search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Rs 100 coin"

    முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் 94-வது பிறந்த தினம் நாளை கொண்டாடப்பட இருப்பதையொட்டி அவரது உருவம் பொறித்த 100 ரூபாய் நாணயத்தை மோடி வெளியிட்டார். #Vajpayee #PMModi
    புதுடெல்லி:

    முன்னாள் பிரதமர் வாஜ்பாய் கடந்த ஆகஸ்டு மாதம் 16-ந்தேதி தனது 93 வயதில் மரணம் அடைந்தார்.

    அவரது நினைவை கவுரவிக்கும் வகையில் அவரது உருவம் பொறித்த 100 ரூபாய் நாணயம் வெளியிடப்படும் என்று மத்திய அரசு அறிவித்து இருந்தது.

    வாஜ்பாயின் 94-வது பிறந்த தினம் நாளை (செவ்வாய்க்கிழமை) கொண்டாடப்பட இருப்பதையொட்டி அவரது உருவம் பொறித்த 100 ரூபாய் நாணயம் வெளியீட்டு விழா இன்று டெல்லியில் நடந்தது.

    வாஜ்பாய் உருவம் கொண்ட 100 ரூபாய் நாணயத்தை பிரதமர் மோடி வெளியிட்டார். அந்த நாணயம் 35 கிராம் எடை கொண்டது. அதன் ஒரு பக்கத்தில் வாஜ்பாய் உருவமும், அதற்கு கீழ் 1924-2018 என்று பொறிக்கப்பட்டுள்ளது.


    நாணயத்தின் மற்றொரு பக்கத்தில் மூன்று சிங்கங்கள் இருப்பதுபோன்று பொறிக்கப்பட்டுள்ளது. அதற்கு கீழ் “சத்யமேவ ஜெயதே” என்று தேவநாகரி மொழியிலும், ஆங்கிலத்திலும் பொறிக்கப்பட்டுள்ளது.

    100 ரூபாய் நாணயத்தை வெளியிட்டு பிரதமர் மோடி பேசினார். அவர் கூறியதாவது:-

    வாஜ்பாய் நம்மிடம் இல்லை என்பதை நமது மனம் ஏற்க மறுக்கிறது. நாடு முழுவதும் அனைத்து தரப்பு மக்களும் அவர் மீது மிகுந்த அன்பும், மரியாதையும் கொண்டிருந்தனர்.

    சிறந்த நிர்வாகியான அவர் மேம்பட்ட பேச்சாளராக திகழ்ந்தார். நமது நாடு தந்த சிறந்த சொற்பொழிவாளர்களில் அவரும் ஒருவர் ஆவார்.

    வாஜ்பாய் உருவாக்கிய பாரதிய ஜனதா கட்சி இன்று நாட்டின் மிகப்பெரிய கட்சியாக திகழ்கிறது. அவரது சேவையை என்றென்றும் நாம் நினைவு கூர்ந்து போற்ற வேண்டும்.

    இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.

    விழாவில் பா.ஜனதா மூத்த தலைவர் அத்வானி, பாராளுமன்ற சபாநாயகர் சுமித்ரா மகாஜன், பா.ஜனதா தலைவர் அமித்ஷா, மத்திய மந்திரி அருண்ஜெட்லி உள்பட பலர் கலந்து கொண்டனர். #Vajpayee #PMModi
    ×