என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "உயர் மின் கோபுரம்"

    தருமபுரி மாவட்டம் பென்னாகரத்தில் உயர்மின் கோபுரம் அமைக்க எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் விவசாயிகள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
    தருமபுரி:

    தமிழகத்தில் திருப்பூர் மாவட்டம் புகலூரில் இருந்து சத்தீஸ்கர் மாநிலம் ராய்கர் வரை 800 கிலோவாட் உயர் அழுத்த மின்பாதை அமைக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

    இதற்காக மத்திய அரசின் பவர்கிரிட் நிறுவனம் சார்பில் தமிழகத்தில் கோவை, திருப்பூர், ஈரோடு, நாமக்கல், கரூர், சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, வேலூர், திருவண்ணாமலை, விழுப்புரம், திருச்சி, திண்டுக்கல் ஆகிய 13 மாவட்டங்களில் உயர்மின் வழித்தடங்கள் மற்றும் கோபுரங்கள் அமைக்கப்பட்டு வருகிறது.

    தருமபுரி மாவட்டத்தில் பல பகுதிகளில் உள்ள விவசாய நிலங்களில் பவர் கிரிட் நிறுவனத்தால் உயர்மின் கோபுரங்கள் அமைக்க உள்ளன.

    இதனால் விவசாய நிலங்கள் பாதிக்கப்படுவதுடன், நிலத்தின் மதிப்பும் குறைகிறது. இதற்காக தருமபுரி மாவட்டத்தில் உள்ள விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

    தருமபுரி மாவட்டம் பென்னாகரம் அடுத்துள்ள எட்டியாம்பட்டியில் அமைக்கப்பட உள்ள உயர்மின் கோபுரத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் அப்பகுதி விவசாயிகள் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடமும் மனு கொடுத்தனர். ஆனால், எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை.

    எனவே அப்பகுதி விவசாயிகள் விவசாய சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் நேற்று உயர்மின் கோபுரம் அமைக்கபட உள்ள இடத்தின் அருகே கூடாரம் அமைத்து காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனை தொடர்ந்து விவசாயிகளுக்கு ஆதரவாக தமிழ்நாடு விவசாயிகள் சங்க தலைவர் ஆறுமுகம் மற்றும் கம்யூனிஸ்ட் கட்சியினர் கலந்து கொண்டனர்.

    பின்னர் நேற்று இரவு முழுவதும் 20-க்கும் மேலான விவசாயிகள் கூடாரத்திலேயே விடிய, விடிய தங்கியிருந்தனர்.

    போராட்டம் விடிய, விடிய நடந்ததால், போராட்டத்தில் பங்கேற்றவர்களுக்கு அங்கேயே உணவு சமைத்து வழங்கப்பட்டது. 2-வது நாளாக இன்றும் காத்திருப்பு போராட்டம் நடந்து வருகிறது. இதில் 100-க்கும் மேற்பட்ட விவசாயிகள் பங்கேற்று உள்ளனர். விவசாயிகளின் கோரிக்கை குறித்து விவசாயிகளிடம் நிருபர்கள் கேட்டபோது, விவசாயிகள் கூறியதாவது-

    எங்கள் விவசாய நிலத்தில் உயர்மின் கோபுரத்தை அமைக்க கூடாது. அப்படி அமைத்தால் எங்களுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என்று அவர்கள் கூறினர்.

    இந்த காத்திருப்பு போராட்டத்திற்கு பென்னாகரம் போலீசார் பாதுகாப்பு பணிக்காக ஈடுபட்டுள்ளனர். #tamilnews
    ×