search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சிஐசி"

    500, 2000 ரூபாய் நோட்டுகள் அச்சடித்த விவரங்களை வெளியிட வேண்டும் என ரிசர்வ் வங்கிக்கு சிஐசி உத்தரவிட்டுள்ளது. #rbi #cic #2000banknotes
    புதுடெல்லி:

    2016-ம் ஆண்டு மத்திய அரசு கொண்டு வந்த பணமதிப்பிழப்பு நடவடிக்கைக்கு அடுத்து எவ்வளவு 500,  2000 நோட்டுகள் அச்சடிக்கப்பட்டன என்பது தொடர்பான விவரங்களை வெளியிட வேண்டும் என்று மத்திய தகவல் ஆணையம் (சிஐசி) ரிசர்வ் வங்கிக்கு உத்தரவிட்டுள்ளது.

    நாட்டில் கறுப்பு பணம், கள்ளநோட்டு, ஊழல் ஆகியவற்றை ஒழிக்கும் நோக்கில் பிரதமர் நரேந்திர மோடி கடந்த 2016-ம் ஆண்டு நவம்பர் 8-ம் தேதி பண மதிப்பிழப்பு நடவடிக்கையை கொண்டு வந்தார். புழக்கத்திலிருந்த 500, 1000 ரூபாய் நோட்டுகள் திரும்ப பெறப்பட்டது. மாறாக புதிய 500 மற்றும் 2000 ரூபாய் நோட்டுகள் வெளியிடப்பட்டது. இவ்வாறு புதியதாக அச்சடிக்கப்பட்ட நோட்டுகளின் விபரத்தை சமூக ஆர்வலர் ஹரிந்தர் திங்ரா என்பவர் ரிசர்வ் வங்கியிடம் கேட்டிருந்தார். நவம்பர் மாதம் 9-ம் தேதி முதல் 30-ம் தேதி வரையில் அச்சடிக்கப்பட்ட ரூ.2000, ரூ.500 நோட்டுகளின் விபரங்களை கேட்டார்.  எவ்வளவு 500, 2000 ரூபாய் நோட்டுகள் அச்சடிக்கப்பட்டது. 

    ரூபாயின் மொத்த மதிப்பு, மொத்த செலவு, போக்குவரத்து செலவு போன்ற விபரங்களை கேட்டார். இதற்கு ரிசர்வ் வங்கி வழங்கிய பதில் திருப்தியளிக்காத நிலையில் மத்திய தலைமை தகவல் ஆணையத்தை நாடினார்.  பதிலளிக்க தகவல் ஆணையம் உத்தரவிட்டது.  ஆனால் 500, 2000 ரூபாய் நோட்டுகளை அச்சடித்த ரிசர்வ் வங்கியின்,  தி பாரதிய ரிசர்வ் பேங்க் நோட் முத்ரன் (பிரைவேட் லிமிடெட்) நிறுவனம்  விவரங்களை வெளியிட மறுத்து விட்டது.

    நவம்பர் 9 முதல் 30 வரையில் அச்சடிக்கப்பட்ட 500, 2000 ரூபாய் நோட்டுகள் தொடர்பான விவரங்களை வெளியிடுவது என்பது தேசத்தின் இறையாண்மை, நம்பகத்தன்மை மற்றும் பொருளாதார நலன்களுக்கு விரோதமானது என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

    ரிசர்வ் வங்கியின் பதிலில், ரூபாய் நோட்டுகள் அச்சிடுதல் மற்றும் அதுதொடர்பான நடவடிக்கை மிகவும் பாதுகாக்க வேண்டியது, ரகசியம் காக்க வேண்டியது. மூலப்பொருட்கள், போக்குவரத்து, இருப்பு, அச்சடித்தல் விவரங்களை வெளிப்படையாக வெளியிட முடியாது. வெளியிடுவது கள்ளநோட்டு புழக்கம், பொருளாதார குழப்பத்தை ஏற்படுத்தும். விவரங்களை அளிப்பது தேசத்தின் இறையாண்மை, நம்பகத்தன்மை மற்றும் பொருளாதார நலன்களுக்கு விரோதமானது. விவரங்களை வெளியிடுவது ஆர்.டி.ஐ. சட்டம் பிரிவு  8(1)விலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டது. இதனை ஏற்க மத்திய தகவல் ஆணையம் மறுத்து விட்டது. 

    இதனையடுத்து தகவல் ஆணையர் பார்கவா, 500, 2000 ரூபாய் நோட்டுகள் அச்சடித்த விவரங்களை வெளியிட வேண்டும் என ரிசர்வ் வங்கிக்கு சிஐசி உத்தரவிட்டுள்ளது என்றார்.  “500, 2000 ரூபாய் நோட்டுக்கள் எவ்வளவு அச்சடிக்கப்பட்டது என்ற விவரங்களை வெளியிடுவதில் எந்தவிதமான சிக்கலும் ஏற்படாது, பாதிப்பும் ஏற்படாது. ஆர்.டி.ஐ. சட்டத்தில் விலக்க வரம்புக்குள்ளும் இந்த விஷயங்கள் வராது.  ரூபாய் நோட்டுகள் அச்சடிப்பு விபரம், போக்குவரத்து செலவு, மூலப்பொருட்கள் செலவு உள்ளிட்ட விவரங்களை வெளியிடுவது பாதகமான விளைவை ஏற்படுத்தும் என கூற முடியாது. எனவே, மனுதாரர்  கேட்ட விவரங்களை வெளியிட வேண்டும்,” என்று ரிசர்வ் வங்கிக்கு பார்கவா உத்தரவிட்டுள்ளார்.  #rbi #cic #2000banknotes
    ×