search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கர்நாடகா"

    காங்கிரஸ் விமர்சனத்தை பற்றி கவலைப்பட வேண்டாம் என்று முதல்-மந்திரி குமாரசாமிக்கு முன்னாள் பிரதமர் தேவேகவுடா அறிவுரை கூறியுள்ளார். #Devegowda #Kumaraswamy
    பெங்களூரு :

    கர்நாடகத்தில் காங்கிரஸ்-ஜனதா தளம்(எஸ்) அரசு நடக்கிறது. முதல்-மந்திரியாக குமாரசாமி உள்ளார். ஆனால் காங்கிரஸ் மந்திரிகள் மற்றும் எம்.எல்.ஏ.க்கள் சிலர், எங்கள் முதல்-மந்திரி சித்தராமையா தான் என்று கூறுகிறார்கள்.

    மேலும் காங்கிரசை சேர்ந்த எஸ்.டி.சோமசேகர் எம்.எல்.ஏ. பெங்களூருவில் நடந்த நிகழ்ச்சியில் பேசும்போது, தேவேகவுடா குடும்பம் பற்றி விமர்சனம் செய்தார். பெங்களூருவின் வளர்ச்சியில் குமாரசாமி அக்கறை செலுத்தவில்லை என்றும் அவர் குற்றம்சாட்டினார்.



    இதற்கு சற்று கோபமாக பதிலளித்த குமாரசாமி, காங்கிரசார் இதேபோல் தொடர்ந்து பேசினால், முதல்-மந்திரி பதவியை ராஜினாமா செய்வேன் என்று எச்சரிக்கை விடுத்தார். இது கர்நாடக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில் முன்னாள் பிரதமர் தேவேகவுடா, குமாரசாமியை தனது வீட்டுக்கு அழைத்து பேசினார்.

    அப்போது தேவேகவுடா, “காங்கிரசாரின் விமர்சனத்திற்கு உடனே கருத்து கூற வேண்டாம். அதுபற்றி கவலைப்பட வேண்டாம். முதல்-மந்திரி பதவியை ராஜினாமா செய்வேன் என்று கூறியது தவறு. அரசியலில் இதுபோன்ற விமர்சனங்களை தாங்கிக்கொள்ள வேண்டும். எக்காரணம் கொண்டும் பொறுமையை இழக்க வேண்டாம். அவற்றை கவனத்தில் கொள்ளாமல் ஆட்சி நிர்வாகத்தை நடத்துவதில் கவனம் செலுத்த வேண்டும்” என்று அறிவுரை கூறியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. #Devegowda #Kumaraswamy
    கர்நாடகா மாநிலத்தில் பாராளுமன்றம் மற்றும் சட்டமன்றம் என 5 தொகுதிகளுக்கு நடைபெற்ற இடைத்தேர்தலில் ஒரே ஒரு தொகுதியில் மட்டும் பாஜக முன்னிலை பெற்றுள்ளது. #KarnatakaBypoll #Congress #JDS #BJP
    பெங்களூரு:

    கர்நாடகம் மாநிலத்தின் சிவமோகா, பெல்லாரி, மாண்டியா ஆகிய 3 பாராளுமன்ற தொகுதிகள் மற்றும் ராமநகரம், ஜம்கண்டி ஆகிய 2 சட்டசபை தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் கடந்த 2-ம் தேதி நடைபெற்றது.

    இந்த தொகுதிகளில் காங்கிரஸ் - மதச்சார்பற்ற ஜனதா தளம் கூட்டணி அமைத்து போட்டியிட்டன. இந்தக் கூட்டணியை எதிர்த்து பாஜக மட்டுமே களத்தில் போட்டியிட்டது. பெல்லாரி உள்பட மொத்தமுள்ள ஐந்து தொகுதிகளில் சுயேச்சை வேட்பாளர்களுடன் சேர்த்து 31 பேர் போட்டியிட்டனர்.

    இடைத்தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று காலை 8 மணி முதல் எண்ணப்பட்டன. பலத்த பாதுகாப்புடன் நடைபெற்ற வாக்கு எண்ணிக்கை முடிவுகள் வெளியிடப்பட்டு வருகிறது.

    ராமநகரம் சட்டமன்றம் தொகுதியில் ஜனதா தளம் கட்சியைச் சேர்ந்த வேட்பாளர் அனிதா குமாரசாமி 1 லட்சத்து 09 ஆயிரத்து 137 வாக்குகள் பெற்று அபார வெற்றி பெற்றுள்ளார். அதேபோல், ஜம்கண்டி சட்டமன்ற தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் நியாமகவுடா தன்னை எதிர்த்து போட்டியிட்ட பாஜக வேட்பாளரை விட 39 ஆயிரத்து 480 வாக்குகள் அதிகம் பெற்று வெற்றி பெற்றுள்ளார்.



    இதேபோல், மாண்டியா பாராளுமன்ற தொகுதியில் பாஜக வேட்பாளரை விட ஜனதா தளம் கட்சியைச் சேர்ந்த சிவராமெகவுடா 1 லட்சத்து 96 ஆயிரத்து 883 வாக்குகள் முன்னிலை பெற்றுள்ளார். மேலும், பெல்லாரி பாராளுமன்ற தொகுதியிலும் காங்கிரஸ் வேட்பாளர் உக்ரப்பா 1லட்சத்து 84 ஆயிரத்து 203 வாக்குகள் முன்னிலை வகிக்கிறார்.

    நடைபெற்ற 5 தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் ஷிமோகா தொகுதியில் மட்டும் 36 ஆயிரத்து 467 வாக்குகள் பெற்று பாஜக வேட்பாளர் ராகவேந்திரா முன்னிலையில் இருக்கிறார்.

    இடைத்தேர்தலில் காங்கிரஸ் கட்சியும், ஜனதா தளம் கட்சி கூட்டணி தலா இரண்டு தொகுதிகளில் வெற்றி பெற்று இருப்பதை கட்சி தொண்டர்கள் பட்டாசு வெடித்தும், இனிப்புகள் வழங்கியும் கொண்டாடி வருகின்றனர். அதே சமயம், பாஜகவுக்கு இந்த தேர்தல் முடிவுகள் பின்னடைவை அளித்துள்ளதாகவும் அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். #KarnatakaBypoll #Congress #JDS #BJP
    காவிரி விவகார ஆலோசனை கூட்டத்தில் காவிரி மேலாண்மை ஆணையம் அமைக்கப்பட்டதற்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்ய கர்நாடகா அரசு தீர்மானம் நிறைவேற்றியுள்ளது. #Kumaraswamy #KarnatakaAllparty #CauveryIssue
    பெங்களூரு:

    காவிரி நதிநீர் பங்கீடு தொடர்பாக உச்ச நீதிமன்ற உத்தரவின்படி காவிரி மேலாண்மை ஆணையம் மற்றும் காவிரி நதிநீர் ஒழுங்காற்றுக் குழு அமைக்கப்பட்டுள்ளது. காவிரி மேலாண்மை ஆணையத்துக்கு தலைவர், உறுப்பினர்கள், பகுதி நேர உறுப்பினர்கள் 9 பேர் நியமிக்கப்பட்டதைத் தொடர்ந்து, இந்த ஆணையத்தின் முதல் கூட்டம் வரும் ஜூலை 2-ம் தேதி டெல்லியில் நடைபெற உள்ளது.

    இந்த கூட்டத்தில் தமிழகம், கர்நாடகா, கேரளா, புதுச்சேரி ஆகிய மாநிலங்களின் உறுப்பினர்களும், மத்திய அரசு பிரதிநிதிகளும் பங்கேற்கிறார்கள். இதில் பல்வேறு அம்சங்கள் பற்றி ஆலோசிக்கப்பட உள்ளது.

    இந்நிலையில், கர்நாடகாவில் அனைத்துக்கட்சி கூட்டத்திற்கு முதல்வர் குமாரசாமி அழைப்பு விடுத்தார். அதன்படி  பெங்களூரு விதான சவுதாவில் குமாரசாமி தலைமையில் இன்று அனைத்துக் கட்சி கூட்டம் நடைபெற்றது. இதில் எதிர்க்கட்சி தலைவர் எடியூரப்பா, மத்திய அமைச்சர் சதானந்த கவுடா, அமைச்சர்கள், நீர்வளத்துறை சார்ந்த அதிகாரிகள், எம்.பி.க்கள், காவிரி படுகையில் உள்ள எம்.எல்.ஏ.க்கள், கர்நாடக மூத்த வழக்கறிஞர்கள் பலர் கலந்து கொண்டனர்.

    இந்த கூட்டத்தில் காவிரி மேலாண்மை ஆணையம் அமைக்கப்பட்டதற்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்ய கர்நாடகா அரசு தீர்மானம் நிறைவேற்றியுள்ளது.

    இதுமட்டுமில்லாமல் ஜூலை 2-ம் தேதி நடைபெற உள்ள காவிரி மேலாண்மை ஆணைய முதல் கூட்டத்தில் கர்நாடகா தரப்பு கோரிக்கைகள் முன்வைக்கப்படும். காவிரி ஆணையம் அமைக்கவும், மாற்றவும் நாடாளுமன்றத்திற்கு உரிமை உள்ளது என கர்நாடகா அரசின் நீர்ப்பாசனத் துறை அமைச்சர் சிவக்குமார் தெரிவித்துள்ளார்.

    மேலும், வரவுள்ள நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரில் கர்நாடகாவின் அனைத்து எம்.பி.க்களும் காவிரி விவகாரம் குறித்து பிரச்சனை எழுப்பவும் திட்டமிட்டுள்ளனர்.

    இதுதொடர்பாக முதல் மந்திரி குமாரசாமி கூறுகையில், காவிரி மேலாண்மை ஆணையத்தில் கர்நாடகத்திற்கு பாதகமான விதிமுறைகளுக்கு எதிராக போராடுவோம் என தெரிவித்தார்.

    இந்த கூட்டத்தில் முன்னாள் முதல்வரும், கூட்டணி கட்சியின் முக்கிய தலைவருமான சித்தராமைய்யா கலந்து கொள்ளாதது சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. #Kumaraswamy #KarnatakaAllparty #CauveryIssue
    ×