search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கரீனாகபூர்"

    போபால் தொகுதியில் பிரபல இந்தி நடிகை கரீனா கபூரை காங்கிரஸ் சார்பில் போட்டியிட வைக்கலாமா? என்ற திட்டம் பரிசீலிக்கப்பட்டு வருகிறது. #KareenaKapoor #Bhopal #Congress
    போபால்:

    மத்திய பிரதேசம் மாநிலத்தின் தலைநகரான போபால், பா.ஜனதா கட்சியின் நீண்டநாள் கோட்டையாக உள்ளது.

    கடந்த பல எம்.பி. தேர்தல்களில் இந்த தொகுதியை பா.ஜனதாவிடம் இருந்து தட்டிப் பறிக்க காங்கிரஸ் கட்சி தீவிர முயற்சிகளில் ஈடுபட்டது. ஆனால் காங்கிரஸ் கட்சியால் போபால் தொகுதியில் எதிர்பார்த்த வாக்குகளையும் வெற்றியையும் பெற இயலவில்லை.

    இந்த நிலையில் சமீபத்தில் மத்திய பிரதேச சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சியைப் பிடித்த காங்கிரஸ், வரும் ஏப்ரல் மாதம் நடைபெற உள்ள பாராளுமன்ற தேர்தலில் போபால் தொகுதியை பா.ஜனதாவிடம் இருந்து மீட்க வேண்டும் என்ற வியூகத்தை வகுத்து வருகிறது. இதற்காக மத்திய பிரதேச மாநில காங்கிரஸ் பொறுப்பாளர் ரமேஷ்வர் நிக்ரா தீவிர ஆலோசனை நடத்தினார்.

    அவரை சமீபத்தில் போபால் மாநகராட்சி காங்கிரஸ் கவுன்சிலர் யோகேந்திர சிங் சவுகான் சந்தித்துப் பேசினார். அப்போது அவர் போபால் தொகுதியில் பிரபலமான ஒருவரை காங்கிரஸ் சார்பில் களம் இறக்கினால் நிச்சயமாக பா.ஜனதாவை வீழ்த்தி வெற்றி பெற முடியும் என்று தெரிவித்தார்.

    இதையடுத்து போபால் தொகுதியில் பிரபல இந்தி நடிகை கரீனாகபூரை காங்கிரஸ் சார்பில் போட்டியிட வைக்கலாமா? என்ற திட்டம் பரிசீலிக்கப்பட்டு வருகிறது. இந்தி பேசும் மாநில மக்களிடம் தனக்கென தனி இடத்தைப் பிடித்துள்ள நடிகை கரீனா கபூர் போட்டியிட்டால் மக்கள் ஆதரவளிப்பார்கள் என்ற கருத்து காங்கிரஸ் மேலிட தலைவர்களிடம் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதற்கு முக்கிய காரணமாக நடிகை கரீனா கபூர் மறைந்த கிரிக்கெட் வீரர் மன்சூர்அலிகான் பட்டோடியின் மருமகளாக இருப்பது சுட்டிக் காட்டப்பட்டுள்ளது.

    மன்சூர் அலிகான் பட்டோடி- நடிகை சர்மிளா தாகூர் தம்பதியரின் மகனான சைப்அலிகானை, நடிகை கரீனா கபூர் திருமணம் செய்துள்ளார். எனவே பட்டோடி குடும்பத்தின் போபால் வாரிசுகளில் ஒருவராக கரீனா கபூர் கருதப்படுகிறார். இந்த அந்தஸ்துடன் இருப்பதால் போபால் நகர மக்களின் ஆதரவைப் பெற முடியும் என்று உள்ளூர் காங்கிரஸ் தலைவர்களும் ஆதரவு தெரிவித்துள்ளனர்.

    போபால் நகரில் பிறந்த மன்சூர்அலிகான் பட்டோடி, போபால் நகரின் நவாப் என்ற கவுரவத்துடன் வாழ்ந்தார். போபால் மக்கள் இவரை செல்லமாக “டைகர் பட்டோடி” என்றழைத்தனர். 21 வயதில் இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டனாக பொறுப்பேற்ற பட்டோடி “உலகின் மிகச் சிறந்த கிரிக்கெட் பீல்டர்” என்ற சிறப்பை பெற்றார்.

    இந்தியாவுக்காக 46 டெஸ்ட் ஆட்டங்களில் முத்திரைப் பதித்த பட்டோடி 137 முதல் தர டெஸ்டுகளிலும் ஆடியுள்ளார். கிரிக்கெட்டில் பல சாதனை படைத்து ஓய்வு பெற்ற அவரை 1991-ம் ஆண்டு தேர்தலின்போது காங்கிரஸ் கட்சி போபால் எம்.பி. தொகுதியில் களம் இறக்கியது.

    போபால் மண்ணின் மைந்தர் என்பதால் எளிதில் பட்டோடி வெற்றி பெறுவார் என்று கருதப்பட்டது. ஆனால் 2 லட்சம் வாக்குகளைப் பெற்ற போதிலும் பா.ஜனதா வேட்பாளர் சுசீல்சந்திர வர்மாவிடம் சுமார் 1 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் தோற்றுப் போனார்.



    அதன் பிறகு பட்டோடி குடும்பத்தினர் யாரும் போபால் தொகுதியில் போட்டியிடவில்லை. இந்த நிலையில் வரும் பாராளுமன்ற தேர்தலில் பட்டோடி மருமகளான நடிகை கரீனா கபூரை களம் இறக்க காங்கிரஸ் மூத்த தலைவர்கள் கருதுகிறார்கள்.

    தற்போது மத்திய பிரதேசத்தில் அரசியல் சூழ்நிலைகள் மாறி உள்ளதால் கரீனா கபூரை வெற்றி பெற செய்ய முடியும் என்று காங்கிரஸ் தலைவர்கள் நம்புகிறார்கள். #KareenaKapoor #Bhopal #Congress

    ×