search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தளர்வு"

    நீட் தேர்வு எழுதுவதற்கான வயது உச்சவரம்பை தளர்த்தி இருக்கும் சுப்ரீம் கோர்ட்டு, அந்த தேர்வுக்கு விண்ணப்பிப்பதற்கு மேலும் ஒரு வார காலம் அவகாசம் வழங்கி இருக்கிறது. #NEET #NEETUGExam #SupremeCourt
    புதுடெல்லி:

    மருத்துவ படிப்பில் சேருவதற்கான நீட் நுழைவுதேர்வை எழுதுவதற்கான வயது உச்சவரம்பை இந்திய மருத்துவ கவுன்சில் நிர்ணயம் செய்ததன் அடிப்படையில், சி.பி.எஸ்.இ. (மத்திய இடைநிலை கல்வி வாரியம்) சில மாதங்களுக்கு முன் அறிக்கை ஒன்றை வெளியிட்டது. அதில் நீட் தேர்வை எழுதுவதற்கு பொதுப் பிரிவு மாணவர்களுக்கான வயது உச்சவரம்பு 25 என்றும், இடஒதுக்கீட்டு பிரிவினருக்கான வயது உச்சவரம்பு 30 என்றும் கூறப்பட்டு இருந்தது.



    இந்த அறிவிப்பை எதிர்த்து கேரளாவைச் சேர்ந்த ஜலாலுதீன், சுரேஷ் என்ற இரு மாணவர்கள் தரப்பில் டெல்லி ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. அந்த வழக்கை விசாரித்த டெல்லி ஐகோர்ட்டு, சி.பி.எஸ்.இ.யின் அறிவிப்பை உறுதி செய்து உத்தரவு பிறப்பித்தது.

    இந்த நிலையில், இந்த வயது உச்சவரம்பை ரத்து செய்யக்கோரி அந்த மாணவர்கள் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்தனர். இது தொடர்பாக அவர்கள் தாக்கல் செய்த மனு, சுப்ரீம் கோர்ட்டில் நீதிபதிகள் எஸ்.ஏ.பாட்டே, எல்.நாகேஸ்வரராவ் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது.

    விசாரணை தொடங்கியதும் நீதிபதிகள், நீட் தேர்வை எழுதுவதற்கான வயது உச்சவரம்பை தளர்த்தி உத்தரவு பிறப்பித்தனர்.

    நீதிபதிகள் தங்கள் உத்தரவில் கூறி இருப்பதாவது:-

    2019-ம் ஆண்டில் மருத்துவ படிப்புக்கான நீட் தேர்வில் மனுதாரர்கள் உள்ளிட்ட 25 முதல் 30 வயது வரையிலான மாணவர்கள் விண்ணப்பிக்கவும், தேர்வை எழுதவும் அனுமதிக்கப்படுகிறார்கள்.

    தேசிய தேர்வு முகமையின் இணையதளம், இதுபோன்ற மாணவர்கள் 2019-ம் ஆண்டு நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்கும் வகையில் மேலும் ஒரு வாரத்துக்கு திறந்து இருக்கும். அதாவது இந்த ஆண்டு நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்கும் தேதி மேலும் ஒரு வாரத்துக்கு நீட்டிக்கப்படுகிறது. (நீட் தேர்வுக்கு நவம்பர் 30-ந் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது.)

    இந்த வயது வரம்பை தளர்த்தி பிறப்பித்துள்ள உத்தரவு இடைக்கால உத்தரவுதான். பொதுப்பிரிவுக்கான வயது வரம்பை தளர்த்துவது என்பது இந்த வழக்கின் இறுதி தீர்ப்பை பொறுத்தது ஆகும்.

    இவ்வாறு நீதிபதிகள் தங்கள் உத்தரவில் கூறி உள்ளனர்.

    இட ஒதுக்கீடு பிரிவினர் 30 வயது வரை நீட் தேர்வு எழுத அனுமதிக்கப்படும் நிலையில், 25 வயதுக்கு மேற்பட்ட பொதுப்பிரிவு மாணவர்களுக்கு தற்போது இந்த இடைக்கால சலுகை அளிக்கப்பட்டு உள்ளது.

    தமிழ்நாட்டில் கஜா புயலால் பாதிக்கப்பட்ட காவிரி டெல்டா மாவட்டங்களைச் சேர்ந்த மாணவர்கள் நீட் தேர்வுக்கு விண்ணப்பிப்பதில் சிரமம் ஏற்பட்டு உள்ளது என்றும், எனவே அவர்கள் விண்ணப்பிக்க கூடுதல் கால அவகாசம் வழங்க வேண்டும் என்றும் தமிழக அரசின் சார்பில் மத்திய அரசுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டு இருந்தது.

    இந்த நிலையில், நீட் தேர்வு பிரச்சினை தொடர்பான கேரள மாணவர்களின் வழக்கை விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு, அந்த தேர்வுக்கு விண்ணப்பிப்பதற்காக காலக்கெடுவை மேலும் ஒரு வாரத்துக்கு நீட்டித்து உத்தரவிட்டு இருக்கிறது.  #NEET #NEETUGExam #SupremeCourt
    ×