search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 103761"

    மகா சிவராத்திரி, மாத சிவராத்திரிக்கு விரதம் இருந்து சிவபெருமானை வழிபாடு செய்தால் நல்ல பலன் யாவும் வீடு வந்து சேரும்.
    “கோவில் இல்லாத ஊரில் குடியிருக்க வேண்டாம்” என்று அவ்வையார் பாடி வைத்தார். ஆலயம் இல்லாத ஊரில் அடியெடுத்து வைக்கக் கூட ஆன்றோர்கள் யோசித்திருக்கிறார்கள். அந்த ஆலயம் இரவு முழுவதும் திறந்திருக்கின்ற திருநாள் தான் சிவராத்திரி. வருடம் 365 நாட்களிலும் முறையாகச் சிவபெருமானை வழிபட முடியாதவர்கள் கூட, ஒருநாளாகவும், திருநாளாகவும் கொண்டாடப்படும் சிவராத்திரி இரவில், விடிய விடிய விழித்திருந்து சிவனை வழிபட்டால் நல்ல பலன் யாவும் வீடு வந்து சேரும்.

    இந்த விழிப்பு விரதத்தை ‘மங்கலம் தரும் மகாசிவராத்திரி’ என்றும், ‘செல்வ வளம் தரும் சிவராத்திரி’ என்றும் ‘சொர்க்கத்தை வழங்கும் தூய சிவராத்திரி’ என்றும், ‘எதிர்ப்புகளை அகற்றும் இனிய சிவராத்திரி’ என்றும் ‘காரிய வெற்றி வழங்கும் கனிவான சிவராத்திரி’ என்றும் மக்கள் வர்ணிக்கிறார்கள்.

    சிவன் பெயரை உச்சரித்து சிறப்புகளை பெற்ற அறுபத்து மூவரைப் போல, நீங்களும் மாற வேண்டுமானால் தேர்ந்தெடுக்க வேண்டிய நாள் சிவராத்திரி. அன்றைய தினம் நடைபெறும் ஆறுகால பூஜைகளில் கலந்துகொண்டு சிவனை வழிபட்டால் சீரும், சிறப்பும், செல்வாக்கும் பெற்று வாழமுடியும்.

    வைகாசி பெருவிழாவையொட்டி கடலூர் பாடலீஸ்வரர் கோவிலில் பந்தக்கால் நடும் விழா நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
    கடலூர் திருப்பாதிரிப்புலியூர் பாடலீஸ்வரர் கோவிலில் ஆண்டுதோறும் வைகாசி பெருவிழா வெகு விமரிசையாக நடைபெறுவது வழக்கம். இதன்படி இந்த ஆண்டிற்கான வைகாசி பெருவிழா வருகிற 9-ந்தேதி (வியாழக்கிழமை) கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.

    முன்னதாக வண்ணார மாரியம்மன் விழா, எல்லைக்கட்டுதல், விக்னேஸ்வர பூஜை, வீதி உலா காட்சி நடக்கிறது. இதையொட்டி நேற்று பந்தக்கால் நடும் விழா நடந்தது. தொடர்ந்து பாடலீஸ்வரர், பெரியநாயகி அம்பாளுக்கு சிறப்பு பூஜைகள் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    தொடர்ந்து ஒவ்வொரு நாளும் சூரிய பிரபை, சிம்மம், பல்லக்கு, பூத, காமதேனு, நாக வாகனத்தில் சாமி வீதி உலா நடக்கிறது. வருகிற 13-ந்தேதி அதிகாரநந்தி கோபுர தரிசனம், தெருவடைச்சான், 14-ந்தேதி யானை வாகனம், நால்வர் புறப்பாடு, வெள்ளி ரதம், இந்திர விமானம், 15-ந்தேதி கைலாச வாகனம், கோபுர தரிசனம், திருக்கல்யாணம், பரிவேட்டை ஆகிய நிகழ்ச்சிகள் நடக்கிறது.

    16-ந்தேதி குதிரை வாகனத்தில் சாமி வீதி உலாவும், முக்கிய நிகழ்ச்சியான தேர்த்திருவிழா வருகிற 17-ந்தேதியும் நடக்கிறது. அன்று காலை சாமிக்கு சிறப்பு அலங்கார தீபாராதனை நடக்கும். தொடர்ந்து அலங்கரிக்கப்பட்ட தேரில் சாமி எழுந்தருளுவார். அப்போது ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுப்பார்கள். பின்னர் தேர் நிலையை வந்தடையும்.

    மறுநாள் (18-ந்தேதி) நடராஜர் தரிசனமும், தீர்த்தவாரியும், 19-ந்தேதி தெப்ப உற்சவமும், 20-ந்தேதி திருஞான சம்பந்தர் ஞானப்பால் உண்ட ஐதீகமும் நடக்கிறது. விழாவுக்கான ஏற்பாடுகளை தக்கார் ரேணுகாதேவி, செயல் அலுவலர் முத்துலட்சுமி மற்றும் நிர்வாகிகள் செய்து வருகின்றனர்.
    திருமுருகன்பூண்டியில் 25 தலை, 50 கைகளுடன் செதுக்கப்பட்டுள்ள மகா சதாசிவ மூர்த்தி சிலை சிவகங்கை மாவட்டத்தில் பிரதிஷ்டை செய்யப்படுகிறது.
    திருப்பூரை அடுத்த திருமுருகன்பூண்டி சுற்று வட்டாரத்தில் 100-க்கும் மேற்பட்ட சிற்ப கலை கூடங்கள் உள்ளன. அங்கு கருங்கல்லால் செதுக்கப்படும் கலை நயமிக்க சிலைகள் தமிழகம் முழுவதும் மட்டுமின்றி வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகிறது. தற்போது அங்குள்ள ஒரு சிற்ப கலை கூடத்தில் 25 தலை மற்றும் 50 கைகளுடன் கூடிய மகா சதாசிவ மூர்த்தி சிலை செதுக்கப்பட்டுள்ளது.

    இந்த சிலை குறித்து ஸ்பதி சண்முகம் கூறியதாவது:-

    திருமுருகன்பூண்டியில் தினமும் பல சிலைகள் வடிவமைத்தாலும் இதுபோன்ற சிலை வடிவமைக்கப்படுவது முதல்முறையாகும். இந்த சிலை 4 டன் எடையுடன், 7½ அடி உயரத்தில் ஒரே கருங்கல்லால் செதுக்கப்பட்டுள்ளது. மேலும் 25 தலைகள், 50 கைகள் மற்றும் அம்பாள் மடியில் இருப்பது போன்று மிகவும் தத்ரூபமாக மகா சதாசிவ மூர்த்தி சிலையை வடிவமைத்துள்ளோம். இந்த சிலையை 6 பேர் கொண்ட குழு 6 மாத காலத்தில் உருவாக்கி உள்ளோம்.

    இதேபோல் 6¾ அடி உயரத்தில், 3 டன் எடை அளவுள்ள 11 தலைகள் கொண்ட விஸ்வரூப சுப்பிரமணிய சாமி சிலையையும் கலைநயத்துடன் செதுக்கி உள்ளோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இந்த 2 சிலைகளும் சிவகங்கை மாவட்டம் சொக்கநாதபுரத்தில் உள்ள பிரத்தியங்கர தேவி கோவிலில் பிரதிஷ்டை செய்யப்பட உள்ளது.
    சிவபெருமானுக்கு உகந்த பொருட்களை கொண்டு அபிஷேகம் செய்தால் பல்வேறு நன்மைகள் கிடைக்கும். எந்த பொருளால் அபிஷேகம் செய்தால் என்ன பலன் கிடைக்கும் என்று பார்க்கலாம்.

    சிவனைத் தூய நல்லெண்ணையில் வாசனைத் திரவியங்கள் கலந்து நூறு குடம் அபிஷேகம் செய்தால் வாழ்வில் நோய் நீங்கி நோயற்ற வாழ்வு கிடைக்கும்.

    கோமூத்திரம் கலந்த பஞ்சகவ்யத்தைப் பத்துக்குடம் அபிஷேகம் செய்தால் உடலில் உள்ள அழுக்குகள் நீங்கி, மாசு மருவற்ற தேத்தினைப் பெறலாம்.

    சுத்தமான பசுவின் கறந்த பால் ஆயிரம் குடம் அபிஷேகம் செய்தால் தீர்க்காயுசு கிடைக்கும்.

    சுத்தமான தேன் கொண்டு அபிஷேகம் செய்தால்  இனிய கானம் பாடும் திறமையும், குயிலினும் இனிய குரலும் கிடைக்கும்.

    எலுமிச்சம்பழம் ஆயிரம் கொண்டு அபிஷேகம் செய்தால் அஞ்ஞானம் நீங்கிவிடும்.

    சர்க்கரையினால் நூறு மூட்டை அபிஷேகம் செய்ய வாழ்வில் இல்லாமை நீங்கி, மனநிறைவு உண்டாகும்.

    இளநீர் ஆயிரம் குடம் அபிஷேகம் செய்தால் பேரானந்தமும், கைலாசவாசனின் காலடியில் வாழும் பேறும் கிட்டும்.

    பத்தாயிரம் பழங்கள் சேர்த்து செய்த பஞ்சாமிர்தத்தால் அபிஷேகம் செய்தால் வாழ்வில் வீரத்துடன் எதையும் சாதிக்கும் மனோபலமும், சகல காரியங்களில் வெற்றியும் கிடைக்கும்.

    தயிர் நூறு குடம் அபிஷேகம் செய்தால் மேலான சம்பத்து கிடைக்கும்.

    கரும்புச்சாறு நூறு குடம் அபிஷேகம் செய்தால் தேக ஆரோக்கியம், உடல் வலிமை பெற்று விளங்கும்.

    மஞ்சள் தூளினால் அபிஷேகம் செய்தால் அரசனின் அன்பிற்கு பாத்திரமாகும் நிலை உண்டாகும்.

    திராட்சை ரசம் செல்வத்தினை அளிக்கும்.

    பசு நெய் கொண்டு அபிஷேகம் செய்தால் இகபரசுகங்களில் இருந்து நம்மை விடுவித்து சுவர்க்க நிலையை நமக்கு அளிக்கும்.

    அரிசிமாவினால் அபிஷேகம் செய்தால் எத்தகைய கடன்கள் இருந்தாலும் அவற்றில் இருந்து நம்மை விடுவிக்கும்.

    அன்னாபிஷேகம், பதினொரு மூட்டை அரிசியால் அன்னம் சமைத்து அதனை லிங்கஸ்வரூபமான சிவனுக்கு அபிஷேகம் செய்தால் வயிற்றில் உண்டாகும் சகலவிதமான நோய்களும் பஞ்சாகப் பறந்துவிடும்.

    தூய்மையான மங்களகரமான கங்கை நீர் நூறு குடம் கொண்டு அபிஷேகம் செய்தால் மனத்திலுள்ள கஷ்டங்கள் அனைத்தும் நீங்கி , பயம் போய், மனநிம்மதி உண்டாகும்.

    சந்தனக்குழம்பினைப் பன்னீரில் கரைத்து அபிஷேகம் செய்தால் இறைவனிடம் மாசற்ற பக்தி உண்டாகி அஞ்ஞானம் விலகும்.

    ருத்ரம் ஜபித்த ஆயிரம் கலசங்களில் வைக்கப்பட்டுள்ள கங்கை நீரால் கங்காதரனைக் குளிர்வித்தால் மந்திரசித்தி ஏற்படும்.

    ஈசனின் திருமேனியில் இருந்து தோன்றிய விபூதியினால் அபிஷேகம் செய்ய சகல ஐஸ்வர்யங்களும் கிடைக்கும்.

    தங்கத்தாமரை மொட்டுகள் செய்து அதனால் அபிஷேகம் செய்தால் சொர்க்க போகம் கிடைக்கும்.
    சிவபெருமானுக்கு பூஜைகள் செய்து வழிபாடு செய்யும் போது அவருக்கு உகந்த மலர்களால் அர்ச்சனை செய்ய செய்யவேண்டும். எந்த மலர் வழிபாடு என்ன பலனை தரும் என்று பார்க்கலாம்.
    செந்தாமரை - தனலாபம், வியாபார விருத்தி, ஆயுள் விருத்தி
    மனோரஞ்சிதம், பாரிஜாதம் - பக்தி, தம்பதி ஒற்றுமை, ஆயுள்விருத்தி
    வெண்தாமரை, நந்தியாவட்டை, மல்லிகை, இருவாட்சி - மனச்சஞ்சலம் நீங்கி, புத்திக்கூர்மை ஏற்படும். சகலகலாவிருத்தி.

    மாசிப்பச்சை, மரிக்கொழுந்து - நல்ல விவேகம், சுகபோகங்கள், உறவினர் ஒற்றுமை உண்டாகும்.
    மஞ்சள் அரளி, தங்க அரளி, செவ்வந்தி - கடன்நீங்கும், கன்னியருக்கு விவாகப்ராபதி ஏற்படும்.
    செம்பருத்தி, அடுக்கு அரளி, தெத்திப்பூஞானம் நல்கும், புகழ், தொழில் விருத்தி.

    நீலச்சங்கு - அவச்சொல், அபாண்டம், தரித்திரம் நீங்கும் அருளும் ஆயுளும் கிட்டும்.
    வில்வம் கருந்துளசி, மகிழம்பூ - சங்கடங்கள் நீங்கி, சகலகாரியமும் கைகூடும்.
    தாமரை, செண்பகம் ஆகியவற்றை மொட்டுகளாகவும் பூஜை செய்யலாம். ஏனையவை மலர்ந்திருக்க வேண்டும்.

    குங்குமப்பூ தவிர மற்ற முள் உள்ள பூக்கள் பூஜைக்கு உகந்தவை அல்ல. கிளுவை, விளா, வெண்நொச்சி, மாவிலங்கை, வில்வம் ஆகியவை பஞ்ச வில்வங்களாகும்.

    மாதப்பிறப்பு, சோமவாரம், அமாவாசை, பவுர்ணமி, சதுர்த்தி, சதுர்த்தசி, அஷ்டமி, நவமி நாள்களில் வில்வத்தை மரத்திலிருந்து பறிக்கக்கூடாது.
     
    மகா சிவராத்திரி தினத்தில், கோவில்களுக்குச் சென்று சிவபெருமானை பக்தியுடன் வணங்கி வழிபட்டால் மன அமைதி, வாழ்வில் முன்னேற்றம் கிடைக்கும்.
    பவுர்ணமி திதியைத் தொடர்ந்து வரும் 14-வது நாளான தேய்பிறை சதுர்த்தசி திதியை சிவராத்திரியாக கடைப்பிடிக்கிறோம். மாதம் தோறும் சிவராத்திரி தினம் வந்தாலும், மாசி மாதத்தில் வரும் தேய்பிறை சதுர்த்தசி நாளே, ‘மகா சிவராத்திரி’ என்று கொண்டாடப்படுகிறது.

    அழிவுக்குள்ளான உலகமும் உயிர்களும் சிவனருளால் மீண்டும் உருவான நன்னாளே மகா சிவராத்திரி என்று புராணங்கள் சொல்கின்றன. இந்த நாளின் சிறப்புகள் பற்றி கருட புராணம், கந்த புராணம், பத்ம புராணம், அக்னி புராணம் போன்ற நூல்களில் விரிவாக குறிப்பிடப்பட்டுள்ளது.

    மகா சிவராத்திரி தினத்தில், கோவில்களுக்குச் சென்று சிவபெருமானை பக்தியுடன் வணங்கி வழிபட்டால் மன அமைதி, வாழ்வில் முன்னேற்றம் கிடைக்கும். துன்பங்கள் நீங்கி, இன்பங்கள் சேரும் என்பது நம்பிக்கை.
    சிவராத்திரி தொடர்புடைய பல்வேறு கதைகளை நடைமுறையில் சொல்லப்படுகிறது. அவற்றில் சிலவற்றை பற்றி விரிவாக பார்க்கலாம்.
    * தங்களில் யார் பெரியவர்? என்பதை நிலைநாட்டுவதற்காக, பிரம்மாவும், விஷ்ணுவும் சிவபெருமானின் அடி முடியை தேடிச் சென்றனர். அவர்கள் இருவரின் அகந்தையை அழிக்க நினைத்த ஈசன், அடி முடி காண முடியாத நிலையில், நெருப்பு பிழம்பாக ஓங்கி உயர்ந்து நின்றார். அப்படி நெருப்பு பிழம்பாக, சிவபெருமான் காட்சியளித்த தினமே ‘மகா சிவராத்திரி’ என்று சொல்லப்படுகிறது.

    * தேவர்களும் அசுரர்களும், அமிர்தம் பெறுவதற்காக பாற்கடலைக் கடைந்தனர். அப்போது கடலில் இருந்து உலகையே அழிக்கும் நஞ்சு வெளிப்பட்டது. அந்த விஷத்தை அருந்தி, உலக உயிர்களை சிவபெருமான் காத்தார். அந்த நாளே பிரதோஷம் ஆகும். ஆனால் அமிர்தம் கிடைப்பதற்காக தேவர்கள் பாற்கடலைக் கடைய வேண்டியதிருந்ததால், அமிர்தம் கிடைத்த பிறகான ஒரு நாளில், விஷத்தில் இருந்து உயிர்களைக் காத்த இறைவனுக்கு, அவர்கள் நன்றி தெரிவித்தனர். ஒரு நாள் இரவு முழுவதும் கண் விழித்திருந்து, சிவபெருமானை வணங்கி பூஜித்தனர். அந்த நாளே ‘மகா சிவராத்திரி’ என்றும் மற்றொரு கதை சொல்கிறது.
    திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் மகா சிவராத்திரி சிறப்பு பூஜை வருகின்ற 4-ந் தேதி நடைபெறவுள்ளது.
    விஷ்ணு மற்றும் பிரம்மா இடையே யார் பெரியவர் என்று ஏற்பட்ட போட்டியால் நான் என்ற அகந்தையை அழிக்க அடி முடி காணும்படி சிவபெருமான் கட்டளை பிறப்பித்தார். வராக அவதாரம் என்று பூமியை குடைந்து சென்றார் விஷ்ணு. அதேபோல் அன்னப்பட்சியாக உருவெடுத்து உயர உயர பறந்தார் பிரம்மா. இருவரது முயற்சியும் தோல்வியில் முடிந்தது.

    அதேநேரத்தில், முடியை கண்டதாகவும், அதற்கு சிவபெருமான் தலையில் இருந்த தாழம்பூவை சாட்சியாக்கினார் பிரம்மா, இதனால் சினம் கொண்ட சிவபெருமான், பொய் சாட்சி சொன்ன தாழம்பூவானது பூஜைக்கு உதவாது என்று கூறி ஜோதி பிழம்பாக லிங்கோத்பவ மூர்த்தியாக காட்சி தந்தார். விஷ்ணு, பிரம்மா ஆகியோரது அகந்தை அழிந்தது.

    இந்த நிகழ்வு மாசி மாதம் தேய்பிறை சதுர்த்தசி திதியில் நடைபெற்றுள்ளது. இதுவே சிவராத்திரியாகும். இது உருவான இடம் திருவண்ணாமலை திருத்தலம் என்று புராணங்கள் கூறுகின்றன. அதன் அடிப்படையில், அண்ணாமலையார் கோவிலில் மகா சிவராத்திரி சிறப்பு பூஜை மற்றும் வழிபாடு வருகின்ற 4-ந் தேதி நடைபெறவுள்ளது.

    இதையயொட்டி அதிகாலை 5 மணி முதல் லட்சார்ச்சனை நடைபெறும். மேலும், அன்றைய தினம் இரவு 7.30 மணி, 11.30 மணி, மறுநாள் 5-ந் தேதி அதிகாலை 2.30 மணி மற்றும் 4.30 மணிக்கு என்று மூலவருக்கு நான்கு கால பூஜைகள் மற்றும் அபிஷேக ஆராதனைகள் நடைபெறும்.

    இதேபோல், மூலவர் கருவறைக்கு பின்புறம் அமைந்துள்ள லிங்கோத் பவருக்கு நள்ளிரவு 12 மணிக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் மகா தீபாராதனை நடைபெறும்.

    மகா சிவராத்திரியை யொட்டி கோவில் கலையரங்கில் தேவாரப் பாடல்கள் மற்றும் கலைநிகழ்ச்சிகள் நள்ளிரவு வரை நடைபெறும். இதில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு தரிசனம் செய்ய உள்ளனர்.
    கடலூர் திருப்பாதிரிப்புலியூர் பாடலீஸ்வரர் கோவிலில் மகா சிவராத்திரி விழா வருகிற 4-ந் தேதி(திங்கட்கிழமை) நடைபெற உள்ளது.
    சிவனுக்கு உகந்த சிவராத்திரி அன்று இரவு முழுவதும் விழித்திருந்து இறைவனை வழிபட்டால் நல்ல பலன் கிடைக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கை ஆகும். இதனால் ஒவ்வொரு ஆண்டும் மகா சிவராத்திரி அன்று சிவஸ்தலங்களில் விடியவிடிய சிறப்பு வழிபாடு நடைபெறுவது வழக்கம்.

    அந்த வகையில், கடலூர் திருப்பாதிரிப்புலியூர் பாடலீஸ்வரர் கோவிலில் மகா சிவராத்திரி விழா வருகிற 4-ந் தேதி(திங்கட்கிழமை) நடைபெற உள்ளது.

    சிவராத்திரி அன்று இரவு பெரியநாயகி உடனுறை பாடலீஸ்வரருக்கு 4 காலமும் விசேஷ அபிஷேக பூஜைகளும், மறுநாள்(செவ்வாய்கிழமை) அதிகாலை 5 மணிக்கு அதிஉன்னத அதிகார நந்தி கோபுரதரிசனமும் நடைபெறுகிறது. இதுதவிர மாலை 5 மணி முதல் வாய்பாட்டு, மாணவ-மாணவிகளின் பரதநாட்டியம் உள்ளிட்ட கலைநிகழ்ச்சிகளும், நள்ளிரவு 12.45 மணிக்கு ஓய்வுபெற்ற ஆசிரியர் கலியபெருமாளின் மகா சிவராத்திரி பெருமை என்ற ஆன்மிக சொற்பொழிவு நிகழ்ச்சியும் நடக்கிறது.

    இதற்கான ஏற்பாடுகளை இந்துசமய அறநிலையத்துறை உதவி ஆணையர் மற்றும் தக்கார் ரேணுகாதேவி, செயல் அலுவலர் முத்துலட்சுமி மற்றும் கோவில் அர்ச்சகர்கள், பணியாளர்கள் செய்து வருகிறார்கள்.
    சிவராத்திரி தினத்தில் வழிபடுபவர்களுக்கு இம்மையில் செல்வமும், மறுமையில் சொர்க்கமும், இறுதியில் முக்தியும் அளிக்க வேண்டும் என்று பார்வதி தேவி பரமனிடம் வேண்டினாள். அதுவே மகா சிவராத்திரி தினமாக கடைப்பிடிக்கப்படுகிறது.
    சிவராத்திரி வழிபாட்டை உருவாக்கிய பெருமை பார்வதி தேவியையே சேரும். ஒரு முறை பார்வதிதேவி, விளையாட்டாக சிவபெருமானின் இரண்டு கண்களை மூடினார். உலகுக்கு ஒளி வழங்கும் சூரியனும், சந்திரனுமே, ஈசனின் இரண்டு கண்களாக உள்ளனர். எனவே ஈசனின் கண்கள் மூடப்பட்டதும், உலகம் முழுவதும் இருள் சூழ்ந்தது. உலக உயிர்கள் தவித்தன.

    இதனால் பயந்து போன பார்வதிதேவி, தன்னுடைய பிழையை பொறுத்தருளும்படி சிவனை வேண்டினாள். அதோடு உலகம் மீண்டும் இயங்கவும், உயிர்கள் துன்பமின்றி வாழவும் அன்றைய இரவில் நான்கு ஜாமங்களிலும் கண் விழித்து சிவனை அர்ச்சனை செய்து வழிபட்டாள். வழிபாட்டின் முடிவில் பார்வதிக்கு காட்சியளித்த ஈசன், தன் உடலில் பாதியை அவளுக்குத் தந்து உலகமும், உயிர்களும் இன்புற்று வாழ அருள்பாலித்தார்.

    தனக்கும் உலக உயிர்களுக்கும் அருள்பாலித்த ஈஸ்வரனை வணங்கிய பார்வதி, “உலகமும் உயிர்களும் மீண்டும் இயங்க காரணமான இந்த இரவை, தேவர்களும் மனிதர்களும் மறவாமல் தொடர்ந்து கடைப்பிடிக்க வேண்டும். அது உங்கள் திருநாமத்தினாலேயே விளங்க வேண்டும். அந்த தினத்தில் வழிபடுபவர்களுக்கு இம்மையில் செல்வமும், மறுமையில் சொர்க்கமும், இறுதியில் முக்தியும் அளிக்க வேண்டும்” என்று பரமனிடம் வேண்டினாள். அதுவே மகா சிவராத்திரி தினமாக கடைப்பிடிக்கப்படுகிறது.
    கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள 12 சிவாலயங்களை, மகா சிவராத்திரி அன்று ஓடிச் சென்றே வழிபடும் ‘சிவாலய ஓட்டம்’ பிரசித்தி பெற்றது.
    கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள 12 சிவாலயங்களை, மகா சிவராத்திரி அன்று ஓடிச் சென்றே வழிபடும் ‘சிவாலய ஓட்டம்’ பிரசித்தி பெற்றது. சுமார் 118 கிலோமீட்டர் தூரம் கொண்டது, சிவாலய ஓட்டம். சிவராத்திரி அன்று அதிகாலை 3 மணி அளவில் காவி வேட்டி, காவித்துண்டு, ருத்ராட்சம் அணிந்து, வெறுங்காலுடன் சிறிய பையில் விபூதி எடுத்துக்கொண்டு, பனை ஓலை விசிறியுடன் இந்த ஓட்டத்தை சிவ பக்தர்கள் தொடங்குவார்கள். 12 சிவாலயங்களில் முதல் ஆலயமான முஞ்சிறை என்ற திருமலையில் இருந்து இந்த ஓட்டம் தொடங்கும். 12-வது ஆலயமான திருநட்டாலம் ஆலயத்தை தரிசிக்கும் வரை சிவ நாமத்தை உச்சரித்தபடியே இந்த ஓட்டம் நடைபெறும்.

    முஞ்சிறை திருமலை மகாதேவர் கோவில், திக்குறிச்சி மகாதேவர் கோவில், திற்பரப்பு மகாதேவர் கோவில், திருநந்திக்கரை நந்தீஸ்வரர் கோவில், பொன்மனை தீம்பிலாங்குடி மகாதேவர் கோவில், திருபன்னிபாகம் சிவன் கோவில், கல்குளம் நீலகண்ட சுவாமி கோவில், மேலாங்கோடு சிவன் கோவில், திருவிடைக்கோடு மகாதேவர் கோவில், திருவிதாங்கோடு சிவன்கோவில், திருபன்றிகோடு மகாதேவர் கோவில், திருநட்டாலம் சங்கர நாராயணர் கோவில்' ஆகியவை அந்த 12 ஆலயங்கள் ஆகும்.

    பாண்டவர்களின் மூத்தவரான தருமர், ராஜ குரு யாகம் ஒன்றை நிறைவேற்றுவதற்கு, புருஷா மிருகத்தின் (வியாக்ரபாதர்) பால் தேவைப்பட்டது. அந்த ராட்சத மிருகத்துக்கு சிவன் மீது மிகுந்த பக்தியும், விஷ்ணு மீது மிகுந்த வெறுப்பும் உண்டு. வியாக்ரபாத மகரிஷிக்கு, சிவனும், விஷ்ணுவும் ஒன்று என உணர்த்த நினைத்தார், மகாவிஷ்ணு. அதன்படி பீமனிடம், புருஷா மிருகத்தின் பால் கொண்டுவர கட்டளையிட்டார். கூடவே 12 ருத்ராட்சங்களை பீமனின் கையில் கொடுத்தார். “உனக்கு ஏதாவது ஆபத்து வந்தால், இதில் ஒன்றை கீழே போட்டுவிடு” என்று சொல்லியும் அனுப்பினார்.

    பீமன் புருஷா மிருகத்தை தேடி கானகம் வந்தான். அன்று மகாசிவராத்திரி நன்னாள். அங்கே புருஷா மிருகம் சிவ தவத்தில் முஞ்சிறை திருமலையில் சிவபூஜை செய்து கொண்டிருந்தது. அங்கு பீமன் சென்று, “கோபாலா.. கோவிந்தா...'' என்று கூறி புருஷா மிருகத்தை சுற்றி வந்தான். திருமாலின் திருநாமத்தைக் கேட்டதும், புருஷா மிருகம் மிகவும் கோபம் அடைந்து, பீமனை விரட்ட ஆரம்பித்தது. உடனே பீமன் அந்த இடத்தில் ஒரு ருத்ராட்சத்தைப் போட்டான். கீழே விழுந்த ருத்ராட்சம், ஒரு சிவலிங்கமாக மாறியது. இதைப் பார்த்ததும் புருஷா மிருகம் சிவலிங்க பூஜை செய்யத் தொடங்கி விட்டது.

    சிறிது நேரம் கழித்து பீமன் மீண்டும், ‘கோவிந்தா, கோபாலா’ என குரல் எழுப்பி, பால் பெற முயன்றான். புருஷா மிருகம் மீண்டும் பீமனைப் பிடிக்க துரத்தியது. சிறிது தூரம் ஓடிய பீமன் மீண்டும் ஒரு ருத்ராட்சத்தை கீழே போட்டான். அதுவும் சிவலிங்கமாக மாறியது. அதைப் பார்த்து மீண்டும் புருஷா மிருகம் சிவ பூஜை செய்யத் தொடங்கியது.

    இப்படியே 12 ருத்ராட்சங்களும் 12 சிவ தலங்களாக உருவாகி நின்றன. 12-வது ருத்ராட்சம் விழுந்த இடத்தில் ஈசனுடன் மகாவிஷ்ணு இணைந்து, சங்கர நாராயணனாக காட்சி தந்தனர். அதைக் கண்ட புருஷா மிருகம் அரியும், அரனும் ஒன்றே என்ற தத்துவத்தை உணர்ந்து கொண்டது. கடைசி தலமான திருநட்டாலத்தில் அர்த்தநாரீஸ்வரர் கோலத்திலும் ஈசன் காட்சி தந்தார்.

    அந்த மகிழ்ச்சியில் தருமரின் யாகத்திற்கு பால் கொடுக்க புருஷா மிருகம் ஒப்புக் கொண்டது. இதை மெய்ப்பிக்கும் வகையில் திருநட்டாலத்தில் இன்னும் இரண்டு ஆலயங்கள் உள்ளன. ஒன்றில் ஈசன், அர்த்தநாரீஸ்வரராகவும், மற்றொரு ஆலயத்தில் சங்கரநாராயணராகவும் அருள்பாலிக்கிறார். சிவாலய ஓட்டம் தொடர்பான திருக்கோவில்களின் தூண்கள், புருஷா மிருகம் மற்றும் பீமனின் சிற்பங்களை நாம் பார்க்க முடியும்.

    மேற்கண்ட புராண நிகழ்வின் அடிப்படையில்தான் ஆண்டுதோறும் சிவராத்திரி நன்னாளில் அடியவர்கள் சிவாலய ஓட்டம் சென்று, வேண்டியதை பெறுகிறார்கள். சிவாலய ஓட்டத்தில் பங்கு கொள்ளும் அடியவர்களுக்கு ஆங்காங்கே மோர், பழரசம், பானகம், கிழங்கு, கஞ்சி போன்றவற்றைக் கொடுத்து பக்தர்கள் பலரும் மகேஸ்வர பூஜை செய்கிறார்கள்.

    பீமன் ஒரே சிவராத்திரி நாளில் 12 சிவாலயங்களுக்கும் ஓடியதால், இந்த ஆலயங்கள் ‘சிவாலய ஓட்டத் தலங்கள்’ என்று அழைக்கப்படுகின்றன. இந்த ஆலயங்களில் மகா சிவராத்திரி மட்டுமின்றி, மாதாந்திர சிவராத்திரி நாட்களிலும் சிவராத்திரி ஓட்டம் நடக்கிறது.
    எல்லா யாகங்களையும் எல்லா தர்மங்களையும் விட, மிக உயர்ந்த விரதம் ‘மகா சிவராத்திரி’ விரதம் என்று கருதப்படுகிறது.
    மகா சிவராத்திரி விரதம் இருப்பவர்களை எமதர்மனும் நெருங்க அஞ்சுவான். எல்லா யாகங்களையும் எல்லா தர்மங்களையும் விட, மிக உயர்ந்த விரதம் ‘மகா சிவராத்திரி’ விரதம் என்று கருதப்படுகிறது.

    புராணங்களில் சொல்லப்பட்ட ஏனைய பல விரதங்களை நெடுங்காலம் கடைப்பிடிப்பதும், நூறு அசுவமேத யாகங்களை செய்வதும், பல முறை கங்கா ஸ்நானம் செய்வதும் கூட, ஒரு மகா சிவராத்திரி நாளில் ஈசனை நினைத்து விரதம் இருப்பதற்கு ஈடாகாது.

    இப்படி புராணங்கள் போற்றும் மகா சிவராத்திரி தினத்தில் உடலையும், உள்ளத்தையும் பரிசுத்தமாக்கி, சிவபெருமானை மனதில் நினைத்து, இரவு முழுவதும் கண் விழித்து நான்கு கால வேளையிலும் வழிபாடு செய்ய வேண்டும்.

    இவ்வாறு செய்வதால் ஒருவரின் வாழ்வில் துன்பம், வறுமை நீங்கி வாழ்வு செழிக்கும். சிவராத்திரி விரதம் இருப்பதால் தெரியாமல் செய்த பாவங்களுடன், தெரிந்தே செய்த பாவங்களும் நம்மை விட்டு நீங்கிப் போகும்.

    ×