search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Rebo Rate"

    ரெப்போ விகிதம் மற்றும் ரிவர்ஸ் ரெப்போ விகிதங்களை ரிசர்வ் வங்கி மீண்டும் உயர்த்தியிருப்பதால், வங்கிக் கடன்களுக்கான வட்டி விகிதம் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. #RBIMonetaryPolicy #RepoRate
    புதுடெல்லி:

    இந்திய ரிசர்வ் வங்கியின் நாணய கொள்கைக் குழு கூட்டம் இரண்டு மாதத்திற்கு ஒருமுறை நடத்தப்பட்டு, வட்டி விகிதம் மற்றும் நிதிக்கொள்கை மறுசீராய்வு அறிக்கை வெளியிடப்படும். கடந்த ஜூன் மாதம் நடந்த கூட்டத்தில் வங்கிகளுக்கான குறுகிய கால கடன் வட்டி விகிதம் (ரெப்போ) மற்றும் வங்கிகளிடமிருந்து ரிசர்வ் வங்கி பெறும் கடன்களுக்கான வட்டி விகிதம் (ரிவர்ஸ் ரெப்போ) 0.25 சதவீதம் அளவுக்கு உயர்த்தப்பட்டது. அதன்படி ரெப்போ வட்டி விகிதம் 6.25 சதவீதமாகவும், ரிவர்ஸ் ரெப்போ 6 சதவீதமாகவும் உயர்ந்தது.

    இந்நிலையில், ரிசர்வ் வங்கி ஆளுநர் உர்ஜித் பட்டேல் தலைமையில் இன்று நாணயக் கொள்கைக் குழு இன்று மீண்டும் கூடியது. இக்கூட்டத்தில் நாணய கொள்கைக் குழுவின் உறுப்பினர்கள் கலந்துகொண்டு வட்டி விகிதம் தொடர்பாக ஆலோசனை நடத்தினர். தற்போதைய சந்தை நிலவரம், பணவீக்கம், பொருளாதார நிலை குறித்து விரிவாக ஆலோசிக்கப்பட்டது. தற்போதைய பண வீக்கத்தை கருத்தில் கொண்டு, வட்டி விகிதங்களை 0.25 சதவீதம் அளவுக்கு உயர்த்த முடிவு செய்யப்பட்டது. இதற்கு குழுவின் அனைத்து உறுப்பினர்களும் ஆதரவு தெரிவித்தனர்.


    இந்த ஆலோசனைக் கூட்டம் இன்று பிற்பகல் நிறைவடைந்த நிலையில், ரிசர்வ் வங்கியின் நாணய கொள்கைக் குழு தனது கொள்கை முடிவை வெளியிட்டது. அதில் ரெப்போ வட்டி விகிதம் 6.25 சதவீதத்தில் இருந்து 0.25 சதவீதம் அதிகரித்து 6.50 சதவீதமாக  நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதேபோல் ரிவர்ஸ் ரெப்போ வட்டி விகிதமும் 6 சதவீதத்தில் இருந்து 6.25 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது.

    2013ம் ஆண்டுக்குப் பிறகு அடுத்தடுத்து ரெப்போ விகிதம் உயர்த்தப்படுவது இதுவே முதல் முறை குறிப்பிடத்தக்கது.

    வட்டி விகிதம் உயர்த்தப்பட்டிருப்பதால் வங்கிகளும் தங்கள் வாடிக்கையாளர்களுக்கான வீட்டுக்கடன் மற்றும் வாகனக் கடன் உள்ளிட்ட பல்வேறு கடன்களுக்கான வட்டி விகிதத்தை உயர்த்த வாய்ப்பு உள்ளது. #RBI #RBIMonetaryPolicy #RepoRate
    ×