கணவன், மனைவியான சாந்தினி - ஜெயப்பிரகாஷ் ராதாகிருஷ்ணன் இடையே சரியான புரிதல் இல்லை. இவர்களது வீட்டில் வாடகைக்கு வசித்து வருகிறார் நாயகன் சிபி சந்திரன். எப்போதும் குடி போதையிலேயே இருக்கும் சிபி பத்திரிகை நிறுவனம் ஒன்றில் வேலை பார்க்கிறார்.
இந்த நிலையில் ஒருநாள், குடி போதையில் வீட்டில் தூங்கிக் கொண்டிருக்கும் சிபியை போலீசார் எழுப்புகின்றனர். சாந்தினி கொலை செய்யப்பட்டுள்ளதாகவும், அந்த கொலையில், சிபி மீது சந்தேகம் இருப்பதாகவும் கூறி அவரை கைது செய்கின்றனர். இதையடுத்த சிபி பணிபுரியும் பத்திரிகை நிறுவனத்தின் உரிமையாளரின் உதவியுடன் சிபியை வெளியே வருகிறார்.
இதையடுத்து இந்த கொலை குறித்து போலீசார் தீவிர விசாரணையில் இறங்குகின்றனர். மறுபுறத்தில் சிபி வேலை செய்யும் பத்திரிகை நிறுவனம் அந்த கொலை குறித்து துப்பு துலக்க ஆரம்பிக்கிறது. போலீசாரின் விசாரணையில் ஒரு தரப்பின் மீதும், பத்திரிகையாளர் விசாரணையில் வேறொரு தரப்பின் மீது சந்தேகம் ஏற்படுகிறது.
கடைசியில் அந்த கொலையை செய்தது யார்? எதற்காக கொலை செய்தார்கள்? அதன் பின்னணியில் என்ன நடந்தது? என்பதே படத்தின் மீதிக்கதை.
சிபி சந்திரனின் கதாபாத்திரமே வித்தியாசமானது. போதையுடன், எந்த விஷயத்தையும் கூலாக அணுகும் கதாபாத்திரத்தில் சிபி ஸ்கோர் செய்திருக்கிறார் என்று தான் கூற வேண்டும். குரு சோமசுந்தரம் தனது தனித்துவமான நடிப்பின் மூலம் அனைவரையும் ஈர்க்கிறார். இந்த படத்திலும் ஒரு வித்தியாசமான கதாபாத்திரத்தில் வருகிறார்.
வித்தியாசமான கதைகளை தேர்வு செய்து நடிக்கும் சாந்தினிக்கு இந்த படத்திலும் தீனிபோடும் கதாபாத்திரமே. அவரது கதாபாத்திரத்திற்கு தேவையான நடிப்பை சிறப்பாக கொடுத்திருக்கிறார். கொலை குற்றத்தை விசாரிக்கும் பத்திரிகையாராக அனிஷா ஆம்ப்ரூஸ் கவர்கிறார்.
மற்றபடி ஜான் விஜய், அழகம்பெருமாள், ஜெயப்பிரகாஷ் ராதாகிருஷ்ணன், வாசு விக்ரம், விசாகன் வணங்காமுடி என மற்ற கதாபாத்திரங்களும் அவர்களது கதாபாத்திரத்திற்கு தேவையானதை கொடுத்துள்ளனர்.
மாறுபட்ட கோணத்திலும், முற்றிலும் புதுவிதமாக படத்தை இயக்கியிருக்கிறார் மனோஜ் பீதா. படத்தின் திரைக்கதைக்கு ஏற்ப ஒளிப்பதிவும், இசையில் சிறப்பாக வந்திருந்தாலும், படத்துடன் நம்மால் பயணிக்க முடியாத சூழல் உருவாகிறது. முதல் பாதியிலேயே படம் முடிந்துவிட்டது போன்ற ஒரு எண்ணமும், சோர்வும் உருவாகிறது. படத்தின் நீளமும், காட்சியின் நீளமுமே அதற்கு காரணம் என்று கூறலாம். அதேபோல் காட்சிகளில் தொய்வு ஏற்படுவது போன்ற உணர்வும் உண்டாகிறது. அனைத்து கதாபாத்திரங்களையும் இயக்குநர் சிறப்பாக வேலை வாங்கியிருக்கிறார்.
சாம்.சி.எஸ். பின்னணி இசையில் மிரட்டியிருக்கிறார். பாடல்களும் ரசிக்கும்படியாகவே இருக்கிறது. ரோட்ரிகோ டெல் ரியோவின் ஒளிப்பதிவில் காட்சிகள் சிறப்பாக வந்திருக்கிறது.
மொத்தத்தில் `வஞ்சகர் உலகம்' ரொம்ப நீளமானது. #VanjagarUlagamReview #GuruSomasundaram