என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஓடும் பஸ்சில் பெண்ணுக்கு குழந்தை பிறந்தது"

    தாராபுரத்தில் ஓடும் பஸ்சில் பெண்ணுக்கு அழகான ஆண் குழந்தை பிறந்தது. அரசு பஸ்சை ஆம்புலன்சாக பயன்படுத்திய டிரைவரையும், கண்டக்டரையும் பயணிகள் மற்றும் பொதுமக்கள் பாராட்டினர்.

    தாராபுரம்:

    பீகார் மாநிலம் பாட்னாவை சேர்ந்தவர் ஆலம். இவரது மனைவி ரூபினா (வயது 22). ஆலம் குடும்பத்துடன் திண்டுக்கல் மாவட்டம் தொப்பம்பட்டி பூலாம்பட்டியில் உள்ள மரிச்செலம்பு என்ற கிராமத்தில் கோழிப் பண்ணையில் தங்கி வேலை செய்து வருகிறார்.

    ரூபினா நிறைமாத கர்ப்பிணியாக இருந்தார். மருத்துவ பரிசோதனைக்காக அடிக்கடி தாராபுரம் அரசு ஆஸ்பத்திரிக்கு வந்து செல்வார். இன்று காலை ரூபினாவுக்கு பிரசவ வலி ஏற்பட்டது.

    இன்று காலை தொப்பம்பட்டி பஸ் நிறுத்தத்தில் அரசு பஸ் ஏறினார். பஸ் ஏறிய சிறிது நேரத்திலேயே ரூபினாவுக்கு பிரசவ வலி அதிகமானது. வலி தாங்க முடியாமல் அவர் சத்தம்போட்டு துடித்தார்.

    இதனை அறிந்த சக பயணிகள் இது குறித்து கண்டக்டர் மற்றும் டிரைவருக்கு தெரியப்படுத்தினர். உஷாரான அவர்கள் ஆம்புலன்சுக்கு தகவல் தெரிவிக்க முயன்றனர். ஆனால் போதிய அவகாசம் இல்லை. இதனால் பஸ்சை மற்ற நிறுத்தத்தில் நிறுத்தாமல் செல்லும் வழியில் உள்ள தாராபுரம் அரசு ஆஸ்பத்திரிக்கு வேகமாக ஓட்டிச்சென்றனர். இது குறித்து தாராபுரம் அரசு ஆஸ்பத்திரிக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது.

    இதனிடையே கர்ப்பிணிக்கு மேலும் வலி அதிகமானது. சக பெண் பயணிகள் ரூபினாவை சூழ்ந்து கொண்டனர். ஆண் பயணிகள் ஒதுங்கி வழிவிட்டனர். குழந்தையின் தலை வெளியே தெரிய ஆரம்பித்தது.

    மின்னல் வேகத்தில் பஸ் தாராபுரம் அரசு ஆஸ்பத்திரிக்கு சென்றது. அங்கு தயாராக இருந்த டாக்டர் குழுவினர் கர்ப்பிணியை மீட்டனர். மீட்கப்பட்ட சிறிது நேரத்திலேயே ரூபினாவுக்கு சுக பிரசவத்தில் ஆண் குழந்தை பிறந்தது.

    அரசு பஸ்சை ஆம்புலன்சாக பயன்படுத்திய டிரைவரையும், கண்டக்டரையும் பயணிகள் மற்றும் பொதுமக்கள் பாராட்டினர்.

    ×