என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "Sand Import"
சென்னை:
தமிழ்நாட்டில் மணல் தட்டுப்பாடு காரணமாக கட்டுமான தொழில் மிகவும் தேக்கம் அடைந்துள்ளது.
மணல் தட்டுப்பாட்டை சமாளிக்க மலேசியாவில் இருந்து தூத்துக்குடி துறைமுகத்துக்கு கப்பலில் மணல் இறக்குமதி செய்யப்பட்டது. இந்த மணல் தென் மாவட்டங்களில் உள்ளவர்கள் வாங்குவதற்கு வசதியாக இருந்தது.
இதைத் தொடர்ந்து கடந்த செப்டம்பர் மாதம் மலேசியாவில் இருந்து எண்ணூர் துறைமுகத்துக்கு 50 ஆயிரம் டன் மணல் கப்பலில் மீண்டும் இறக்குமதி செய்யப்பட்டது.
ஒரு யூனிட் மணல் ரூ.10,350-க்கு விலை நிர்ணயம் செய்யப்பட்டது. லாரி உரிமையாளர்கள் ஆன்-லைனில் பதிவு செய்து மலேசிய மணலை வாங்கி வந்தனர்.
எண்ணூர் துறைமுகத்தில் தற்போது 500 லாரி அளவுக்குத்தான் மணல் உள்ளது. இதுவரை புக்கிங் செய்தவர்களுக்குத்தான் இந்த மணலை விற்க முடியும் என்பதால் நேற்று மதியம் ஆன்-லைன் புக்கிங் நிறுத்தப்பட்டுள்ளது. இனி மேல் மணல் வந்தால்தான் மீண்டும் முன்பதிவு தொடங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் மணல் தேவை அதிகம் இருப்பதை கருத்தில் கொண்டு மலேசியாவில் இருந்து மீண்டும் மணல் இறக்குமதி செய்ய ஏற்பாடு நடந்து வருகிறது. அனேகமாக இன்னும் 10 நாளில் கப்பலில் மணல் வந்து சேரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கடந்த முறை இறக்குமதி செய்யப்பட்ட மணலை விட இந்த முறை 2 மடங்கு அதிகம் மணல் கொண்டு வரப்படும் என்று தெரிகிறது. 1 லட்சம் டன் அளவுக்கு மலேசிய மணலை இறக்குமதி செய்ய ஏற்பாடு செய்து வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
ஆன்லைனில் முன்பதிவு செய்பவர்களுக்கு இந்த முறை வீடு தேடி மணல் வினியோகம் செய்யும் நடைமுறையும் தொடங்கி வைக்கப்படும் என தெரிகிறது.
இதுகுறித்து மணல் லாரி உரிமையாளர்கள் சங்க தலைவர் யுவராஜ் கூறியதாவது:-
மலேசிய மணல் தூத்துக்குடி, எண்ணூருக்கு வருவதால் இந்த மாவட்டங்களில் உள்ளவர்களுக்கு மட்டுமே கட்டுப்படியாகும் விலையில் மணல் கிடைக்கிறது.
கோவை, திருச்சி, சேலம், தர்மபுரி, சிவகங்கை போன்ற மாவட்டங்களில் உள்ளவர்களுக்கு மணல் கிடைப்பது அரிதாக உள்ளது. ஏராளமானவர்கள் மணல் கேட்டு காத்திருக்கிறார்கள்.
மணல் லாரி உரிமையாளர்கள் 41 ஆயிரம் லாரிகளுக்கு பணம் செலுத்திவிட்டு காத்திருப்பதால் பொதுப்பணித்துறை அலுவலகம் முன்பு வருகிற 19-ந்தேதி லாரிகளுடன் காத்திருப்பு போராட்டம் நடத்த ஏற்பாடு செய்து வருகிறோம்.
இவ்வாறு அவர் கூறினார். #SandImport #EnnorePort
சென்னை:
தமிழ்நாட்டில் மணல் தட்டுப்பாடு அதிகம் உள்ளதால், கலப்பட மணல், திருட்டு மணல் பல பகுதிகளில் விற்கப்படுவதாக புகார்கள் உள்ளன. 30-க்கும் மேற்பட்ட மணல் குவாரிகள் மூடப்பட்டு உள்ளதால் ரூ.1330-க்கு கிடைக்க வேண்டிய ஒரு லாரி மணல் வெளிமார்க்கெட்டில் ரூ.10 ஆயிரம் முதல் ரூ.25 ஆயிரம் வரை விற்கப்படுகிறது.
இதனால் மலேசியாவில் இருந்து தூத்துக்குடி, எண்ணூர் துறைமுகங்களுக்கு மணல் கொண்டு வரப்பட்டு ஆன்லைன் மூலம் முன்பதிவு செய்து மணல் விற்பனை நடை பெற்று வருகிறது.
இதில் தூத்துக்குடியில் உள்ள மணல் எதிர்பார்த்த அளவுக்கு விற்பனையாக வில்லை. இந்த மணலில் சிலிக்கான் கலந்துள்ளதாக வதந்தி பரப்பப்பட்டதால் மற்ற மாவட்டங்களில் இருந்து அங்கு சென்று மணல் வாங்க மக்கள் ஆர்வம் காட்டாமல் உள்ளனர்.
ஆனால் எண்ணூர் துறைமுகத்துக்கு கொண்டு வரப்பட்டுள்ள மலேசிய மணலுக்கு நல்ல வரவேற்பு உள்ளது.
56 ஆயிரம் மெட்ரிக் டன் மணல் இறக்குமதி செய்யப்பட்டுள்ளதால் தினமும் 300 லாரி மணல் விற்பனையாகிறது. ஒரு யூனிட் மணல் 10,350 ரூபாய்க்கு எண்ணூரில் கிடைக்கிறது.
இதுகுறித்து பொதுப் பணித்துறை அதிகாரிகள் கூறுகையில், பொதுமக்களின் சிரமத்தை போக்க வீடு தேடி மணல் விற்கும் திட்டத்தை அரசு விரைவில் செயல்படுத்த உள்ளது. அனேகமாக ஜனவரி மாதம் முதல் இந்த திட்டம் சென்னை, திருவள்ளூர், காஞ்சீபுரம் மாவட்டங்களில் செயல்படுத்தப்படும் என்று தெரிவித்துள்ளனர்.
எண்ணூர், தூத்துக்குடி துறைமுகங்களில் தேவையான அளவு மலேசிய மணல் உள்ளதால் மணல் தேவைப்படுபவர்கள் ஆன்-லைன் மூலம் முன்பதிவு செய்திருந்தால் 100 கிலோ மீட்டர் சுற்றளவில் உள்ளவர்களுக்கு முதலில் வீடு தேடி சென்று மணல் வழங்குவோம்.
இதற்கு மக்கள் மத்தியில் கிடைக்கும் வரவேற்பை பொறுத்து மணல் இறக்கு மதியை அதிகரிப்போம் என்று தெரிவித்துள்ளனர்.
இதுபற்றி மணல் லாரி உரிமையாளர்கள் சங்க தலைவர் யுவராஜ் கூறியதாவது:-
எண்ணூர் துறைமுகத்தில் மலேசிய மணல் கிடைப்பதால் தினமும் 300 லாரிகளில் மணல் எடுத்து வருகிறோம். ஆற்று குவாரிகளில் 1 யூனிட் மணல் ரூ.1,330-க்கு நிர்ணயித்துள்ளனர். ஆனால் துறைமுகத்தில் கிடைக்கும் மலேசிய மணல் 1 யூனிட் ரூ.10,350 என விலை நிர்ணயம் செய்துள்ளனர்.
விலை அதிகம் இருந்தாலும் பரவாயில்லை. உடனுக்குடன் மணல் கிடைக்கிறது. ஆன்லைனில் 41,000 லாரிகளுக்கு மணல் கேட்டு பதிவு செய்துள்ளோம்.
திருவள்ளூர், ஆற்காடு, விழுப்புரம், கடலூரில் 30 மணல் குவாரிகள் மூடப் பட்டுள்ளது. இதை அரசு திறந்து மணல் விற்பனை செய்தால் தட்டுப்பாடு முழுமையாக நீங்கும்.
வீடு தேடி மணல் விற்கும் திட்டத்தை ஜனவரி முதல் செயல்படுத்த போவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த திட்டம் செயல்பாட்டுக்கு வருவது நல்லதுதான். ஆனால் இதை நடைமுறைப்படுத்துவதில் பல்வேறு சிக்கல்கள் உள்ளதாகவும், உயர் அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். திட்டம் செயல்பாட்டுக்கு வரும்போது தான் இதுபற்றி தெரியவரும்.
இவ்வாறு அவர் கூறினார். #Sand
தமிழ்நாட்டில் மணல் தட்டுப்பாடு நிலவுவதால் வெளிநாட்டில் இருந்து மணல் இறக்குமதி செய்ய மத்திய அரசு அனுமதி அளித்திருந்தது.
இதைத் தொடர்ந்து முதற் கட்டமாக மலேசியாவில் இருந்து தூத்துக்குடிக்கு கப்பலில் 55 ஆயிரம் டன் மணல் கொண்டுவரப்பட்டது.
ஒரு யூனிட் மணல் ரூ.9980-க்கு விற்பனை செய்யலாம் என்று விலை நிர்ணயிக்கப்பட்டது. ஆனால் இந்த மணலை வாங்க நிறைய பேர் முன் வரவில்லை. இதனால் மணல் இன்னும் முழுமையாக விற்பனையாகவில்லை.
இந்த நிலையில் கடந்த வாரம் எண்ணூர் துறைமுகத்துக்கும் மலேசியாசில் இருந்து கப்பலில் மணல் கொண்டுவரப்பட்டது. இந்த மணலை ஆன்லைன் மூலம் பதிவு செய்து பொதுமக்கள் வாங்கிக் கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டது. ஆனால் இன்னும் முன்பதிவு செய்ய முடியாத நிலைதான் காணப்படுகிறது.
இதுகுறித்து பொதுப் பணித்துறை அதிகாரியிடம் கேட்டதற்கு அவர் கூறியதாவது:-
எண்ணூர் துறைமுகத்துக்கு வந்துள்ள மணலில் சிலிக்கான் கலப்படம் எதுவும் உண்டா? அது ஆற்று மணல்தானா? என்பதை கண்டறிய பரிசோதனை செய்வது வழக்கம். அந்த நடைமுறைக்காக மணல் பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளது. இதன் முடிவு வந்ததும் விற்பனை தொடங்கப்படும்.
அனேகமாக இன்று அல்லது நாளை பரிசோதனை முடிவு வந்துவிட்டால் முன்பதிவை தொடங்கி வருகிற 1-ந்தேதியில் இருந்து மணல் விற்பனையை தொடங்கி விடுவார்கள். காலதாமதத்துக்கு இதுதான் காரணம்.
இவ்வாறு அவர் கூறினார்.
தமிழ்நாட்டில் மணல் தட்டுப்பாடு அதிகமானதால் மணலுக்கு மாற்றாக எம்.சான்ட் (ஜல்லிக்கற்களின் துகள்) தயாரித்து விற்பனை செய்து வந்தனர். ஆனால் பொதுமக்கள் மத்தியில் எம்.சாண்ட் மணலுக்கு எதிர்பார்த்த வரவேற்பு கிடைக்கவில்லை. இதனால் மணல் தட்டுப்பாட்டை போக்க வெளிநாடுகளில் இருந்து மணலை இறக்குமதி செய்ய முடிவு எடுக்கப்பட்டது.
ஒரு யூனிட் (100 கனஅடி) மணல் விலை ரூ.9,990 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதுதவிர லாரி வாடகை கொடுக்கப்பட வேண்டும்.
இறக்குமதி மணல் விற்பனையில் எந்த முறைகேடும் நடக்க கூடாது என்பதில் அரசு கவனமாக இருப்பதாகவும், தவறும்பட்சத்தில் சம்பந்தப்பட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அரசு அறிவித்துள்ளது.
இதுபற்றி மணல் லாரி உரிமையாளர்கள் சங்கத் தலைவர் யுவராஜ் கூறுகையில் “எண்ணூரில் மணல் விற்பனை நடைபெறுவது சென்னையில் உள்ளவர்களுக்கு மகிழ்ச்சியை தருகிறது. ஏனென்றால் சென்னை மற்றும் புறநகரில் மணல் தட்டுப்பாடு அதிகமாக உள்ளது. மலேசியா மணல் இறக்குமதியால் மணல் தேவை ஓரளவு பூர்த்தியாகும்.
விண்ணப்பிக்கும் ஒவ்வொருவருக்கும் எவ்வளவு யூனிட் மணல் கிடைக்கும் என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார். #SandImport #EnnorePort
சென்னை:
தமிழ்நாட்டில் மணல் தட்டுப்பாட்டை போக்க வெளிநாட்டில் இருந்து மணல் இறக்குமதி செய்ய டெண்டர் விடப்பட்டு பரிசீலனை செய்யப்படுவதாக தமிழக அரசு அறிவித்தது.
பொதுப்பணித்துறை சார்பில் கடந்த மார்ச் 6-ந்தேதி டெண்டர் அறிவிப்பு வெளியிடப்பட்டது. ரூ.548 கோடி மதிப்பில் 30 லட்சம் மெட்ரிக் டன் மணல் வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்ய டெண்டர் கோரப்பட்டது.
இதற்கிடையே மலேசியாவின் பஹாய் மாநிலம் பீகான் துறைமுகத்தில் இருந்து 56,750 மெட்ரிக் டன் ஆற்று மணல் கப்பல் மூலம் எண்ணூரில் உள்ள காமராஜர் துறைமுகத்துக்கு இன்று அதிகாலை கொண்டு வரப்பட்டது.
இந்த மணல் எண்ணூர் துறைமுகத்திற்கு கடந்த 20-ந்தேதி வர வேண்டியது. ஆனால் அரபிக்கடல் வங்காள விரிகுடா பகுதியில் கடல் சீற்றம் காரணமாக தாமதமாக இன்று வந்துள்ளது. இதைத் தொடர்ந்து கப்பலில் இருந்து மணல் இறக்கும் பணிகள் தொடங்கியுள்ளது.
மணல் இறக்க 4 அல்லது 5 நாட்கள் ஆகும் எனவும் மழை பெய்தால் கூட ஒரு சில நாட்கள் ஆகும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதன்பின் அக்டோபர் மாதம் முதல் வாரத்தில் வெளிநாட்டு மணல் விற்பனை செய்யப்படுகிறது.
ஆன்-லைனில் மணல் வேண்டி புக் செய்தால் பொதுமக்களின் வீடுகளுக்கு நேரடியாக லாரிகள் மூலம் மணல் சப்ளை செய்யப்படும். மணல் வேண்டி புக் செய்யும் நபர்களுக்கு எஸ்.எம்.எஸ். மூலம் ‘ஓ.டி.பி.’ எண் அனுப்பப்படும்.
அதை மணல் கொண்டு வருபவரிடம் சரியாக கூறினால் மட்டுமே மணல் சப்ளை செய்யப்படும்.
இதனால் லாரிகளில் மணல் கடத்தப்படுவது தடுக்கப்படும் என்றும் கூடுதல் விலைக்கு மணல் விற்பனை செய்வது தடுக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.
மேலும் இந்த மணல் விற்பனையால் சென்னை, திருவள்ளூர், காஞ்சீபுரம் ஆகிய மாவட்டங்களில் மணல் தட்டுப்பாடு குறையும்.
இதற்கிடையே ஏற்கனவே மலேசியாவில் இருந்து தூத்துக்குடி துறைமுகத்தில் தனியார் நிறுவனம் ஒன்று மணலை இறக்குமதி செய்திருந்தது.
அது குறித்து வழக்கு சுப்ரீம்கோர்ட்டில் நடந்து வருகிறது. இவ்வழக்கில் சமீபத்தில் தமிழக அரசுக்கு சுப்ரீம்கோர்ட்டு சில உத்தரவுகளை பிறப்பித்தது.
இதனைத் தொடர்ந்து தமிழக அரசு tnsand.in என்ற இணைய தளத்தில் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டது. அதில், தூத்துக்குடி துறைமுகத்தில் இறக்குமதி செய்யப்பட்ட மணல் விற்பனை செய்யப்படுகிறது.
இந்த மணலுக்காக, TNsand இணைய தளத்திலும், கைப்பேசி செயலி மூலமாகவும் ஆன்லைனில் கட்டணம் செலுத்தி பதிவு செய்து கொள்ளலாம்.
துறைமுகத்தில் முதல் கட்டமாக 11 ஆயிரம் யூனிட் மட்டுமே வழங்கப்பட உள்ளது. முதலில் முன்பதிவு செய்பவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும். இணையதளத்தில் பதிவு செய்யாத வாகனங்களுக்கும் மணல் வழங்கப்படும்.
சுப்ரீம்கோர்ட்டின் உத்தரவுப்படி ஒரு யூனிட் (சுமார் 4.5 டன்) மணல் விலை ரூ.9,990 ஆகும். மேலும், 2 யூனிட்-ரூ.19,980, 3 யூனிட்- ரூ.29,970, 4 யூனிட்-ரூ.39,960, 5 யூனிட் ரூ.49,950 என்ற விலையில் விற்பனை செய்யப்படும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. #ForeignSand
தமிழக சட்டசபையில் கடந்த ஜூன் மாதம் முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேசும்போது, வெளிநாட்டு மணல் இறக்குமதி குறித்து அறிவிப்பை வெளியிட்டிருந்தார்.
அதில், தமிழகத்தில் எம்.சாண்டை 40 சதவீதம் பேர் பயன்படுத்துகின்றனர். என்றாலும், மணலையும் உடனடியாக நிறுத்த முடியாது. அரசாங்கத்தில் பல்வேறு கட்டுமானத்திற்கு மணல் தேவைப்படுகிறது.
தனியாரும் கட்டிடம் கட்டுகின்றனர். இதையெல்லாம் கருத்திலே கொண்டுதான், ஆற்றிலும், ஓடையிலும் மணலை அள்ளி பொதுமக்களுக்கு வினியோகம் செய்யப்பட்டு வருகிறது.
வெளிநாட்டில் இருந்தும் மணல் இறக்குமதி செய்து பொதுமக்களுக்கு விற்கவும் அரசு ஏற்பாடு செய்து கொண்டிருக்கிறது. இதற்காக வெளிநாட்டிலிருந்து மணல் இறக்குமதி செய்வதற்கு, டெண்டர் விடப்பட்டு, டெண்டரை பரிசீலனை செய்து கொண்டிருக்கிறோம் என்று குறிப்பிட்டு இருந்தார்.
அதன் அடிப்படையில் அறிவிப்பு ஒன்றை தமிழக அரசு tnsand.in என்ற இணையதளத்தில் நேற்று வெளியிட்டது. அதில் கூறப்பட்டு இருப்பதாவது:-
பொதுமக்கள் கவனத்திற்கு- தூத்துக்குடி துறைமுகத்தில் இறக்குமதி செய்யப்பட்ட மணல் இன்று முதல் விற்பனை செய்யப்படுகிறது. தூத்துக்குடி துறைமுகத்தில் இறக்குமதி செய்யப்பட்ட மணல் விற்பனைக்காக முன்பதிவு, செப்டம்பர் 21-ந் தேதி (நேற்று) மாலை 4 மணி முதல் தொடங்கப்பட உள்ளது. இந்த மணலுக்காக, TNsand இணையதளத்திலும், கைப்பேசி செயலி மூலமாகவும் ஆன்லைனில் கட்டணம் செலுத்தி பதிவு செய்து கொள்ளலாம்.
துறைமுகத்தில் முதல்கட்டமாக 11 ஆயிரம் யூனிட் மட்டுமே வழங்கப்பட உள்ளது. முதலில் பதிவு செய்பவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும். முன்பதிவு செய்பவர்களுக்கு அடுத்த வாரத்தில் இருந்து மணல் வழங்கப்படும். TNsand இணையதளத்தில் பதிவு செய்யாத வாகனங்களுக்கும் மணல் வழங்கப்படும்.
சுப்ரீம் கோர்ட்டின் உத்தரவுப்படி ஒரு யூனிட் (சுமார் 4.5 டன்) மணல் விலை ரூ.9,990 ஆகும். மேலும், 2 யூனிட் - ரூ.19,980; 3 யூனிட் - ரூ.29,970; 4 யூனிட் - ரூ.39,960, 5 யூனிட் - ரூ.49,950 என்ற விலையில் விற்பனை செய்யப்படும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. #TuticorinPort #ForeignSand #TNGovt #EdappadiPalaniswami
வெளிநாடுகளில் இருந்து மணல் இறக்குமதிக்கும், இறக்குமதி செய்யப்பட்ட மணலை துறைமுகத்துக்கு வெளியில் எடுத்துச்செல்வதற்கு எதிரான தமிழக அரசின் தடையை எதிர்த்து மணல் இறக்குமதி நிறுவனங்கள் மதுரை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தனர். இந்த மனுவை விசாரித்த மதுரை ஐகோர்ட்டு நீதிபதி தடை உத்தரவை ரத்துசெய்தார்.
மேலும் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மணல் குவாரிகளையும், கிரானைட் குவாரிகளையும் மூடுவதற்கு உத்தரவு பிறப்பித்தார். இதை எதிர்த்து திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்ட கலெக்டர்கள் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவும் தள்ளுபடி செய்யப்பட்டது.
இதை எதிர்த்து தமிழக அரசு தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு, மதுரை ஐகோர்ட்டின் தீர்ப்புக்கு இடைக்கால தடை விதித்தது. ஏற்கனவே இறக்குமதி செய்யப்பட்டுள்ள மணலை தமிழக அரசு வாங்குவது குறித்தும், என்ன விலைக்கு வாங்க முடியும் என்பதையும் கோர்ட்டுக்கு அறிக்கையாக தாக்கல் செய்ய வேண்டும் என்றும் சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு பிறப்பித்து இருந்தது.
இந்த வழக்கின் மீதான விசாரணை சுப்ரீம் கோர்ட்டில் மீண்டும் நேற்று நீதிபதிகள் மதன் பி.லோகுர், நவீன் சின்கா ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.
தமிழக அரசு தரப்பில் மூத்த வக்கீல் முகுல் ரோகத்கி, அரசு வக்கீல் யோகேஷ் கன்னா ஆகியோர் ஆஜராகி, தூத்துக்குடி துறைமுகத்தில் இறக்குமதி செய்யப்பட்டுள்ள மணலை பவுதிகரீதியான ஆய்வை முடித்துள்ளதாகவும், ரசாயனரீதியான ஆய்வை மேற்கொண்ட பின்னர் தான் மணலை வாங்குவது குறித்து முடிவெடுக்க முடியும். இதற்கு மேலும் 20 நாட்கள் தேவைப்படுகிறது என்றும் கூறினர்.
இதற்கு மணல் நிறுவனம் தரப்பில் ஆஜரான மூத்த வக்கீல் ரஞ்சித்குமார், மணலை இறக்குமதி செய்து தூத்துக்குடி துறைமுகத்தில் வைத்துள்ளதற்கான கட்டணம் மற்றும் அபராதத் தொகையை கட்டிவருகிறோம். தமிழக அரசு விலைக்கு வாங்கவில்லை என்றாலும் பரவாயில்லை, மணலை விற்பதற்கு எங்களுக்கு அனுமதி அளித்தால் நாங்கள் அதனை விற்றுக்கொள்வோம். இரண்டுக்கும் அனுமதிக்காமல் எங்களுக்கு பெருத்த இழப்பு ஏற்பட்டு வருகிறது. தமிழக அரசு முடிவெடுக்க நேரம் எடுத்தால் அந்த நாட்களுக்கான துறைமுக கட்டணம், அபராத கட்டணத்தை தமிழக அரசே கட்ட உத்தரவிட வேண்டும் என்றார்.
இதற்கு நீதிபதிகள், இந்த மணலை மலேசியாவிலும், ஆந்திரா, கர்நாடகா மாநிலங்களிலும் பயன்படுத்துகிறார்கள். தமிழ்நாட்டில் மட்டும் ஏன் தடை விதிக்கிறீர்கள் என்று கேள்வி எழுப்பினார்கள்.
இதற்கு மூத்த வக்கீல் முகுல் ரோகத்கி, உரிய ரசாயன ஆய்வுகள் மேற்கொண்டு அந்த முடிவுகள் சரியாக இருந்தால் நாங்கள் மணலை வாங்கிக்கொள்ள தயாராக இருக்கிறோம். அந்த ஆய்வு மேற்கொள்ள எங்களுக்கு அவகாசம் வேண்டும் என்றார்.
இதற்கு நீதிபதிகள் 20 நாட்களில் உரிய ஆய்வு மேற்கொண்டு கோர்ட்டுக்கு அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். அதுவரை மணலை வைத்திருப்பதற்கான கட்டணத்தை துறைமுகத்துக்கு தமிழக அரசு கட்ட வேண்டும் என்று உத்தரவு பிறப்பித்தனர். #tamilnews
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்