என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 102109"

    மணிரத்னம் இயக்கத்தில் உருவாக இருக்கும் பொன்னியின் செல்வன் படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க அனுஷ்காவுடன் பேச்சுவார்த்தை நடந்து வருகிறது.
    இயக்குநர் மணிரத்னமின் கனவு படமான பொன்னியின் செல்வன் படத்தில் நடிக்கும் நட்சத்திரங்கள் தேர்வு விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில், ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க அனுஷ்கா ஷெட்டியுடன் பேச்சுவார்த்தை நடந்து வருவதாக தகவல் வெளியாகி இருக்கிறது. முன்னதாக படக்குழு நயன்தாராவுடன் பேச்சுவார்த்தை நடத்தியதாக தகவல் வெளியானது என்பது குறிப்பிடத்தக்கது.

    விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி ஆகியோர் முக்கிய கதபாத்திரங்களில் நடிக்க ஏற்கனவே ஒப்பந்தமாகி உள்ளனர். கீர்த்தி சுரேஷ், ஐஸ்வர்யா ராய் ஆகியோர் நாயகிகளாக நடிக்க, சத்யராஜ், மோகன் பாபு முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.



    ஆதி, அமலாபாலிடமும் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. விளையாட்டு படமொன்றில் நடிக்கும் ஆதி அதற்காக தனது உடல் எடையை குறைத்து வருவதால் அவர் படத்தில் ஒப்பந்தமாகவில்லை என்று கூறப்படுகிறது.

    மணிரத்னமின் மெட்ராஸ் டாக்கீசுடன் பிரபல தயாரிப்பு நிறுவனம் இணைந்து இந்த படத்தை தயாரிக்க இருக்கிறது. ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார். படத்திற்கான முதற்கட்ட பணிகளில் மணிரத்னம் தீவிரமாக ஈடுபட்டு இருக்கும் நிலையில், படப்பிடிப்பு இந்த ஆண்டு இறுதிக்குள் துவங்க இருக்கிறது. 

    தமிழில் முன்னணி நடிகையாக இருக்கும் நயன்தாரா, தற்போது நடித்து வரும் ஒரு படத்தில் தமன்னா கவர்ச்சி ஆட்டம் ஆட முடிவு செய்திருக்கிறார்.
    சிரஞ்சீவியுடன் நயன்தாரா நடிக்கும் படம் சைரா நரசிம்ம ரெட்டி. சரித்திர பின்னணியில் உருவாகும் இந்த படத்தில் அமிதாப் பச்சன், விஜய் சேதுபதி உள்பட பலர் நடிக்கிறார்கள். முக்கிய வேடத்தில் தமன்னா நடிப்பதாகவும் கூறப்பட்டது. இப்போது படத்தில் இடம்பெறும் ஒரு பாடல் காட்சிக்காக தமன்னா நடனம் ஆட இருக்கிறாராம். 

    படத்தின் கவர்ச்சியான பாடலாக உருவாக இருக்கும் இதில் தமன்னா படுகிளாமராக நடனம் ஆட இருக்கிறாராம். ஐதராபாத்திலுள்ள அன்னபூர்ணா ஸ்டுடியோவில் இந்த பாடல் காட்சியை விரைவில் படமாக்க உள்ளனர்.



    சைரா நரசிம்ம ரெட்டி படத்தை ரூ.200 கோடி செலவில் சிரஞ்சீவியின் மகன் ராம்சரண் தயாரித்து வருகிறார். ஹாலிவுட் தொழில்நுட்ப கலைஞர்கள் பலர் இப்படத்தில் பணியாற்றி வருகிறார்கள். 
    ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் ரஜினிகாந்த் - நயன்தாரா நடிப்பில் உருவாகி வரும் ‘தர்பார்’ படத்தில் வில்லனாக நடிக்க பிரபல பாலிவுட் நடிகர் சுனில் ஷெட்டி ஒப்பந்தமாகி இருக்கிறார்.
    ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்கும் ‘தர்பார்’ படப்பிடிப்பு மும்பையில் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. 3 மாதங்கள் அங்கு படப்பிடிப்பை நடத்த திட்டமிட்டு உள்ளனர். இதன் முதல்கட்ட படப்பிடிப்பு சமீபத்தில் முடிந்தது. அடுத்தகட்ட படப்பிடிப்பு வருகிற 29-ந் தேதி தொடங்க உள்ளது.

    இந்த படத்தில் ரஜினிகாந்த் மும்பையை கலக்கும் ரவுடிகளை சுட்டுத்தள்ளும் என்கவுண்ட்டர் போலீஸ் அதிகாரியாக நடிப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. மற்றொரு வேடத்திலும் வருகிறார். அதை ரகசியமாக வைத்துள்ளனர். கதாநாயகியாக நயன்தாரா நடிக்கிறார். ரஜினிகாந்தின் முந்தைய படங்களான காலாவில் நானா படேகரும், 2.0 படத்தில் அக்‌ஷய்குமாரும் வில்லனாக நடித்திருந்தனர்.



    அந்த வகையில் தர்பார் படத்தில் பிரதிக் பாபர், தலிப் தாஹில், சுமன், ஆனந்தராஜ் ஆகியோர் வில்லத்தனமான வேடங்களில் வருவதாக கூறப்பட்டது. இப்போது இன்னொரு முக்கிய வில்லனாக பிரபல இந்தி நடிகர் சுனில் ஷெட்டி நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இவர் ஏற்கனவே தமிழில் ‘12பி’ படத்தில் நடித்துள்ளார்.

    15 ஆண்டுகளுக்கு முன்பு ஷாருக்கானின் ‘மெய்ன் ஹூன் நா’ என்ற இந்தி படத்தில் வில்லனாக நடித்து இருந்தார். அதன்பிறகு தர்பார் படத்தில்தான் வில்லனாக நடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. தர்பார் படத்தின் இரண்டாவது கட்ட படப்பிடிப்பில் சுனில் ஷெட்டி கலந்து கொள்வார் என்றும், அப்போது ரஜினிகாந்துடன் அவர் மோதும் காட்சிகள் படமாக்கப்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

    ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் உருவாகி வரும் ‘தர்பார்’ படத்தின் கதையை பற்றி இந்தி நடிகர் கொடுத்த பேட்டியின் மூலம் கசிந்துள்ளது.
    ‘பேட்ட’ படத்தை தொடர்ந்து ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் ‘தர்பார்’ படத்தில் ரஜினிகாந்த் நடித்து வருகிறார். அவருக்கு ஜோடியாக நயன்தாரா நடிக்கிறார்.

    இந்த படத்தில் ரஜினி காவல்துறை அதிகாரியாக நடிக்கிறார் என்பது படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் மூலம் உறுதியானது. தர்பார் படத்தின் படப்பிடிப்பு மும்பையில் கடந்த 10-ந்தேதி தொடங்கி கடந்த வாரம் வரை நடைபெற்றது. இந்த மாத இறுதியில் மீண்டும் மும்பையில் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு தொடங்குகிறது.

    ரஜினியுடன் பிரதீக் பாபர், தலீப் தாஹில், ஜதின் சர்னா, யோகி பாபு, நிவேதா தாமஸ் என தர்பார் படத்தில் தமிழ்த் திரையுலகம் மட்டுமல்லாமல் மற்ற திரையுலகில் இருந்தும் நடிகர், நடிகைகள் படக்குழுவில் இணைந்து வருகின்றனர்.

    தர்பார் படப்பிடிப்பில் இருந்து புகைப்படங்கள் கசியத் தொடங்கின. மும்பையில் ஒரு கல்லூரியில் படப்பிடிப்பு நடைபெற்றதால் அந்த கல்லூரி மாணவர்கள் படப்பிடிப்பை படம் எடுத்து சமூக வலைதளங்களில் பரப்ப தொடங்கினார்கள். இதனால் கதையும் கசியத் தொடங்கியது.



    இது படக்குழுவுக்கு தலைவலியானது. அந்த தலைவலியை அதிகரிக்கும் வகையில் படத்தில் நடிக்கும் இந்தி நடிகர் தலீப் தாகிர் படத்தின் கதையையே ஒரு பேட்டியில் கூறியுள்ளார். அவர் அளித்துள்ள பேட்டியில், தர்பார் படத்தில் ரஜினி மும்பையை சுத்தம் செய்யும் போலீஸ் அதிகாரியாக நடிக்கிறார் என்று கூறியுள்ளார்.

    தலீப் பேட்டி மூலம் ரஜினி மும்பையில் தீவிரவாதிகளையும் தாதாக்களையும் என்கவுண்டர் செய்து கொல்லும் போலீஸ் அதிகாரியாக நடிக்கிறார் என்பதும் அவருக்கு அதிரடியான சண்டைக்காட்சிகள் இருப்பதும் தெரிய வந்துள்ளது.

    சந்தோஷ் சிவன் ஒளிப்பதிவு செய்யும் இப்படத்திற்கு அனிருத் இசை அமைக்கிறார். எடிட்டிங் ஸ்ரீகர் பிரசாத். அடுத்த ஆண்டு பொங்கல் பண்டிகைக்கு படத்தை வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது.
    சக்ரி டோலட்டி இயக்கத்தில் நயன்தாரா நடிப்பில் உருவாகி இருக்கும் `கொலையுதிர் காலம்' படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
    சிவகார்த்திகேயன் ஜோடியாக நயன்தாரா நடித்துள்ள `மிஸ்டர்.லோக்கல்' படம் திரையரங்குகளில் ஓடிக் கொண்டிருக்கிறது. இந்த நிலையில், நயன்தாரா நடிப்பில் அடுத்ததாக `கொலையுதிர் காலம்' படம் திரைக்கு வர இருக்கிறது. இந்த படம் வருகிற ஜூன் 14-ந் தேதி திரைக்கு வரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

    சக்ரி டோலட்டி இயக்கியிருக்கும் இந்த படம் மர்மம் கலந்த திரில்லர் பாணியில் உருவாகி இருக்கிறது. `ஹஷ்' என்ற ஹாலிவுட் படத்தை தழுவி இந்த படம் உருவாகி இருப்பதாக கூறப்படுகிறது.  தணிக்கையில் படத்திற்கு யு/ஏ சான்றிதழ் கிடைத்துள்ளது.



    எக்ஸட்ரா என்டர்டெயின்மெண்ட் சார்பில் வி.மதியழகன் தயாரித்துள்ள இந்த படத்திற்கு கோரி கெர்யக் ஒளிப்பதிவு செய்துள்ளார். ராமேஸ்வர் எஸ்.பகத் படத்தொகுப்பை கவனிக்கிறார்.

    நயன்தாரா தற்போது சிரஞ்சீவியுடன் சயீரா நரசிம்ம ரெட்டி, ரஜினிகாந்துடன் தர்பார், விஜய்யுடன் தளபதி 63 உள்ளிட்ட படங்களில் பிசியாக இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

    மிஸ்டர்.லோக்கல் படத்தை தொடர்ந்து நயன்தாரா முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் ‘கொலையுதிர் காலம்’ படத்தின் ரிலீஸ் தேதி அறிவித்திருக்கிறார்கள்.
    சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நயன்தாரா நடித்துள்ள மிஸ்டர்.லோக்கல் திரைப்படம் சமீபத்தில் வெளியாகி திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது. 

    இந்நிலையில், நயன்தாரா முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் ‘கொலையுதிர் காலம்’ படத்தை ஜூன் 14ம் தேதி வெளியிட இருப்பதாக படக்குழுவினர் அறிவித்துள்ளனர். 



    மர்மம் கலந்த திரில்லர் பாணியில் உருவாகி இருக்கும் இப்படத்தை சக்ரி டோலட்டி இயக்கி இருக்கிறார். இந்த படம் `ஹஷ்' என்ற ஹாலிவுட் படத்தை தழுவி உருவாகி இருப்பதாக கூறப்படுகிறது. 
    ராஜேஷ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன், நயன்தாரா, சதீஷ், ரோபோ சங்கர், யோகிபாபு நடிப்பில் வெளியாகி இருக்கும் ‘மிஸ்டர்.லோக்கல்’ படத்தின் விமர்சனம்.
    நாயகன் சிவகார்த்திகேயன் கார் ஷோரூமில் வேலை பார்த்து வருகிறார். இவருடன் சதீஷ், ரோபோ சங்கர் ஆகியோர் வேலை பார்த்து வருகிறார்கள். சிவகார்த்திகேயனின் அம்மாவான ராதிகா, டி.வி.சீரியல் நடிகையிடம் ஒரு போட்டோ எடுக்க வேண்டும் என்று கேட்கிறார். அம்மாவின் ஆசை நிறைவேற்றுவதற்காக டி.வி. நடிகையிடம் பேசி போட்டோ எடுக்க அனுமதி வாங்குகிறார்.

    டி.வி. நடிகையை பார்க்க படப்பிடிப்பு நடக்கும் இடத்திற்கு சென்ற சிவகார்த்திகேயன் அங்கு டி.வி. தொடர் தயாரிப்பாளர் நாயகி நயன்தாராவை சந்திக்கிறார். இவர்களின் முதல் சந்திப்பே மோதலில் ஆரம்பிக்கிறது. இந்த மோதலில் டி.வி. நடிகைக்கு பாதிப்பு ஏற்படுகிறது. பின்னர் டி.வி. நடிகைக்காக பேச போய், மீண்டும் சிவகார்த்திகேயனுக்கும் நயன்தாராவிற்கும் மோதல் ஏற்படுகிறது.



    அடிக்கடி நடக்கும் மோதலால் சிவகார்த்திகேயனுக்கு நயன்தாரா மீது காதல் ஏற்படுகிறது. மிகவும் செல்வந்தராக இருக்கும் நயன்தாராவிடம் மிடில் கிளாசை சேர்ந்த சிவகார்த்திகேயன், தன்னுடைய காதலை சொன்னாரா? இருவரும் இணைந்தார்களா? என்பதே படத்தின் மீதிக்கதை.

    படத்தின் நாயகனாக நடித்திருக்கும் சிவகார்த்திகேயன், தனக்கே உரிய பாணியில் காமெடி, ஆக்‌ஷன், நடனம் என அனைத்திலும் சிறப்பாக ஸ்கோர் செய்திருக்கிறார். இவரின் டைமிங் காமெடி பெரிதும் உதவி இருக்கிறது. நாயகியாக நடித்திருக்கும் நயன்தாரா படம் முழுவதும் அழகு பதுமையாக வருகிறார். சிவகார்த்திகேயன் மீது கோபம் காட்டும் போதும், அன்பு காட்டும் போதும் அழகாகவே நடித்து ரசிகர்களை கவர்ந்திருக்கிறார்.



    சிவகார்த்திகேயனுடன் வேலை பார்க்கும் சதீஷ், ரோபோ சங்கர், ஆட்டோ ஓட்டுநராக வரும் யோகிபாபு ஆகியோர் காமெடியில் கலக்கி இருக்கிறார்கள். வெகுளியான தாயாக நடித்து மனதில் பதிந்திருக்கிறார் ராதிகா. அனுபவ நடிப்பால் கைத்தட்டல் பெற்றிருக்கிறார் மேனேஜராக வரும் தம்பிராமையா. 

    காமெடி படங்களுக்கு மிகவும் பெயர் பெற்ற இயக்குனர் ராஜேஷ், இந்த படத்தையும் தன்னுடைய வழக்கமான பாணியிலேயே இயக்கி இருக்கிறார். கதாபாத்திரங்களிடையே சிறப்பாக வேலை வாங்கி இருக்கிறார். குடிப்பது, புகைப்பிடிக்கும் காட்சிகள் இல்லாமல் எடுத்தது சிறப்பு. திரைக்கதையின் நீளம் படத்திற்கு பலவீனமாக அமைந்திருக்கிறது. அதுபோல் நகைச்சுவை இன்னும் அதிகமாக இருந்திருந்தால் கூடுதலாக ரசித்திருக்கலாம்.



    வில்சன் மற்றும் தினேஷ் கிருஷ்ணாவின் ஒளிப்பதிவு படத்திற்கு பலமாக அமைந்திருக்கிறது. ஆதியின் இசையில் பாடல்கள் அனைத்தும் சூப்பர். பின்னணி இசையில் மிரள வைத்திருக்கிறார்.

    மொத்தத்தில் ‘மிஸ்டர்.லோக்கல்’  பொழுதுபோக்கு.
    ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும் ‘தர்பார்’ படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு முடிந்த நிலையில், படத்தில் ரஜினிக்கு இரண்டு வேடங்கள் இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
    ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்கும் ‘தர்பார்’ படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு மும்மைபயில் நடந்து முடிந்தது. தனது காட்சிகளை முடித்து சென்னை திரும்பிய ரஜினி அடுத்தகட்ட படப்பிடிப்புக்காக விரைவில் மும்பை செல்லவிருக்கிறார். இரண்டாவது கட்ட படப்பிடிப்பு வருகிற மே 29-ந் தேதி தொடங்க இருக்கிறது. இந்த படத்தில் ரஜினியுடன் நயன்தாரா, நிவேதா தாமஸ், யோகி பாபு ஆகியோர் நடிக்கிறார்கள்.

    படத்தில் ரஜினிகாந்த் போலீஸ் அதிகாரியாக நடிக்கிறார் என்பது படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் மூலம் உறுதியானது. ரஜினி இந்த படத்தில் சமூக சேவகர், அதிரடி போலீஸ் அதிகாரி என இரட்டை வேடத்தில் நடிப்பதாக முன்னதாக பார்த்திருந்தோம். இந்த நிலையில், தற்போது கிடைத்துள்ள தகவல்படி, அவர் என்கவுண்டர் சிறப்பு போலீசாக நடிப்பது தெரியவந்துள்ளது. படப்பிடிப்பு நடந்த கல்லூரியிலேயே குற்றவாளிகளை விசாரிக்கும் சிறப்பு அறையை செட் போட்டு படம்பிடித்துள்ளனர். ரஜினி குற்றவாளியை விசாரிப்பது போன்ற காட்சியை எடுத்துள்ளார்கள்.



    மற்றொரு கதாபாத்திரத்தில் ரஜினி தாதாவாக நடிப்பதாக கூறப்படுகிறது. எனினும் படக்குழு இதனை உறுதிப்படுத்தவில்லை.

    தாதா ரஜினிக்கு மகளாக நிவேதா தாமஸ் நடிக்கிறார். என்கவுண்ட்டர் போலீஸ் அதிகாரியான ரஜினிக்கு ஜோடியாக நயன்தாரா வருகிறார். தற்போது என்கவுண்ட்டர் போலீஸ் காட்சிகளை படமாக்கி வருகின்றனர்.

    அட்லி இயக்கத்தில் விஜய் - நயன்தாரா நடிப்பில் உருவாகி வரும் தளபதி 63 படத்தில் இளம் நாயகிகள் பலரும் நடித்து வரும் நிலையில், மற்றுமொரு நாயகியாக அம்ருதா ஒப்பந்தமாகி இருக்கிறார்.
    விஜய் - அட்லி மூன்றாவது முறையாக இணைந்திருக்கும் தளபதி 63 படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வருகிறது. கால்பந்து போட்டி சம்பந்தப்பட்ட காட்சிகளை படக்குழு படமாக்கி வந்த நிலையில், தற்போது பாடல் காட்சி ஒன்றை படமாக்கி வருகிறார்கள்.

    இந்த நிலையில், படைவீரன், காளி உள்ளிட்ட படங்களில் நடித்த அம்ருதா இந்த படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.



    இந்த படத்தில் விஜய் ஜோடியாக நயன்தாரா நடிக்கிறார். கதிர், ஜாக்கி ஷெராப், விவேக், யோகிபாபு, இந்துஜா, ரெபா மானிகா, வர்ஷா பொல்லாமா, டேனியல் பாலாஜி, ஆனந்தராஜ், தேவதர்ஷினி, ஞானசம்பந்தம் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.

    படத்தின் தலைப்பு மற்றும் பர்ஸ்ட் லுக் போஸ்டர் விஜய் பிறந்தநாளை முன்னிட்டு விரைவில் வெளியாக இருப்பதாக கூறப்படுகிறது. ஏ.ஜி.எஸ். என்டர்டெயின்மெண்ட் தயாரிக்கும் இந்த படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார். தீபாவளிக்கு படத்தை ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளனர்.

    ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் ரஜினிகாந்த் - நயன்தாரா நடிப்பில் உருவாகி வரும் ‘தர்பார்’ படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு நிறைவு பெற்றுள்ளது.
    பேட்ட படத்தை தொடர்ந்து ரஜினிகாந்த், முருகதாஸ் இயக்கும் ‘தர்பார்’ படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் நயன்தாரா, யோகி பாபு, நிவேதா தாமஸ் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்து வருகின்றனர். இந்த படத்தில் ரஜினிகாந்த் போலீஸ் ஐ.பி.எஸ். அதிகாரியாக வருகிறார். சமூக சேவகராக இன்னொரு கதாபாத்திரத்தில் நடிப்பதாகவும் கூறப்படுகிறது. 

    இதன் முதல் கட்ட படப்பிடிப்பு மும்பையில் விறுவிறுப்பாக நடைபெற்று வந்தது. தற்போது இதன் முதற்கட்ட படப்பிடிப்பு முடிந்து விட்டதாக படக்குழுவினர் அறிவித்துள்ளனர். இரண்டாம் கட்ட படப்பிடிப்பு மே 29ம் தேதி தொடங்க இருப்பதாகவும் அறிவித்திருக்கிறார்கள்.



    அனிருத் இசையமைக்கும் இப்படத்திற்கு சந்தோஷ் சிவன் ஒளிப்பதிவு செய்து வருகிறார். லைகா புரொடக்‌ஷன்ஸ் தயாரிக்கும் இந்த படம் 2020 பொங்கலுக்கு திரைக்கு வரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 
    ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் ரஜினிகாந்த் - நயன்தாரா நடிப்பில் உருவாகி வரும் தர்பார் படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு முடிந்த நிலையில், படத்தில் ரஜினி என்கவுண்டர் போலீசாக நடிப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
    ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து வரும் படம் தர்பார். மும்பையில் நடைபெற்ற முதல்கட்ட படப்பிடிப்பில் அவர் சம்பந்தப்பட்ட காட்சிகளை முடித்துவிட்டு ரஜினி சென்னை திரும்பி உள்ளார்.

    படத்தில் ரஜினி போலீசாக நடிப்பது போஸ்டர் மூலம் வெளியான நிலையில் அவர் என்கவுண்டர் சிறப்பு போலீசாக நடிப்பது தெரியவந்துள்ளது. படப்பிடிப்பு நடந்த கல்லூரியிலேயே குற்றவாளிகளை விசாரிக்கும் சிறப்பு அறையை செட் போட்டு படம்பிடித்துள்ளனர்.



    ரஜினி குற்றவாளியை விசாரிப்பது போன்ற காட்சியை எடுத்துள்ளார்கள். படப்பிடிப்பில் ரஜினி மற்ற தொழிலாளர்களுடன் ஒரே மேஜையில் அமர்ந்து சாப்பிட்டு ஆச்சர்யப்படுத்தி இருக்கிறார். மேலும் ரம்ஜான் விரதம் அனுசரிக்கப்படுவதால் படப்பிடிப்பில் கலந்துகொண்ட இசுலாமிய பணியாளர்களுக்கு சிறப்பு இப்தார் விருந்து அளித்தும் சிறப்பித்து இருக்கிறார்.

    சிறுத்தை சிவா இயக்கத்தில் சூர்யா நடிப்பில் உருவாகும் புதிய படத்தில் அவருக்கு ஜோடியாக நடிக்க நயன்தாராவுடன் பேச்சுவார்த்தை நடந்து வருகிறது.
    விஸ்வாசம் படத்தின் வெற்றியை தொடர்ந்து சிவா அடுத்ததாக சூர்யாவின் 39-வது படத்தை இயக்கப்போவதாக சமீபத்தில் அறிவிப்பு வெளியானது. இந்த படத்தின் மூலம் சூர்யா - சிவா கூட்டணி முதல்முறையாக இணைகிறது.

    ஸ்டூடியோ கிரீன் சார்பில் கே.ஈ.ஞானவேல் ராஜா தயாரிக்கும் இந்த படத்தில் சூர்யா ஜோடியாக நடிக்க நயன்தாராவுடன் பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. விஸ்வாசம் படத்தை போலவே இந்த படமும் சென்டிமெண்ட் கலந்த குடும்ப படமாக உருவாக இருப்பதால் நயன்தாராவை நடிக்க வைக்க படக்குழு முடிவு செய்துள்ளது.



    சூர்யா தற்போது சுதா கொங்காரா இயக்கத்தில் சூரரைப் போற்று படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு அமெரிக்காவில் நடந்து வருகிறது. இந்த படத்தை முடித்த பிறகு சிவா படத்தில் சூர்யா நடிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. நயன்தாராவும் தற்போது விஜய்யின் தளபதி 63, ரஜினியின் தர்பார் உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார்.

    மேலும் டி.இமான் இந்த படத்திற்கு இசையைமக்க இருப்பதாகவும், விஸ்வாசம் படத்தில் பணிபுரிந்த அதே குழுவினரை சூர்யா 39 படத்திலும் ஒப்பந்தம் செய்ய சிவா முடிவு செய்திருப்பதாகவும் கூறப்படுகிறது.

    ×