search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Rishyavanthiyam"

    • ரிஷிகள் வந்த வனம் என்பது மருவி 'ரிஷிவந்தியம்' என அழைக்கப்படுகிறது.
    • சுயம்புலிங்கத்தில் அர்த்தநாரீஸ்வரராக ஒளி வடிவில் சிவன் காட்சி தருகிறார்.

    பல ரிஷிகள் இங்கு வந்து தங்கி ஈசனை வழிபட்டதால் `ரிஷிகள் வந்த வனம்' என்பது மருவி ரிஷிவந்தியம் என்று அழைக்கப்படுகிறது. இவ்வூரில் சுமார் 1500 ஆண்டுகள் பழமை வாய்ந்த முத்தாம்பிகை சமேதா அர்த்தநாரீஸ்வரர் கோவில் உள்ளது. இக்கோவில் திருமலை நாயக்கரால் புதுப்பித்து கட்டப்பட்டதாக கூறப்படுகிறது. இதற்கு வரலாற்று சான்றாக இந்த கோவிலில் திருமலைநாயக்கரின் உருவச்சிலை வைக்கப்பட்டுள்ளது.

    சிவன் பார்வதி திருமணம் கயிலாயத்தில் நடந்தது. அப்போது தென் திசை உயர்ந்து வடதிசை தாழ்ந்தது. இதை சமன் செய்ய அகத்திய முனிவரை தென் திசை செல்ல சிவபெருமான் உத்தரவிட்டார். சிவனின் கட்டளையை ஏற்ற அகத்தியர் பல தலங்களில் தங்கி சிவபூஜை செய்து சென்றார். ஓரிடத்தில் சிவபெருமான் அகத்தியருக்கு திருமணக்காட்சி தந்தார். இந்தக்காட்சி எந்நாளும் உலக மக்களுக்கு கிடைக்க வேண்டும் என அகத்தியர் வேண்டினார். அப்போது 'எனக்கு (லிங்கத்திற்கு) தேன் அபிஷேகம் செய்யும் காலத்தில் இங்குள்ள லிங்கத்தில் என்னுடன் பார்வதியும் இணைந்து தோன்றுவாள்' எனக்கூறி மறைந்தார்.

    விஜயநகர மன்னர்கள் காலத்தில் விவசாயம் செய்வதற்காக சிலர் காடு வெட்டும் போது மண்வெட்டியில் வெட்டுப்பட்ட சுயம்பு லிங்கம் கிடைத்தது. அந்த லிங்கம் தான் மூலவர் அர்த்தநாரீஸ்வரர். இன்றும் கூட வெட்டுப்பட்ட கீறலை சுயம்புலிங்கத்தில் பார்க்கலாம். இந்தக் கோவில் துவாபாரயுகத்தில் தோன்றியது என்று கல்வெட்டுகள் தெரிவிக்கின்றன. இத்தலத்திற்கு அப்பர், சம்பந்தர், சுந்தரர், மாணிக்கவாசகர் ஆகியோர் வந்து ஈசனை வழிபட்டுள்ளனர்.

    இங்கு வழிபட்ட ராமருக்கு ஞானத்தையும், அகத்தியருக்கு திருமணக்கோலத்தையும். பூஜை செய்த ரிஷிகளுக்கு நற்பலன்களையும், குக நமச்சிவாயருக்கு உணவளித்தும் அர்த்தநாரீஸ்வரர் அருள்புரிந்துள்ளார்.

    குரு நமச்சிவாயரின் சீடரான குக நமச்சிவாயர் திருவண்ணாமலையில் இருந்து பல தலங்களை தரிசித்து விட்டு ரிஷிவந்தியம் வழியாக சிதம்பரம் சென்றார். அவ்வாறு செல்லும்போது, அவருக்கு பசி அதிகமானது. அவர் இங்குள்ள முத்தாம்பிகை அம்மனிடம் சென்று, `தாயிருக்க பிள்ளை சோறு' என்ற செய்யுளை பாடினார். உடனே அம்மன் அவர் முன் தோன்றி 'நான் இங்கு ஈசனுடன் அர்த்தபாகம் பெற்றிருக்கிறேன். எனவே இருவரையும் சேர்த்து பாடுவாயாக என்று கூறினார்.

    இதையேற்று குக நமசிவாயரும் அதன்படியே 'மின்னும்படி வந்த சோறு கொண்டு வா என்ற பாடலை பாடினார். இந்த பாடலை கேட்டதும் முத்தாம்பிகை அம்மன் பொற்கிண் ணத்தில் சோறு கொண்டு வந்து குகநமச்சிவாயரின் பசியாற்றினாள் என வரலாறு கூறுகிறது.

    தேவர்களின் தலைவனான இந்திரன் தினமும் இத்தலத்தில் இறைவனுக்கு 108 குடம் பால் அபிஷேகம் செய்து வழிபடுவதை வழக்கமாக கொண்டிருந்தான். ஆனால், அம்மனை வழிபடாமல் சென்று விடுவான்.

    தன்னை வழிபடாத இந்திரனுக்கு பாடம் புகட்ட நினைத்த முத்தாம்பிகை அம்மன், ஒருமுறை அபிஷேகக் குடங்களை மறைத்து வைத்துவிட்டாள். பால்குடங்களை காணவில்லையே என வருந்திய இந்திரன், அங்கிருந்த பலிபீடத்தில் தலையை மோதி உயிர் விட முயற்சித் தான். அப்போது சிவபெருமான் இந்திரன் முன் தோன்றி, இனிமேல் முத்தாம்பிகை அம்பாளுக்கும் சேர்த்து அபிஷேகம் செய்யும்படி கூறினார்.

    மேலும் தினமும் நடக்கும் தேன் அபிஷேக பூஜையில் அர்த்தநாரீஸ்வரராக காட்சி கொடுப்பதாகவும் கூறி மறைந்தார்.

    தேன் கெடாது தன்னுடன் சேர்க்கும் பொருளையும் கெட விடாது. இதன்படி இன்றும் கூட தினசரி நடக்கும் தேன் அபிஷேகத்தில் சுயம்புலிங்கத்தில் அர்த்தநாரீஸ்வரராக (ஆண்பாதி. பெண்பாதி) ஒளி வடிவில் சிவன் காட்சி தருகிறார். மற்ற அபிஷேகம் நடக்கும் போதுலிங்க வடிவம் மட்டுமே தெரியும்.

    கோவில் அமைப்பு

    முத்தாம்பிகை அம்மன் உடனுறை அர்த்தநாரீஸ்வரர் கோவில் உள்ளே சென்றதும். உயர்ந்த கொடிமரம் உள்ளது. அதன் அருகே நந்திபெருமான் காட்சி அளிக்கிறார். பின்னர் உள்ளே அர்த்தநாரீஸ்வரர் காட்சி அளிக்கிறார். அவரை தரிசித்து விட்டு வரும் வழியில் 63 நாயன்மார்கள் சிலைகள் உள்ளன. மேலும் சனீஸ்வரர், தட்சிணாமூர்த்தி, விநாயகர், அகத்தியர், கஜலட்சுமி, வள்ளி, தேவசேனா சமேத பாலசுப்பிரமணியர் ஆகியோர் தனித்தனி சன்னிதிகளில் அருள்பாலிக்கின்றனர்.

    அர்த்தநாரீஸ்வரருக்கு இடப்புறத்தில் முத்தாம்பிகை அம்மன் காட்சி தருகிறார். இதன் உட்பிரகாரத்தில் பெருமாள் புலி பாதங்களுடன் எழுந்தருளி இருப்பதையும் காணலாம்.

    மேலும் முத்தாம்பிகை அம்மன் சன்னிதிக்கு நவக்கிரக சன்னிதியும் உள்ளது. முத்தாம்பிகை அம்மனை தரி சித்து விட்டு வெளியே வரும்போது அருகே உள்ள மண்டபத்தில் யாளிச்சிலை ஒன்று உள்ளது. அதன் வாயினுள் ஒரு கல் உருண்டை உள்ளது. பந்து போன்ற அந்த உருண்டையை நம்முடைய கைவிரலால் எந்த பக்கம் வேண்டுமானாலும் உருட்டலாம். ஆனால்' வெளியில் எடுக்க முடியாது. இது சிற்ப வேலைப்பாட்டுக்கு சிறந்த எடுத்துக்காட்டாகவும், சிலை வடித்தவர்களின் திறமையையும் காட்டுகிறது.

    இதற்கு தென்கிழக்கு மூலையில் வசந்த மண்டபம் உள்ளது. அதில் பல்வேறு இசைகளை வெளிப்படுத்தும் சரிகமபதநி' இசைத்தூண்கள் அமைக்கப்பட்டுள்ளது.

    விழாக்கள்

    இக்கோவில் தல விருட்சமாக புன்னை மரம் உள்ளது. மேலும் கோவிலில் அகத்திய தீர்த்தம், இந்திர தீர்த்தம், ஞான போத புஷ்கரிணி தீர்த்தம், அக்னி தீர்த்தம், சங்கர தீர்த்தம் ஆகிய தீர்த்தங்கள் உள்ளன. ஆண்டுதோறும் ஆனி மாதம் பிரம்மோற்சவம் 10 நாள் விழாவாக சிறப்பாக கொண்டாடப்படுகிறது. மேலும் கார்த்திகை மாதம் 3-வது திங்கட்கிழமையில் சாமிக்கு 108 சங்கு அபிஷேகம் நடைபெறுகிறது. பிரதோஷ நாட்களில் நந்திக்கு சிறப்பு அபிஷேகம் செய்வது வழக்கம்.

    கோவில் புதுப்பித்து பல ஆண்டுகள் ஆவதால் கோவில் மேல்தளம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகள் சேதமடைந்து காணப்படுகிறது. இதனால் கோவிலை சீரமைக்கும் பணி விரைவில் தொடங்கப்பட உள்ளதாக கோவில் நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    திருமணத்தடை நீங்கவும். குழந்தை பாக்கியம் பெறவும், சுகப்பிரசவம் வேண்டியும் ஏராளமானோர் இக்கோவிலில் வந்து வழிபட்டு செல்கிறார்கள்.

    மேலும் பேச்சில் குறைபாடு உள்ளவர்கள் தேன் வாங்கி சிவனுக்கு அபிஷேகம் செய்து அந்த தேனை சாப்பிட்டால் பேச்சு குறைபாடு நீங்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாக உள்ளது. வேண்டுதல் நிறைவேறியவுடன் பக்தர்கள் கோவிலுக்கு வந்து இறைவனுக்கு அபிஷேகம் செய்கின்றனர். மேலும் சாமிக்கு புத்தாடை அணிவித்து, சிறப்பு பூஜைகள் செய்து நேர்த்திக்கடன் செலுத்துகின்றனர்.

    அமைவிடம்

    முத்தாம்பிகை அம்மன் உடனுறை அர்த்தநாரீஸ்வரரை காலை 6 மணி முதல் மதியம் 12 மணி வரையிலும், மாலை 4 முதல் இரவு 8 மணி வரையும் தரிசிக்கலாம். திருக்கோவிலூரில் இருந்து சுமார் 23 கி.மீ. தொலைவில் தியாக துருகம் வழியாக கள்ளக்குறிச்சி செல்லும் சாலையில் இக்கோவில் உள்ளது. திருக்கோவிலூர், தியாக துருகம், கள்ளக்குறிச்சியில் இருந்து இக்கோவிலுக்கு செல்ல பேருந்துகள் உள்ளன.

    ×