என் மலர்
நீங்கள் தேடியது "பிரதம மந்திரி உஜ்வாலா யோஜனா திட்டம்"
சென்னை:
பாரத் பெட்ரோலியம் நிறுவனத்தின் மேலாளர் செந்தில்குமார் சென்னையில் நிருபர்களிடம் கூறியதாவது:-
பிரதம மந்திரி உஜ்வாலா யோஜனா திட்டத்தின் கீழ் 2018 டிசம்பர் மாதத்துக்குள் நாடு முழுவதும் 6 கோடி கியாஸ் இணைப்புகள் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. ஆனால் கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதத்திலேயே அந்த இலக்கு எட்டப்பட்டது. இந்த நிலையில் இந்த திட்டம் தற்போது விரிவுபடுத்தப்பட்டுள்ளது.
இதன்படி வருகிற மார்ச் மாதத்துக்குள் நாடு முழுவதும் வறுமைக் கோட்டுக்கு கீழ் வாழும் மக்களுக்கு 2 கோடி இலவச சமையல் கியாஸ் இணைப்புகள் வழங்க மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
இந்த திட்டத்தின் கீழ் தமிழகத்தில் மட்டும் இதுவரை 27லட்சத்து 87 ஆயிரம் இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளன. சென்னையில் மட்டும் 25 ஆயிரம் இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளன. தமிழகத்தில் மேலும் 11 லட்சம் இலவச இணைப்புகள் வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.
வறுமைக்கோட்டுக்கு கீழ் வாழும் பெண்களின் குடும்ப மாத வருமானம் ரூ.10 ஆயிரத்துக்குள் இருக்க வேண்டும். இந்த திட்டத்தில் பயனடைய விரும்புபவர்கள் வரும் மார்ச் மாதத்துக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
ஆதார் அட்டை, ஸ்மார்ட் ரேஷன் அட்டை, வங்கி பாஸ்புத்தகம், 3 புகைப்படங்கள் அடங்கிய ஆவணங்களை அருகில் உள்ள கியாஸ் ஏஜென்சியில் வழங்கி இத்திட்டத்தின் கீழ் இலவச இணைப்பை பெறலாம்.
கிராமப் பகுதிகளில் இந்த திட்டம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக ஊழியர்கள் வீடுதோறும் விண்ணப்ப படிவங்கள் வழங்குதல் உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொள்ள உள்ளனர்.
இவ்வாறு அவர் கூறினார். #CentralGovernment #gascylinder