search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "நீராகாரம்"

    முதியவர்களின் ஆயுளில் பங்கெடுத்த ஒரு உணவு என்றால் அது நீராகாரம்தான். பழைய சோற்றில் இருந்து கிடைக்கும் நீராகாரம் என்னும் நிசித்தண்ணீர் உடலுக்கு புத்துணர்ச்சி, குளிர்ச்சி தரும் ஒரு அமிர்தமாகும்.
    இன்றைய எந்திர யுகத்தில் மனிதனுக்கு உதவி புரியும் தொழில்நுட்பங்களின் வளர்ச்சிக்கேற்ப, நோய்களும் அதிகரித்து கொண்டே வருகின்றன. புற்றீசல்போல் பெருகி வரும் நோய்களை கட்டுப்படுத்த விதவிதமான மருந்துகள் கண்டுபிடித்தபோதிலும் மனிதனின் ஆயுள் குறைந்து வருகிறது என்பதுதான் உண்மை.

    முப்பது ஆண்டுகளுக்கு பின்னால் சென்று பார்த்தோம் என்றால் 80 அல்லது 90 வயது வரை மனிதனின் ஆயுட்காலம் இருந்தது. 90 வயது முதியவர் கூட இளமை துடிப்புடன் சுறுசுறுப்புடன் இயங்கினார். ஆனால் இன்றோ ஒருவர் 65 வயதை நெருங்கி விட்டாலே, ஏன் பணியில் இருந்து ஓய்வு பெற்று விட்டாலே அவர் முதியவர் என்ற பட்டத்தை சுமந்தாக வேண்டிய நிலை உள்ளது.

    எங்கும், எளிதில் பயன்படுத்தக்கூடிய தொழில்நுட்பம் கைக்கு வந்துவிட்டபோதிலும், எந்த ஒரு நோய்களையும் தீர்க்கும் வகையில் மருத்துவ உலகம் வளர்ந்த போதிலும் மனிதனின் ஆயுட்காலம் ஏன் குறைந்து வருகிறது?

    தொழில்நுட்பம், மருத்துவ வசதிகள் மட்டுமே மனிதனின் ஆயுட்காலத்தை நிர்ணயித்து விட முடியாது. அந்த காலத்தில் இதுபோன்ற மருத்துவ வசதிகளும், தொழில்நுட்பமுமா இருந்தது? ஆனால் அப்போது நமது முன்னோர்கள் 90 வயது வரை திடகாத்திரத்துடன் வாழ்ந்தார்களே? அது எப்படி?

    இந்த கேள்விகளுக்கெல்லாம் என்ன பதில் உள்ளது? என கேட்டால் அது உணவுதான். ஏனெனில் நமது முன்னோர்கள் உட்கொண்ட உணவுதான் அவர்களை நீண்ட காலம் வாழ வைத்தது. எல்லாமே ஆரோக்கியம் மிகுந்த, உடலுக்கு சத்துகளை புகுத்தக்கூடிய உணவுகள்.

    இப்போது கிராமங்களில் திடகாத்திரமாக வாழும் 90 வயது முதியவர்களிடம், உங்களது ஆரோக்கியத்தின் ரகசியம் என்ன? என்று கேளுங்கள். நாங்கள் சாப்பிட்ட உணவுதான் என்ற பதில் கிடைக்கும்.

    முதியவர்களின் ஆயுளில் பங்கெடுத்த ஒரு உணவு என்றால் அது நீராகாரம்தான். பழைய சோற்றில் இருந்து கிடைக்கும் நீராகாரம் என்னும் நிசித்தண்ணீர் உடலுக்கு புத்துணர்ச்சி, குளிர்ச்சி தரும் ஒரு அமிர்தமாகும்.

    முதல் நாள் இரவில் சமைத்த சாதத்தை ஒரு பிடி குவளையில் போட்டு வேண்டிய அளவு தண்ணீரை ஊற்றி வைத்து விட்டு, மறுநாள் காலையில் அதனால் உருவான பழைய சோற்றுடன் வெங்காயம், மிளகாய் சேர்த்து சாப்பிட்டால் அதனால் கிடைக்கும் சுவையே தனி. ருசித்து பார்த்தவர்கள்தான் இதனை உணர முடியும்.

    நீராகாரத்தை காலையில் வெறும் வயிற்றில் குடித்தால் அதனால் கிடைக்கும் நன்மைகள் ஏராளம். பழைய சோற்றில் வைட்டமின் பி6, வைட்டமின் பி12 போன்ற சத்துகள் அடங்கி உள்ளது. பழைய சாதத்தை சாப்பிடுவதால், நீராகாரத்தை அருந்துவதால் கைகால், இடுப்பு, மூட்டு வலிகள் போன்ற வாத நோய்கள் நம்மை நெருங்குவதற்கே அஞ்சும்.

    மேலும், அஜீரணம், வாந்தி, பித்த மயக்கம், வாயில் ருசி தெரியாமை, பசி எடுக்காமை, மயக்கம் போன்ற நோய்களிடம் இருந்தும் விலகி இருக்க முடியும். நல்ல பாக்டீரியாக்கள் நிறைந்த இந்த உணவு உடலில் செரிமான கோளாறுகளை போக்க வல்லது.

    இதுமட்டுமின்றி நுங்கு, பதநீர், கேழ்வரகு, கம்பு, சோளம் போன்ற பாரம்பரிய உணவுகளையும் இன்று நாகரிகம் என்ற பெயரில் பெரும்பாலானோர் தொடுவதே இல்லை.

    இத்தகைய நன்மைகள் நிறைந்த மகத்துவம் மிகுந்த இந்த உணவை பெரும்பாலும் நாம் மறந்து விட்டோம் என்பதுதான் வேதனை. தமிழர்கள் பாரம்பரியமாக கடைபிடித்த இந்த உணவுக்கு வேட்டு வைத்தது வெள்ளையர்கள் என்றால் இதில் ஆச்சரியப்படுவதற்கு ஏதுமில்லை.

    இன்று நம்முடன் இரண்டறக் கலந்து விட்ட தேநீரை கட்டாயப்படுத்தி நம்மிடையே திணித்தது ஆங்கிலேயர்கள்தான். உடலுக்கு புத்துணர்ச்சி அளிப்பதாக கூறி ஒரு நாளில் கணக்கில்லாமல் தேநீரை அருந்துகிறோம். ஒரு நாளைக்கு இரண்டு கப் தேநீருக்கு மேல் குடிக்கும்போது பசி எடுப்பதே தெரியாமல் போகிறது.

    தேநீர் குடிப்பதால் அதிக உடல் எடை, சொத்தை பற்களில் ஏற்படும் தொந்தரவுகள் என சில தொந்தரவுகள் குறையும் என கூறப்பட்டாலும், வாயுத்தொல்லைகள், பித்த மயக்கம், இதயக்கோளாறுகள், நரம்பு மண்டல பாதிப்புகள், தூக்க கெடுதல் போன்றவை ஏற்படுவதாக ஆய்வுகள் கூறுகின்றன.

    தேநீரில் பால் சேர்த்தும், சேர்க்காமலும் குடிக்கின்றனர். இதில் எது சரியான முறை என்கிற ஆராய்ச்சி இன்னும் முடிந்தபாடில்லை.

    தேநீர் மட்டுமில்லாது இன்றைய தலைமுறையினர் கைக்கு கிடைக்கும் பலவித பானங்களையும் அது எந்தவித விளைவுகளை ஏற்படுத்தும் என்பதை அறியாமல் அருந்தி வருகின்றனர். அதிக விலைக்கு விற்பனை செய்யப்பட்டாலும் அதை பொருட்படுத்தாமல் நினைத்தவுடன் எளிதில் கிடைக்கும் துரித உணவுகளும், குளிர்பானங்களும் உடலுக்கு எவ்வித நன்மையும் கொண்டு வரப்போவதில்லை. எனவே நமக்கு அதிக செலவு ஏற்படுத்தாமல், உடலுக்கு வலுவூட்டக்கூடிய பாரம்பரிய உணவுகளின் பக்கம் மீண்டும் திரும்புவோம்.

    - செந்தமிழ்க்கூத்தன், மரபு வழி சித்த மருத்துவர்.
    ×