search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "salary delay"

    நிலுவையில் உள்ள சம்பளத்தை கேட்டு, ஜெட் ஏர்வேஸ் தலைமை செயல் அதிகாரிக்கு, விமானிகள் வக்கீல் நோட்டீஸ் அனுப்பி உள்ளனர். #JetAirways
    புதுடெல்லி:

    நாட்டின் முன்னணி விமான சேவை நிறுவனமான ஜெட் ஏர்வேஸ், கடந்த சில ஆண்டுகளாக நஷ்டத்தில் இயங்கி வருகிறது. வாங்கிய கடன்களையும் அடைக்க முடியாமல் தடுமாறி வருகிறது. இதுபோன்ற காரணங்களால் ஊழியர்களுக்கு சரியான நேரத்தில் சம்பளம் வழங்க முடியவில்லை. இதனால் கடும் அதிருப்தி அடைந்த பைலட்டுகள் மற்றும் ஊழியர்கள், சம்பள பாக்கியை வழங்கக்கோரி ஏப்ரல் 1ம் தேதி முதல் விமானங்களை இயக்காமல் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடப்போவதாக அறிவித்தனர்.

    அதன்பின்னர் நடந்த பேச்சுவார்த்தையில் டிசம்பர் மாத சம்பளம் மட்டும் தருவதாக ஒப்புக்கொள்ளப்பட்டது. இதையடுத்து வேலைநிறுத்தப் போராட்டத்தை ஏப்ரல் 15-ம் தேதி வரை தள்ளி வைத்துள்ளனர். இதனால், விமான சேவையில் பெரிய அளவில் பாதிப்பு ஏற்படவில்லை. 



    இந்நிலையில், ஜனவரி மாதம் முதல் மார்ச் மாதம் வரையிலான சம்பளத்தை கேட்டு விமானிகள், வழக்கறிஞர் மூலமாக நோட்டீஸ் அனுப்பி உள்ளனர். உள்நாட்டு விமானிகள் சங்கமான என்ஏஜி சார்பில், ஜெட் ஏர்வேஸ் தலைமைச் செயல் அதிகாரி வினய் துபேக்கு இந்த நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. அதில், ஜனவரி மாதம் முதல் மார்ச் மாதம் வரையிலான சம்பளத்தை ஏப்ரல் 14-ம் தேதிக்குள் வழங்காவிட்டால் சட்டப்பூர்வமான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என கெடு விதித்துள்ளனர்.

    இதற்கிடையே, ஜெட் ஏர்வேஸ் நிர்வாகிகள் இன்று மும்பையில் அவசரமாக கூடி ஆலோசனை நடத்த உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த ஆலோசனையின்போது நிறுவனம் எதிர்நோக்கி உள்ள பிரச்சினைகளில் தற்போதைய நிலை மற்றும் புதிய தலைவர் நியமனம் உள்ளிட்ட விவகாரங்கள் குறித்து ஆலோசனை நடத்தப்படலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன. #JetAirways
    ×