search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Revaluation Scam"

    அண்ணா பல்கலைக்கழக விடைத்தாள் மறுமதிப்பீட்டு முறைகேட்டில் மேலும் 30 பேருக்கு தொடர்பு இருப்பது தெரிய வந்துள்ளது. #AnnaUniversity #RevaluationScam
    சென்னை:

    சென்னை அண்ணா பல்கலைக்கழகம் சார்பில் கடந்த 2017-ம் ஆண்டு ஏப்ரல், மே ஆகிய மாதங்களில் பருவ தேர்வு நடைபெற்றது.

    இந்த தேர்வில் எதிர்பார்த்ததை விட குறைந்த மதிப்பெண் பெற்ற மாணவர்கள், தோல்வி அடைந்தவர்கள் என 3 லட்சம் பேர் தேர்வுத்தாள் மறுமதிப்பீட்டுக்கு விண்ணப்பித்தனர்.

    விழுப்புரம் மாவட்டம் திண்டிவனத்தில் உள்ள அண்ணா பல்கலைக்கழக பொறியியல் கல்லூரியில் அமைக்கப்பட்டிருந்த மையத்தில் விடைத்தாள் மறுமதிப்பீடு செய்யும் பணிகள் நடைபெற்றது.

    பின்னர் விடைத்தாள் மறுமதிப்பீடு தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டது. இதில் பருவத்தேர்வில் தோல்வி அடைந்திருந்த 73 ஆயிரத்து 733 மாணவர்கள் தேர்ச்சி பெற்றனர். குறைந்த மதிப்பெண்கள் பெற்றிருந்த 16 ஆயிரத்து 636 மாணவர்கள் கூடுதல் மதிப்பெண்கள் பெற்றனர்.

    இந்த நிலையில் பெரும்பாலான மாணவர்கள் எழுதிய விடைகளுக்கு நிர்ணயிக்கப்பட்ட மதிப்பெண்ணை விட கூடுதலாக மதிப்பெண்கள் வாரி வழங்கப்பட்டிருப்பதாக குற்றச்சாட்டுகள் எழுந்தது. இதையடுத்து லஞ்ச ஒழிப்பு போலீசார் நடத்திய விசாரணையில், அண்ணா பல்கலைக் கழக மாணவர்களின் தேர்வுத்தாள் மறுமதிப்பீட்டில் மிகப்பெரிய அளவில் முறைகேடு அரங்கேறி இருப்பது சமீபத்தில் வெளிச்சத்துக்கு வந்தது.

    குறைந்த மதிப்பெண் பெற்றவர்களுக்கும், தேர்வில் தோல்வி அடைந்த மாணவர்களுக்கும் கூடுதல் மதிப்பெண் அளிப்பதற்கு பணம் பெறப்பட்டதும் தெரிய வந்தது.

    இதுதொடர்பாக லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடி விசாரணையில் இறங்கினார் கள். இவ்விவகாரம் தொடர்பாக அண்ணா பல்கலைக் கழக முன்னாள் தேர்வு கட்டுப்பாட்டு அலுவலராக இருந்த உமா, திண்டிவனத்தில் உள்ள அண்ணா பல்கலைக்கழக பொறியியல் கல்லூரி பேராசிரியர் விஜயகுமார், உதவி பேராசிரியர் சிவக்குமார், கண்காணிப்பாளர்களாக பணியாற்றிய எம்.மகேஷ்பாபு, என்.அன்புச்செல்வன், ஆர்.சுந்தர்ராஜன், சி.என்.பிரதீபா, எல்.பிரகதீஸ்வரன், எம்.ரமேஷ்கண்ணன், எஸ்.ரமேஷ் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இதையடுத்து குற்றச்சாட்டுக்கு உள்ளானவர்கள் பணி இடைநீக்கம் செய்யப்பட்டனர்.

    இந்த நிலையில் சென்னை ஆலந்தூரில் உள்ள லஞ்ச ஒழிப்பு தலைமை அலுவலகத்தில் ஆஜராகும்படி குற்றச்சாட்டுக்கு உள்ளான பேராசிரியர் விஜயகுமார், உதவி பேராசிரியர் சிவகுமாருக்கு லஞ்ச ஒழிப்பு போலீசார் சம்மன் அனுப்பி இருந்தனர். அதன்பேரில் அவர்கள் நேற்று முன்தினம் ஆஜராகினர்.

    2-வது நாளாக நேற்றும் அவர்களிடம் லஞ்ச ஒழிப்பு போலீசார் விசாரணை நடத்தினார்கள். முதலில் இருவரையும் ஒன்றாக அமரவைத்து விசாரணை நடத்தப்பட்டது. பின்னர் தனித்தனியாக விசாரிக்கப்பட்டது.

    அப்போது போலீசாரிடம் அவர்கள் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளனர். இதுதொடர்பாக லஞ்ச ஒழிப்பு போலீசார் ஒருவர் கூறியதாவது:-

    தேர்வுத்தாள் மறுமதிப்பீடு முறைகேட்டில் அண்ணா பல்கலைக்கழக ஊழியர்கள், முன்னாள் பேராசிரியர்கள் என மேலும் 30 பேருக்கு தொடர்பு இருப்பதாக தெரிவித்துள்ளனர். அவர்களுடைய பெயர் விவரங்களையும் அளித்துள்ளனர். அதனடிப்படையில் அவர்களிடம் விரைவில் விசாரணை நடத்தப்படும். தற்போது புகாரில் சிக்கி உள்ளவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடைபெறும். அவர்கள் அளிக்கும் தகவல் அடிப்படையில் விசாரணை அடுத்தகட்டத்துக்கு எடுத்து செல்லப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.  #AnnaUniversity #RevaluationScam
    மார்க் மறுமதிப்பீடு ஊழல் தொடர்பாக அண்ணா பல்கலை. தேர்வு கட்டுப்பாட்டுத்துறையில் 2015-ம் ஆண்டு முதல் 2018-ம் ஆண்டு வரை பணியில் இருந்த அதிகாரிகளுக்கு ஒரு வாரத்துக்குள் சம்மன் அனுப்பப்பட உள்ளது. #AnnaUniversity #RevaluationScam
    சென்னை:

    அண்ணா பல்கலைக் கழகத்தில் கடந்த ஆண்டு தேர்வுத்தாள்கள் மறுமதிப்பீடு செய்யப்பட்ட போது பெரிய அளவில் முறைகேடுகள் நடந்து இருப்பது அம்பலத்துக்கு வந்தது.

    மறு மதிப்பீடுக்கு விண்ணப்பித்த சுமார் 90 ஆயிரம் மாணவர்களில் 50 சதவீதம் பேரிடம் பணம் வாங்கிக் கொண்டு அதிக மதிப்பெண் அளிக்கப்பட்டதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. அந்த ஒரு செமஸ்டரில் மட்டும் மாணவர்களிடம் இருந்து ரூ.40 கோடி வரை பெறப்பட்டதாக கூறப்படுகிறது.

    அண்ணா பல்கலைக்கழக தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரியாக உமா இருந்த 2015-ம் ஆண்டு முதல் 2018-ம் ஆண்டு வரை இந்த ஊழல் நடந்திருக்கலாம் என்ற சந்தேகம் லஞ்ச ஒழிப்பு போலீசாருக்கு எழுந்துள்ளது. இதையடுத்து போலீசார் 8 பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.

    முதல் கட்டமாக தேர்வுத் துறையில் பணிபுரிந்த அதிகாரிகளின் வீடுகள் மற்றும் அலுவலகங்களில் சோதனை நடத்தப்பட்டு ஏராளமான ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன. அந்த ஆவணங்களின் அடிப்படையில் சுமார் 100 மாணவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தினார்கள்.

    லஞ்ச ஒழிப்புப் போலீசார் இதுவரை நடத்தியுள்ள சோதனை மற்றும் விசாரணை மூலம் தேர்வுகள் மறு மதிப்பீட்டில் ஊழல்களுக்கான ஆதாரங்கள் சிக்கியதாக கூறப்படுகிறது. மாணவர்களுக்கு திட்டமிட்டு கூடுதல் மதிப்பெண் அளித்ததற்கான ஆதாரங்களும் கிடைத்துள்ளன. இதுபற்றி தேர்வுத்துறை அதிகாரிகளிடம் போலீசார் வாக்குமூலம் பெற்றுள்ளனர்.

    இதன் தொடர்ச்சியாக மறுமதிப்பீடு ஊழலை உறுதிப்படுத்த மாணவர்கள் எழுதிய தேர்வுதாளை தடயவியல் சோதனைக்கு அனுப்ப முடிவு செய்யப்பட்டது. அதன்படி கடந்த ஆண்டு ஏப்ரல்-மே மாதங்களில் மாணவர்கள் எழுதிய தேர்வுத்தாள்கள் தடயவியல் சோதனைக்கு அனுப்பப்பட்டு வருகிறது. அந்த சோதனை முடிவில் வரும் தகவல்களை வைத்து விசாரணை நடத்த உள்ளனர்.

    இதற்கிடையே தேர்வுத்தாள் மறுமதிப்பீடு முறைகேடுகளில் தனியார் என்ஜினீயரிங் கல்லூரி பேராசிரியர்களுக்கு தொடர்பு இருப்பது தெரியவந்துள்ளது. அந்த பேராசிரியர்கள் பணம் வாங்கிக் கொடுக்கும் இடைத்தரகர்களாக செயல்பட்டுள்ளனர். தேவைப்பட்டால் அவர்களை கைது செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.

    வழக்கமாக அண்ணா பல்கலைக்கழகத்தில் மாணவர்கள் எழுதும் தேர்வுத் தாள்கள் சுமார் ஓராண்டு வரை பாதுகாப்பாக வைத்து இருப்பார்கள். ஆனால் மறுமதிப்பீட்டில் ஊழல் நடந்து இருப்பது அம்பலமான நிலையில் அந்த மறுமதிப்பீடு விடைத்தாள்கள் திட்டமிட்டு அழிக்கப்பட்டு இருப்பது தெரியவந்துள்ளது.

    போலீசார் பல்வேறு கோணங்களில் நடத்தப்பட்ட விசாரணைகளில் முறைகேடு உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இதையடுத்து அண்ணா பல்கலைக்கழகத்தில் தேர்வு கட்டுப்பாட்டுத்துறையில் 2015-ம் ஆண்டு முதல் 2018-ம் ஆண்டு வரை பணியில் இருந்த அதிகாரிகளை விசாரணை வளையத்துக்குள் கொண்டு வர உள்ளனர். அந்த அதிகாரிகளுக்கு ஒரு வாரத்துக்குள் சம்மன் அனுப்பப்பட உள்ளது.


    சஸ்பெண்டு செய்யப்பட்டுள்ள தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி உமாவுக்கு முதலில் சம்மன் அனுப்பப்பட உள்ளது. அப்போது அவர்களிடம் விடைத்தாள்கள் மறுமதிப்பீட்டில் நடந்த முறைகேடுகள் பற்றி கேள்விகள் கேட்கப்படும். போலீசார் ஏற்கனவே கைப்பற்றி வைத்திருக்கும் ஆதாரங்களை காட்டியும் விசாரணை நடத்தப்படும்.

    அண்ணா பல்கலைக்கழக தேர்வுத்துறை அதிகாரிகளின் வீடுகளில் கடந்த மாதம் போலீசார் சோதனை நடத்திய போது சொத்து ஆவணங்களையும் கைப்பற்றி எடுத்துச் சென்றனர். அந்த சொத்துக்கள் எப்படி வாங்கப்பட்டன என்றும் போலீசார் விசாரணை நடத்த உள்ளனர்.

    வருமானத்துக்கு அதிகமாக அவர்கள் சொத்து குவித்து இருக்கிறார்களா என்பது அப்போது தெரிய வரும். அதன் அடிப்படையில் அதிகாரிகள் மீது அடுத்தக்கட்ட நடவடிக்கை பாயும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    அதுபோல மறுமதிப்பீடு செய்யப்பட்ட விடைத்தாள்கள் பற்றி தடயவியல் சோதனை முடிவுகள் வந்ததும், அந்த விடைத்தாள்கள் மீண்டும் அண்ணா பல்கலைக்கழக குழுவிடம் ஒப்படைக்கப்பட உள்ளது. அந்த விடைத்தாள்கள் மீண்டும் மறுமதிப்பீடு செய்ய உத்தரவிடப்படும் என்று தெரிகிறது.

    கடந்த ஆண்டு தேர்வு எழுதிய சுமார் 3 லட்சம் மாணவர்களின் விடைத்தாள்கள் அழிக்கப்பட்ட நிலையில் மறுமதிப்பீடுக்கு உள்ள விடைத்தாள்கள் மட்டுமே ஆதாரமாக இருப்பது குறிப்பிடத்தக்கது. #AnnaUniversity #RevaluationScam
    அண்ணா பல்கலைக்கழக மதிப்பெண் ஊழல் தொடர்பாக குற்றம் சாட்டப்பட்டுள்ள முன்னாள் தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி பேராசிரியை உமாவின் முன்ஜாமீன் மனு ஐகோர்ட்டில் இன்று விசாரணைக்கு வருகிறது. #AnnaUniversity #RevaluationScam
    சென்னை:

    சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தின் உறுப்பு கல்லூரிகளில் செமஸ்டர் தேர்வுகளில் மறுமதிப்பீடு மதிப்பெண் வழங்குவதில் முறைகேடு நடந்திருப்பதாக தமிழக அரசின் லஞ்ச ஒழிப்பு துறையில் புகார் செய்யப்பட்டது.

    இது தொடர்பாக அண்ணா பல்கலைக்கழகத்தின் தேர்வு கட்டுப்பாட்டு முன்னாள் அதிகாரி ஜி.வி.உமா மற்றும் 10 பேராசிரியர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு அவர்களது வீடு, அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்தினர்.



    பெயிலான மாணவர்களுக்கு பலமடங்கு மதிப்பெண்கள் போடப்பட்டு அவர்களை பாஸ் ஆக்கியதாகவும், இதற்காக ஆயிரக்கணக்கில் பணம் கைமாறியதாகவும், லஞ்ச ஒழிப்பு போலீஸ் அதிகாரிகள் தெரிவித்தனர். 70 ஆயிரத்துக்கும் அதிகமான மாணவர்களிடம் இதுபோல் கோடிக்கணக்கில் பணம் பெறப்பட்டு மிகப்பெரிய ஊழல் நடைபெற்று இருப்பதாக கூறப்படுகிறது.

    இதற்கிடையே இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள முன்னாள் தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரியும், தற்போதைய பேராசிரியையுமான ஜி.வி.உமா முன் ஜாமீன் கேட்டு சென்னை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்துள்ளார்.

    அந்த மனுவில் மாணவர்களுக்கான மறுமதிப்பீட்டு மதிப்பெண்கள் வழங்குவது தொடர்பான நடைமுறை நேர்மையாகவும், வெளிப்படை தன்மையாகவும் நடத்தப்பட்டது. இதில் நடைபெற்ற முறைகேடுக்கும் தனக்கும் எந்த தொடர்பும் இல்லை. எனவே தனக்கு முன்ஜாமீன் மனு வழங்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.

    இந்த மனு இன்று ஐகோர்ட்டில் விசாரணைக்கு வருகிறது.  #AnnaUniversity #RevaluationScam

    அண்ணா பல்கலைக்கழகத்தில் விடைத்தாள் மறுமதிப்பீட்டில் நடந்துள்ள முறைகேடுகள் குறித்து சிபிஐ விசாரிக்கக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை ஐகோர்ட் தள்ளுபடி செய்துள்ளது. #AnnaUniversity #RevaluationScam
    சென்னை:

    சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் விடைத்தாள்கள் மறு மதிப்பீட்டில் நடந்துள்ள முறைகேடுகள் சமீபத்தில் அம்பலமானது. தேர்வில் தோல்வி அடைந்த மற்றும் குறைந்த மதிப்பெண் பெற்ற மாணவர்களிடம் பல ஆயிரம் ரூபாயை லஞ்சமாகப் பெற்றுக் கொண்டு கூடுதல் மதிப்பெண் வழங்கியிருப்பது அண்ணா பல்கலைக்கழகம் மீதான நம்பகத்தன்மையை சீர்குலைப்பதாக அமைந்துள்ளது.

    லஞ்ச ஒழிப்புப் பிரிவு போலீசார் நடத்திய ரகசிய விசாரணையில், விடைத்தாள் மறுமதிப்பீட்டில் ஊழல் நடந்திருப்பதும், சில நூறு கோடி ரூபாய் லஞ்சமாக கை மாறி இருப்பதும் தெரிய வந்தது.

    இதையடுத்து ஊழல் தடுப்புத் துறை மற்றும் கண்காணிப்புத் துறையின் சென்னை சிறப்புப் பிரிவினர் அதிரடியாக செயல்பட்டு சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தின் முன்னாள் தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி உமா உள்பட 10 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். விசாரணை விரிவடையும் பட்சத்தில் பல்வேறு கல்லூரிகளின் பேராசிரியர்கள், இடைத்தரகர்கள் சிக்குவார்கள் என தகவல் வெளியாகி உள்ளன.



    இந்நிலையில், அண்ணா பல்கலைக்கழக விடைத்தாள் மறுமதிப்பீடு முறைகேடு வழக்கை சிபிஐக்கு மாற்றக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, தமிழக அரசின் சார்பில் ஆஜரான வழக்கறிஞர், இந்த வழக்கில் மேற்கொண்ட நடவடிக்கைகளை எடுத்துக் கூறினார். மேலும், லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்குப்பதிவு செய்த குறுகிய காலத்திற்குள் சிபிஐக்கு மாற்றக் கோருவது நியாயமற்றது என்றும் வாதிட்டார். அவரது வாதத்தை ஏற்ற நீதிமன்றம், சிபிஐ விசாரணை கோரிய மனுவை தள்ளுபடி செய்தது. #AnnaUniversity #RevaluationScam
     
    அண்ணா பல்கலைக்கழக ஊழல் வெளியானதையடுத்து அனைத்து பல்கலைக்கழகங்களிலும் மார்க் மதிப்பீட்டில் தவறுகள் நடந்திருக்கிறதா என்பதை கண்காணிக்க இருப்பதாக அமைச்சர் அன்பழகன் கூறினார். #RevaluationScam #MinisterAnbalagan
    சென்னை:

    சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் பரீட்சை பேப்பர் மறுமதிப்பீட்டில் மார்க் அதிகமாக வழங்கி பல கோடி ரூபாய் ஊழல் செய்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

    இதுதொடர்பாக அப்போதைய தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி உமா மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. லஞ்ச ஒழிப்பு போலீசார் இதுபற்றி விசாரித்து வருகிறார்கள்.

    உயர்கல்வி அமைச்சர் அன்பழகன் இந்த ஊழல் தொடர்பாக நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

    அண்ணா பல்கலைக்கழகத்தில் உரிய விதிமுறைகளை பின்பற்றாமல் ரூ.63 கோடி ஒப்பந்தம் வழங்கப்பட்டதாக புகார் கூறப்படுகிறது. பொதுவாக அதிக தொகைக்கு ஒப்பந்தம் செய்வதாக இருந்தால் அதற்கு கொள்முதல் கமிட்டியிடம் ஒப்புதல் பெற வேண்டும். அவ்வாறு ஒப்புதல் பெறவில்லை என்றால் அது தவறானதாகும்.



    ஆனால் பல்கலைக்கழகத்தை பொறுத்தவரை துணைவேந்தர் அல்லது கன்வீனர் கமிட்டிக்கு இதற்கான கட்டுப்பாட்டு அதிகாரம் உள்ளது. அந்த நேரத்தில் அங்கு துணைவேந்தர் இல்லை.

    பேராசிரியர் உமா அப்போது தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரியாக நியமிக்கப்பட்டு இருக்கிறார். இந்த நியமனம் நான் மந்திரியாவதற்கு முன்பு 2015-ம் ஆண்டு நடந்ததாகும்.

    இந்த ஒப்பந்தம் செய்ததில் தவறு செய்த அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க நாங்கள் ஏற்கனவே உத்தரவிட்டுள்ளோம். அந்த நேரத்தில் செயலாளர் பதவியில் இருந்தவர் யார்? என்பது குறித்து நாங்கள் ஆய்வு செய்ய இருக்கிறோம்.

    மார்க் மறுமதிப்பீட்டில் எப்படி தவறு நடந்தது என்பதை நாங்கள் அறிய வேண்டியது உள்ளது. ஒரு பல்கலைக்கழகத்தில் இதுபோன்ற தவறு நடந்ததால் மற்ற பல்கலைக்கழகத்திலும் இதே தவறு நடந்திருக்கும் என்று சொல்ல முடியாது. அங்கு தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி வேறு நபராக இருப்பார். அவரும் இதை செய்திருப்பார் என்று சொல்ல முடியாது.

    ஆனாலும் அனைத்து பல்கலைக்கழகங்களிலும் இதுபோன்ற தவறுகள் நடந்திருக்கிறதா? என்பதை அறிய நாங்கள் கண்காணிக்க இருக்கிறோம். பல்கலைக்கழகத்தில் நடந்த தவறுகள் அமைச்சரவை அதிகாரிகளுக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை.

    அது பல்கலைக்கழக மட்டத்தில் நடந்துள்ளது. உயர்கல்வித்துறையில் ஏதேனும் அதிகாரிக்கு அதில் தொடர்பிருந்தால் அது தவறானதாகும். விசாரணையில் யார் தவறு செய்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டாலும் அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.

    இந்த வி‌ஷயத்தில் தவறு செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க அரசுக்கு எந்த பயமும் இல்லை. இதில் நாங்கள் சமரசம் செய்து கொள்ள மாட்டோம். விசாரணையில் யார் தவறு செய்தாலும், எந்த துணைவேந்தர் காலத்தில் நடந்திருந்தாலும் நடவடிக்கை உறுதியாக எடுக்கப்படும். அவர்கள் முன்னாள் துணைவேந்தர்களாக இருந்தாலும் நடவடிக்கை எடுப்போம்.

    ஏற்கனவே பாரதியார் பல்கலைக்கழக துணைவேந்தர் கணபதி மீது புகார் வந்ததை தொடர்ந்து நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தவறு செய்த எந்த அதிகாரிகளும் தப்ப முடியாது.

    இவ்வாறு அன்பழகன் கூறினார். #RevaluationScam #MinisterAnbalagan

    அண்ணா பல்கலைக்கழகத்தில் மார்க் மதிப்பீட்டில் தவறு செய்த எந்த அதிகாரிகளும் தப்ப முடியாது என்று உயர்கல்வித்துறை அமைச்சர் அன்பழகன் தெரிவித்துள்ளார். #KPAnbazhagan #RevaluationScam
    சென்னை:

    சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் பரீட்சை பேப்பர் மறுமதிப்பீட்டில் மார்க் அதிகமாக வழங்கி பல கோடி ரூபாய் ஊழல் செய்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

    இதுதொடர்பாக அப்போதைய தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி உமா மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. லஞ்ச ஒழிப்பு போலீசார் இதுபற்றி விசாரித்து வருகிறார்கள்.

    உயர்கல்வி அமைச்சர் அன்பழகன் இந்த ஊழல் தொடர்பாக நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

    அண்ணா பல்கலைக் கழகத்தில் உரிய விதிமுறைகளை பின்பற்றாமல் ரூ.63 கோடி ஒப்பந்தம் வழங்கப்பட்டதாக புகார் கூறப்படுகிறது. பொதுவாக அதிக தொகைக்கு ஒப்பந்தம் செய்வதாக இருந்தால் அதற்கு கொள்முதல் கமிட்டியிடம் ஒப்புதல் பெற வேண்டும். அவ்வாறு ஒப்புதல் பெறவில்லை என்றால் அது தவறானதாகும்.

    ஆனால் பல்கலைக்கழகத்தை பொறுத்தவரை துணைவேந்தர் அல்லது கன்வீனர் கமிட்டிக்கு இதற்கான கட்டுப்பாட்டு அதிகாரம் உள்ளது. அந்த நேரத்தில் அங்கு துணைவேந்தர் இல்லை.

    பேராசிரியர் உமா அப்போது தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரியாக நியமிக்கப்பட்டு இருக்கிறார். இந்த நியமனம் நான் மந்திரியாவதற்கு முன்பு 2015-ம் ஆண்டு நடந்ததாகும்.

    இந்த ஒப்பந்தம் செய்ததில் தவறு செய்த அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க நாங்கள் ஏற்கனவே உத்தரவிட்டுள்ளோம். அந்த நேரத்தில் செயலாளர் பதவியில் இருந்தவர் யார்? என்பது குறித்து நாங்கள் ஆய்வு செய்ய இருக்கிறோம். மார்க் மறுமதிப்பீட்டில் எப்படி தவறு நடந்தது என்பதை நாங்கள் அறிய வேண்டியது உள்ளது. ஒரு பல்கலைக்கழகத்தில் இதுபோன்ற தவறு நடந்ததால் மற்ற பல்கலைக்கழகத்திலும் இதே தவறு நடந்திருக்கும் என்று சொல்ல முடியாது. அங்கு தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி வேறு நபராக இருப்பார். அவரும் இதை செய்திருப்பார் என்று சொல்ல முடியாது.

    ஆனாலும் அனைத்து பல்கலைக்கழகங்களிலும் இதுபோன்ற தவறுகள் நடந்திருக்கிறதா? என்பதை அறிய நாங்கள் கண்காணிக்க இருக்கிறோம். பல்கலைக்கழகத்தில் நடந்த தவறுகள் அமைச்சரவை அதிகாரிகளுக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை.

    அது பல்கலைக்கழக மட்டத்தில் நடந்துள்ளது. உயர்கல்வித்துறையில் ஏதேனும் அதிகாரிக்கு அதில் தொடர்பிருந்தால் அது தவறானதாகும். விசாரணையில் யார் தவறு செய்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டாலும் அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.

    இந்த வி‌ஷயத்தில் தவறு செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க அரசுக்கு எந்த பயமும் இல்லை. இதில் நாங்கள் சமரசம் செய்து கொள்ள மாட்டோம். விசாரணையில் யார் தவறு செய்தாலும், எந்த துணைவேந்தர் காலத்தில் நடந்திருந்தாலும் நடவடிக்கை உறுதியாக எடுக்கப்படும். அவர்கள் முன்னாள் துணை வேந்தர்களாக இருந்தாலும் நடவடிக்கை எடுப்போம்.

    ஏற்கனவே பாரதியார் பல்கலைக்கழக துணைவேந்தர் கணபதி மீது புகார் வந்ததை தொடர்ந்து நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தவறு செய்த எந்த அதிகாரிகளும் தப்ப முடியாது.

    இவ்வாறு அன்பழகன் கூறினார். #TNMinister #KPAnbazhagan #RevaluationScam
    விடைத்தாள் மறுகூட்டல் முறைகேடு தொடர்பான விசாரணையின் ஒரு பகுதியாக, அண்ணா பல்கலைக்கழகத்தில் இன்று லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். #RevaluationScam #AnnaUniversityRaid
    சென்னை:

    அண்ணா பல்கலைக்கழகத்தில் விடைத்தாள் மறுகூட்டலில் மிகப்பெரிய முறைகேடுகள் நடந்திருப்பதாகவும், லஞ்சம் பெற்றுக்கொண்டு அதிக அளவில் மதிப்பெண்களை வழங்கியிருப்பதாகவும் லஞ்ச ஒழிப்புத்துறைக்கு தகவல் வந்தது. அதன் அடிப்படையில் லஞ்ச ஒழிப்பு போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

    அதிக மதிப்பெண்கள் போடுவதற்கு ஒவ்வொரு மாணவனிடம் இருந்தும் தலா ரூ.10 ஆயிரம் பெற்றிருப்பதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. அதிக மதிப்பெண்கள் பெற்ற சுமார் 90 ஆயிரம் பேரில் பாதி பேர் பணம் கொடுத்து மதிப்பெண் பெற்றிருக்கலாம் என்ற சந்தேகம் நிலவுகிறது. அதன்படி கணக்கிட்டால் அந்த ஒரு செமஸ்டரில் மட்டும் சுமார் 40 முதல் 45 கோடி ரூபாய் வரை ஊழல் நடந்து இருக்கலாம் என்று கூறப்படுகிறது.



    இந்த வழக்கில் முதல் குற்றவாளியாக பல்கலைக்கழக முன்னாள் தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் உமா சேர்க்கப்பட்டுள்ளார். மண்டல முன்னாள் ஒருங்கிணைப்பாளரும், உதவி பேராசிரியருமான விஜயகுமார், மண்டல முன்னாள் அதிகாரி சிவக்குமார் ஆகிய இருவரும் 2-வது, 3-வது குற்றவாளிகளாக சேர்க்கப்பட்டுள்ளனர். இந்த மூவரும் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். லஞ்சம் கொடுத்ததாக சந்தேகிக்கப்படும் மாணவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

    இந்நிலையில், சென்னையில் உள்ள அண்ணா பல்கலைக்கழகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் இன்று சோதனை நடத்தினர்.  இந்த சோதனையின்போது, மறுகூட்டலுக்கு விண்ணப்பிக்கப்பட்டிருந்த ஏராளமான விடைத்தாள்கள் பறிமுதல் செய்யப்பட்டிருப்பதாகவும், தற்போதைய தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி உள்ளிட்டோரிடம் விசாரணை நடத்தப்பட்டதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

    இந்த விசாரணை வளையம் விரிவடையும் பட்சத்தில், மேலும் கல்லூரிகள் சிக்க வாய்ப்புள்ளது. அப்போது ஊழலில் ஈடுபட்ட பேராசிரியர்கள், இடைத்தரகர்கள் அதிக அளவில் சிக்கலாம். #RevaluationScam #AnnaUniversityRaid
    மறுமதிப்பீட்டிற்கு லஞ்சம் கொடுத்ததாக சந்தேகிக்கப்படும் மாணவர்களிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருவதால் மேலும் சில பேராசிரியர்கள் சிக்குவார்கள் என எதிர் பார்க்கப்படுகிறது. #AnnaUniversity #RevaluationScam
    சென்னை:

    சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் கடந்த ஆண்டு ஏப்ரல் - மே மாதம் நடந்த செமஸ்டர் தேர்வு முடிவுகள் கடந்த ஆண்டு ஜூன் மாதம் வெளியிடப்பட்டது.

    அந்த செமஸ்டரில் தோல்வி அடைந்த மாணவர்களும், குறைந்த மதிப்பெண்கள் எடுத்த மாணவர்களும் சுமார் 3 லட்சம் பேர் தங்களது தேர்வு தாள்களை மறுமதிப்பீடு செய்ய விண்ணப்பித்தனர்.

    அவர்களில் 90 ஆயிரம் மாணவர்களுக்கு கூடுதல் மதிப்பெண் கிடைத்தது. இதில் பெரிய அளவில் முறைகேடுகள் நடந்திருப்பதாக லஞ்ச ஒழிப்பு போலீசாருக்கு தகவல் வந்தது. அதாவது அதிக மதிப்பெண்கள் போடுவதற்கு ஒவ்வொரு மாணவனிடம் இருந்தும் தலா ரூ.10 ஆயிரம் பெற்றிருப்பதாக குற்றம் சாட்டப்பட்டது.

    அதிக மதிப்பெண்கள் பெற்ற சுமார் 90 ஆயிரம் பேரில் பாதி பேர் பணம் கொடுத்து மதிப்பெண் பெற்றிருக்கலாம் என்ற சந்தேகம் நிலவுகிறது. அதன்படி கணக்கிட்டால் அந்த ஒரு செமஸ்டரில் மட்டும் சுமார் 40 முதல் 45 கோடி ரூபாய் வரை ஊழல் நடந்து இருக்கலாம் என்று சொல்கிறார்கள்.

    தமிழகம் முழுவதும் 23 மையங்களில் தேர்வுத்தாள் மறுமதிப்பீடு பணிகள் நடந்த நிலையில் விழுப்புரம் மாவட்டம் திண்டிவனத்தில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் நடந்த மறு மதிப்பீட்டு பணிகளில்தான் அதிக அளவு மோசடி நடந்துள்ளது. லஞ்ச ஒழிப்புப் போலீசார் இது தொடர்பாக தீவிர விசாரணை நடத்தி அண்ணா பல்கலைக்கழக தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரியாக இருந்த உமா உள்பட 10 பேர் மீது 8 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

    இந்த வழக்கில் முதல் குற்றவாளியாக உமா சேர்க்கப்பட்டுள்ளார். மண்டல முன்னாள் ஒருங்கிணைப்பாளரும், உதவி பேராசிரியருமான விஜயகுமார், மண்டல முன்னாள் அதிகாரி சிவக்குமார் ஆகிய இருவரும் 2-வது, 3-வது குற்றவாளிகளாக சேர்க்கப்பட்டுள்ளனர். இந்த மூவரும் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.

    இந்த நிலையில் அண்ணா பல்கலைக்கழகத்தில் தேர்வுத் தாள் மறுமதிப்பீட்டில் நடந்த மோசடிகள் பற்றி லஞ்ச ஒழிப்பு போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள். அதிக மதிப்பெண்கள் பெற்ற 16,636 மாணவர்கள் மீது அவர்களுக்கு அதிக சந்தேகம் ஏற்பட்டுள்ளது. அவர்களில் 100 பேரிடம் விசாரிக்கும் பணி நடந்து வருகிறது.

    உமா

    இது தவிர அதிகாரிகள் மற்றும் தேர்வு கட்டுப்பாட்டுத் துறை அலுவலகங்களில் கைப்பற்றப்பட்ட ஆவணங்களையும் போலீசார் ஆய்வு செய்து வருகிறார்கள். இந்த ஆய்வு மூலம் அண்ணா பல்கலைக்கழக தேர்வுத்தாள் மறு மதிப்பீட்டில் பெரிய அளவில் கூட்டு சதி செய்து முறைகேடுகள் நடந்து இருப்பது உறுதியாகியுள்ளது.

    தேர்வு கட்டுப்பாட்டுத் துறை அதிகாரிகள், டாப்- ரேங்க் கல்லூரிகள், மாணவர்கள், பேராசிரியர்கள், இடை தரகர்கள் ஆகியோர் ஒருகிணைந்துதான் இந்த ஊழலை செய்துள்ளனர். சில தனியார் கல்லூரிகள் தங்களது கல்லூரிக்கு நல்ல பெயர் பெற வேண்டும் என்ற நோக்கத்தில் நிறைய மாணவர்களின் தேர்வு தாள்களை மறு மதிப்பீட்டுக்கு அனுப்பி உள்ளன.

    சில கல்லூரிகள் தங்களது மாணவர்களில் 90 சதவீதம் பேரின் தேர்வு தாளை மறு மதிப்பீட்டுக்கு ஏற்பாடு செய்துள்ளன. அந்த கல்லூரிகள் எப்போதும் பல்கலைக்கழக அளவில் அதிக மதிப்பெண்கள் பெறும் கல்லூரிகளாகும். இந்த கல்லூரி மாணவர்களின் மறு மதிப்பீடுகளில்தான் அதிக அளவில் மோசடி நடந்து இருப்பதாக தெரிய வந்துள்ளது.

    இந்த கல்லூரிக்கும் தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரிகளுக்கும் இடையே சிலர் பணம் வாங்கிக் கொடுக்கும் இடைதரகர்களாக இருந்துள்ளனர். அந்த இடைதரகர்கள் அனைவரும் தேர்வு கட்டுப்பாட்டு துறை அதிகாரிகளின் உறவினர்கள் என்பது தெரிய வந்துள்ளது. அவர்களையும் வேட்டையாட லஞ்ச ஒழிப்பு போலீசார் திட்டமிட்டுள்ளனர்.

    போலீசார் கைப்பற்றிய சில ஆவணங்களின் மூலம் திட்டமிட்டு மதிப்பெண் மோசடி நடந்ததும் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. தேர்வில் வெறும் 7 மதிப்பெண் பெற்ற ஒரு மாணவர் மறு மதிப்பீட்டில் 74 மதிப்பெண்கள் எடுத்துள்ளார்.

    இப்படி நிறைய மாணவர்கள் அதிக மதிப்பெண்களை பெற்றுள்ளனர். எனவே அண்ணா பல்கலைக்கழகத்துக்கு மட்டுமின்றி நிறைய தனியார் கல்லூரிகளுக்கும் இதில் தொடர்பு இருப்பது தெரிய வந்துள்ளது.

    லஞ்ச ஒழிப்பு போலீசாரின் விசாரணை வளையம் விரிவடையும் கட்டத்தில் எந்த கல்லூரிகளும் சிக்க வாய்ப்புள்ளது. அப்போது ஊழலில் ஈடுபட்ட பேராசிரியர்கள், இடைத்தரகர்கள் அதிக அளவில் சிக்குவார்கள்.

    மறுமதிப்பீட்டிற்கு லஞ்சம் கொடுத்த மாணவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தி உள்ளனர். இதனால் திண்டிவனம் என்ஜினீயரிங் கல்லூரியில் உள்ள மேலும் பேராசிரியர்கள் பலர் சிக்குவார்கள் என எதிர் பார்க்கப்படுகிறது. இதனால் பேராசிரியர்கள் கலக்கத்தில் உள்ளனர்.

    என்ஜினீயரிங் கல்லூரியில் புதிதாக பொறுப்பேற்றுக் கொண்ட முதல்வர் யாருடனும் செல்போனில் பேசுவதை தவிர்த்து வருகிறார். கல்லூரி வளாகத்தில் வெளிநபர்கள் வருவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

    கல்லூரி வளாகத்தில் புரோக்கர்கள் மற்றும் சந்தேகப்படும்படியான நபர்கள் யாரேனும் வருகிறார்களா? என்று போலீசார் தீவிரமாக கண்காணித்து வருகிறார்கள். #AnnaUniversity #RevaluationScam
    அண்ணா பல்கலைக்கழகத்தில் விடைத்தாள் மறுகூட்டலில் நடந்துள்ள மோசடிக்கும் எனக்கும் எந்த தொடர்பும் இல்லை என்று முன்னாள் தேர்வு கட்டுப்பாட்டு பெண் அதிகாரி ஜி.வி.உமா கூறியுள்ளார். #AnnaUniversity
    சென்னை:

    அண்ணா பல்கலைக்கழகத்தின் விடைத்தாள் திருத்த மோசடி தொடர்பாக அதன் முன்னாள் தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி ஜி.வி.உமாவின் கோட்டூர்புரம் வீட்டில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்தினார்கள். அவர் மீது வழக்கும்பதிவு செய்யப்பட்டு உள்ளது.

    இதுபற்றி உமாவிடம் கேட்டபோது அவர் தன் மீதான குற்றச்சாட்டுகளை மறுத்தார். இதுதொடர்பாக அவர் அளித்த பேட்டி வருமாறு:-

    கே:- விடைத்தாள் மறு கூட்டலுக்கு ரூ.10 ஆயிரம் வீதம் லஞ்சம் பெற்ற வழக்கில் உங்கள் மீதும் குற்றம் சாட்டப்பட்டுள்ளதே?

    ப:-அது முழுவதும் தவறான தகவல். இந்த ஊழலில் எனக்கு எந்த தொடர்பும் இல்லை. கீழ் மட்டத்தில் நடந்து இருந்தால் அது பற்றி எனக்கு தெரிந்திருக்க வாய்ப்பு இல்லை. எந்தப் பணப் பரிமாற்றத்துடன் எனக்கு தொடர்பு இல்லை.

    கே:- தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி என்ற முறையில் 2017-ம் ஆண்டு 1100 தேர்வாளர்களை நீக்கி இருக்கிறீர்கள். மதிப்பெண்கள் ஆரம்பத்தில் போடப்பட்டதற்கும், மறு கூட்டலில் போடப்பட்ட மதிப்பெண்களுக்கும் மிகப்பெரிய வித்தியாசம் உள்ளதே?

    ப:- நான் சீர்த்திருத்தங்கள் கொண்டு வந்ததற்காக என்னை குறிவைத்து இருக்கிறார்கள். அதில் இருந்து நான் விடுபடுவேன். மறுகூட்டல் தொடர்பான விவரங்களை வெளிப்படை தன்மையுடன் வெளியிட்டு இருக்கிறேன். 10 ஆண்டு புள்ளி விவரங்களும் கொடுக்கப்பட்டு உள்ளது. இதில் மறைப்பதற்கு எதுவும் இல்லை. மூத்த அதிகாரிகள் ஒப்புதலுடனேயே நான் சீர்திருத்தங்கள் கொண்டு வந்தேன். சரியான நடைமுறைகளை அமல்படுத்தினேன். அதற்கு முன் இது முறையாக வரையறுக்கப்படவில்லை.

    மறுகூட்டல் தொடர்பாக பேராசிரியர்கள் அளித்த மதிப்பெண்கள் தொடர்பாக அவர்களிடம் அபிடவிட் பெறப்பட்டுள்ளது.

    கே:- இதுதொடர்பாக துணைவேந்தர் உங்களிடம் பேசினாரா?

    ப:- நான் துணை வேந்தரை நேற்று காலை நேரில் சந்தித்து விளக்கம் அளித்து இருக்கிறேன்.

    ஒரே விடைத்தாளுக்கு 2 ஆசிரியர்கள் ஒரே மாதிரியாக மதிப்பெண் வழங்குவது இல்லை. மாநில அளவில் 64 லட்சம் விடைத்தாள்களில் 16,000 விடைத்தாள்களில் மட்டுமே மதிப்பெண்கள் மாறுபட்டு இருக்கிறது.

    கே:- தோல்வி அடைந்த 73,000 மாணவர்கள் மறுகூட்டலுக்கு பின்பு தேர்ச்சி பெற்று இருக்கிறார்களே?

    ப:- நான் மதிப்பெண்கள் மாறுபட்டு இருப்பதை மட்டும் தான் சொல்கிறேன்.

    இந்த முறைகேட்டை நாங்கள் தான் கண்டுபிடித்தோம். இதுதொடர்பாக 1040 தேர்வாளர்கள் மீது கடந்த ஆண்டு நடவடிக்கை எடுத்து இருக்கிறோம். இதுநடந்து பல மாதங்கள் ஆன பின்பு இது வெளிச்சத்துக்கு வந்து இருப்பது ஆச்சரியமாக இருக்கிறது. மறு மதிப்பீட்டில் மதிப்பெண்களில் வந்த வித்தியாசம் தொடர்பாக 1040 பேர் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. முறைகேட்டில் ஈடுபட்ட தேர்வாளர்களுக்கு தண்டனை வழங்கப்பட்டுள்ளது.

    இனிவரும் காலங்களில் அவர்கள் விடைத்தாள் திருத்தும் பணியில் ஈடுபடக் கூடாது என்று உத்தரவிடப்பட்டுள்ளது.

    முறைகேட்டில் ஈடுபட்ட தேர்வாளர்கள் தவிர மற்றவர்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

    இவ்வாறு அவர் கூறினார். #AnnaUniversity
    ×