search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 115901"

    மலேசியாவுக்கு எதிரான ஆக்கி தொடரின் இரண்டாவது ஆட்டத்திலும் இந்திய அணி 5-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி 2-0 என முன்னிலை வகிக்கிற்து. #India #Malaysia #WomenHockey
    கோலாலம்பூர்:

    மலேசியாவுக்கு சென்றுள்ள இந்திய பெண்கள் ஆக்கி அணி 5 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. இதில் முதல் போட்டியில் 3-0 என்ற கோல் கணக்கில் வென்ற இந்தியா 1-0 என முன்னிலை வகித்தது.

    இந்நிலையில், மலேசியா, இந்தியா அணிகள் மோதும் இரண்டாவது போட்டி நேற்று கோலாலம்பூரில் நடைபெற்றது.

    இந்த போட்டியிலும் முழுமையாக ஆதிக்கம் செலுத்திய இந்தியா 5 - 0 என்ற கோல் கணக்கில் மலேசியாவை வீழ்த்தியது. இந்திய தரப்பில் நவ்ஜோத் கவுர், வந்தனா, நவ்னீத் கவுர், லால்ரெம்சியாமி, நிக்கி பிரதான் ஆகியோர் தலா ஒரு கோல் அடித்தனர். 

    இதன்மூலம் இந்திய அணி 2 -0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. இரு அணிகளுக்கு இடையிலான மூன்றாவது போட்டி நாளை நடக்கிறது. #India #Malaysia #WomenHockey
    அஸ்லான் ஷா ஹாக்கி தொடரில் இன்று நடைபெற்ற லீக் போட்டியில் போலந்தை 10 - 0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தியது இந்தியா. #AzlanShahhockey
    அஸ்லான் ஷா ஹாக்கி தொடர் மலேசியாவில் நடைபெற்று வருகிறது. இன்று நடைபெற்ற ஆட்டத்தில் இந்தியா போலந்தை எதிர்கொண்டது. இதில் இந்தியா 10 - 0 என்ற கோல் கணக்கில் அபாரமாக வெற்றி பெற்றது.

    வருண் குமார் 18, 25-வது நிமிடத்திலும், மந்தீப் சிங் 50, 51-வது நிமிடத்திலும் தலா 2 கோல் அடித்தனர். விவேக் பிரசாத் (1), சுமித் குமார் (7), சுரேந்தர் குமார் (19), சிம்ரன்ஜித் (29), நீலகண்டா ஷர்மா (36), அமித் ரோஹிதாஸ் (55) ஆகியோர் தலா ஒரு கோல் அடித்தனர். #AzlanShahhockey
    அஸ்லான் ஷா ஆக்கி போட்டியில் இந்திய அணி 4-2 என்ற கோல் கணக்கில் மலேசியாவை வீழ்த்தி 2-வது வெற்றியை ருசித்தது.
    இபோக்:

    6 அணிகள் இடையிலான 28-வது அஸ்லான் ஷா கோப்பை ஆக்கி போட்டி மலேசியாவில் உள்ள இபோக் நகரில் நடந்து வருகிறது. இதில் நேற்று நடந்த லீக் ஆட்டம் ஒன்றில் இந்திய அணி, மலேசியாவுடன் மோதியது. விறுவிறுப்பான இந்த ஆட்டத்தில் இந்திய அணி 4-2 என்ற கோல் கணக்கில் மலேசியாவை வீழ்த்தி 2-வது வெற்றியை ருசித்தது. இந்திய அணி தரப்பில் சுமித் (17-வது நிமிடம்), சுமித் குமார் (27-வது நிமிடம்), வருண்குமார் (36-வது நிமிடம்), மன்தீப் சிங் (58-வது நிமிடம்) தலா ஒரு கோல் அடித்தனர். மலேசிய அணியில் ராஸி ரஹிம் (21-வது நிமிடம்), முகமது பிர்ஹான் (57-வது நிமிடம்) தலா ஒரு கோல் திருப்பினார்கள்.

    இன்று நடைபெறும் லீக் ஆட்டத்தில் இந்திய அணி, கனடாவை (பிற்பகல் 3.35 மணி) சந்திக்கிறது.
    பிறந்து 4 மாதமே ஆன குழந்தையை வைத்து அபாயகரமான முறையில் வித்தை காட்டிய ரஷிய தம்பதியை மலேசிய போலீசார் கைது செய்தனர். #RussianCouple #BabySwinging #Malaysia
    கோலாலம்பூர்:

    ரஷியாவை சேர்ந்த ஒரு தம்பதி உலகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொள்வதை பொழுதுபோக்காக கொண்டுள்ளனர். இவர்களுக்கு 4 மாத பெண் குழந்தை உள்ளது. தற்போது இந்த தம்பதி தெற்கு ஆசிய நாடுகளில் சுற்றுப்பயணம் செய்து வருகிறார்கள். பயண செலவிற்காக அவர்கள் தாங்கள் செல்லும் நாடுகளில் வித்தை காட்டி பணம் சேகரிக்கிறார்கள்.

    அந்த வகையில் மலேசியா சென்ற ரஷிய தம்பதி தலைநகர் கோலாலம்பூரில் மக்கள் மத்தியில் வித்தை காட்டினர். அப்போது அந்த 4 மாத குழந்தையின் தந்தை குழந்தையை வைத்து அபாயகரமான முறையில் வித்தை காட்டினார். குழந்தையின் காலை பிடித்து தலைகீழாக சுற்றியும், குழந்தையை தலைக்கு மேல் வீசி ஏறிந்து கைகளால் பிடித்தும் வித்தை செய்ய, அருகில் உட்கார்ந்திருந்த தாய் கைதட்டி உற்சாகப்படுத்திக்கொண்டிருந்தார். இதை ஒருவர் செல்போனில் படம் பிடித்து ‘பேஸ்புக்’கில் பதிவிட்டார். இந்த வீடியோவை பார்த்த போலீசார் குழந்தையை வைத்து அபாயகரமான முறையில் வித்தை காட்டிய ரஷிய தம்பதியை கைது செய்தனர். அவர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.  #RussianCouple #BabySwinging #Malaysia
    ஒடிஷாவில் நடைபெற்ற உலககோப்பை ஹாக்கி தொடரில் மலேசியாவை வீழ்த்தி காலிறுதியில் நுழைந்தது ஜெர்மனி. #HockeyWorldCup2018 #Germany #Malaysia
    புவனேஸ்வர்:

    14-வது உலக கோப்பை ஆண்கள் ஆக்கி போட்டி ஒடிசா மாநில தலைநகர் புவனேஸ்வரத்தில் உள்ள கலிங்கா ஸ்டேடியத்தில் நடைபெற்று வருகிறது. இதில் டி பிரிவில் இடம் பெற்றுள்ள ஜெர்மனி மற்றும் மலேசியா அணிகள் இன்று மோதின.

    ஆட்டத்தின் தொடக்கத்தில் இருந்தே ஜெர்மனி வீரர்கள் சிறப்பாக ஆடினர். ஆட்டத்தின் 2-வது நிமிடத்தில் ஜெர்மனி வீரர் டிம் ஹெர்ஸ்புருச் முத்ல் கோல் அடித்தார். அவரை தொடர்ந்து 14 மற்றும் 18வது நிமிடத்தில் மற்றொரு வீரரான கிறிஸ்டோபர் ருர் தலா ஒரு கோல் அடித்தார்.

    ஆட்டத்தின் 26-வது நிமிடத்தில் மலேசிய வீரர் ரஸி ரஹிம் ஒரு கோல் அடித்தார். அவரை தொடர்ந்து மற்றொரு வீரரான  
    நபில் நூர் 28வது நிமிடத்தில் ஒரு கோல் அடித்தார்.

    இரண்டாவது பாதியில் ஜெர்மனி வீரர் மார்கோ மில்டாகு 39-வது நிமிடத்தில் ஒரு கோல் அடித்தார். அப்போது ஜெர்மனி 4 - 2  என முன்னிலை வகித்தது. அடுத்த சில நிமிடங்களில் மலேசிய வீரர் ரஸி ரஹிம் ஒரு கோல் அடித்தார். 59-வது நிமிடத்தில் ஜெர்மனி வீரர் டிம் ஹெர்ஸ்புருச் மீண்டும் ஒரு கோல் அடித்தார்.

    இறுதியில், ஜெர்மனி அணி மலேசியாவை 5 - 3 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி அபார வெற்றி பெற்றது. இந்த போட்டியில் வெற்றி பெற்றதன் மூலம் ஜெர்மனி அணி காலிறுதிக்குள் நுழைந்தது. ஜெர்மனி வீரர் கிறிஸ்டோபர் ருர் ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார். #HockeyWorldCup2018 #Germany #Malaysia
    மலேசியா பிரதமர் மஹதிர் முஹம்மதுவை இன்று சந்தித்த பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் தனது நாட்டை மீள்கட்டமைப்பு செய்ய அந்நாட்டின் பொருளாதார கொள்கையை கடைபிடிப்பதாக தெரிவித்தார். #ImranKhan #MahathirMohamad #ImranmeetsMahathirMohamad
    கோலாலம்பூர்:

    பாகிஸ்தான் நாட்டின் புதிய பிரதமராக பொறுப்பேற்ற இம்ரான் கான் அந்நாடு ஏராளமான நிதிச்சுமையில் சிக்கி தவிப்பதாக தெரிவித்தார். 

    உலக வங்கி, சர்வதேச நிதியம் மற்றும் சில நாடுகளிடம் இருந்து கடன் பெற்று, நலிவடைந்த பொருளாதார நிலையில் இருந்து நாட்டை முன்னேற்றுவதற்கான முயற்சிகளில் அவர் ஈடுபட்டு வருகிறார். அரசு தரப்பில் பல்வேறு சிக்கன நடவடிக்கைகளையும் அவர் மேற்கொண்டுள்ளார்.

    சுமார் 20 ஆயிரம் கோடி டாலர்கள் அளவுக்கு நிதிச்சுமையில் சிக்கியுள்ள பாகிஸ்தானில் இந்த ஆண்டுக்கான அரசு செலவினங்களுக்கு மட்டும் 1200 கோடி டாலர்கள் பணம் தேவைப்படும் நிலையில் சமீபத்தில் இம்ரான் கான் சவுதி அரேபியா நாட்டுக்கு சென்றார். 

    பாகிஸ்தான் நாட்டுக்கு கடனுதவியாக 600 கோடி டாலர்களை அளிக்க சவுதி அரசு முன்வந்துள்ளது. 

    இதேபோல் நிதி திரட்டும் நோக்கத்துடன் 4 நாள் பயணமாக கடந்த வாரம் சீனாவுக்கு சென்ற இம்ரான் கான், சீன பிரதமர் லீ கெகியாங்-ஐ சந்தித்து ஆலோசனை நடத்தினார். இந்த சந்திப்பின்போது பாகிஸ்தானுக்கு சீனா 600 கோடி டாலர் நிதி உதவி வழங்க முன்வந்துள்ளது. 

    பாகிஸ்தானுக்கு மேலும் சுமார் 600 கோடி டாலர்கள் நிதி திரட்டும் நோக்கத்தில் இம்ரான் கான் கடந்த வாரம் ஐக்கிய அரபு அமீரகத்துக்கும்  சென்றார். 

    இந்நிலையில், அடுத்தகட்டமாக இருநாள் அரசுமுறை பயணமாக மலேசியாவுக்கு வந்துள்ள இம்ரான் கான் இன்று கோலாலம்பூர் நகரில் அந்நாட்டின் பிரதமர் மஹதிர் முஹம்மதுவை சந்தித்துப் பேசினார்.

    பின்னர் அவருடன் கூட்டாக செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த இம்ரான் கான், (மஹதிர்) உங்களைப் போலவே ஊழல் ஒழிப்பை மையப்படுத்தி நானும் மக்களின் ஆதரவுடன் ஆட்சிக்கு வந்திருக்கிறேன். கடன் சுமையில் இருந்து பாகிஸ்தானை விடுவிப்பதற்காக மலேசியாவின் முன்னேற்றப் பாதையை நாங்கள் கடைபிடித்து வருகிறோம் என்று தெரிவித்தார். 

    குறிப்பாக, மலேசியா பிரதமராக மஹதிர் முஹம்மது(93) பொறுப்பேற்ற பின்னர்  தனிநபர் வருமானம், உள்நாட்டு உற்பத்தி ஆகியவற்றை அதிகரிக்கச் செய்து, இந்நாட்டை பொருளாதார ரீதியாகவும், முன்னேற்றிய அவரது அனுபவத்தின் மூலமாக அவரிடம் இருந்து நான் நிறைய கற்றுக்கொள்ள விரும்புகிறேன் எனவும் இம்ரான் கான் குறிப்பிட்டார்.

    மேலும், மலேசியா நாட்டின் ஊழல் ஒழிப்பு கண்காணிப்பகத்தின் தலைமை அலுவலகத்தையும் இம்ரான் கான் இன்று சென்று பார்வையிட்டார். 

    இந்த அமைப்பு ஏற்படுத்தப்பட்ட 51 ஆண்டுகால வரலாற்றில் இந்த அலுவலகத்துக்கு வருகைதந்த முதல் வெளிநாட்டு பிரதமர் என்ற முறையில் இம்ரான் கானை மலேசியா ஊழல் ஒழிப்பு கண்காணிப்பகத்தின் தலைமை ஆணையாளர் முஹம்மது ஷுக்ரி அப்துல் வரவேற்று இந்த அமைப்பு இயங்கிவரும் முறைபற்றி விளக்கம் அளித்தார்.

    ஊழல் தொடர்பாக இந்த அமைப்பு நடவடிக்கை எடுப்பதற்கு ஏதும் பண உச்சவரம்பு உள்ளதா? என்ற இம்ரான் கானின் சந்தேகத்துக்கு பதில் அளித்த அவர், 5 ரிங்கிட் (இந்திய மதிப்புக்கு 85 ரூபாய்) ஊழல் என்றாலும் நாங்கள் விசாரணை நடத்த உரிமை உண்டு என்று விளக்கம் அளித்தார்.

    நீதிபதிகள், ராணுவ அதிகாரிகள் தொடர்பான புகார்களை விசாரிக்கவும் உங்களுக்கு அதிகாரம் உண்டா? என்ற இம்ரான் கானின் மற்றொரு கேள்விக்கு பதில் அளித்த முஹம்மது ஷுக்ரி அப்துல், எங்கள் நாட்டின் சட்டத்தின்முன் அனைவரும் சமம். நாங்கள் யாருக்கும் பாரபட்சம் பார்ப்பதில்லை. 

    தேவைப்பட்டால் உங்கள் நாட்டின் (பாகிஸ்தான்) ஊழல் ஒழிப்புத்துறை அதிகாரிகளை எங்களிடம் அனுப்பி வையுங்கள். அவர்களுக்கு பயிற்சி அளிக்க நாங்கள் தயாராக இருக்கிறோம் என்றும் அவர் தெரிவித்தார் என மலேசிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. #ImranKhan #MahathirMohamad #ImranmeetsMahathirMohamad
    ஆசிய சாம்பியன்ஸ் டிராபி ஹாக்கி போட்டியில் இந்தியா, மலேசியா அணிகள் மோதிய அரையிறுதி ஆட்டம் டிரா ஆனது. #AsianChampionsTrophy2018
    மஸ்கட்:

    5-வது ஆசிய சாம்பியன்ஸ் டிராபி ஹாக்கி போட்டி ஓமன் தலைநகர் மஸ்கட்டில் நடைபெற்று வருகிறது.

    இந்த போட்டியில் நடப்பு சாம்பியன் இந்தியா, பாகிஸ்தான், ஜப்பான், தென் கொரியா, மலேசியா, ஓமன் ஆகிய 6 நாடுகள் பங்கேற்று உள்ளன.

    ஒவ்வொரு அணியும், மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். ‘லீக்’ முடிவில் புள்ளிகள் அடிப்படையில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் அரை இறுதிக்கு தகுதி பெறும்.

    இந்திய அணி தொடக்க ஆட்டத்தில் 11-0 என்ற கணக்கில் ஓமனையும், 2-வது ஆட்டத்தில் பாகிஸ்தானை 3-1 என்ற கணக்கிலும், 3-வது போட்டியில் ஜப்பானை 9-0 என்ற கணக்கிலும் வென்றது.

    4-வது ஆட்டத்தில் மலேசியாவை நேற்று எதிர் கொண்டது. இந்த ஆட்டம் கோல் எதுவுமின்றி ’டிரா’ ஆனது.

    இதன் மூலம் 3 வெற்றி, 1 டிராவுடன் 10 புள்ளிகளை பெற்று இந்தியா அரை இறுதிக்கு முன்னேறியது. இதேபோல மலேசியாவும் இதே நிலையில் அரை இறுதிக்கு தகுதி பெற்றது.

    இந்திய அணி கடைசி ‘லீக்’ ஆட்டத்தில் தென் கொரியாவை இன்று சந்திக்கிறது. நேற்று நடந்த மற்றொரு ஆட்டத்தில் தென் கொரியா 4-2 என்ற கோல் கணக்கில் ஓமனை வீழ்த்தி முதல் வெற்றியை பெற்றது. #AsianChampionsTrophy2018
    மலேசியாவின் போர்ட் டிக்சன் நாடாளுமன்ற தொகுதிக்கு நடைபெற்ற இடைத்தேர்தலில் முன்னாள் துணை பிரதமர் அன்வர் இப்ராஹிம் 71 சதவீதம் வாக்குகளுடன் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது. #MalaysiaPM #AnwarIbrahim #AnwarIbrahimvictory
    கோலாலம்பூர்:

    மலேசிய அரசின் நிதியில் இருந்து 680 மில்லியன் டாலர் அளவுக்கு முறைகேடு செய்து அந்த தொகையை தனது தனிப்பட்ட வங்கிக் கணக்குகளில் மடைமாற்றி விட்டதாக மலேசிய முன்னாள் பிரதமர் நஜிப் ரஜாக் மீது அவரது ஆட்சிக்காலத்தில் குற்றச்சாட்டு எழுந்தது. 

    இதையடுத்து, அவர் பதவி விலக வேண்டும் என முன்னாள் பிரதமரும் எதிர்க்கட்சி தலைவருமான மஹதிர் முஹம்மது வலியுறுத்தி வந்தார்.

    பாராளுமன்ற தேர்தலில் பிரதமர் நஜிப் ரஜாக் மீதான மக்களின் அதிருப்தியை தங்களுக்கு சாதகமாக மாற்றி விடலாம் என முன்னர் 22 ஆண்டு காலம் பிரதமராக பதவி வகித்த மஹதிர் முஹம்மது தலைமையிலான எதிர்க்கட்சிகள் கூட்டணி தீர்மானித்தது.

    முன்னர் மலேசிய துணை பிரதமராக இருந்து ஓரினச் சேர்க்கை மற்றும் ஊழல் குற்றச்சாட்டுகளில் சிறையில் அடைக்கப்பட்டுள்ள அந்நாட்டின் பிரதான எதிர்க்கட்சி தலைவரான அன்வர் இப்ராஹிமுடன் முன்னாள் பிரதமர் மஹதிர் முஹம்மது நீண்டகாலமாக பகை பாராட்டி வந்தார். நஜிப் ரஜாக்கை வீழ்த்துவதற்காக அன்வர் இப்ராஹிமுடன் மஹதிர் முஹம்மது கூட்டணி அமைத்தார். 

    இந்நிலையில், மலேசிய நாட்டு பாராளுமன்றத்துக்கு கடந்த மே மாதம் நடைபெற்ற தேர்தலில் முன்னாள் பிரதமர் மஹதிர் முஹம்மது (92) எதிர்க்கட்சிகள் கூட்டணியின் பிரதமர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார்.

    பாராளுமன்ற தேர்தலில் இந்த எதிர்க்கட்சி கூட்டணி வெற்றி பெற்றால் சிறையில் இருக்கும் அன்வர் இப்ராஹிமுக்கு அரசின் சார்பில் பொது மன்னிப்பு அளிப்பதன் மூலம், அவர் தேர்தலில் போட்டியிட விதிக்கப்பட்டிருந்த தடையை நீக்கி, அந்நாட்டின் பிரதமர் பதவியில் அமரவைப்பதாக எதிர்க்கட்சிகள் கூட்டணி வாக்குறுதி அளித்திருந்தது.

    அதன்படி, பாராளுமன்ற தேர்தலில் வெற்றிபெற்ற மஹதிர் முஹம்மது மலேசிய பிரதமராக பதவியேற்ற பின்னர் சிறையில் இருந்த முன்னாள் துணை பிரதமர் அன்வர் இப்ராஹிமுக்கு பொது மன்னிப்பு அளித்து விடுதலை செய்தார். 

    இதற்கு மலேசிய துணை பிரதமரும் அன்வர் இப்ராஹிமின் மனைவியுமான வான் அஸிஸா வான் இஸ்மாயில் உறுதுணையாக இருந்தார். அன்வர் இப்ராஹிமை மீண்டும் பாராளுமன்ற உறுப்பினராக்கி, பிரதமர் பதவியில் அமர வைக்கும் முயற்சிகள் தொடங்கின.



    அன்வர் இப்ராஹிம் தேர்தலில் போட்டியிட வசதியாக போர்ட் டிக்சன் நாடாளுமன்ற எம்.பி.யாக இருந்த டேன்யல் பாலகோபால் அப்துல்லா தனது பதவியை சமீபத்தில் ராஜினாமா செய்தார். இதையடுத்து அத்தொகுதிக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டது. இன்று அந்த தொகுதியில் வாக்குப்பதிவு நடைபெற்றது.

    சுமார் 75 ஆயிரம் வாக்காளர்களை கொண்ட தொகுதி வாக்காளர்களில் 21.4 சதவீதம் பேர் இந்தியர்கள். அன்வர் இப்ராகிமை எதிர்த்து 6 வேட்பாளர்கள் இந்த இடைத்தேர்தலில் போட்டியிட்டனர். 

    இன்றிரவு சுமார் 8 மணியளவில் வெளியான தகவலின்படி, மொத்தம் பதிவான வாக்குகளில் 71 சதவீதம் வாக்குகளை பெற்ற அன்வர் இப்ராஹிம் 31 ஆயிரத்து 16 வாக்குகளை வாங்கி வெற்றி பெற்றதாக தெரியவந்துள்ளது. அவருக்கு அடுத்தபடியாக வந்த வேட்பாளர் வெறும் 7 ஆயிரத்து 456 வாக்குகளை மட்டுமே பெற்றுள்ளார். 

    இந்த வெற்றியை தொடர்ந்து, வரும் திங்கட்கிழமை பாராளுமன்ற உறுப்பினராக பதவியேற்கும் அன்வர் இப்ராஹிம், விரைவில் மலேசியாவின் புதிய பிரதமராக பதவி ஏற்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. #MalaysiaPM #AnwarIbrahim #AnwarIbrahimvictory
    மலேசியாவின் முன்னாள் பிரதமர் நஜீப் ரசாக் மீது புதிதாக 21 பண மோசடி மற்றும் ஊழல் குற்றச்சாட்டுகள் எழுப்பப்பட்ட நிலையில் இன்று காலை கைது செய்யப்பட்டார். #Malaysia #NajibRazak
    கோலாலம்பூர்:

    மலேசியாவில் முன்னாள் பிரதமர் நஜீப் ரசாக் மீது 7 பண மோசடி வழக்குகள் நிலுவையில் உள்ளது. இதையடுத்து இன்று 21 புதிய பண மோசடி வழக்குகள் அவர் மீது பதியப்பட்டுள்ளன. இதுதொடர்பாக இன்று காலை ஊழல் தடுப்புப் பிரிவு போலீசாரால் முன்னாள் பிரதமர் நஜீப் ரசாக் கைது செய்யப்பட்டார்.

    இதுகுறித்து காவல்துறை உயர் அதிகாரி நூர் ரஷித் இப்ராகீம் கூறுகையில், நஜீப் ரசாக்கின் வங்கி கணக்கில் 681 மில்லியன் அமெரிக்க டாலர்கள் முறையற்ற முறையில் பரிமாற்றம் செய்யப்பட்டுள்ளதாகவும், இந்த விவகாரத்தில் அவர் மீது 21 வழக்குகள் போடப்பட்டதாகவும் தெரிவித்துள்ளார்.

    இன்று காலை கைது செய்யப்பட்ட நஜீப் ரசாக்கிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும்,  இன்று மதியத்தில் அவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த வாய்ப்புகள் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. #Malaysia #NajibRazak
    மலேசியாவில் விஷ சாராயம் குடித்து 21 பேர் பலியாகினர். மேலும் பலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளதால் பலி எண்ணிக்கை மேலும் உயரலாம் என போலீசார் தெரிவித்துள்ளனர். #Malaysia #LiqourDeath
    கோலாலம்பூர்:

    மலேசியாவில் மதுபானங்கள் மீது கூடுதல் வரி விதிக்கப்படுகிறது. இதன் காரணமாக வீடுகளில் தயாரிக்கப்பட்டு விற்பனை செய்யப்படும் மதுபானங்கள் பிரபலமாக உள்ளது.

    ஆசிய நாடுகளில் இருந்து அங்கு சென்று குடியேறி உள்ள தொழிலாளர்கள் வீடுகளில் தயாரிக்கப்படும் சாராயத்தை குடிக்கின்றனர்.

    இந்நிலையில், தலைநகர் கோலாலம்பூர் மற்றும் செலங்கோர் மாகாணத்தில் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட சாராயம் குடித்தவர்களில் சுமார் 57 பேர் மயங்கி சரிந்தனர். மெத்தனால் கொண்டு தயாரிக்கப்படுகிற இந்த சாராயத்தில் வி‌ஷத்தன்மை கலந்து இருந்ததை அறியாமல் அவர்கள் குடித்து உள்ளனர்.



    உடனடியாக அவர்கள் மீட்கப்பட்டு மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டனர். அங்கு சிகிச்சை பலனின்றி 21 பேர் உயிரிழந்தனர். எஞ்சியவர்களுக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்படுகிறது. அவர்களில் பலரது நிலை கவலைக்கிடமாக இருப்பதால் பலி எண்ணிக்கை மேலும் உயரும் என அஞ்சப்படுகிறது.

    போலீசார் நடத்திய விசாரணையில், சாராயம் குடித்து பாதிக்கப்பட்டவர்களில் 5 பேர் மலேசியர்கள். மற்றவர்கள் வங்காளதேசம், இந்தோனேசியா, மியான்மர், நேபாளம் போன்ற நாடுகளை சேர்ந்தவர்கள் என தெரிய வந்துள்ளது. இதையடுத்து, அந்நாட்டு போலீசார் சோதனைகளை தீவிரப்படுத்தி வருகின்றனர்.

    இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து 9 பேரை கைது செய்துள்ளனர். அவர்களிடம் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர். விஷ சாராயம் குடித்து 21 பேர் பலியானது மலேசியாவில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. #Malaysia #LiqourDeath
    மலேசியாவில் ஓரினச்சேர்க்கையில் ஈடுபட்ட பெண்களுக்கு பிரம்படி தண்டனை கொடுத்ததற்கு பிரதமர் மகாதீர் முகமது கண்டனம் தெரிவித்து உள்ளார். #Malaysia #MahathirMohamed
    கோலாலம்பூர்:

    மலேசியாவில் இஸ்லாமிய சட்டம் தீவிரமாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் அங்கு 2 பெண்கள் ஒரு காரில் ஓரினச்சேர்க்கையில் ஈடுபட்டு, பிடிபட்டனர். அவர்கள் மீதான வழக்கை விசாரித்த கோர்ட்டு, அவர்கள் குற்றவாளிகள் என கண்டு தலா 3,300 ரிங்கிட் (சுமார் ரூ.57 ஆயிரம்) அபராதம் செலுத்தவேண்டும் என்றும், அவர்களுக்கு தலா 6 பிரம்படியும் கொடுக்க வேண்டும் என்றும் தீர்ப்பு அளித்தது.

    அதைத் தொடர்ந்து அந்த கோர்ட்டில் வைத்து சுமார் 100 பேர் முன்னிலையில் அந்தப் பெண்களுக்கு பிரம்படி தரப்பட்டது. இதற்கு எதிராக அங்கு கருத்துக்கள் எழுந்தன.

    வடக்கு மாகாணமான டெரங்கானுவில் இப்படி பெண்கள் ஓரினச்சேர்க்கையில் ஈடுபட்டு தண்டிக்கப்பட்டது இதுவே முதல் முறை.

    இந்த நிலையில் அந்த பெண்களுக்கு பிரம்படி தண்டனை கொடுத்ததற்கு பிரதமர் மகாதீர் முகமது கண்டனம் தெரிவித்து உள்ளார். இதுபற்றி அவர் கருத்து தெரிவிக்கையில், “இந்த தண்டனை தொடர்பாக நான் மந்திரிகளிடம் விவாதித்தேன். அவர்கள் இந்த தண்டனை, இஸ்லாமிய மதம் கூறுகிற நீதியையும், சகிப்புத்தன்மையையும் பிரதிபலிக்கவில்லை என்று கருதுகின்றனர். இந்த தண்டனை இஸ்லாமிய மதம் பற்றிய ஒரு தவறான தோற்றத்தை ஏற்படுத்தி விடும். இதேபோன்ற குற்றங்கள் நடக்கிறபோது, சற்று லேசான தண்டனைகளை நாம் வழங்க வேண்டிய அவசியம் ஏற்பட்டு உள்ளது. இஸ்லாம் என்பது மக்களை இழிவுபடுத்துகிற மதம் அல்ல என்பதை நாம் காட்ட வேண்டியது முக்கியம்” என குறிப்பிட்டார். #Malaysia #MahathirMohamed 
    தமிழ்நாட்டில் மணல் தட்டுப்பாட்டை போக்க மலேசியாவில் இருந்து கப்பல் மூலம் 30 லட்சம் டன் மணல் கொண்டுவரப்படுகிறது. இந்த மணல் விற்பனை இந்த மாத இறுதியில் தொடங்கும்.
    சென்னை:

    மணல் தட்டுப்பாட்டை போக்க வெளிநாட்டில் இருந்து தமிழகத்துக்கு மணல் இறக்குமதி செய்ய அரசு முடிவு செய்தது.

    இதற்காக ரூ.548 கோடி மதிப்புள்ள 30 லட்சம் டன் மணல் இறக்குமதி செய்ய டெண்டர் கோரப்பட்டது. இதற்கு பல்வேறு நிறுவனங்கள் விண்ணப்பித்தன.

    தற்போது இதில் ஒரு நிறுவனம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. இந்த நிறுவனம் மூலம் மலேசியாவில் இருந்து மணல் இறக்குமதி செய்யப்படுகிறது.

    இதன்படி, மலேசியாவில் இருந்து கப்பல் மூலம் மாதந்தோறும் 5 லட்சம் டன் வீதம் மணல் தமிழகத்துக்கு கொண்டுவரப்படுகிறது. 6 மாதங்களில் மொத்தம் 30 லட்சம் டன் மணல் தமிழகம் வந்து சேரும்.

    தூத்துக்குடி துறைமுகம் மூலம் இந்த மணலை கொண்டு வர திட்டமிடப்பட்டுள்ளது. இந்த மணல் விற்பனை இந்த மாத இறுதியில் தொடங்கும்.

    இதன் மூலம் தமிழ்நாட்டில் மணல் தட்டுப்பாடு பிரச்சினைக்கு தீர்வு ஏற்படும் என்று மணல்குவாரி செயல்பாடுகளின் திட்ட இயக்குனரகம் தெரிவித்துள்ளது.#tamilnews
    ×