க முக்கிய காரணமான விஷ்ணுவுக்கு நன்றி. அவர் இல்லையென்றால் நான் இந்த படத்தில் நடித்திருக்க முடியாது.

    மீடூ பற்றி முதலில் ட்வீட் செய்தது நான் தான். எல்லாருக்கும் தெரியும், இந்த ஆண்டு பிப்ரவரியில் எனக்கு ஒரு பாலியல் தொல்லை வந்தபோதே நான் சொல்லியிருந்தேன். எனக்கு ஒரு தொல்லை வரும் போது அது பற்றி நான் பேசிவிட்டேன். இது மூடிவைக்கக்கூடிய விஷயம் அல்ல, இந்த மாதிரியான தொல்லைகள் நிறைய இருக்கிறது. சினிமாவில் மட்டும் இல்லை, மற்ற பல துறைகளிலும் இருக்கிறது. #Ratsasan #AmalaPaul

    ராம்குமார் இயக்கத்தில் விஷ்ணு விஷால் - அமலாபால் நடிப்பில் வெளியாகி ஓடிக் கொண்டிருக்கும் ராட்சசன் படத்தின் இந்தி ரீமேக் உரிமையை விஷ்ணு விஷால் கைப்பற்றியிருக்கிறார். #Ratsasan #VishnuVishal
    முண்டாசுப்பட்டி படத்திற்கு பிறகு ராம்குமார் - விஷ்ணு விஷால் இரண்டாவது முறையாக இணைந்திருக்கும் ராட்சசன் படத்திற்கு ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்திருக்கிறது.

    ரசிகர்களை சீட்டின் நுனியிலேயே உட்கார வைக்கும் சைக்கோ த்ரில்லர் கதையான இந்த படம் தொடர்ந்து இரண்டாவது வாரமாக வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. இந்த நிலையில், படத்திற்கான இந்தி ரீமேக் உரிமையை விஷ்ணு விஷால் வாங்கியிருப்பதாக தகவல் வெளியான நிலையில், விஷ்ணு தனது ட்விட்டர் பக்கத்தில் அதனை உறுதிப்படுத்தியுள்ளார்.

    இந்த படத்தில் சைக்கோ கொலைகாரன் ஒருவனை கண்டுபிடிக்க போராடும் போலீஸ் அதிகாரியாக விஷ்ணு விஷால் நடித்திருக்கிறார். விஷ்ணு ஜோடியாக அமலாபாலும், முக்கிய கதாபாத்திரத்தில் சூசேன் ஜார்ஜ், சஞ்சய், காளி வெங்கட், ராம்தாஸ் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். 

    ஆக்சஸ் பிலிம் ஃபாக்ட்ரி மற்றும் டிரைடன்ட் ஆர்ட்ஸ் நிறுவனம் இணைந்து தயாரித்துள்ள இந்த படத்திற்கு ஜிப்ரான் இசையமைத்துள்ளார். #Ratsasan #VishnuVishal

    ராம்குமார் இயக்கத்தில் விஷ்ணு விஷால் - அமலாபால் நடிப்பில் வெளியாகி இருக்கும் ராட்சசன் படத்தின் விமர்சனம். #RatsasanReview #VishnuVishal #AmalaPaul
    உதவி இயக்குநராக இருக்கும் விஷ்ணு விஷால், இயக்குநராக வேண்டும் என்ற கனவோடு முயற்சி செய்து வருகிறார். சைக்கோ த்ரில்லர் கதையொன்றை இயக்க நினைத்து அதற்கான கதை தேடலில் ஈடுபட்டிருக்கும் விஷ்ணு விஷால், தனது கதைக்காக பல்வேறு தகவல்களை சேகரிக்கிறார். பின்னர் தயாரிப்பாளர்களை சந்தித்து கதை கூறி வருகிறார். ஆனால் இவரது முயற்சி அடுத்த கட்டத்திற்கு நகரவில்லை.

    இந்த நிலையில், போலீஸ் அதிகாரியாக இருக்கும் விஷ்ணுவின் மாமாவான ராமதாஸ், விஷ்ணு விஷாலை போலீஸ் வேலையில் சேர சொல்லி வற்புறுத்துகிறார். ராமதாஸின் உதவியுடன் போலீஸ் அதிகாரியாகும் விஷ்ணு விஷால் பதவியேற்ற 2 நாளில், பள்ளிச் சிறுமி ஒருவர் கடத்தப்பட்டு மர்மமான முறையில் கொடூரமாக கொல்லப்படுகிறார்.



    இதுகுறித்த விசாரணையில் இறங்கும் விஷ்ணு விஷாலுக்கு, அடுத்தடுத்து நடக்கும் கொடூர கொலைகள் அதிர்ச்சி அளிக்கின்றன. இருப்பினும் அந்த கொலையில் இருக்கும் மர்மங்களை களைந்து பல தடங்களை சேகரிக்கிறார். இதற்கிடையே பள்ளி ஆசிரியையான அமலா பாலுக்கும், விஷ்ணு விஷாலுக்கும் இடையே பழக்கம் ஏற்படுகிறது. ஒருகட்டத்தில் அமலா பால் வகுப்பில் படிக்கும் விஷ்ணு விஷாலின் அக்கா மகளும் கடத்தப்படுகிறாள்.

    ஒருவழியாக சை்ககோ கொலையாளியை நெருங்கும் விஷ்ணு விஷாலால், அந்த கொலைகாரனை பிடிக்க முடியவில்லை. மேலும் பணியில் இருந்தும் விஷ்ணு இடைநீக்கம் செய்யப்படுகிறார்.



    கடைசியில், பள்ளி குழந்தைகளை கடத்தி கொடூர கொலைகளை செய்யும் ராட்சசனை விஷ்ணு விஷால் கண்டுபிடித்தாரா? தனது அக்கா மகளை மீட்டாரா? அதன் பின்னணியில் என்ன நடந்தது? என்பதே படத்தின் மீதிக்கதை.

    படத்தின் பெரும்பான்மையான காட்சிகளை விஷ்ணு விஷாலே ஆக்கிரமித்திருக்கிறார். படத்தை தனது தோள் மீது சுமந்து செல்கிறார் என்று சொல்லலாம். இந்த படத்திற்காக விஷ்ணு கடுமையாக உழைத்திருக்கிறார் என்பதை உணர முடிகிறது. அமலாபாலுக்கு பெரிய கதாபாத்திரம் இல்லை என்றாலும், வரும் காட்சிகளில் கவர்ந்து செல்கிறார்.



    காமெடி தோற்றத்தில் நடித்து வந்த ராமதாஸ் இந்த முறை விறைப்பான போலீஸ் அதிகாரி தோற்றத்தில் வந்து செல்கிறார். காளி வெங்கட் ஆங்காங்கு வந்து செல்கிறார். ஒரு சில இடங்களிலேயே அவருக்கு சொல்லும்படியான காட்சிகள் இருக்கிறது. ராதாரவி, நிழல்கள் ரவி, சங்கிலி முருகன் அனுபவ நடிப்பை வெளிப்படுத்தி இருக்கின்றனர். சூசேன் ஜார்ஜ் அவரது கதாபாத்திரத்தை மெருகேற்றியிருக்கிறார்.

    முண்டாசுப்பட்டி என்ற முழு நீள காமெடிப் படத்தை கொடுத்துவிட்டு, தனது அடுத்த படைப்பில் முழு த்ரில்லர் கதையை முயற்சித்திருக்கும் இயக்குநர் ராம்குமாருக்கு பாராட்டுக்கள். படத்தின் முதல் பாதி போவதே தெரியாத வகையில் நகர்கிறது. இரண்டாவது பாதி அதற்கு நேர்மாறாக எப்போது முடியும் என்று யோசிக்க வைக்கிறது. இரண்டாவது பாதியில் காட்சிகளை குறைத்திருந்தால் படம் இன்னமும் சிறப்பாக வந்திருக்கும். குறிப்பாக கிளைமேக்ஸ் காட்சியில் வில்லனை நெருங்கிய பிறகும் காட்சி நீள்வது, ஒருவித சோர்வை ஏற்படுத்தும்படியாக இருக்கிறது.



    படத்தில் சைக்கோ கொலையாளி பற்றி எந்த இடத்திலும் கொடூரமான முகத்தையோ, தோற்றத்தையோ காட்டவில்லை. ஆனால், படம் பார்ப்பவர்களை படம் முழுக்க அச்சுறுத்தியிருக்கிறார் ஜிப்ரான். பொம்மை இருக்கும் கிப்ட் பாக்ஸை காட்டும் போது வரும் பின்னணி இசையின் மூலமே ஒருவித பயத்தை உண்டுபண்ணியிருக்கிறார். வில்லன் யார், அவன் எப்படி இருப்பான் என்பதை காட்டாவிட்டாலும், இசையாலேயே அந்த ராட்சசனை நம் கண்முன் கொண்டுவந்து நிறுத்துகிறார். பி.வி.சங்கரின் ஒளிப்பதிவில் காட்சிகள் சிறப்பாக வந்துள்ளன.

    மொத்தத்தில் `ராட்சசன்' ஆர்வத்தை தூண்டுகிறான். #RatsasanReview #VishnuVishal #AmalaPaul

    `வடசென்னை' படத்தை தொடர்ந்து, இயக்கத்தில் பிசியாகி இருக்கும் தனுஷ் அடுத்ததாக ராம்குமார் இயக்கத்தில் நடிக்கவிருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. #Dhanush #RamKumar
    `முண்டாசுப்பட்டி' படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குநராக அறிமுகமானவர் ராம்குமார். அவரது இயக்கத்தில் அடுத்ததாக `ராட்சசன்' படம் வருகிற 5-ஆம் தேதி ரிலீசாக இருக்கிறது. சைக்கோ த்ரில்லர் பாணியில் உருவாகி இருக்கும் இந்த படத்தில் விஷ்ணு விஷால் - அமலா பால் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

    இந்த நிலையில், ராம்குமார் அடுத்ததாக தனுஷுடன் இணையவிருக்கிறார். பேண்டஸி படமாக உருவாகும் இந்த படத்தின் படப்பிடிப்பு அடுத்த ஆண்டு துவங்கவிருக்கிறது.



    தனுஷ் தற்போது வரலாறு சம்பந்தப்பட்ட பிரம்மாண்ட படமொன்றை இயக்கி, நடித்து வருகிறார். அந்த படத்தை முடித்த பிறகு ராம்குமார் இயக்கத்தில் தனுஷ் நடிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த படத்தை வி.கிரியேஷன்ஸ் சார்பில் கலைப்புலி எஸ்.தாணு தயாரிக்க இருப்பதாக கூறப்படுகிறது.

    தனுஷ் நடிப்பில் `வடசென்னை' படம் வருகிற அக்டோபர் 17-ஆம் தேதி ரிலீசாக இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. #Dhanush #RamKumar

    ராட்சசன் படத்தில் விஷ்ணு விஷாலுக்கு ஜோடியாக நடித்து வரும் அமலாபால், எதிர்காலத்தில் அரசியலில் ஈடுபடுவேன் என்று கூறியிருக்கிறார். #Amalapaul #Ratsasan
    விஷ்ணு விஷால், அமலாபால் ஜோடியாக நடித்துள்ள படம் ‘ராட்சசன்’. இந்த படத்தை ராம்குமார் டைரக்டு செய்துள்ளார். இவர் ஏற்கனவே முண்டாசுபட்டி படத்தை இயக்கியவர். ஜி.டில்லிபாபு தயாரித்துள்ளார். ராட்சசன் படக்குழுவினர் சென்னையில் பேட்டி அளித்தனர். அப்போது அமலாபால் கூறியதாவது:-

    ‘‘ராட்சசன் கதையை டைரக்டர் சொன்னபோது குழப்பமாக இருந்தது. விஷ்ணு விஷால் போனில் மீண்டும் கதையை விளக்கி சொன்னார். மிகவும் பிடித்து போனது. வித்தியாசமான கதையாக இருந்தது. எனது கதாபாத்திரமும் அழுத்தமாக இருந்தது. படமும் சிறப்பாக வந்துள்ளது. 

    இந்த படம் மூலம் விஷ்ணு விஷால் நண்பராகி விட்டார். நடிகர் கனவோடு வருபவர்களுக்கு விரக்தி ஏற்பட்டால் விஷ்ணு விஷாலை முன்மாதிரியாக எடுத்துக்கொள்ளலாம். தனது கதாபாத்திரம் சிறப்பாக அமைய நூறு சதவீதம் உழைப்பை கொடுப்பார். இது அவருக்கு திருப்புமுனை படமாக இருக்கும். திகில் படங்களுக்கு ரசிகர்கள் உண்டு. ராட்சசன் நமது மண்சார்ந்த திகில் படமாக இருக்கும். ஜிப்ரான் இசை படத்துக்கு பெரிய பலம். இந்த படத்தில் சொந்த குரலில் பேசி இருக்கிறேன். வேறு ஒருவரை டப்பிங் பேச வைப்பது குழந்தையை பெற்று மற்றவரிடம் கொடுப்பது போன்றது. நானே டப்பிங் பேசுவேன் என்று ஒப்பந்தம் போட்டு படங்களில் நடிக்கிறேன். 



    எதிர்காலத்தில் அரசியலில் ஈடுபட விருப்பம் இருக்கிறது. இமயமலைக்கு அடிக்கடி செல்கிறேன். அங்குள்ள இயற்கையான சூழலில் மனம் இதமாகிறது. ஆன்மிக உணர்வு ஏற்படுகிறது. எனது வாழ்க்கையை மாற்றியது இமயமலைதான். அங்கு செல்வது கடவுளிடம் போவது மாதிரி இருக்கும். ஆடை படத்தில் கதைக்கு தேவையாக இருந்ததால் கவர்ச்சியாக நடிக்கிறேன்.’’

    இவ்வாறு அமலாபால் கூறினார். 

    மறுமணம் எப்போது செய்துகொள்வீர்கள்? என்று கேட்டபோது, ‘‘இன்னும் அதுபற்றி யோசிக்கவில்லை. முடிவு செய்யும்போது தெரிவிக்கிறேன்’’ என்றார்.
    ×