search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Sivarathri Story"

    • மானின் பேச்சைக் கேட்ட குருத்ருகன் அம்பு தொடுப்பதை நிறுத்தினான்.
    • வேடன் அமர்ந்திருந்த மரத்தின் கீழே ஒரு சிவலிங்கம் இருந்தது.

    குருத்ருகன் என்ற வேடனின் குடும்பம் ஒருநாள் முழுவதும் உணவின்றி வாட நேர்ந்தது.

    அதனைக் கண்ட குருத்ருகன் வில்லை எடுத்துக் கொண்டு வேட்டைக்கு புறப்பட்டான்.

    காட்டில் விலங்குகளைத் தேடி அலைந்தான்.

    அன்று பகல் முழுவதும் விலங்குகள் எதுவும் அவன் கண்ணில் படவில்லை.

    அந்திசாயும் நேரத்தில் ஒரு தடாகத்தின் கரையை அடைந்தான்.

    நீர் பருகி, தாகத்தை தீர்த்துக் கொண்டான்.

    இரவு வேளையில் அத்தடாகத்தில் நீர் பருக எப்படியும் விலங்குகள் வரும் என்று நம்பினான்.

    தன்னிடம் இருந்த ஒரு குடுவையில் நீரை எடுத்துக் கொண்டு, தடாகத்தின் கரையில் இருந்த ஒரு மரத்தின் மீது ஏறி அமர்ந்தான்.

    விலங்குகளின் வருகைக்காகக் காத்திருந்தான்.

    அவன் எதிர்பார்த்தபடி, முதல் யாமத்தில் ஒரு பெண்மான் நீர் பருக வந்தது.

    அதன் மீது அம்பு தொடுக்க முற்பட்டான்.

    அந்த அசைவினால், மரத்தின் இலைகள் உதிர்ந்தன.

    குடுவை நீரின் ஒரு பகுதியும் கீழே விழுந்தது.

    தனக்கு வரவிருந்த ஆபத்தைப் பெண்மான் உணர்ந்தது.

    வேடனை நோக்கி, "ஐயா! சற்று நான் சொல்வதைக் கேளுங்கள்" என்றது.

    மானின் பேச்சைக் கேட்ட குருத்ருகன் அம்பு தொடுப்பதை நிறுத்தினான்.

    "ஐயா! உங்கள் குடும்பத்தினரின் பசியைத் தீர்க்க என் உடல் பயன்படப் போவதை எண்ணி மிக்க மகிழ்ச்சி.

    நீங்கள் எனக்குச் சிறிது நேரம் கொடுக்க வேண்டும்.

    எனக்குக் குட்டிகள் உள்ளன.

    அவற்றைக் காப்பாற்றும் வகையில், மற்றொரு பெண்மானை என் கணவருக்குத் துணையாக்கி விட்டு, உடனே வந்து விடுகிறேன்.

    அதன் பிறகு, என்னை வேட்டையாடலாம்" என்றது அப்பெண்மான்.

    முதலில் மானின் வார்த்தைகளை நம்ப மறுத்த வேடன், பிறகு மானின் உறுதிமொழியைக் கேட்டு, அதனைச் செல்ல விடுத்தான்.

    இரண்டாவது யாமத்தில் அப்பெண்மானின் சகோதரியாகிய மற்றொரு மான் வந்தது.

    அதனை வேட்டையாட முற்பட்டான் குருத்ருகன்.

    "ஐயா! எனது குட்டிகளைக் காப்பாற்றும் பொறுப்பை என் கணவரிடம் ஒப்படைத்து விட்டு உடனே வந்துவிடுவேன்,

    இது உறுதி" என்றது இரண்டாவது மான்.

    அதன் உறுதிமொழியை நம்பிய வேடன் அதனையும் செல்ல விடுத்தான்.

    மூன்றாவது யாமத்தில் ஆண்மான் "நாங்கள் ஒருவரை ஒருவர் தேடி வந்தோம். எனினும், ஒருவரை ஒருவர் சந்திக்க இயலவில்லை.

    சிறிது நேரம் கொடுங்கள், என் குட்டிகளை அவற்றின் தாய்களிடம் ஒப்படைத்து, உடனே வந்து விடுகிறேன், இது உறுதி என்றது ஆண் மான்.

    அந்த ஆண் மானையும் சென்றுவர விடுத்தான் வேடன்.

    நான்காம் யாமம் வந்தது.

    இரண்டு பெண் மான்களும், ஆண் மானும் ஆக மூன்று மான்களும் தடாகத்தின் கரைக்கு வந்தன.

    மூன்று மான்களையும் வேட்டையாட அம்பு தொடுக்க முயன்றான்.

    அப்போதும், குடுவை நீர் சிறிது விழுந்தது. மரத்தின் இலைகளும் விழுந்தன.

    இச்சம்பவம் நடந்தது ஒரு சிவராத்திரி நாள்.

    வேடன் அமர்ந்திருந்த மரத்தின் கீழே ஒரு சிவலிங்கம் இருந்தது.

    நான்கு யாமங்களிலும் உதிர்ந்த மர இலைகள் வில்வதளங்கள்!

    அவ்வாறே, நான்கு யாமங்களிலும் குடுவையில் இருந்த நீர் கீழே இருந்த சிவலிங்கத்தின் மீது விழுந்தது.

    குருத்ருகன், சிவராத்திரி நாளில், உண்ணாமல் இருந்து, நீர் ஊற்றி அபிஷேகம் செய்து,

    வில்வர்ச்சனை செய்ததாக எண்ணிய சிவபெருமான் அவ்வேடனுக்குப் பெரும்பேறு அளித்தான்.

    இவ்வரலாறு சிவமகாபுராணத்தில் இடம் பெற்றுள்ளது.

    நாமும் சிவராத்திரி நாளில் ஈசனை வழிபட்டுப் பேரருள் பெறுவோம்.

    ×