search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "road blockage"

    • திருத்தணி முருகன் கோவில் மலைப்பாதையில் வெள்ளம்.
    • தடுப்புச் சுவர் பகுதி சரிந்து விழுந்தது.

    திருத்தணி:

    திருத்தணி முருகன் கோவிலுக்கு பக்தர்கள் நடந்து செல்வதற்கு வசதியாக படி பாதையும், வாகனங்கள் மூலம் செல்ல மலைப்பாதையும் கோவில் நிர்வாக சார்பில் அமைக்கப்பட்டுள்ளது.

    இந்த நிலையில் மிக்ஜம் புயல் காரணமாக திருவள்ளூர் மாவட்டத்தில் பெய்த பலத்த மழையால், திருத்தணி முருகன் கோவிலுக்கு செல்லும் மலைப்பாதையில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. இதனால் கடந்த 4-ந்தேதி இரவு திருத்தணி முருகன் கோவில் மலைப்பாதையின் ஒரு பகுதியில் திடீரென்று மண் அரிப்பு ஏற்பட்டது. இதனால் 12 மீட்டர் நீளம், 8 மீட்டர் உயரத்துக்கு தடுப்பு சுவர் பகுதி சரிந்து விழுந்தது.

    இதையடுத்து கோவில் நிர்வாகம் சார்பில் மலைப்பாதை வழியாக கோவிலுக்கு வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டது. தற்போது மண் சரிவு ஏற்பட்ட இடத்தில் பொக்லைன் எந்திரம் மூலம் சீரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    ஒரு வாரத்துக்கும் மேலாக நடைபெற்று வரும் சீரமைப்பு பணிகளை இந்து சமய அற நிலையத்துறை ஆணையர் முரளிதரன் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது சீரமைப்பு பணிகளை இன்னும் ஒரு வாரத்தில் முடிக்க வேண்டும் என்று அதிகாரிகளிடம் அறிவுறுத்தினார். இந்த நிலையில் சீரமைப்பு பணிகள் நடைபெறுவதை யொட்டி திருத்தணி முருகன் கோவிலுக்கு மலை ப்பாதை வழியாக பக்தர்கள் நடந்து செல்லவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த தடை இன்று முதல் இன்னும் ஒரு வாரம் அமலில் இருக்கும் என்றும் கூறப்பட்டுள்ளது.

    • குடிநீர் வழங்க கோரி பெண்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
    • குன்னூர் சாலையில் அரைமணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    வத்திராயிருப்பு

    விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு தாலுகாவிற்கு உட்பட்ட குன்னூர் ஊராட்சியில் திருவள்ளுவர் காலனி, கலைஞர் காலனி என இரு காலனிகள் உள்ளன. இங்கு 300-க்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர்.

    இந்த கிராமத்தில் உள்ள மேல்நிலை நீர்தேக்க தொட்டியில் தண்ணீர் சரியாக ஏற்றப்படாமல் இருப்பதால் கிராம மக்களுக்கு தண்ணீர் முறையாக வினியோகம் செய்யப்படவில்லை. இந்தநிலையில் அந்த பகுதி மக்கள் குன்னூர் செல்லும் சாலையில் தட்டுப்பாடின்றி தண்ணீர் வழங்க வலியுறுத்தி காலிக் குடங்களுடன் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    தகவலறிந்த கிருஷ்ணன்கோவில் போலீசார் மறியலில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். உடனடியாக குடிநீர் வழங்க ஏற்பாடு செய்யப்படும் என தெரிவித்தனர்.

    இதில் பேச்சு வார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதையடுத்து பொதுமக்கள் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். இதனால் குன்னூர் சாலையில் அரைமணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமையை கண்டித்து விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் நேற்று பெரம்பலூர் புதிய பஸ் நிலையம் முன்பு சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர்.
    அரியலூர்:

    பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமையை கண்டித்து விடுதலை சிறுத்தைகள் கட்சியின் பெரம்பலூர் மாவட்ட செயலாளர் தமிழ்மாணிக்கம் தலைமையில், அக்கட்சியினர் நேற்று மதியம் பெரம்பலூர் புதிய பஸ் நிலையம் முன்பு சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். அப்போது பொள்ளாச்சியில் மாணவிகள், இளம்பெண்களிடம் பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்ட அனைவரையும் கைது செய்து, அவர்களை உயர் நீதிமன்ற நீதிபதி முன்பு ஆஜர்படுத்தி விசாரணை நடத்த வேண்டும் என்பதை வலியுறுத்தி பல்வேறு கோஷங்களை எழுப்பினர். 

    இதையடுத்து பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் மறியலில் ஈடுபட்ட 17 பேரை கைது செய்து, வேனில் ஏற்றி அருகே உள்ள தனியார் திருமண மண்டபத்தில் தங்க வைத்தனர். மாலையில் அவர்கள் விடுவிக்கப்பட்டனர். விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் காலை 10 மணிக்கு சாலை மறியல் செய்யப்போவதாக கூறியதால், காலை 10 மணிக்கு முன்பாகவே போலீசார் பாதுகாப்பு பணிக்கு வந்து விட்டனர். ஆனால் சாலை மறியல் மதியம் 12 மணிக்கு மேல் தான், அதுவும் சிறிது நேரம் தான் நடைபெற்றதால் போலீசார் பெருத்த ஏமாற்றம் அடைந்தனர்.
    பென்னாகரம் அருகே இன்று காலை குடிநீர் கேட்டு பெண்கள் காலிகுடங்களுடன் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
    பென்னாகரம்:

    தருமபுரி மாவட்டம், பென்னாகரம் அடுத்துள்ள வட்டுவன அள்ளி ஊராட்சிக்குட்பட்ட பவளந்தூர் கிராமத்தில் சுமார் 100 க்கும் மேற்பட்ட குடியிருப்பு வீடுகளில் மக்கள் வசித்து வருகின்றனர். இந்த பகுதிக்கு கடந்த 15 நாட்களாக குடிநீர் வரவில்லை. இதனால் தண்ணீர் கிடைக்காமல் பொதுமக்கள் மிகவும் அவதிப்பட்டு வந்தனர். 

    இது குறித்து அந்தபகுதி பொதுமக்கள் சரியான முறையில் குடிநீர் வினியோகம் செய்ய கோரி பென்னாகரம் ஒன்றிய அலுவலகத்தில் பலமுறை மனு கொடுத்தனர். ஆனால் இதுவரைக்கும் எந்த வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால் ஆத்திரமடைந்த அந்த பகுதி பெண்கள் இன்று காலை காலி குடங்களுடன் பவந்தூர்-ரங்காபுரம் செல்லும் சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். 

    இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த வட்டுவன அள்ளி ஊராட்சி மன்ற செயலாளர் ராமசாமி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று போராட்டத்தில் ஈடுபட்ட பெண்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது குடிநீர் கிடைக்க உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்தார். பின்னர் பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டு பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.

    இந்த போராட்டத்தால் அந்த வழியாக வந்த பேருந்து ஒன்று சுமார் அரை மணி நேரத்திற்கு பிறகு புறப்பட்டு சென்றது.
    புதுக்கோட்டை காந்தி நகரில் புயல் நிவாரணம் வழங்காததை கண்டித்து பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டை மாவட்டத்தில் கடந்த நவம்பர் மாதம் 16-ந் தேதி கஜா புயல் தாக்கியது. இதில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள மின்கம்பங்கள், மரங்கள் சாய்ந்தன. இதேபோல குடிசைகள், ஓட்டு வீடுகள் போன்றவையும் சேதமடைந்தன. இதைத்தொடர்ந்து புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தமிழக அரசின் சார்பில், புயல் நிவாரண பொருட்களும், தென்னை, வாழை மரங்கள் சாய்ந்ததால் பாதிக்கப்பட்டவர்களுக்கும், விவசாயம், வீடுகள் பாதிக்கப்பட்டவர்களுக்கும், அவர்களது வங்கி கணக்கில் நிவாரண தொகை வரவு வைக்கப்பட்டு வருகிறது.

    இந்நிலையில் புதுக்கோட்டை காந்திநகர் பகுதியில் புயலால் பாதிக்கப்பட்டு உள்ள வீடுகளை கணக்கெடுத்து சென்ற அதிகாரிகள், உங்களுக்கு நிவாரண தொகை வழங்கப்படும் என கூறி சென்றனர். ஆனால் இதுநாள் வரை காந்திநகரில் பாதிக்கப்பட்டவர்களுக்கு புயல் நிவாரண பொருட்கள் மற்றும் நிவாரண தொகை வழங்கப்படவில்லை.

    இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் நிவாரண பொருட்கள் மற்றும் நிவாரண தொகை வழங்காததை கண்டித்து, காந்திநகரில் புதுக்கோட்டை-ஆலங்குடி சாலையில் மறியலில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்த கணேஷ்நகர் போலீஸ் இன்ஸ்பெக்டர் அப்துல்ரகுமான் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். பின்னர் அவர்கள் மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தியதில் உடன்பாடு ஏற்பட்டதை தொடர்ந்து மறியலில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர்.
    ஆரணி அருகே விடுதலை சிறுத்தை சாலை மறியல்

    ஆரணி:

    ஆரணி அருகே கொடிகம்பத்தை மர்ம நபர்கள் தீ வைத்து எரித்த சம்பவத்தை கண்டித்து விடுதலை சிறுத்தை கட்சியினர் சாலை மறியலில் செய்தனர்.

    ஆரணி அருகே உள்ள 12 புத்தூர் பகுதியில் விடுதலை சிறுத்தை கட்சியினர் சார்பில் கட்சி கொடிகம்பம் வைக்கப்பட்டுள்ளது. இந்த கொடிகம்பத்தை நேற்றிரவு மர்ம கும்பல் தீவைத்து எரித்து தப்பிச்சென்று விட்டனர்.

    இன்று காலை கொடிக்கம்பம் எரிக்கபட்டிருப்பதை கண்ட விடுதலை சிறுத்தையினர் ஆரணி-பூசிமலைக்குப்பம் செல்லும் சாலையில் திடீர் மறியலில் ஈடுபட்டனர். இது குறித்து தகவலறிந்த ஆரணி தாலுகா போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

    அப்போது எங்கள் கட்சிகொடியை சேதப்படுத்திய மர்ம கும்பலை உடனடியாக கைது செய்ய வேண்டும் என்றனர். போலீசார் நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனர்.

    இதையடுத்து மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

    கறம்பக்குடி அருகே கஜா புயல் நிவாரணம் வழங்க கோரி அனைத்து கட்சியினர் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதில் 97 பேரை போலீசார் கைது செய்தனர்.
    ஆலங்குடி:

    புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வக்கோட்டை தாலுகா, கறம்பக்குடி அருகேயுள்ள துவார் ஊராட்சியில் கஜா புயலால் பாதிக்கப்பட்ட 250க்கும் மேற்பட்ட பொதுமக்களுக்கு இன்னும் நிவாரணப் பொருள் வழங்கப்படவில்லை. இது குறித்து பலமுறை அதிகாரிகளிடம்  புகார் செய்தும், எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதனை கண்டித்து அனைத்து கட்சிகள் மற்றும் பொதுமக்கள் சார்பில் துவார் கடைவீதியில் சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது.

    தி.மு.க. ஊராட்சி செயலாளர் தங்கமுத்து, முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் கோவிந்த ராஜன்,தமிழ் மாநில காங்கிரஸ் விவசாய அணி செயலாளர் ரெங்கராஜன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட செயற்குழு உறுப்பினர் உடையப்பன், துரைச்சந்திரன், தெற்கு ஒன்றிய செயலாளர் பால சுந்தரமூர்த்தி, தே.மு.தி.க. ,ஒன்றியக்குழு டைலர் ரெங்கராஜ், ம.தி.மு.க. மருதமுத்து, அ.ம.மு.க. ரெங்கராஜ் மற்றும் பொதுமக்கள் மறியல் போராட்டத்தில் கலந்து கொண்டனர். 

    சாலை மறியலால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதையடுத்து மறியலில் ஈடுபட்ட 63 பெண்கள் உள்பட 97 பேரை ஆலங்குடி போலீஸ் இன்ஸ்பெக்டர் வைத்தியநாதன், கறம்பக்குடி சப்-இன்ஸ்பெக்டர் பெரியசாமி ஆகியோர் கைது செய்து, மழையூர் தனியார் திருமண மண்டபத்தில் தங்க வைத்தனர். மாலையில் அனைவரும் விடுதலை செய்யப்பட்டனர்.
    வேலூர் அடுத்த அரியூரில் இலவச வீட்டு மனைபட்டா கேட்டு விடுதலை சிறுத்தை கட்சியினர் சாலை மறியல் செய்தனர்.

    வேலூர்:

    வேலூர் அடுத்த அரியூரில் விஸ்வநாதன் நகர், அண்ணா நகரில் 50 ஆண்டுகளுக்கு மேல் வசித்து வரும் பொதுமக்களுக்கு இலவச வீட்டுமனை பட்டா வழங்க கோரி விடுதலை சிறுத்தை கட்சியினர் வட்ட செயலாளர் மாணிக்கம் தலைமையில் இன்று அரியூர் மெயின் ரோட்டில் சாலை மறியல் செய்தனர். கம்யூனிஸ்டு கட்சியை சேர்ந்தவர்களும் பங்கேற்றனர்.

    இது குறித்து தகவலறிந்த டி.எஸ்.பி. ராதாகிருஷ்ணன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தி சம்பந்தபட்ட அதிகாரிகளிடம் பேசி உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனர்.

    இதையடுத்து விடுதலை சிறுத்தை கட்சியினர் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். இதனால் அப்பகுதியில் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

    உடையார்பாளையம் அருகே பஸ் வசதி கேட்டு மாணவர்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
    உடையார்பாளையம்:

    அரியலூர் மாவட்டம், உடையார்பாளையம் அருகே உள்ள ஜெ.சுத்தமல்லி கிராமத்தில் அரசு மேல்நிலைப்பள்ளி இயங்கி வருகிறது. இந்த பள்ளியில் சுற்று வட்டார கிராமங்களை சேர்ந்த மாணவ- மாணவிகள் கல்விபயின்று வருகின்றனர். இந்த நிலையில் காலை, மாலை நேரத்தில் பள்ளி முடிந்து பஸ்சுக்காக நீண்ட நேரம் மாணவ- மாணவிகள் காத்திருந்து வீட்டுக்கு செல்ல வேண்டியுள்ளது. இதனால் பள்ளி விடும் நேரத்திலும், பள்ளிக்கு மாணவர்கள் வரும் நேரத்திலும் பஸ் வசதி கேட்டு ஜெ.சுத்தமல்லியில் மாணவ-மாணவிகள் நேற்று விளாங்குடி- தா.பழூர் சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர்.

    இதுகுறித்து தகவல் அறிந்த உடையார்பாளையம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மறியல் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது போலீசார் கூறுகையில், இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் எடுத்துக்கூறி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்தனர். இதனை ஏற்றுக்கொண்ட மாணவ- மாணவிகள் மறியல் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். இதனால் விளாங்குடி- தா.பழூர் சாலையில் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. 
    விவசாய நிலத்தில் ஆழ்துளை கிணறு அமைக்க எதிர்ப்பு தெரிவித்து கிராமமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
    நல்லம்பள்ளி:

    தர்மபுரி மாவட்டம் நல்லம்பள்ளி அருகே உள்ள நார்த்தம்பட்டி ஊராட்சிக்குட்பட்டது சென்னியம்பட்டி கிராமம். இந்த கிராமத்தில் 100-க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளது. இந்த கிராமத்திற்கு ஊராட்சி நிர்வாகம் சார்பில் ஆழ்துளை கிணற்றில் மின்மோட்டார் பொருத்தி சின்டெக்ஸ் தொட்டி அமைத்து அதில் குடிநீர் நிரப்பி வினியோகம் செய்யப்பட்டு வந்தது. இதனால் இந்த கிராமத்திற்கு சீரான குடிநீர் வழங்கப்பட்டு வந்தது.

    இந்த குடிநீர் தொட்டிக்கு சிறிது தூரத்தில் விவசாய நிலத்தில் ஆழ்துளை கிணறு அமைக்க நிலத்தின் உரிமையாளர் முடிவு செய்தார். இதற்கு கிராமமக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இருப்பினும் விவசாய நிலத்தில் ஆழ்துளை கிணறு அமைக்கப்பட்டது. மேலும் அதில் மின் மோட்டார் பொருத்தவும் நடவடிக்கை எடுக்கப்பட்டதாக தெரிகிறது. ஆழ்துளை கிணறு அமைக்க எதிர்ப்பு தெரிவித்து கிராமமக்கள் காலிக்குடங்களுடன் நல்லம்பள்ளி-லளிகம் சாலையில் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர்.

    அப்போது அந்த வழியாக வந்த அரசு டவுன் பஸ்சை அவர்கள் சிறைப்பிடித்தனர். இதுகுறித்து தகவல் அறிந்த நல்லம்பள்ளி வட்டார வளர்ச்சி அலுவலர் விமலன் மற்றும் அதியமான்கோட்டை போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று கிராமமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது விவசாய நிலத்தில் ஆழ்துளை கிணறு அமைத்தால் ஊராட்சிக்கு சொந்தமான ஆழ்துளை கிணற்றில் தண்ணீர் வறண்டு விடும். இதனால் ஆழ்துளை கிணறு அமைக்கக்கூடாது என்று வலியுறுத்தினர். 

    இது குறித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிகாரிகள் உறுதி அளித்தனர். இதையடுத்து கிராமமக்கள் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். கிராமமக்கள் சாலை மறியல் மற்றும் பஸ் சிறைப்பிடிப்பு சம்பவத்தால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
    குடிநீர் கேட்டு விடுதியில் தங்கி இருந்த கல்லூரி மாணவிகள் இன்று காலை திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர்.

    தர்மபுரி:

    தர்மபுரி ஒட்டப்பட்டியில் அரசு கல்லூரி மாணவிகள் தங்கும் விடுதி உள்ளது. இந்த விடுதியில் 100 க்கும் மேற்பட்ட மாணவிகள் தங்கியுள்ளனர். கிருஷ்ணகிரி, தருமபுரி மற்றும் வெளிமாவட்டங்களில் இருந்து மாணவிகள் தங்கி உள்ளனர். கடந்த 6 மாதங்களாக விடுதியில் குடிநீர் கிடைக்காமல் மாணவிகள் அவதிப்பட்டு வந்தனர்.

    இதனால் மாணவிகள் குடிநீர் தேவைக்கு அருகில் அவ்வையார் நகர் பகுதிக்கு சென்று குளிக்க, குடிக்க தண்ணீரை குடத்தில் எடுத்து பயன்படுத்தி வந்தனர்.

    சரியான முறையான குடிநீர் வினியோகம் செய்ய கோரி விடுதி கல்லூரி மாணவிகள் இது குறித்து அதிகாரியிடம் பலமுறை மனு கொடுத்தனர். ஆனால் இதுவரைக்கும் எந்த வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.

    இதனால் ஆத்திரமடைந்த விடுதி மாணவிகள் இன்று காலை சேலம்-தர்மபுரி சாலை ஒட்டிப்பட்டியில் சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர்.

    இது குறித்து தகவல் அறிந்த அதியமான்கோட்டை போலீசார், திட்ட உதவி இயக்குனர் ரவிசங்கரநாத், வட்டார வளர்ச்சி அலுவலர் விமலன், கல்லூரி வணிகத் துறை பேராசிரியர் பிரபாகரன் ஆகியோர்கள் சம்பவ இடத்திற்கு வந்து சாலை மறியலில் ஈடுபட்ட கல்லூரி மாணவிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

    அப்போது அரசு கல்லூரி மாணவிகள் விடுதிக்கு உடனடியாக குடிநீர் வினியோகம் செய்யப்படும் என்று உறுதி அளித்தனர். இதனால் பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டு மாணவிகள் சாலை மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர்.

    இதனால் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    இலவச பஸ் பாஸ் வழங்க கோரி தஞ்சை சரபோஜி கல்லூரி மாணவ - மாணவிகள் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டதால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    தஞ்சாவூர்:

    தஞ்சை புதிய பஸ் நிலையம் அருகே உள்ள மன்னர் சரபோஜி அரசுகலைக் கல்லூரி மாணவர்கள் இன்று காலை வகுப்புகளை புறக்கணித்து வெளியே வந்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    மாணவர்களுக்கு இலவச பஸ் பாஸ் வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி இந்திய மாணவர் சங்கம் மாவட்ட செயலாளர் அரவிந்த் தலைமையில் சரபோஜி கல்லூரி மாணவர்கள் சுமார் 500-க்கும் மேற்பட்டோர் இன்று காலை வகுப்புகளை புறக்கணித்து விட்டு வெளியே வந்தனர்.

    பின்னர் அவர்கள் கல்லூரி அருகே திடீரென சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இது குறித்து தகவலறிந்ததும் தஞ்சை நகர டி.எஸ்.பி. ரவிச்சந்திரன், வல்லம் டி.எஸ்.பி. ஜெயச்சந்திரன் மற்றும் போலீசார் விரைந்து வந்து மாணவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

    அப்போது மாணவர்கள் எங்களுக்கு இலவச பஸ் பாஸ் தொடர்ந்து கேட்டு வருகிறோம். ஆனால் எந்த நடவடிக்கையும் கல்லூரி செய்து தரவில்லை என்று குற்றம் சாட்டினர். மேலும் இலவச பஸ் பாஸ் கேட்டு பல முறை மாணவர்கள் போராட்டம் நடத்தி உள்ளோம். இருந்தும் பஸ் பாஸ் வழங்க எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

    தற்போது மறியல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளோம் என்று அவர்கள் தெரிவித்தனர்.

    இதைத் தொடர்ந்து போக்குவரத்து அதிகாரிகள் அங்கு வந்து மாணவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் சமரசம் ஏற்பட்டதால் மாணவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். புதிய பஸ் நிலையம் பகுதியில் மாணவ-மாணவிகள் திடீரென சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் அங்கு சுமார் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    ×